வங்கியில் தள்ளுபடியாகும் மக்கள் பணம் – கடன் வாங்கி பெருக்கும் பெரு நிறுவனங்கள்

இந்தியாவின் வங்கிகள், மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் சுமார் 22 லட்சம் கோடி அளவிற்கான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் பெரு நிறுவனங்கள் கடன் வாங்கும் வழியை சுலபமாக்க, பொதுத் துறை வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் மீது சுமைகள் அழுத்தப்படுகின்றன.

இந்தியாவின் ஒன்றிய நிதி அமைச்சம் கடந்த 9, டிசம்பர் 2025 அன்று நாடாளுமன்றத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 6.15 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி தகவல்படி 2014-2025 ஆண்டு வரையில் ரூ16.35 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கிறது. இதில் சிறுகுறு நிறுவனங்கள்(MSME) தவிர்த்த நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களின் கடன்கள் 80% (13 லட்சம் கோடி) தள்ளுபடியாகியுள்ளது. 5-லிருந்து 250 கோடி வரை கடன் பெறுபவை நடுத்தர நிறுவனங்கள். அதற்கு மேல் கடன் பெறுபவை பெரு நிறுவனங்கள் ஆகும்.

நிதி அமைச்சகத்தின் தகவல் இவ்வாறிருக்க மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-2023 வரை சுமார் 25 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, சூரத்தைச் சேர்ந்த சஞ்சய் ஈழவா என்னும் செயல்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 2023 -ல் வெளிப்படுத்தினார். இந்திய பொதுத்துறை வங்கிகள் 2014-2023 வரை 10.41 லட்சம் கோடியும், தனியார் வங்கிகள் 14.53 லட்சம் கோடியும் கடன் தள்ளுபடி செய்திருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் 5 கோடிக்கு மேல் கடன் வாங்கிய சுமார் 4000 பேரின் கடன் தள்ளுபடி செய்ததாகவும் சொல்லியிருந்தார். தனியார் வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையும் மக்களின் பணமே..

நிதி அமைச்சகத்தின் தகவல்படி, 140 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் விவசாயிகள், சிறு கடன், குறுகடன், கல்விக் கடன், வீட்டுக் கடன் எல்லாம் சேர்த்து 20% (3 லட்சம் கோடி) தள்ளுபடி. ஆனால் சில ஆயிரங்கள் மட்டுமே உள்ள பெருநிறுவனங்களுக்கு 80% (13 லட்சம் கோடி) தள்ளுபடி. ஒரு சாமானியனின் கடன் தவணை தவறினாலும் 90 நாளிலேயே வீடு/நிலம் ஏலம் விடப்படும். ஆனால் பெரிய தொழிலதிபர்களுக்கு திருப்பி செலுத்த 10–15 ஆண்டுகள் அவகாசம், மறு கட்டமைப்பு செய்யும் வரை சலுகை வழங்கப்படுகிறது.

சில ஆயிரம் பெரு நிறுவனங்களை மன்னித்து பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் வங்கிகள்தான், கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கூட ஏலம் விடும் அளவிற்கு செல்கிறது. இது நேர்மறையான விளைவு என்றால், மறைமுகமான விளைவு இதைவிட அதிகமானது. இந்தத் தள்ளுபடிகள் மூலமாக நிதி பற்றாக்குறையும், அரசாங்கத்திற்கு கடனும் ஏற்படுகின்றன. இதனால் மக்களுக்கான சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் நிதி குறைக்கப்படுகிறது. இதன் சுமைகள் வரி செலுத்தும் அனைத்து மக்களின் தலைமீதும் விதிக்கப்படுகிறது. 140 கோடி மக்களும் தான் வாங்கும் ஒவ்வொரு பொருள் மீதும் வரி செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் கடன் தள்ளுபடி செய்தால் வங்கிகளைக் காப்பாற்ற அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து வங்கிகளுக்கு மறு முதலீடு செய்கிறது. 2014-2025 வரையில் செய்த மறு முதலீடு மட்டும் 3.43 லட்சம் கோடி. இவை RBI, CAG ஆண்டு அறிக்கைகளும், நிதி அமைச்சகமும் உறுதிப்படுத்திய தொகைகள் ஆகும்.

இத்தகைய தள்ளுபடிகளால் வங்கி வாடிக்கையாளர்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன. மேலும் சேவைக் கட்டணங்கள், தண்டத் தொகை என எளிய வாடிக்கையாளார்களிடமிருந்து வங்கிகள் வசூல் செய்து கொள்கின்றன. குறுஞ்செய்திகள் (SMS), ATM, IMPS (உடனடி பணப் பரிமாற்றம்), DD, கடன் அட்டை, புதிய கடன் அட்டை(credit card), காசோலை புத்தகம்(cheque book), பணம் செலுத்துதல், கணக்கு மூடுதல் என வங்கி சேவைகள் அனைத்திற்கும் GSTஉடன் சேவைக் கட்டணங்கள் சாதாரண மக்களிடம் இருந்து அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. ஆண்டிற்கு 3 லட்சம் கோடிகளை வங்கிகள் சேவை கட்டணங்களில் இருந்து ஈட்டுகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் கட்டண வருமான விகிதங்களின் அடிப்படையில் இந்த தகவலை ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழ் தெரிவிக்கிறது.

சேவைக் கட்டணங்கள் மட்டுமல்ல, தண்டத் தொகையிலும் (Penalty) (ATM – அதிகபட்ச தொகை, காசோலை திரும்புதல்(cheque return), SMS எச்சரிக்கை) வங்கிகள் லாபம் ஈட்டுகின்றன. வங்கி சேமிப்புக் கணக்கில் நகர்ப்புறத்தில் ரூ10000-க்கு கீழே இருந்தால், கிராமப்புறங்களில் ரூ 5000 கீழே இருந்தால் ரூ 100-600 வரை வரை தண்டத் தொகைகள் பிடித்தம் செய்யப்படுகின்றன. இதன் மூலமாக 2014-24 வரை சுமார் 30 ஆயிரம் கோடிகள் வரை லாபம் ஈட்டியுள்ளன.

இவ்வாறு சேவைக் கட்டணம், தண்டத் தொகைகள் மூலமாக கோடிக்கணக்கான எளிய வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறித்து, சில ஆயிரம் பெரு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற மோடி அரசும் மறுமுதலீடு செய்கிறது. 

இவ்வாறு பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து மக்களிடம் பணம் பறிப்பது ஒரு புறத்தில் நடக்க, மறுபுறத்தில் வங்கிகளை இணைத்து பெருநிறுவனங்களுக்கு கடன் வழங்கல் தன்மை எளிதாக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை இல்லை என நிதித்துறை இணையமைச்சர் கூறினாலும், SBl நடத்திய மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, உலகத் தரமுள்ள வங்கிகளுடன் போட்டியிடுவதற்கு பெரிய வங்கிகள் தேவை என்றும், இதனை அரசாங்கம் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுடனும்  பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் 2017 முதல் 2020 வரை 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய நிறுவனங்களாக மோடி அரசு இணைத்தது. முன்னர் இருந்த 27 வங்கிகளின் எண்ணிக்கையை 12 ஆக குறைத்தது. இதனால் கிராமப்புறத்தில் சராசரியாக 25-30% கிளைகள் மூடப்பட்டன. மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இணைப்புக்குப் பின் 2-3 ஆண்டுகளுக்கு சேவைத் தரம் மோசமாகவே இருந்தது என்று RBI-யின் அறிக்கைகளும் ஏற்றுக்கொள்கின்றன.

சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் UPI (பணப் பரிவர்த்தனை) மற்றும் IMPS(உடனடி சேவை) செயலிழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2020-ல் பஞ்சாப் நேசனல் வங்கி இணைப்பின்போது  வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக UPI செய்ய முடியாமல் தவித்தார்கள். சிறிய வங்கிகளின் வட்டிக்கடன் பெரிய வங்கிகள் மாறும் போது அதிகரிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு பயன்படும் வட்டி விகிதங்கள் குறைந்தன. ‘பெரிய வங்கி வலுவான வங்கி’ என மோடி அரசு முன்னெடுத்த முயற்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் சுலபமாக கடன் வாங்கின. ஆனால் கணக்கு வைத்திருந்த பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வங்கிகள் இணைப்பு மூலமாக பொதுமக்கள் இவ்வளவு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, பெரு நிறுவனங்களுக்கு கடன் வசதி கொடுக்கும் நடைமுறை எளிதானது. 2017–2020 ஆண்டுகளில் மெகா வங்கி இணைப்பின் மூலமாக பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தொகை கடன் ரூ. 500 கோடி – ரூ. 25,000 கோடி வரை ஒரே வங்கியிலிருந்து எளிதாகவும் விரைவாகவும் கிடைத்தன. மோடி அரசின் மெகா வங்கியின் உள்நோக்கமும் நிறைவேறின.

ஒரு பெரு நிறுவனத்துக்கு ரூ. 5,000 கோடிக்கு மேல் கடன் தேவைப்பட்டால் 10 வங்கிகளுக்கு மேல் கூட்டுக் கடன் கேட்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு வங்கிக்கும் தனி ஆய்வு, தனி ஒப்புதல், தனி ஆவணங்கள், பலமாதங்கள் தாமதம் என்பவை எளிதாகின. முன்பு வேதாந்தா, JSW, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் போன்றவை இப்போது இரண்டு வங்கிகளுடன் மட்டுமே பேசினால் போதும் என்ற நிலைக்கு மாறியது.

வங்கிகள் இணைப்பிற்கு முன் ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கிய பெரு நிறுவனங்கள், வங்கிகள் இணைப்பு நிலைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் பெற்றனர். 2020-க்குப் பின் ஒரே வங்கியிலிருந்து ரூ. 10,000 கோடிக்கு மேல் கடன் பெறும் பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்தது 2024ம் ஆண்டு RBI அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது அதானி குழுமம் மட்டும் 2021–2024-ல் SBI, PNB, Canara ஆகிய மூன்று இணைக்கப்பட்ட வங்கிகளிலிருந்து மொத்தம் ₹70,000 கோடிக்கு மேல் கடன் பெற்றது. மேலும், மக்களின் காப்பீட்டுத் தொகையான எல்ஐசியில் இருந்து அதானிக்கு 33,000 கோடி மோடியினால் சமீபத்தில் எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவனம் வாங்கிய கடனை மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் தவணைத் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறும் தொகைகள் எல்லாம் வராக்கடன்கள் ஆகும். 3-8 ஆண்டுகளுக்குப் பிறகு அது தள்ளுபடி செய்யப்படும். இப்படியான நடைமுறையில் மோடி ஆட்சி காலத்தில் பெரு நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 25 லட்சம் கோடி.

மோடி அரசு, அதிகாரிகள், பெருநிறுவனங்கள் வலைப்பின்னலில் மக்களின் பணம் பெரு நிறுவனங்களுக்கு தாராளமாய் வழங்கப்படுகிறது. அதே பணம் வராக்கடனாக தள்ளுபடியும் செய்யப்படுகிறது. மோடி ஆட்சிக்காலத்தில் 2014-2025 வரை அதானியிடம் 1535%, அம்பானியிடம் 542% என சொத்து விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் மீதான கடன் 391% அதிகரித்திருக்கிறது. 

வங்கி மட்டுமல்ல, ஒவ்வொரு துறையும் தனியார் மயமாக்கப்பட்டு, கடனும் வழங்கப்பட்டு, அது தள்ளுபடியும் செய்யப்படுகிறது. அது முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட நுட்பமானத் திருட்டாக மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்படுகிறது. இண்டிகோ என்னும் விமானத்தின் தனியார் மயம் கடந்த வாரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களின் விமானப் பயணங்களை முடக்கி வைத்தது.

இந்தியாவில் 500-1000 கோடிகளுக்கு மேல் வர்த்தகம் செய்யும் பெரு நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரம் மட்டுமே. அவை பெரும்பாலும் மார்வாடி குஜராத்தி பனியா நிறுவனங்களே. ஆனால் இந்தப் பெரு நிறுவனங்களினால் வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3 கோடிக்கும் கீழாகும். ஆனால் சிறு குறு நிறுவனங்களினால் சுமார் 12 கோடியும், முறைசாராத் தொழிலாளர்களாக 50 கோடிக்கும் மேல் இருக்கின்றனர். சுமார் 2%-த்திற்கும் கீழாக மக்களுக்கான வேலை வாய்ப்பிற்கு மட்டுமே பங்களிக்கும் பெரு நிறுவனங்களுங்களின் நலனுக்காக நாட்டின் பொதுத்துறைகளை தாரை வார்த்ததோடு, அவர்களுக்காகவே வங்கிகளையும் பாஜக அரசு வளைக்கிறது.

இந்தக் கடன் தள்ளுபடியானது குசராத்தி மார்வாடி பனியாக்களுக்கே பெரும் அளவில் சென்றிருக்கிறது. இவர்கள் இதற்கு பதிலாக பிஜேபியின் மதவெறிக்கு பொருளாதார உதவியை மறைமுகமாக செய்தார்கள், செய்கிறார்கள். உதாரணத்திற்கு ‘தேர்தல் பத்திரம்’ (Electoral bond) என்கிற பெயரில் மோடி அரசு தள்ளுபடி செய்யக்கூடிய பணத்திற்கு வட்டி போட்டு நன்கொடையாக பிஜேபி பெற்றுக் கொள்கிறது.

இந்தப் பெரு நிறுவனத் திருட்டையும், நன்கொடைத் திருட்டையும் மறைக்கவே மதவெறியை ஒவ்வொரு மாநிலங்களிலும் வளர்க்க ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ சங்பரிவாரக்  கும்பலை வளர்க்கிறது. அயோத்தியிலிருந்து மதுரை வரை அவர்களின் கை நீள்கிறது. எந்த ஒரு கலவரத்தின் பின்னாலும் பனியா, பார்ப்பன, குசராத்திகளின் பொருளாதார நலனே மறைந்திருக்கும் என்பதற்கு கோவையில் நடந்த கலவரமே சாட்சியாக தமிழர்களுக்கு இருக்கிறது. பொருளாதாரக் கண் கொண்டு எதையும் அலசினால் மட்டுமே பாஜக கும்பலின் பெரு நிறுவன நலன் புலப்படும். வங்கிகளின் வராக்கடன் தள்ளுபடியின் பின்னுள்ள மக்களை சுரண்டும் கண்ணிகளும் தெரியும்..

இந்தியப் பொருளாதாரம் முழுவதும் பனியாக்களுக்கும், அதிகாரம் முழுவதும் பார்ப்பனர்களுக்கும் செல்வதால் தான் பெரியார் ‘இந்தியா என்பது பார்ப்பன பனியாக்களின் நாடு’ என்று அப்போதே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »