
’பறந்து போ’ திரைப்பட பார்வை:
இந்திய அளவில் சமூகப் பொறுப்பு மிகுந்த திரைப்பட இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தான் உள்ளார்கள் என்பதை இந்த படமும் நிரூபித்துள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது ராமின் திரைப்படமா என்கிற சிந்தனை வராமல் இருக்காது. இது இயக்குநர் ராமின் வழக்கமான திரை மொழி இல்லை, ஒரு தந்தையாக இருக்கும் ராமின் திரை மொழி!.
படம் பார்க்கும் எவருக்கும் ஒரு சிறுவன் பார்வையில் இந்த உலகம் என்பது என்ன?, பணத்தின் மதிப்பு என்ன?, அப்பாவின் கோபம் அவனை என்ன செய்யும்?, அப்பாவின் சின்ன பொய்கள் அவனை என்ன செய்யும்? என்பது எளிதில் புரிந்து விடும். தன் மகன் வழிகாட்ட அப்பாவும், அம்மாவும் தாங்கள் இழந்த வாழ்க்கை எது என்பதைப் புரிந்து கொள்வதாகக் காட்சிப்படுத்தல் இருக்கிறது. இவை அனைத்தையும் குடும்பத்துடன், குழந்தைகளுடன் நகைச்சுவை தளும்பும் காட்சிகளாகப் பார்த்து முடிக்கும் போது ஒவ்வொரு அப்பா, அம்மாவும் தங்களை அங்குப் பொருத்திப் பார்த்து பெருமூச்சு விடும் சத்தம் திரையரங்குகளில் கேட்கும்.
இப்படி, குழந்தையின் பார்வையில் கதை விரிவதாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த படம் நவீன பொருளாதார சந்தை அமைப்பில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்ப தாய் -தந்தையின் வாழ்வாதார போராட்டத்தை விளக்கும் அரசியல் படம். ஆனால் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி என்பது அது ஒரு அரசியல் படம் என்பதே தெரியாத வகையில் அது குழந்தைகள் பற்றிய படம் போல உருவாக்கப்பட்டுள்ள நேர்த்தி தான்.

ஒரு பெருநகர நடுத்தர குடும்பமாக அடுக்கு மாடி குடியிருப்பில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தனக்குக் கிடைக்காத அனைத்தும் தன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தன்னுடைய அதிகபட்ச உழைப்பை ஒரு நாளில் செலுத்தும் ஒரு தந்தை மற்றும் தாயின் மூன்று நாட்கள் தான் படத்தின் பயணம். உலகின் மிகச் சிறந்த அனைத்தையும் தன் மகனுக்குக் கொடுத்துவிடத் தவிக்கும் சேலை வியாபாரம் செய்யும் தாய், அதை உறுதி செய்ய நொடிப் பொழுதும் போராடும் எண்ணெய் வியாபாரம் செய்யும் தந்தை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பொழுதுகளைக் கழிக்க முடியாமல் இருப்பதும், மகனுடனான ஒரு நாளின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் தொலைபேசியில் அவ்வப்போது மனைவியிடம் பேசி விடுவதும் கூட பிரிவின் ஆற்றாமையாகத் தான் வெளிப்படுகிறது படத்தில்.
‘பறந்து போ’ திரைப்படம் இவற்றை எல்லாம் கடந்து மெல்லிய இழையாக வேறு ஒரு முக்கிய செய்தியை நம்மிடம் உரையாட முயன்றுள்ளது. இது உண்மையில் நான்கு பொருளாதார பின்னணியில் உள்ள அப்பாக்கள் பற்றிய திரைப்படம்!.
60 அல்லது 70 வயதில் உள்ள முந்தைய தலைமுறை அப்பா, நவீன பொருளாதார சந்தை அமைப்பில் சிக்கிக் கொண்ட புதிய தலைமுறை அப்பா, தன் வீட்டிற்குள் மூன்று BMW இருசக்கர வாகனத்தை வைத்திருக்கும் பொருளாதார பின்னணியில் உள்ள அப்பா மற்றும் எது தேவை என்பதை அறிந்து வாழும் அதே தலைமுறை அப்பா என்று நான்கு விதமான அப்பாக்களை இந்த படத்தில் நாம் பார்க்க முடிகிறது.
முந்தைய தலைமுறை அப்பாவாக மிகக் குறுகிய நேரம் மட்டுமே வரும் சிவாவின் அப்பா கதாபாத்திரம் (பாலாஜி சக்திவேல்) நம் அப்பாக்களை நினைவூட்டுகிறது. பழைய பொருட்களுக்கு மதிப்பளிக்கும் தலைமுறை அது. பணத்தின் மதிப்பை உணர்ந்து வாழும் அப்பா அவர். ஒரு செலவு நடக்கிறது எனில் அதன் தேவையைக் கணக்கிட்டு இப்போ எதற்கு அது என்று கேள்வி எழுப்பும் அப்பா!. சிவா சிறுவனாக இருந்தபோது பயன்படுத்திய ஜெர்சி பனியனைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருந்து அதைச் சிவாவின் மகன் வீட்டிற்கு வரும்போது உடுத்த கொடுக்கும் தலைமுறை அப்பா. இவர்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு வெளியே இருந்து அதில் சிக்கிக்கொண்ட தனது அடுத்த தலைமுறையைப் பரிதவிப்புடன் பார்க்கும் அப்பாக்கள். அவர்களது (பாலாஜி சக்திவேலின்) அப்பாக்களுக்கும் அவர்களுக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இருந்தது. ஆனால் அவர்களது மகன்கள் உலகமயமாக்கலை எதிர்கொள்ளப்போவதைப் பற்றி ஏதும் தெரியாதவர்களாக, அவர்களைத் தயார்ப்படுத்த முடியாதவர்களாக இன்றுவரை மகன்களிடமும் பேரன்களிடமும் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மகனுக்கு தானே உலகமாக இருக்க வேண்டும் என்று துடிக்கும் புதிய தலைமுறை அப்பாவாகச் சிவா, தன் மகனுக்கு எப்படி ஒரு சிறந்த அப்பாவாக இருப்பது என்று முயன்றுக் கொண்டே இருக்கிறது. மகன் வளர்ந்தால் அவனுக்கு வசதியான நண்பர்கள் வட்டம் கிடைக்க வேண்டும், அதற்காக அதிக செலவு செய்து படிக்கும் பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கிறது இந்த தலைமுறை. அதற்கான பொருளாதார தேவையில், அதற்கேற்ற வாழ்க்கைத் தரத்தைக் கொடுக்கும் EMI வாழ்வைத் தேர்ந்தெடுத்து அது தரும் துயரத்திலிருந்து விடுபடத் துடிக்கும் அப்பாவாகச் சிவா. தனது அப்பாவின் வளர்ப்பு முறையை விடத் தனது வளர்ப்பு முறை சிறந்தது என்று நிரூபிக்கத் துடிக்கும் அப்பாக்கள் தலைமுறையின் பிரதிநிதியாகச் சிவா கதாபாத்திரம் உள்ளது.
சிவா கதாபாத்திரம் தன்னுடைய லட்சிய வாழ்வாக நினைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஓர் அப்பா கதாபாத்திரம் (விஜய் ஏசுதாஸ்) படத்தில் உள்ளது. இவருக்குத் தனது மகளுக்குச் செய்ய வேண்டியவற்றை அலட்டிக்கொள்ளாமல் செய்துவிடமுடிகிறது. தனது மகளிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை, அதனால் அவருக்குப் பதட்டமும் இல்லை. ஒரு நகைச்சுவைக் காட்சியில் விஜய் ஏசுதாஸ் கதாபாத்திரத்தோடு சிவா கதாபாத்திரம் நடனமாடப் போட்டிப் போடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டி தங்களுடைய குழந்தைகள் முன் நடைபெறுகிறது. அதில் சிவா ஆடத்தெரியாமல் தோற்றுப் போவதாக அமைகிறது. இது உண்மையில், இந்த நவீன பொருளாதார சந்தையில் சிக்கியிருக்கும் தலைமுறை தான் அடைய நினைக்கும் வாழ்க்கையோடு நேரடியாக மோதி தனது மகன் முன் தோற்றுப் போவதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் காட்சி.

சிறிய சாப்பாடு கடை வைத்து அழகான வாழ்வை குடும்பத்தோடு வாழும் அதே தலைமுறை அப்பா அஞ்சலியின் கணவனாக வரும் கதாபாத்திரம் (அஜூ வர்கீஸ்). “எங்க கடை சாம்பார்னா கூட்டம் அள்ளும், ஆனால் நாங்க தான் 20 தோசை, 30 பரோட்டா போதும்னு நிறுத்திக்கிட்டோம்” என்று சொல்லும் கதாபாத்திரம் அது. செருப்பைச் செருப்பாகவும், குழந்தையைக் குழந்தையாகவும் பார்க்கும் சமகால அதே தலைமுறை அப்பா. அவரிடம் EMI இல்லை, கடன் இல்லை, தேவை அதிகமில்லை அதனால் அவரிடம் பதட்டம் இல்லை. குழந்தைத் தன்மை மாறாமல் குழந்தையை வளர அனுமதிக்கும் அப்பா. தேவையைக் குறைப்பதன் மூலம் உருவாகும் பொருளாதார பலம் என்ன என்பதை விஜய் ஏசுதாஸ் கதாபாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் கதாபாத்திரம். இந்த வேறுபாடே அடுத்த தலைமுறைக்கு இந்த தலைமுறை சொல்லித் தரவேண்டிய நுணுக்கமான அரசியலாக இருக்கிறது.
இந்த மூன்று அப்பாக்களுக்கு நடுவில் தன் குழந்தைக்கு 4000 ரூபாயில் செருப்பு வாங்கி கொடுத்து மகனைப் பாதுகாப்பது போலவே செருப்பையும் பாதுகாக்க மகனைக் கடித்துக்கொண்டு கடைசி வரை சிறந்த அப்பாவாக இருப்பது எப்படி என்று தெரியாமல் முழிக்கும் இன்றைய பெரும்பாலான அப்பாவின் கதை தானோ பறந்து போ?
இல்லை, நான்கு அம்மாக்களின் கதையும் இதிலிருக்கிறது. அதுமட்டுமா?. நான்கு பொருளாதார சூழலில் வளரும் குழந்தைகளின் கதையும் இதில் இருக்கிறது.

உலகமயமாக்கலால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொல்லித்தராத சமூகத் தன்மையும் அதன் அரசியலையும் நகைச்சுவையாக இயக்குநர் ராம் திரைமொழியாக்கியுள்ளார். அந்த வகையில் ஒரு இளைய தலைமுறையினர் சமூகத்தில் சந்திக்கும் பதட்டத்தையே ராம் தனது எல்லா படங்களிலும் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் சிவா கதாபாத்திரம் அந்தப் பதட்டத்தைக் குறைப்பதற்கான வழியையும், அடுத்த தலைமுறையின் தேவை எதுவாக இருக்க முடியும் என்பதையும் கண்டடைகிறது.
நாம், நமக்கு நாமே, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கைக்குத் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இயக்குநர் ராம் சொல்கிறார் “பறந்து போ ! கொஞ்சம் ஆசுவாசப்படு!” என்று. தமிழ் சினிமா இது போன்ற இயக்குநர்களால் அழகாகட்டும்.