செப், 2020-ல் தந்தைப் பெரியாரின் 142-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்ச் சமூகத்திற்காக பல்வேறு துறைகளில் பெரியாரின் பங்களிப்பை வெளிக்கொணரும் முயற்சியாக, ‘பெரியாரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் பல்வேறு துறைச் சார்ந்த ஆளுமைகளை கொண்டு தொடர் இணைய கருத்தரங்கங்களை நடத்தியது மே பதினேழு இயக்கம். அதில் மரியாதைக்குரிய ஐயா பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் கலந்துக் கொண்டு ‘பெரியாரும் கோவில் பண்பாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். மிகச் சிறப்புவாய்ந்த இவ்வுரை நிமிர் பதிப்பகத்தின் சார்பாக புத்தக வடிவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்புத்தகம் இன்று பல தமிழின உணர்வாளர்களுக்குத் தகவல் களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
நா.வானமாமலையின் மாணவர்களில் ஒருவரான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் நாட்டார் வழக்காற்றியல், பண்பாட்டியல், சமூக அறிவியல் ஆகிய புலங்களில் தமிழக பண்பாட்டு மரபுகளை ஆய்வுக்கு உற்படுத்தி வருபவர். தமிழ்ச் சமூக வரலாற்றிலும் பண்பாட்டியல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துக் கொண்டிருப்பவர். அவரின் ஆய்வு நுணுக்கங்கள் புத்தகத்தின் பக்கங்களில் பரவிக் கிடப்பதை வாசகர்கள் மகிழ்ச்சியுடன் நுகர முடிகிறது.
பெரியார் + கோவில் + பண்பாடு – இந்த மூன்று வார்த்தைகளின் முரணான தொடர்போடு புத்தகம் தொடங்குகிறது. பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் புத்தகத்தின் பின்புலம். தமிழ்நாட்டிலுள்ள கோவில் பண்பாட்டை பெரியார் எப்படி நோக்கி இருக்கின்றார் என்பதுதான் புத்தகத்தின் மையச் செய்தி.
அன்று ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் மட்டுமன்றி இடைநிலைச் சமூகங்கள் சிலவும் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்குச் சான்றாக நாடார்கள், வாணிபச் செட்டியார்கள் போன்ற இடைநிலை சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை இந்நூல் விவரிக்கிறது. (அன்றைய காலத்தில் கோவிலுக்குள் மட்டுமல்ல கோவில் இருந்த தெருவுக்குள்ளும் அவர்கள் நுழைய ஆதிக்க சாதி வெறியர்கள் அனுமதிக்கவில்லை. இன்றும் சில இடங்களில் இந்நிலை நீடிக்கவே செய்கிறது)
“கோயில் நுழைவுச் சட்டம் திடீரென்று வந்ததில்லை. அது படிப்படியாக பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலையாக வருகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகே எல்லா கோவில்களிலும் எல்லா சாதியினரும் சாதி வேறுபாடின்றி நுழைவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.” – பேராசிரியர் கூறிய இந்த வார்த்தைகள் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது.
தமிழ்நாட்டில் பாஜக தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறையை குறிவைத்து பேசி வருகிறது. பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் தமிழ்நாடு அரசின் இந்த ஒரு துறை மீது தொடர்ந்து வன்மத்தைக் கொட்டுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியே, கோவில்களை தமிழ்நாடு அரசு ஆக்கிரமித்துள்ளதாக அவதூறு வைக்கிறார். ஏனெனில் தமிழ்நாட்டின் கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்த பிறகே அனைத்து சாதியினரும் (இடைநிலைச் சாதி உட்பட) கோவிலுக்குள் நுழைவதற்கான சமூக-அரசியல் சூழல் உறுவாகியது என்பது வரலாறு. சமூகநீதி வளர்த்தெடுத்த தமிழ் மண்ணில்தான் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டமும் நிகழ்ந்திருக்கிறது. எனவேதான் ஆரிய பார்ப்பனியத்திற்கு இந்து அறநிலையத் துறை எரிச்சலூட்டும் துறையாக மாறியிருக்கிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னால் நம் முன்னோர்கள் கோவில்களுக்கு உள்ளே நுழைந்து வழிபடுவதற்கு உரிமை இருந்ததா என்ற வினாவை இடைநிலை சமூகத்திடம் முன்வைக்கிறார் பேராசிரியர். மேலும் ஆங்கிலேய ஆளுநருடைய மனைவி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுற்றி பார்த்தது முதல் 1877-இல் கோவில் நுழைவு தொடர்பாக லண்டன் பிரிவ்யு கவுன்சிலில் நடந்த வழக்கு விவரங்கள் வரை இப்புத்தகத்தில் பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் கோவில் பண்பாட்டைத் தொடர்ந்து மொழி பண்பாட்டிலும் நிகழ்த்தப்பட்ட ஆரிய-வடமொழித் திணிப்பை விளக்குகிறார் பேராசிரியர். சான்றாக ‘திருமறைக்காடு’ எனும் ஊரின் பெயர் வேதாரண்யமாக மாறியது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. தந்தை பெரியாரின் வடமொழி எதிர்ப்பு குறித்த வரிகள் புத்தகத்தின் போக்கில் நம்மை ஈர்த்துச் செல்கின்றன. கிராம குலதெய்வ கோயில்களுக்கும், தற்போது ஊடுருவியுள்ள ஆரிய கூம்பு வடிவ கோயில்களுக்குமான வேறுபாடுகளையும் பேராசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.
தொடக்க நிலையில் உள்ள புத்தக வாசிப்பாளர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிய நடையில் இருக்கிறது இப்புத்தகம். மேலும் இது, சனாதனத்தின் கூறுகளை இடைநிலை சமூகத்தினர் புரிந்து கொள்ள உதவும் புத்தகமும் கூட. இந்தப் புத்தகத்தை வாசகர் வாசித்து முடிக்கும்போது, தந்தை பெரியார் குறித்து ஆர்.எஸ்.எஸ். யினரும் போலித் தமிழ்தேசியவாதிகளும் கட்டமைத்த அவதூறு கேள்விகளுக்கு பதிலடி விடைகள் கண்டிப்பாக கிடைக்கும்.
இந்தப் புத்தகம் தனி நூலாகவும், ‘பெரியாரின் பன்முக ஆளுமை’ என்ற தொகுப்பு நூல்களில் ஒன்றாகவும் கிடைக்கிறது. கிடைக்குமிடம்:
நிமிர் பதிப்பகம்
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொலைபேசி: 98840 82823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7