தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்
கிரேக்க புராணங்களில் வரும் “பண்டோரா பெட்டியை” திறந்ததால் மனித குலம் சாபத்திற்கு உள்ளானது. தற்போது வெளியாகியுள்ள “பண்டோரா பேப்பர்ஸ்” யாருக்கு சாபமாக அமையும்?
சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு ( ICIJ – International Consortium of Investigative Journalism ) அக்டோபர் 2ம் தேதி முதல் வெளியிட துவங்கிய பண்டோரா பேப்பர்ஸ் ( Pandora papers ) உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்து பணக்காரர்களின் வரி விலக்கு சொர்கபூமிகளான பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சேசல்ஸ், ஹாங்காங், பெலீஸ், பனாமா, பெர்முடா, பஹமாஸ், ஜெர்ஸி போன்ற தீவுகளிலும் அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்திலும் பதுக்கி வைத்திருந்த சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில், 90 நாடுகளை சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் ஆவணங்கள் வெளியாகியுள்ளது. இந்த பணக்காரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த அல்கோகல் (Alcogal), ட்ரைடெண்ட் ட்ரஸ்ட் (Trident Trust) உள்ளிட்ட முகவர் நிறுவனங்களின் தகவல்களும் இதில் அடங்கும்.
இதுவரையில்லாத வகையில், 2.94 TB (டெரா பைட்) அளவிலான 1.19 கோடி மின்னணு ஆவணங்கள் பத்திரங்களாகவும் புகைப்படமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் இந்த ஆவணங்களில், 330க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், 130 கோடீஸ்வரர்களும், பிரபலங்களும், மோசடிகாரர்களும், போதை பொருள் கடத்தல்காரர்களும், அரச குடும்பத்தினர் மற்றும் மத தலைவர்களும் அடங்குவர்.
அக்டோபர் 2ம் தேதி கசியப்பட்ட பண்டோரா பேப்பர் ஆவணங்களில் பெரும் பணக்காரர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கும் 14 அயல்நாட்டு மேலான்மை முகவர்களின் தகவல்களும் அம்பலமாகியுள்ளன. இந்த முகவு நிறுவனங்கள், சர்வதேச வரி சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வரி ஏய்க்கும் முறைகளை உலக பணக்காரர்களுக்கு ஆலோசனையாக வழங்குகின்றன. மேலும், வெற்று காகித நிறுவன வலைப்பின்னல்களை உருவாக்கி உலக நாடுகளின் அரசு அதிகாரிகள் எளிதில் கண்டறிய முடியாத வகையில் சொத்துக்களை பதுக்குவதற்கு வழி அமைத்து தருகின்றன.
அதிக வரிச்சலுகைகளை வழங்கி பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சேசல்ஸ் போன்ற பல தீவுகளில் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை காகித நிறுவன வலைப்பின்னலை உருவாக்கி பதுக்கி வைக்கின்றனர். பிறகு, அந்த தீவுகளில் புது காகிதத்தில் மட்டுமே இருக்கும் பெயரளவு நிறுவனங்களை பதிவு செய்து அதன் மூலம் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்கின்றனர். உலக பணக்காரர்களுக்கு இந்த பணம் கொழுக்கும் தரகு வேலை செய்வதற்கென உயர் தொழில்மேலாண்மை படித்த கூட்டம் இயங்கி வருகிறது.
மேலும், இந்த வலைப்பின்னல் நிறுவனங்களின் உரிமையாளர்களின் தகவல்கள் அனைத்தையும் தரகு முகவர் நிறுவனங்கள் மிக ரகசியமாக பாதுகாத்து வருகின்றன. இவை, தங்கள் பணக்கார வாடிக்கையாளர்களின் தகவல்களை மின்னணு வடிவத்தில் பகிர்வதை பொதுவாக தவிர்க்கின்றன. தேவை ஏற்படும்போது, வாடிக்கையாளரின் பெயரை பகிர பல மணிநேர விமானப்பயணத்தை மேற்கொண்டு நேரில் சென்று மட்டுமே தெரிவிக்கும் வழக்கத்தை கடைபிடிக்கின்றன.
இப்படி ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த வெற்று காகித நிறுவன வலைப்பின்னல் பின்னால் மறைந்திருக்கும் உரிமையாளர்கள், இயக்குநர்கள், பங்குதாரர்கள், நிறுவன அதிகாரிகள்; பல்வேறு பிரபலங்கள், முதலாளிகள், மருத்துவர்கள் என பலரின் தரவுகளை பண்டோரா பேப்பர்ஸ் அம்பலமாக்கியுள்ளது.
எலி வலை போன்ற வலைப்பின்னலில் பதுக்கி பாதுகாக்கப்படும் சொத்துக்களை, அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் மூலம் நிலங்கள், சொகுசு கப்பல்கள், விமானங்கள் வாங்கவும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது, தொழில் முதலீடுகள் என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு பணக்காரர்களின் உல்லாச வாழ்க்கை தேவைக்கு ஏற்றவாரு பணமோசடி வேலைகளையும் செய்கின்றன. நிலம் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் மீது முதலீடு செய்கின்றன. ஊழல், கொலை, கொள்ளை, சட்டவிரோத செயல்கள் மூலம் உலகெங்கும் சேர்க்கப்படும் சொத்துக்கள் இறுதியாக இந்த தீவுகளின் காகித நிறுவன பின்னல்களில் வந்து தஞ்சமடைகின்றன.
இந்தியர்கள் பட்டியல்
மோடியின் நெருங்கிய நண்பரும் கொடையாளருமான அதானி குடும்பம் தொடங்கி அனில் அம்பானி, நீரவ் மோடி பெயர்கள் இந்த பண்டோரா பேப்பரில் வெளியாகி உள்ளது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் எலிகாப்டர் ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, கவுதம் கைத்தான்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடிய ஹரிஷ் சால்வே, தில்லியில் போராடும் விவசாயிகள் இந்தியாவின் மரியாதையை சீர்குலைப்பதாக கருத்து கூறிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என பட்டியல் நீளுகிறது. மேலும், பல தொழிலதிபர்கள் பெயர்கள் இடையே ஒன்றிய அரசு வருமான வரித்துறை முன்னாள் ஆணையர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
முறையாக வரிகட்டிய சொத்தாக இருக்குமானால்; ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட வருமானம் என்றால் வரி ஏய்ப்பு சொர்கபூமிகளில் பதுக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது?
இவர்கள் யோகியவான்கள் என்றால் இந்த தீவுகளில் புது நிறுவனங்களை பதிவு செய்து அதன் வாயிலாக “அந்நிய முதலீடுகள்” என்ற போர்வையில் பணமோசடி செய்து சொத்து சேர்க்க வேண்டிய தேவை எதற்கு?
பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர்
ஏற்கனவே, 2016ல் “பனாமா பேப்பர்ஸ்” என்று மோசாக் பொன்சேகா என்கிற தரகு நிறுவனத்திடம் இருந்து எடுக்கப்பட்ட 2.6 TB அளவிலான தரவுகள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2017ம் ஆண்டில் “பாரடைஸ் பேப்பர்ஸ்” என்ற பெயரில் 1.34 கோடி பதிவுகளை, 1.4 TB அளவு தரவுகளாக சிங்கப்பூர் நாட்டின் அந்நிய மேலாண்மை நிறுவனமான ஆப்பிலேபி (Appleby), ஆசியாசிட்டி அறக்கட்டளை (Asiaciti Trust) மூலம் 19 இரகசிய புகலிடங்களின் ஆவனங்கள் கசிந்தன.
பனாமா ஆவணம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஐஸ்லாந்து நாட்டின பிரதமர் மற்றும் ஸ்பெயின் நாட்டு அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனாமா தீவில் மோசாக் பொன்சேகா என்ற நிறவனத்தையும் சுவிஸர்லாந்த் நாட்டில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்து கழகத்தின் அலுவலகத்தையும் அந்நாட்டு காவல்துறையினர் சோதனையிட்டனர்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதே வேளை பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் பல இந்திய பிரமுகர்களும், செல்வந்தர்களும், பெருநிறுவனங்களும் சம்பந்தப்பட்ட 12,000 இந்தியர்களில் 12 லட்சம் தரவுகள் இடம்பெற்றிருந்தன. 12000 இந்தியர்களில் இருந்து 500 நபர்களின் ஆவனங்கள் முதல் கட்டமாக ஆய்வு நடைபெற்றது. இந்த 500 நபர்களில் 234 பேரின் கடவுச்சீட்டு (Passport) பதிவு ஆவணமாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதில் அமித்தாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நீரா ராடியா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே போன்றோர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இவர்களின் மீதான விசாரணை என்ன ஆனது என்பது இன்றுவரை பொது மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, இவர்களில் பலர் பெயர்கள் மீண்டும் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இவர்களிடையே உள்ள ஒற்றுமையை கவனித்தால் மார்வாடி பனியாக்கள் அல்லது பாஜக மோடி ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
மோடியின் ஆட்சிக்காலத்தில் தான் இந்த மூன்று பட்டியல்களும் வெளிவந்துள்ளன. சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை கொண்டு வந்து சேர்ப்பதுதான் தங்கள் இலக்கு என்று மூச்சு முட்ட முழங்கிய மோடி ஆட்சியை பிடித்தார். ஆனால், இன்றுவரை கருப்புபணத்தையும் ஒழிக்கவில்லை; வரி ஏய்ப்பு பண மோசடி செய்யும் “தேச விரோத” பணக்கார குற்றவாளிகளையும் தண்டிக்கவில்லை.
மோடி விற்கும் பகோடா
2016, நவ 8ம் தேதி நள்ளிரவு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புபணத்தை ஒழித்துவிடுவோம் என்று மோடி உறுதியளித்தார். ஆனால், ஏழை எளிய மக்களை தெருவில் நிறுத்தி, பல வயதான இந்திய “இந்து” உயிர்களை பறித்தனர். சிறு குறு தொழில்களை முடக்கி தொழிலாளர்கள் வேலைகள் பறிபோக வழி செய்தார். தேச நலனிற்காக இதை 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள், “பணமதிப்பிழப்பு வாயிலாக கருப்பு பணத்தை நான் ஒழிக்காவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்” என்று ஆவேசமாக பேசினார். மோடியின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கையை எதிர்த்து கேள்வியெழுப்பியவர்களை தேச விரோதிகள் என்று ஆர்எஸ்எஸ் இந்துத்துவவாதிகள் வன்மத்தை உமிழ்ந்தனர்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்து, இன்றுவரை கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டதா, தவறினால் மோடி தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துக்கொண்ட தண்டனையை பற்றியும் எந்த தகவலையும் பாஜக அரசு மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் பாஜக “இந்து ராமராஜ்யம்” என்பது பணக்காரர்கள், மார்வாடி பனியாக்கள், கார்பொரேட் முதலைகள் கொள்ளையடிப்பதற்கும், ஊழல் செய்வதற்கும், வரி ஏய்ப்பு செய்வதற்கும் வடிவமைப்பட்டது என்றால் அது மிகையாகாது.
சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட கருப்பு பணம் என்ன ஆனது? பனாமா, பாரடைஸ் பேப்பர்களில் இடம்பெற்ற பெயர்கள் மீதான விசாரணை என்ன நிலையில் உள்ளது? இதுகுறித்த எந்த தகவலையும் தேசபக்தர்களின் பாஜக அரசு இன்றுவரை வெளியிடவில்லை. ஆனால், இந்த மலை முழுங்கிகளை கேள்வி கேட்பவர்களை தேசதுரோகிகள் என முத்திரை குத்துவதற்கு மட்டும் இவர்கள் தவறுவதில்லை.
“அயோக்கியர்களின் இறுதி புகலிடம் தேச பக்தி” என்று தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்.