
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஆங்கிலேயர்களால் படுகொலை செய்யப்பட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று உசிலம்பட்டி-தேனி சாலையிலுள்ள கருமாத்தூரில் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
இந்த பெருங்காமநல்லூர் நிகழ்ச்சியை என் நண்பர் சொல்லி நான் கேள்விப்பட்டேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது அவர்(நண்பர்) திரைப்படம் எடுப்பதற்கான ஒரு இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சொன்னார், ”இங்கே (தமிழ்நாட்டில்) ஒரு பெரிய எழுச்சி போராட்டம் நடந்தது, அங்கே போராட்டம் நடத்தியவர்களை சுட்டுக் கொலை செய்தார்கள், அந்நிகழ்வை எனது(நண்பரின்) தாத்தா நேரில் பார்த்தார். அந்த வரலாறை எப்படியாவது நான் வெளியில் கொண்டு வர வேண்டும் என்று” என் நண்பன் சொன்னதுதான், நான் முதல் முதலாக இதைப் பற்றிக் கேட்டறிந்த தகவலாக இருந்தது.
அதற்குப் பிறகு இதை வரலாறாக பல்வேறு கட்டுரைகளில் தெரிந்து கொண்டதும், அது ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது? ஜாலியன் வாலாபாத்திற்கு பிறகு இப்படி ஒரு படுகொலை நடக்கிறது, ஏன்? என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்காக தேடிய பொழுது, பல்வேறு போராட்ட நிகழ்வுகளுடைய தொகுப்புகளின் விளைவாக பெருங்காமநல்லூர் நடந்திருக்கிறது. அது திடீரென்று இந்த மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல் அல்ல, இந்த பகுதி மக்கள் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தினுடைய விளைவாகத்தான் ஆங்கிலேயர்கள் இவர்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள்.
ஆகவே இந்த பெரும் போராட்ட வரலாற்றினுடைய ஒரு வரலாற்றுப் புள்ளியை எடுத்து, இந்த 150 ஆண்டுகால அரசியலை தொகுத்துப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் 2020-யிலே பெருங்காமநல்லூர் நூற்றாண்டு விழா சிறப்பிதழை மே 17 இயக்கத்தில் கொண்டு வந்தோம். தோழர் பிரவீன்குமார் அவர்கள் தான் இதைத் தொகுத்து, ஒரு சிறப்பு புத்தகமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அப்போது நாங்கள் இந்த வரலாறு எந்தெந்த புள்ளியில் இருந்தெல்லாம் பார்க்கலாம் என்று தொகுத்தோம். ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் எப்படி இவர்கள் ஒடுக்கினார்கள், இன்னொரு புறத்தில் பழங்குடிகள் ஏன் படுகொலை செய்யப்படுகிறார்கள், பழங்குடிகள் ஏன் ஒரு குற்றப் பரம்பரையாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பவற்றிற்கான ஆய்வுகளைத் தேடிய பொழுது, உலகெங்கிலும் இது போன்ற ஒரு வேலைத் திட்டத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செய்து வந்திருக்கிறது. ஆகவே அதைப் பற்றியான ஆய்வுகளை தொகுக்க ஆரம்பித்தோம். மறுபுறத்திலே 1920 என்பது பிரிட்டிஷ் அரசு இங்கே நாங்கள் சனநாயக (சட்டத்தின்) ஆட்சியை கொண்டு வருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த காலகட்டம் அது. இரட்டை ஆட்சி முறை வந்தது ’மாண்டேகு செம்ஸ் போர்டு’ என்று சொல்லப்படுகின்ற இரட்டை ஆட்சி முறை வந்தது. நீங்களே உங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்ன பிறகு எப்படி இந்த படுகொலை நடந்தது என்று பார்த்தால், சட்டரீதியாக இவர்களைக் குற்றவாளியாக அறிவிப்பதன் மூலமாக காவல்துறை சுட்டுப் படுகொலை செய்வதற்கான அனைத்து அதிகாரத்தையும் வழங்குவது, அதாவது சட்டரீதியாக அவர்களை படுகொலை செய்வதற்கான ஒரு சூழலை ஆங்கில அரசு ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக இந்த மக்கள் மீது சுமத்தப்பட்ட இந்த கொடுமையை எதிர்த்து ஏன் இந்திய அளவிலே எழுச்சி பெறவில்லை என்று பார்த்த பொழுது, இந்திய அளவிலான விடுதலைப் போராட்டம் என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போராட்டமாக இருந்தது. ஆக பார்ப்பனர்களுக்கு ஏதேனும் ஒரு சிக்கல் என்றால் அது தேசிய பிரச்சனையாக மாறும். ஆனால், பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுகிறவர்களுக்கும் அடக்குமுறை என்றால் அது பிராந்திய செய்தியாக கூட வராது என்கிற நிலையை உருவாக்கி இருந்தார்கள்.
இந்தியா முழுவதும் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டிய ஒரு போராட்டம் இது. ஆனால் ஒரு பகுதியிலே ஒரு ஊரிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட போராட்டத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கான துணிச்சலை ஆங்கில அரசுக்கு எது கொடுத்திருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அடுத்ததாக அன்று குற்றப்பரம்பரை சட்டம் என்ற சட்டம் அப்படியே இருக்கிறதா அல்லது இன்றுவரை தொடர்கிறதா, இந்த சட்டம் முடிந்து போய்விட்டதா அல்லது முற்றுப் பெறாமல் தொடர்கிறதா என்று பார்த்தோம். அந்த சட்டம் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தான் தோழர் ’ஷெரீப்’ அவர்கள் சொல்லும் போது, இசுலாமியர்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்கு முறை குற்றப்பரம்பரை சட்டம் என்கின்ற அந்த சட்டத்தினுடைய வழிகாட்டுதல் தான் இன்றும் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 36 பழங்குடிகள் இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஏதேனும் ஒரு குற்றம் நடந்துவிட்டால், இந்த பழங்குடிகளை கைது செய்வதும், சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்வதும், படுகொலை செய்வதும், இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. குறவர் சமூகமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அலைகுடி சமூகமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அத்தனை சமூகத்திலும் இதுபோன்ற நிலை இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. அதைத்தான் ஜெய்பீம் என்கின்ற திரைப்படத்திலே ஒரே ஒரு சம்பவத்தை திரைப்படமாக மாற்றி காண்பித்திருக்கிறார்கள். அது என்றோ நடந்ததல்ல, இன்றுவரை நடந்து கொண்டிருக்கக்கூடிய அவலம்.
நான் இந்த நிகழ்ச்சி குறித்தான அழைப்பிதழை அனைவருக்கும் அனுப்பிய பொழுது முன்னாள் ‘நீதியரசர் அரிபரந்தாமன்’ அவர்கள் ஒரு செய்தி அனுப்பினார். விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் ’பிறமலைக் கள்ளரை’ சேர்ந்த ஒருவர் கூட நீதிபதியாகவில்லை என்று சொன்னார். இது ஒரு துறை சார்ந்து கிடைத்த தகவல். ஆக 75 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது, இந்த 75 ஆண்டுகளில் எல்லா நிலையும் மாறிவிட்டதா என்று பார்த்தோம் என்றால் இந்த குற்றப்பரம்பரை சட்டத்தின் மூலமாக எந்த உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டதோ, எதுவெல்லாம் தடுக்கப்பட்டதோ, அதை வேறு வேறு பெயர்களில் இன்றுவரை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே அறிய முடிந்தது. இதனை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றுவரை அது நடைமுறையில் தான் இருக்கிறது.
டி.என்.டி என்கின்ற அடிப்படையில் எங்களுக்கு உரிமை வேண்டும் என்கின்ற முழக்கத்திற்காக எத்தனை ஆண்டு காலம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ”கோரிக்கையே வைக்காமல் உயர்சாதிக்காரனுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது பாராளுமன்றத்தில் நிறைவேறி துணை சனாதிபதி ஒப்புதலைப் பெற்று, சனாதிபதி ஒப்புதலைப் பெற்று மூன்று நாட்களுக்குள் முடித்துவிட்டார்கள்”. ஆக இந்த நாட்டில் எது சாத்தியம், எது நிரந்தரமாகவே சாத்தியமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆக இந்த அடிப்படையில் தான் இங்கே இருக்கக்கூடிய அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
மே 17 இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகள் எடுத்திருக்கின்றோம். இசுலாமிய அமைப்புகளோடு சேர்ந்து இசுலாமியர்களுக்கான சிக்கல் குறித்து கூட்டம் நடத்தினால் நம் காவல்துறை என்ன கேட்கும் என்றால், நீங்கள் தமிழ்த் தேசிய அமைப்பு தானே, ஈழத்தைப் பற்றி தானே பேசுறீர்கள், உங்களுக்கு எதற்கு இசுலாமியர் பிரச்சனை குறித்த கூட்டம் என்று கேட்பார்கள். அடுத்து பட்டியல் சமூகப் பிரச்சனைக்காக கூட்டம் நடத்துகிறோம் என்றாலும், நீங்கள் எதற்கு அம்பேத்கர் அமைப்புகளோடு சேர்ந்து வேலை செய்கிறீர்கள் என்று கேட்பார்கள். மீனவர்களுக்கான பிரச்சினைகளுக்காக போராட சென்றோம் என்றால், உங்களுக்கும் மீனவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மருதுபாண்டியர்களுக்கு நாங்கள் வீரவணக்க கூட்டம் நடத்தினோம். உங்களுக்கும் மருதுபாண்டியருக்கும் என்ன தொடர்பு, நீங்கள் அவர்கள் ஆட்களா என்கிற கேள்வியை எதிர் கொண்டோம். ஆனால் இவை அனைத்தையும் செய்வதற்கு பிஜேபி காரனுக்கு, வடநாட்டில் இருந்து வந்தவனுக்கு அனுமதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவனுக்கு அனுமதி இல்லை.
நமக்கு அனுமதி கொடுக்காததற்கு காரணம் என்னவென்றால், தமிழர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதில் வெள்ளையர் காவல்துறை எவ்வளவு கவனமாக இருந்ததோ, அதுபோல இந்திய காவல்துறையும் கவனமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டு காவல்துறை என்று சொல்ல மாட்டேன். இந்திய அரசினுடைய கொள்கை திட்டத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒருவர் இன்னொருவரோடு சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். நாம் சேர்ந்து விட்டோம் என்றால் நமது அதிகாரத்தை வென்று விட முடியும். நமது உரிமையை பெற்றுவிட முடியும். நாம் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சிக்கல் ஏன் வருகிறது? நமக்கு விடுதலை அடைந்த பிறகும் இன்றைக்கும் ’அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி’ தோழர்கள் பேசி முடிக்கும் பொழுது, ஜெய்ஹிந்த் என்று சொல்கிறார்கள். நாங்கள் ஜெய்ஹிந்த் சொல்லுவதில்லை. ”தமிழ்நாடு தமிழருக்கே” என்றுதான் சொல்லுகின்றோம். ஜெய்ஹிந்த் என்று சொன்ன வடநாட்டு அதிகாரிகள், வடநாட்டு அரசியல் தலைவர்கள் இந்த ஜெய்ஹிந்துக்காக போராடி உயிர்நீத்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? சாதாரண உரிமைகள் கூட நமக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எங்களுக்கு ஒரு பெரும் கனவு இருக்கிறது. நாங்கள் தேர்தலில் நிற்கக்கூடிய அமைப்பு இல்லை. தேர்தலில் போட்டியிடக்கூடிய பல அமைப்புகள் மற்றும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு நாங்கள் துணையாக நிற்கின்றோம். அவர்கள் எங்கள் பிரதிநிதிகளாக பார்க்கின்றோம். ஐயா ’கதிரவன்’ அவர்கள், எங்களது பிரதிநிதியாகத்தான் எம்எல்ஏவாகத்தான் சட்டசபைக்குள் செல்வார். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டசபைக்குள், தமிழனத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படிப்பட்டவர்களோடுதான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொடர்பு கொண்ட பொழுது, நேரடியாக தொடர்பு எங்களுக்கு இல்லை. ஆனால் தொடர்புகளை தோழர் பிரபு ஏற்படுத்தி கொடுத்த பொழுது மிக மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வை ஏற்படுத்துவதற்கான, நடத்துவதற்கான உற்சாகத்தை எங்களுக்கு கொடுத்தார்கள்.
தோழர். பசும்பொன் பாண்டியன் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டுதல் செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை எடுத்துச் செய்வதற்கு வழிகாட்டுதலை செய்தார்கள். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்காக அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தோழர். காசிநாதன் அவர்களை சொல்ல முடியும். ஆக என்ன சிக்கல் இருக்கிறது? நாம் ஏன் ஒன்றாக நிற்கக்கூடாது, நாம் ஏன் ஒன்றாக வெல்லக்கூடாது, நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நமக்கு என்ன குறைவாக இருக்கிறது? இந்த இணக்க அரசியல் புரிதல் தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஏன் இந்த மண்ணில் உருவாகி விடக்கூடாது. இங்க மீனவர் பிரச்சினையை மீனவர்கள் மட்டும் தான் பேச வேண்டும், தலித்துகள் பிரச்சினையை தலித்துகள் மட்டும் தான் போராட வேண்டும், பழங்குடிகள் பிரச்சனைக்கு அவர்கள் தான் வரவேண்டும், இசுலாமியர் பிரச்சனைக்கு இசுலாமியரைத் தவிர வேறு யாரும் வரக்கூடாது என ஒவ்வொருவராக பிரித்து வைத்திருக்கக்கூடிய அரசியல் இந்த மண்ணில் நடந்து கொண்டிருக்கும் வரை, நமது உரிமையை நம்மால் வென்றெடுக்க முடியுமா என்கின்ற கேள்வி எங்களுக்கு இருக்கிறது.
நாங்கள்(மே 17) மீனவர் பிரச்சனைக்கு போராடி இருக்கின்றோம். விவசாயிகள் பிரச்சனைக்கும் போராடி இருக்கின்றோம். இசுலாமியர் பிரச்சனைக்கும் போராடி இருக்கின்றோம். தலித்துகள் பிரச்சனைக்கும் போராடி இருக்கின்றோம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினுடைய உரிமைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரையும் நாங்கள் தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறோம்.
இந்த பெருங்காமநல்லூர் போராட்டத்தினுடைய முக்கியத்துவம் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியதாக இருக்கிறது. என்னவெனில் இதை வைத்துக்கொண்டு ஒரு உண்மையை நாம் பேச வேண்டும். இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக நீண்ட போர் புரிந்தவர்கள் பழங்குடிகள். இதே ”பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நத்தம் காடுகளில் 1750களில் வெள்ளையர்கள் முதன்முதலாக இந்த மண்ணிற்குள் படையெடுத்து வந்த பொழுது, மறித்து நின்று திருப்பி அடித்தார்கள்” என்கின்ற ஒரு பெரும் வரலாறு இருக்கிறது.
நத்தம் காடுகளில் நடந்த அந்த எதிர்ப்பு, மிகப்பெரும் கிளர்ச்சிகளால் வெள்ளையர்கள் மதுரையைத் தொட முடியவில்லை. மதுரைக்கு தெற்கே செல்ல முடியவில்லை. பிறமலைக் கள்ளர்களுடைய அந்த எழுச்சியான போராட்டம் என்பது ஒரு நீண்ட போராட்டமாக நடந்தது. அந்த மண் ‘பழனி’ பகுதியில் இருந்த பாளையங்களையும் ’சிவகங்கை’ பகுதி பாளையங்களையும் ’சேதுசீமை’ பாளையங்களையும் இணைத்த ஒரு பெரும் புரட்சிகர மண்ணாக இருந்தது. அதன் காரணமாகவே அங்கே படுகொலைகள் நடந்தன. கிட்டத்தட்ட 5000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆங்கிலேயனுடைய அதிகாரி ஒருவனால் மட்டுமே ஒரு அதிகாரி மட்டுமே 5000 பேரை படுகொலை செய்த வரலாறு இருக்கிறது. ’ரம்ளே’ என்கின்ற அதிகாரி அந்த ஊருக்குள் புகுந்து, அந்த மக்களை, குழந்தைகளை, பெண்களை, முதியோர்களை ஈவிரக்கம் இல்லாமல் படுகொலை செய்த வரலாறு இருக்கிறது. அந்த மக்கள் அத்தனை தூரம் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

எனக்கு முன்பு பேசிய ஐயா சொன்னார்கள், மருதுபாண்டியர்கள் தூக்கிலேற்றிய பிறகு ’பினாங்கு’க்கு நாடு கடத்திய பொழுது, அதில் நாடு கடத்தப்பட்டவர்கள் மூன்று பேர் ”கருமாத்தூரை” சார்ந்தவர் என்று சொன்னார்கள், அப்படியெனில் மருதுபாண்டியர்கள் போரிட்ட அந்த சிவங்கங்கை சீமைக்கும் கருமாத்தூருக்கும் என்ன தொடர்பு? ’சுந்தரவந்திய தேவன்’ அவர்கள் ஒரு தகவல் பெட்டகமாக இருக்கின்றார். அவர் பேசும் பொழுது சொன்னார், விருப்பாச்சி கோபால நாயக்கர் தான் இந்த புரட்சியாளர்கள் பயிற்சி எடுப்பதற்குரிய தயாரிப்புகளை பழனி காடுகளுக்குள் ஏற்படுத்திக் கொடுத்தவர். அங்கே இருந்து அவர்கள் திப்பு சுல்தானினுடைய படைத் தளபதிகளை தொடர்பு கொள்கிறார்கள். சிவகங்கை சீமையும், விருப்பாட்சி பாளையமும் இணைந்து ஒரு போர் திட்டத்தை மேற்கொள்ளும் பொழுது தீரன் சின்னமலையும் இணைந்து கொள்கிறார். மேலும் திப்பு சுல்தானுடைய படைத்தளபதிகள் இணைந்து கொள்கிறார்கள். அதில் ரோனுல்லா கான், கனிஜா கான், முகமது ஹாசம் என்று ஒரு பெரும் பட்டியல் கொண்ட தளபதிகள் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்துதான் பெரும் போரை வெள்ளையர்களுக்கு எதிராக நடத்தினார்கள்.
இன்றைக்கும் தென்னிந்தியாவினுடைய மிக முக்கியமான ராணுவ தளம் என்பது கோயம்புத்தூர் தான். கோயம்புத்தூரில் கடல் கிடையாது, ஆனால் கப்பல் படையினுடைய தளம் கோயம்புத்தூரில் இருக்கிறது. அன்றைக்கு வெள்ளையர்கள் உருவாக்கி வைத்த இடம் அது. அந்த கோயம்புத்தூரை தாக்க வேண்டும் என்று முடிவெடுப்பவர் ’மருதுபாண்டியராக’ இருக்கிறார். அதற்கான பயிற்சி கொடுப்பவர் ’விருப்பாச்சி கோபால நாயக்கராக’ இருக்கிறார். அதற்கான போரை நடத்துகின்ற தளபதியாக ’தீரன் சின்னமலை’ இருக்கின்றார். ஒவ்வொரு ஊராக வெள்ளையரைத் தாக்கும் சண்டையை திப்பு சுல்தானுடைய படைதளபதிகள் நடத்துகிறார்கள். இதில் எங்கே சாதி வந்திருக்க முடியும்? ஆக இப்படியான ஒரு தாக்குதலை நடத்துகிறார்கள். அன்றைக்கு தளபதியாக இருந்த தீரன் சின்னமலையினுடைய படையில் தளபதியாக இருந்த ”கருப்பையா சேர்வை” அவர் நெப்போலியனை பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார். (நெப்போலியனோடு தொடர்பு இருக்கிறது என்பது உறுதியாகிறது). அங்கே அமெரிக்காவினுடைய விடுதலைப் போர் நடக்கிறது. அமெரிக்காவின் விடுதலைப் போருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார். ஒரு சர்வதேச அளவிலான சுதந்திர உணர்ச்சி தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் இவர்கள் தான்.

இப்படிப்பட்ட ஒரு பெரும் போராட்டம், இந்த மண்ணில் சாதி கடந்து கட்டி எழுப்பப்பட்டது. நாங்கள் இந்த பாளையக்காரர்கள் வரலாறை ஒவ்வொரு ஊரிலும் சென்று பேசுகின்றோம். காரணம், இந்த பாளையக்காரர்கள் போரில் நின்ற மக்கள் சாமானிய மக்கள். இதில் ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போர்களிலும் ஆயுதங்களை எப்படி ஆங்கிலேயருக்கு தெரியாமல் கொண்டு செல்வது என்ற கேள்வி எழுந்த பொழுது, அந்த ஆயுதங்களை புரட்சியாளர்களுக்கு கொண்டு சேர்த்தவர்கள் இசுலாமியர்களினுடைய மசூதிகளில்தான் அந்த ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தினார்கள. அதன் வழியாகத்தான் அந்த ஆயுதங்கள் அந்த கிளர்ச்சியாளர்களின் கைகளிலே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இமாம்கள் அந்த புரட்சிப் பணியை மேற்கொண்டார்கள். இதெல்லாம் இல்லையானால் இன்றைக்கு நாம் விடுதலை அடைந்திருக்க முடியாது.
ஆனால் இன்றைக்கு ஒரு கூட்டம், மோடியினுடைய கூட்டம் இங்கே நம்மை மதரீதியாக பிரிக்க நினைக்கிறார்கள். அன்றைக்கு இந்த தர்காவோ இந்த மசூதியோ இல்லை என்றால், மருதுபாண்டியர்களுக்கோ, தீரன் சின்னமலைக்கோ ஆயுதங்களை எப்படி கொண்டு போய் சேர்த்திருப்பார்கள். இந்த வரலாறை தெரிந்து நாங்கள் பேசுகின்றோம். அதனால்தான் எங்களுக்கு எந்த தொலைக்காட்சி விவாதத்திலும் இடமில்லாமல் இருக்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இந்த வரலாறை ஊர் முழுவதும் நாங்கள் சொல்ல விரும்புகின்றோம். எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் சொல்ல விரும்புகின்றோம்.
அப்படிப்பட்ட மண் இந்த மண். புரட்சியாளர்களுக்கு இணக்கமாக ஒன்றிணைந்து நின்ற இந்த மண்ணிலே, இன்றைக்கு மதரீதியாக பிரிவினையை, பிளவுகளை கொண்டு வருகிறார்கள் என்றால், அதை தடுக்கக்கூடிய போராட்டம் தான் நமது விடுதலைப் போராட்டமாக இருக்க முடியும். நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஐயா அரிப்பரந்தாமன் சொல்கிறார், உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பிறமலைக்கள்ளர் சமூகத்திலிருந்து வர இயலவில்லை என்றால், அது என்ன நீதித்துறை. இது என்ன அரசாங்கம், இது என்ன சுதந்திரம், இது யார் பெற்ற சுதந்திரம்?
வெள்ளைக்காரனுக்கு எதிராக போர் புரிந்தவர்கள் பழங்குடிகளாக இருக்கிறார்கள், போர்வீரர்களாக இருக்கிறார்கள். இந்தியாவிலே இதற்கான போர் என்பது பெரிய மிகப்பெரிய நீண்ட ஒரு வரலாறு இருக்கிறது. 1730களில் போர் ஆரம்பிக்கிறது. இந்தியா முழுவதும் பழங்குடிகள் தான் சண்டை போடுகிறார்கள். கிட்டத்தட்ட 180 வருடங்களுக்கு முன்பு சண்டை நடக்கிறது. மத்திய இந்தியாவில் ”சந்தாள் பழங்குடிகள் கார்வார் பழங்குடிகள் போல ஒரிசா, வட ஆந்திரா, மிதாபூர், பீகார், வங்கம், நாகாலாந்து, அசாம் மற்றும் குஜராத்தை சேர்ந்த பழங்குடிகள் தான் போரை நடத்துகிறார்கள். அதுபோல இந்த மண்ணிலே போர் புரிந்தவர்கள் பிறமலைக் கள்ளர்கள். இங்கிருந்த பல சமூகங்களை (கிட்டத்தட்ட 67 சமூகத்தை) குற்றப் பரம்பரை சட்டத்தில் கொண்டு வந்தார்கள். இந்த 67 சமூகமும் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த சமூகம். இவர்கள்தான் இந்தியாவின் விடுதலை போராட்டத்தை நடத்தியவர்களே ஒழிய, காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை. இந்த எழுச்சி போராட்டத்திற்கு கருத்தாயுதத்தை கம்யூனிஸ்ட்கள் தருகிறார்கள். சோசலிஸ்ட்டுகள் தருகிறார்கள், பகத்சிங் தருகின்றார், அதற்குப் பிறகு இவர்களை முற்போக்கு அரசியலுக்குள் அமைப்பு அணியாக திரட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.
இந்த பழங்குடிகளாக இருக்கக்கூடியவர்களை, போர் மரபு கொண்டவர்களை, ஒரு இராணுவப் படையாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதற்கென்று ஒரு சட்டம் உருவாக்குகிறார். ஆயுத தளவாடங்களை கொண்டு வருகிறார். பயிற்சி அளிப்பதற்கான திட்டங்கள் உருவாக்குகிறார். இந்தியா முழுவதும் இதற்கான கட்டமைப்புகள் உருவாகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எங்கே இடமிருக்கிறது?
1730-களில் ஆரம்பித்த வெள்ளையனுக்கு எதிரான போராட்டம், முன்பு நடந்த 1755-ல் நத்தம் காடுகளில் நடந்த போர், அதிலிருந்து தொடர்ந்த இந்த போராட்டத்தில் மருதுபாண்டியர்கள், விருப்பாச்சி கோபாலநாயக்கர் போன்றோர் மணப்பாறை, தளி பாளையம், அரவக்குறிச்சி, கரூர் பாளையத்திற்கு துணையாக இருக்கிறார்கள். இவை அனைத்தையும் இணைக்கக்கூடிய அந்த போரில், அவர்கள் பெரும் அடக்கு முறைக்கும், படுகொலைக்கும் உள்ளாகிறார்கள். இப்படியாக போராட்டம் தொடர்ச்சியாக நடக்கிறது.
மருதுபாண்டியர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, வேலூர் புரட்சி நடக்கிறது. வேலூர் கலகத்தையும் அடக்கி ஒடுக்கிய பிறகும், இந்த மக்கள் தொடர்ச்சியாக புரட்சிகர உணர்வை தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த மக்களை எப்படி நிரந்தரமாக ஒடுக்கி வைப்பது என்று திட்டமிட்டுதான், குற்றப்பரம்பரை சட்டம் கொண்டு வரப்படுகிறது. ”ஏன் பழங்குடிகள் போராட்டம் நடத்துகிறார்கள்? ஏனென்றால் பழங்குடிகளினுடைய வணிகத்தை முதன் முதலாக நசுக்குகிறவர்களாக வெள்ளையர்கள் இருக்கிறார்கள்”. அதனால் பழங்குடிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்திய பொழுது பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? இதுதான் நமக்கு தெரியாத வரலாறு.

உசலம்பட்டியிலோ, கருமாத்தூரிலோ இந்த (மெருங்காமநல்லூர்) வரலாறு பேசப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள்(மே 17) பெரிய விருப்பம் கொண்டிருக்கின்றோம். காரணம் என்னவென்றால், நீங்கள் உயிர் கொடுத்து நடத்திய விடுதலைப் போராட்டத்தினுடைய விளைவை உங்களால் ஏன் அறுவடை செய்ய முடியவில்லை? யார் அறுவடை செய்தார்கள் என்பது தெரியாமல், ஏன் நம்மால் அறுவடை செய்ய முடியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது.
இந்த விடுதலை 1920-யிலே இங்கு பெருங்காமநல்லூரில் நடந்தது மட்டும் அல்ல, அது 1750-ல் ஆரம்பித்தது. அதையே 1920லே ஒரு பெரும் படுகொலையில் அதை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கு பிறகு 1942ல் ”வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த பொழுது அதிலே கொடூரமான ஒடுக்கு முறைகள் படுகொலைகள் நடக்கின்றன. அது இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. திருமங்கலத்தில் இருந்து ஒரு புத்தகம் வெளிவந்தது. ஒரு புத்தகத்தில், அப்பொழுது நடந்த அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் என்னவெல்லாம் நடந்தன, என்றெல்லாம் அந்த புத்தகத்தில் பெரும் பட்டியல் வந்தது. அந்த புத்தகம் தடை செய்யப்பட்ட புத்தகமாக மாறியது. அது சமீபத்தில் மறுபடியும் பேராசிரியர் ஆ சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்து, அதில் இருந்த ஒரு சில தகவல்களை வெளியில் கொண்டு வந்தார்கள்.
இத்தனை இழப்புகளை சந்தித்த பழங்குடிகள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள் கையில் ஏன் அதிகாரம் வரவில்லை? ஏன் ஒருவர் கூட உயர்நீதிமன்றத்திலே நீதிபதியாக மாறுவதற்கு அல்லது இதர பதவிகள் அடைவதற்கு ஏன் இயலவில்லை? காரணம் என்னவென்றால், பழங்குடிகள் போரிட்டு கொண்டிருந்த பொழுது வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று விரும்பினான். அந்த சட்டம் எந்த அடிப்படையில் உருவாக்குவது என்று யோசித்த பொழுது, பார்ப்பனர்களின் ஆலோசனை அடிப்படையில் சமஸ்கிருதத்தில் இருந்து மனுதர்ம சட்டங்களை இந்தியாவின் சட்டமாக மாற்றுகிறார்கள். அதுதான் முதல் முறையாக இந்திய அளவில் சட்டம் உருவாக்கப்பட்ட நாள். இந்த முறை உருவானது. 1790களில் அப்போதுதான் இந்தியா முழுமைக்கான ஒரு சட்டம் என்பது உருவாகியது. அதுவரை இந்தியா என்ற ஒன்று கிடையாது, இந்தியா முழுமைக்கு சட்டம் என்று ஒன்று கிடையாது, இந்தியா முழுவதும் ஒரு ஆட்சியாளன் என்று எவனும் கிடையாது, இன்றைய இந்தியா முழுவதும் அதிகாரி என்று எவனும் கிடையாது, இந்தியா முழுவதும் நீதிமன்றம் என்று எதுவும் கிடையாது. சமஸ்கிருதத்தின் அடிப்படையில் மனுதர்மத்தை மொழிபெயர்த்து அதை சட்டமாக வெள்ளைக்காரன் கொண்டு வருகின்றான்.
ஆரியன் கொண்டுவந்த அந்தக் கட்டமைப்புதான், இந்த மண்ணின் சட்டம் என்று கொண்டு வருகிறார்கள், அது 1790களில் நடக்கிறது. இந்தியாவினுடைய ஒட்டுமொத்த சட்டத்திட்டமாக மனுதர்மத்தை மாற்றுகிறார்கள். இது 1860 வரை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் மனுதர்மத்தை தான் சட்டமாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அதுவரை பார்ப்பனர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதற்காக 12 சமஸ்கிருத வேத பார்ப்பனர்களை வேலைக்கு நியமனம் செய்து இவற்றை எல்லாம் மொழிபெயர்க்கின்ற வேலையை ஆங்கிலேயர்கள் செய்கிறார்கள். இதனால் பார்ப்பனர்களுக்கு பிரச்சனை இல்லை.
இனாம் நிலம் இருக்கிறது. இந்த இனாம் நிலம் கோயிலுக்கு கொடுப்பது போன்று அரசர்களால், ஜமீன்தாரிகளால், பண்ணையார்களால் கொடுக்கப்பட்ட நிலங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 6,20,000 பட்டயங்கள் இருக்கின்றன. அதில் பார்ப்பனர்களுக்கு என்று பயன்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட நிலத்தினுடைய மதிப்பு 24 லட்சம் ஏக்கர்.
இன்றைக்கு அல்ல, 180 வருடங்களுக்கு முன்பு 24 லட்சம் ஏக்கர் என்றால், அன்றைக்கு தமிழ்நாட்டில் எத்தனை பாசனப் பரப்பு என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அன்றைக்கு பவானிசாகர் அணை கிடையாது. மேட்டூர் அணையோ, வைகை அணையோ, முல்லை பெரியாறு அணையோ அல்லது எந்த அணையும் கிடையாது என்றால், பாசனப் பரப்பு எவ்வளவாக இருந்திருக்க முடியும். அத்தனை பாசனப் பரப்பிலுள்ள பெரும்பான்மை நிலம் பார்ப்பனர் கையில் கொடுக்கப்பட்டது. அதுதான் இனாம் நிலம். அதில் தொந்தரவு செய்யக்கூடாது, அதில் வரி வசூல் செய்யக்கூடாது என்று ஆங்கிலேயர் உத்தரவு போட்ட காரணத்தால் பார்ப்பானுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பார்ப்பானைப் பொறுத்தவரைக்கும் அவனுடைய சட்டத்தை இந்திய சட்டமாக மாற்றியாகிவிட்டது, அவன் மதத்தை இந்து மதம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன பிரச்சனை இருக்க முடியும்?
இந்து மதத்திற்கும் தமிழனுக்கும் சம்பந்தமில்லை, தொடர்பில்லை. நமது கடவுளுக்கும் அவன் கடவுளுக்கும் தொடர்பில்லை. நமக்கும் வேதத்திற்கும் தொடர்பில்லை. முதல் முறையாக வெள்ளைக்காரன் தான் இங்கு இருக்கக்கூடிய எல்லாருடைய வழிபாட்டு முறையும் இந்து மதம் என்று முத்திரை குத்துகிறான். பார்ப்பனருடைய சட்டங்களை பார்ப்பனடைய வேத முறைகளை அனைவருக்குமான சட்டமாக மாற்றுகிறான். பார்ப்பனருடைய சமஸ்கிருதத்தை அனைவருக்குமான மொழியாக சொல்லுகின்றான்.
கி.பி 1860 வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதற்குப் பிறகு ஆங்கிலேய ராணி நேரடியாக இங்கிலாந்து அரசியின் கீழ் ஆட்சி வருகிறது. இங்கிலாந்து அரசின் கீழ் ஆட்சி வந்ததற்கு பின்பு, பார்ப்பன நிலத்தில் மட்டும் வரி வசூல் செய்யாமல் விலக்கு தர வேண்டும் என்பதில் ஆரம்பித்து, பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வருகிறார்கள். அனைவருக்குமான கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் ஆங்கிலப் பேரரசு விரிவாக்கம் செய்ய முடியும். அனைத்து சாதிகளும் அதிகாரத்திற்குள் வந்தால்தான், இந்த நிலத்தை ஆட்சி செய்ய முடியும் என்று அனைத்து சாதிக்கும் இடத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தவுடன், வெள்ளைக்காரனை எதிர்க்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் முடிவு செய்கிறார்கள். அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சி உருவாகிறது.
இந்த காங்கிரஸ் கட்சி 1930 ஆண்டு வரைக்கும் தனி சுதந்திர இந்தியா வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை. அவன் சுதந்திர இந்தியா கேட்கவில்லை. இந்தியாவினுடைய விடுதலைக்காக காங்கிரஸ் கட்சிக்காரன் போராடினார்கள் என நம்பினால், அது நமக்கு வரலாறு தெரியாத காரணத்தினால் நம் மீது திணிக்கப்பட்ட ஒரு பொய். அவர்கள் ”டொமினிக்கன் அந்தஸ்து” என்று கேட்கிறார். அதாவது இந்தியாவுக்குள் எப்படி நம் தமிழ்நாடு இருக்கிறதோ, அதுபோல ”இங்கிலாந்து பேரரசுக்குள் இந்தியா இருக்க வேண்டும் என்று கேட்டதுதான் காங்கிரஸ் கட்சியினுடைய உச்சபட்ச கோரிக்கை”.
ஆனால் அந்த சமயத்தில் பழங்குடிகள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். முண்டா பழங்குடியினுடைய தலைவரான பிர்சா முண்டாவினுடைய போராட்டம் உங்களுக்கு தெரியும். அவர்கள் திராவிடப் பழங்குடிகள் என்று சொல்கிறார்கள். பிர்சா முண்டா 1901-ல் படுகொலை செய்யப்படுகிறார். முண்டா பழங்குடிகளை ஒடுக்க வேண்டும் என்று ஆங்கிலேயருக்கு நெருக்கடி ஒருபுறம் இருந்ததால் காங்கிரஸ் கட்சியோடு பேரம் பேசி முடித்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பழங்குடிகளை அடக்க முடியவில்லை. அப்பொழுதுதான் இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இச்சட்டத்தை 1911-ல் ஆரம்பித்து 1913 நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள். 1920-ல் அந்த சட்டத்திற்கு எதிரான எழுச்சி மிகுந்த போராட்டத்தை மக்கள் நடத்தினார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவில் பழங்குடிகள் மீதான அடக்கு முறைக்கு எதிரான குரலாக ஒலித்ததுதான் பெருகாமநல்லூரினுடைய அந்த போராட்டம். இது இந்த பகுதியின் போராட்டம் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடுதலை கேட்பதற்கான வெளிச்சம் பாய்ச்சிய போராட்டமாகத்தான் பெருங்காமநல்லூர் போராட்டம் இருந்தது. அப்பொழுதுகூட காங்கிரஸ்காரன் பெருங்காமநல்லூர் படுகொலைக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லையே, ஏன் என்பது நாம் கேட்க வேண்டிய கேள்வி.
ஜாலியன் வாலாபாக் படுகொலை பிரச்சனையை இந்தியா முழுதும் கொண்டு போகிறார்கள். இன்றைக்கு வரைக்கும் ஜெனரல் டயரைப் பற்றிய திரைப்படம் இருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி திரைப்படம் இருக்கிறது. அது பற்றி நமது பாட புத்தகத்தில் வரலாறாக இருக்கிறது, அவர்கள் ஈகியர்கள் தான், நாம் மறுக்கவில்லை. ஆனால் பெருங்காமநல்லூர் ஈகியர்களை நாம் எந்த கணக்கில் சேர்ப்பது?
எனக்கு முன் தோழர்கள் பேசிய போது, இங்கே துப்பாக்கி சூட்டில் பலியாவோம் என்று தெரிந்துதான் துணிந்து போரிட்டார்கள் என்றார்கள். இத்தகைய வீரமிக்க வரலாறு நம் பாட புத்தகத்தில் எங்கே? அப்படியென்றால் நம் ஊரில் நாம் படிப்பது நமக்கான வரலாறா? நாம் படிப்பதும், நமது குழந்தைகள் படிப்பதும் நமக்கான வரலாறு இல்லை என்றால், நாம் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற கேள்வி எழுமா, இல்லையா?
எனக்கு, என்னுடைய கல்லூரி நண்பனுடைய தாத்தா பார்த்த அந்த சிறுவயது சம்பவத்தின் மூலமாகத்தான் எனக்கு பெருங்காமநல்லூர் தெரிகிறதே ஒழிய, அதுவரைக்கும் தெரியவில்லை. இந்தியாவினுடைய வரலாறு, ஐரோப்பிய வரலாறு, ஆப்பிரிக்க வரலாறு, எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பெருங்காமநல்லூர் வரலாறை கொடுக்கவில்லை. ஆக இந்த வரலாறை ஊர் முழுக்க சொல்ல வேண்டும்.
கோயம்புத்தூரில் மிகப்பெரிய புரட்சி நடத்த வேண்டும் என்று மருதுபாண்டியர்கள் திட்டமிட்டார்கள் என்று நான் சொன்னேன் அல்லவா!
இந்த புதைந்து போயிருந்த வரலாறை நான்கு வருடங்களுக்கு முன்பாக எடுத்து, அதற்காக மிகப்பெரும் எழுச்சி மாநாட்டை நடத்தி, இப்படியான வரலாறு கோயம்புத்தூருக்கு இருக்கிறது என்று மே 17 இயக்கம் மேடை போட்டு முதன் முதலாக நிகழ்ச்சியாக நடத்தியது. சுமார் 220 வருடத்திற்கு பிறகு கோயம்புத்தூர் மண்ணை மீட்க வேண்டும் என்று 42 பேர் போராடி தூக்கில் ஏற்றப்பட்டார்கள். அதில் 36 பேர் இசுலாமியர்கள்.

அந்த இசுலாமியர்கள் வசித்த பகுதி தான் கோட்டைமேடு. ஆனால் இன்றைக்கு தீவிரவாதிகளுடைய பகுதி என்று இந்திய அரசு முற்றுகையிட்டு இசுலாமியர்களை கைது செய்து கொண்டிருக்கிறது. அந்த இஸ்லாமியர்கள் யார் என்றால், 220 வருடங்களுக்கு முன்பு இந்த மண்ணை மீட்க வேண்டும் என்று போராடி உயிர் நீத்த அந்த போராளிகளுடைய வம்ச வாரிசுகள். இந்த மண்ணுக்காக போராடியவன் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றால், நமது வரலாறை எப்படி கொண்டு செல்வது? இதுதான் எங்கள் முன்னால் இருக்கக்கூடிய கேள்வி. இதற்காகதான் நாங்கள் கோயம்புத்தூர், அவிநாசி, ஈரோடு, வேலூர், திருப்பத்தூரில் வரலாறு மீட்பு மாநாடு நடத்தினோம். இன்றைக்கு கருமாத்தூரில் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்ச்சியாக நடக்கும், தடைகள் வந்தாலும் உடைத்து நடக்கும், எங்களை எந்த அரசும் தடுத்து விட முடியாது, எந்த காவல் துறையும் எங்களுக்கு விலங்கு போட்டு விட முடியாது.
அன்பான தோழர்களே! இந்த பெருங்காமநல்லூர் போராட்டத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் ’பெரும் அரசியல்’. ஆக இந்த பழங்குடிகளுடைய போராட்டத்தை எல்லாம் முன் வைத்து பேரம் பேசி பார்ப்பனர்கள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள், சட்டத்தை இயற்றினார்கள். பார்ப்பனர்களுக்கான சட்டத்தை கொண்டு வரும் பொழுது அதற்குள்ளாகப் போராடி நமக்கு பேசுவதற்கு உரிமை, ஓட்டு போடுவதற்கு உரிமை, தேர்தலில் நிற்பதற்கு உரிமை என்ற உரிமைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனால்தான் கொஞ்சம் உரிமையாவது கிடைக்கிறது.
அதற்குப் பிறகு இவன் கொடுத்திருக்கக்கூடிய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் இல்லை, டெல்லிக்காரன் எப்பொழுது வேண்டுமானாலும் தனது ஆதிக்கத்திற்காக நம்மை நசுக்குவான், எப்பொழுது வேண்டுமானாலும் நமது உரிமையை பறிப்பான், வெள்ளைக்காரிடமிருந்து தற்போது வடநாட்டாரிடம் அடிமைப்பட்டுவிட்டோம். ஆகவே இந்த சுதந்திர நாள் என்பது மகிழ்ச்சியான நாள் அல்ல, இது ஒரு துக்க நாள் என்று கருப்பு சட்டையை போட்டவர் தந்தை பெரியார் அவர்கள். இன்று பெரியார் சொல்வது உண்மையா, இல்லையா?
தமிழ்நாட்டில் நமது வரிப்பணத்தில் நாம் உருவாக்கிய மருத்துவக் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளைகள் டாக்டர் ஆக முடியாது என்று, எவன் முடிவு செய்கிறான்? டெல்லிக்காரன் முடிவு செய்கிறான். அடிமையாக நாம் வாழ்கிறோம் என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி இருக்க முடியும்.

பெருங்காமநல்லூர் போராட்டம் நடந்த பொழுது பார்ப்பனர் கூட்டம் காங்கிரஸ் கட்சி ஊடாக பேரம் பேசி ஆங்கிலேயருக்காக வேலை செய்த ஒரு கூட்டமாக இருந்தது. மறுபுறம் இந்த பழங்குடிகளை எல்லாம் ராணுவமாக ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய பொழுது, அதற்கென்று பெரும் தோழனாக தோள் கொடுத்தார் ஐயா. முத்துராமலிங்க தேவர் அவர்கள். இங்கு இருக்கக்கூடிய மக்களை எல்லாம் ஒன்று திரட்டிய பொழுது குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கினால் தான் இவர்களை ஒன்று திரட்ட முடியும், படையாக மாற்ற முடியும் என்றார். ஆனால் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க மாட்டேன் என்று சொன்னவர் பார்ப்பனர் ராஜாஜி. காரணம் வெள்ளைக்காரனுக்கு எதிராக படை திரட்டுவதற்கு இந்த சட்டத்தை நீக்கிவிட்டால், முத்துராமலிங்க தேவர் படையாக மாற்றிவிட முடியும் என்கின்ற காரணத்தினால் தான் சட்டத்தை நீக்கவில்லை. அவரைத் தூக்கி சிறையில் போட்டார்கள். இதையெல்லாம் மீறி படையாக திரண்டான் தமிழன். நேதாஜியோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்து போர் புரிந்தான்.
அப்படி போர் புரியப் போகும் பொழுது நேதாஜியினுடைய வீரமிக்க 150 ஆண்டு கால போராட்ட போர் மரபை கொண்டிருக்கக்கூடிய படைக்கு எதிராக ஆங்கிலேயரிடத்தில் படை கிடையாது. ஏனென்றால் இங்கிலாந்தை ஹிட்லர் முற்றுகையிட்டு விட்டான். இங்கிலாந்திற்குள் உணவு தட்டுப்பாடு வருகிறது. இங்கிலாந்தினுடைய படைகள் பிரான்ஸில் இருக்கின்றன. பிரான்சின் மீது ஹிட்லர் படை எடுத்து பிரான்சை வீழ்த்திய பொழுது, பிரான்சினுடைய ஒரு கடற்கரைப் பகுதியில் நான்கரை லட்சம் ஆங்கிலேய படைகள் சிக்குண்டு விட்டன. (இதைப் பற்றி ஒரு படம் வந்துள்ளது. டான்கிர்க் என்ற படம்). ஒட்டுமொத்த படையும் அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் நினைக்கிறான். பிரெஞ்ச் தேசத்தினுடைய ஒரு கடற்கரை நகரத்தில் ஒட்டுமொத்த இங்கிலாந்தினுடைய படையும் சிக்கி கொண்டுள்ளது. அங்கே படுகொலை செய்து முடித்து விட வேண்டும் என்று ஹிட்லர் குண்டுமழை பொழிகிறான். ஆக இங்கிலாந்தை பாதுகாப்பதற்கு என்று இங்கிலாந்திடம் படை கிடையாது. ஜப்பான் உதவியோடு இந்தியாவை தாக்கினால் இந்தியாவை காப்பாற்றுவதற்கு அவனுக்கு படை இருக்காது. ஏனென்றால் இங்கிலாந்தையே அவனால் பாதுகாக்க முடியவில்லை. இந்தியாவை எப்படிப் பாதுகாக்க முடியும்? ஆகவே இந்தியாவை கைப்பற்றி விட முடியும் என்றுதான் படை திரட்டுகிறார் நேதாஜி.
உண்மையில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு படை கிடையாது. ஆங்கிலேய படையில் இயங்கி போரிட்ட இந்தியர்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போருக்காக பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். ஆக இந்தியாவை பாதுகாப்பதற்கு படை கிடையாது. ஆனால் ஜப்பான் படை ஏறி வருகின்ற சமயத்தில் நேதாஜி அவர்களுடைய படை முன்னணி படையாக உள்ளே நுழைகின்ற பொழுது, அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆங்கிலேயரிடத்திலே படை கிடையாது. அந்த சமயத்தில் இந்த படையை தடுத்து நிறுத்துவதற்காக ”ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் போட்டு, ‘இந்து இளைஞர்களே ஒன்று திரளுங்கள்’ என்று சொல்லி சாவர்க்கர் 10 லட்சம் பேரை ஒன்று திரட்டி, நேதாஜியின் படைக்கு எதிராக இந்த படையை திரட்டி போர் புரிந்து நேதாஜி படையை வீழ்த்தியவர் சாவர்கர்” என்பதை மறந்து விடாதீர்கள்.
அந்த சாவர்க்கர் தான் இந்து மகாசபையின் தலைவர், ஆர்.எஸ்.எஸ்-னுடைய தலைவர், இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய மூலவர், அந்த இந்து மகாசபை என்ன செய்கிறது என்றால், இந்தியாவினுடைய ”போர் நடத்துவதற்கான குழு”வில் தங்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி வார் கவுன்சிலில் உறுப்பினராக மாறியவர்கள். இது ஆவணமாக இருக்கிறது. இந்து மகாசபை உறுப்பினராக சேர்ந்து நேதாஜியின் படைக்கு எதிராக ராணுவ தளவாடங்களை எல்லாம் ஒன்று திரட்டி, ராணுவ படைகளை எல்லாம் ஒன்று திரட்டி நேதாஜியின் படையினை அழித்தார்கள். அதில் வீழ்ந்தவர்கள் பெரும்பாலோர் தமிழர்கள். தமிழனுக்கு மிகப்பெரும் துரோகத்தை இழைத்தது சாவர்க்கர் என்கின்ற ஆர்எஸ்எஸ் என்கின்ற பாரதிய ஜனதா கட்சி கூட்டம். இதுதான் வரலாறு.

இதை மே 17 இயக்கம் முதல் முதலாக அம்பலப்படுத்தியது. கடந்த எட்டு வருடமாக ஒவ்வொரு மேடையிலும் இதை சொல்லி வருகின்றோம். காரணம் இந்த உண்மை போய் சேர வேண்டும். ஆனால் இதுவரை பிஜேபி-யில் ஒருத்தன் கூட எங்களுக்கு பதில் சொல்லவில்லை, மறுப்பு சொல்லவில்லை, ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் கூட மறுப்பு சொல்லவில்லை. இதனால்தான் நாங்கள் தடுக்கப்படுகின்றோம், நாங்கள் ஒடுக்கப்படுகின்றோம், எங்கள் மீது வழக்குகள் ஏவப்படுகின்றன. நாங்கள் பிரபாகரனின் வழியில் வந்தவர்கள், தந்தை பெரியாரின் வழி ஏற்றவர்கள், எங்களை எவனும் தடுக்க முடியாது.
இபோது சொல்லுங்கள் தோழர்களே! முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஒன்று திரட்டி, நேதாஜிக்கு படை திரட்டி கொடுத்து, அதற்காக சிறைபட்டு சித்திரவதைப்பட்டு அந்த படையில் இருந்த தமிழன் எல்லாம் அங்கே வடகிழக்கு எல்லையிலே படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த சாவர்க்கருடைய கட்சியான பாரதி ஜனதா கட்சியினுடைய கொடி இந்த மண்ணில் பறக்க வேண்டுமா? அந்த கொடி இந்த மண்ணில் பறக்க வேண்டுமா? தமிழனை காட்டிக் கொடுத்து தமிழனை அழித்து தமிழின தலைவர்களை எல்லாம் நிர்மூலமாக்கிய ஒருவனுடைய கொடி ஒரு கட்சியின் கொடி, ஒரு துரோகத்தின் கொடி, இந்த மண்ணில் பரப்பது அவமானம், அதை பார்க்கும் பொழுதெல்லாம் மலத்தை மிதித்ததைப் போல உணர்கின்றேன் நான். இதை சொல்லுவதற்குதான் எங்களுக்கு மேடைகள் தேவை. எங்களுக்கு எம்எல்ஏ பதவியோ எம்பி பதவியோ தேவையில்லை. ஆனால் இந்த உண்மையை உரக்க நாங்கள் சொல்லிக்கொண்டே இருப்போம். எங்கள் இறுதி மூச்சு வரை இந்த துரோகிகளை இந்த மண்ணிலிருந்து வேரறுத்து வெளியே வீசும் வரை, நாங்கள் போராட்டம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். நன்றி. வணக்கம்!