
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13, 2025 அன்று ஒன்பது குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும், சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், சதீஷ், ஹேரன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண்குமார், பாபு, அருளானந்தம் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெளியான இந்த தீர்ப்பை பல பெண்ணியவாதிகள் மட்டுமன்றி பொது மக்களும் வரவேற்கின்றனர்.
ஆறு ஆண்டுகளில் ஒரு முறை கூட ஜாமின் வழங்காத ஒரே வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர். தீர்ப்பு இத்தகைய வரவேற்பைப் பெற்றதற்கு இந்த வழக்கில் பெண்கள் அனுபவித்த கொடூரம் காரணமாக இருக்கிறது. இருப்பினும் இந்த வழக்கை காவல் நிலையத்தில் பதிவு செய்த பெண்ணிற்கும் உடன்நின்ற பெண்களுக்கும் முதலில் வாழ்த்துக்களை சொல்லிவிடலாம். காரணம் காலம் காலமாக பெண் என்றால் சுயமாக சிந்திக்கவோ முடிவு எடுக்கவோ கூடாது என சொல்லி வளர்க்கும் சமூகத்தில், துணித்து சட்ட போராட்டத்திற்கு துணை நின்றனர் இந்தப் பெண்கள். (மொத்தம் 8 பெண்கள் இறுதி வரை பிறழ்சாட்சியமாக மாறாமல் வழக்கை முன்னகர்த்த உதவி இருக்கின்றனர்).

‘பெண்ணின் திருமணம் பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும், காதல் திருமணம் பெரும் குற்றம்’ எனும் பிற்போக்குத்தனம் இன்றும் இருக்கின்றது. மதம் மாறியோ அல்லது வேறு சாதியை சார்ந்தவர்களையோ காதல் திருமணம் செய்தால் அவர்களை ஆணவப் படுகொலை செய்யும் மதவாதிகளும் சாதியவாதிகளும் மீசையை முறுக்கிக் கொண்டு இருக்கும் சா’தீய’ கட்டமைப்புக்குள் பெண்கள் போராடியே வாழ வேண்டிய சூழலும் இருக்கின்றது. ஒரு புறம் பெண்கள் சுயமரியாதை திருமணம் செய்யவே பயப்படும் இத்தகைய நிலை இருக்கும்போது, மறுபுறம் ஆணின் பாலியல் வன்கொடுமை வேட்டைகளும் பெண்ணை மிக வேகமாக முன்னேற்றப் படியில் இருந்து கீழே தள்ளுகின்றன.
ஒரு பெண் தான் காதலித்த ஆணுடன் வெளியே செல்கிறாள், (அவன் தவறான ஆண் என்பது அவளுக்குத் தெரியாது) அந்த இளம் பெண்ணை கொடூரமாகத் தாக்கியும் ஆடைகளைக் களைந்து புகைப்படம் எடுக்கும் சீழ்பிடித்த மனநிலையில் அந்த குற்றவாளி இருந்திருக்கிறான். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதும், அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிப்பதும் ஒரு தொழிலாகவே செய்த குற்றவாளியை சிறையில் தள்ளி இருக்கிறது அந்தப் பெண்களின் சட்டப் போராட்டம்.
நம்பி வந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி பணம் பறித்தது மட்டுமன்றி, பெண்களை அச்சுறுத்தி மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்திருக்கிறார்கள் அந்த பாலியல் குற்றவாளிகள். பல ஆண் மிருகங்களுக்கு நடுவிலே அந்தப் பெண் குரல் நடுங்கி, “வேண்டாம் அடிக்காதீங்க அண்ணா!” எனவும் “உன்னை நம்பி தானடா வந்தேன்!” எனவும் மூச்சு வாங்கி பேசும் குரல் இன்னமும் நம் செவிப்பறைகளை கிழிக்கிறது.

மனம் பதற வைக்கும் இத்தகைய பாலியல் வன்கொடுமை வழக்கை பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவளது அண்ணன் துணையுடன் காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த எஃப்.ஐ.ஆர் / குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்யவே மிகவும் கெடுபிடி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் அலைக்கழிக்கப்பட்ட பிறகுதான் காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. அப்போதைய பொள்ளாச்சி மாவட்ட எஸ்.பி புகார் பதிவு செய்த மாணவியின் பெயரையும் படிக்கும் கல்லூரியின் விவரம் முழுவதையும் வெளியிட்டு இருந்தார். இதன் நோக்கம் என்னவென்றால் ‘பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாருமே புகார் கொடுக்க அஞ்ச வேண்டும், நமது வீட்டுப் பெண்ணிற்கு நடந்த அவலம் வெளியில் தெரிந்துவிட்டால் அவமானம் என நினைத்து உளவியல் ரீதியாக பின் வாங்குவார்கள், பெண்கள் மனதிலேயே விம்மி அழுது புலம்புவதோடு இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும்’ என்று கூட அதிகாரிகள் எண்ணி இருக்கலாம். அரசியல் பின்புலம் உள்ளவர்கள், பெரிய தொழிலதிபர்களின் மகன்கள் சிக்கியதாக பெயர் வந்தாலும் பிறகு அவர்களின் பெயர்கள் எல்லாம் புகாரில் இல்லாமல் மாயமான சூழலும் ஏற்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் இருவர் அதிமுகவில் நிர்வாகிகளாக பொறுப்பில் இருந்தனர். 2019இல் இந்த வழக்கு பதியப்பட்டபோது அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கிலேயே இருந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தபோதும், அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகளைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் செயல்பட்டதை பாதிக்கப்பட்டவர்கள் துணிவுடன் கூறினர். வழக்கில் இருந்து பின்வாங்க மறுத்தால் தங்கள் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் கசியவிடுவதாக குற்றவாளிகள் மிரட்டியதாக விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர். ஆனால் இத்தகைய அதிகார மிரட்டல்களால் அச்சம் அடையாமல், சமூக அழுத்தங்களை பற்றிக் கவலைப் படாமல், வழக்கில் இருந்து பின்வாங்காமல் போராடியுள்ளார்கள் அந்தப் பெண்கள்.

அரசியல் அழுத்தத்தினாலேயே காவல்துறை கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாலும், அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு விசாரணை மந்தமாக இருந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும், இந்த வழக்கு சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது
தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை வெளியிட்ட ஊடகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது காவல்துறை. குற்றம் நடந்துள்ளது என ஆதாரம் அளித்தவரையும் துருவி துருவி கேள்வி கேட்டிருக்கிறது காவல்துறை. இதனால் விசாரணை நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சாட்டுவதும், ‘குடும்ப கவுரவம்’ என்று பேசி பெண்களை பெண் அதிகாரியே மன உளைச்சலுக்கு ஆளாக்கியதையும் மீறி துணிந்து நின்ற பெண்கள் இன்று சட்டத்தின் துணையால் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அச்சுறுத்தல் இருப்பினும் பயம்கொள்ளாது, முதலில் வழக்கு பதிய வைத்த பெண் பாராட்டுதலுக்கு உரியவர். இவரது துணிவைக் கண்ட பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தாமாகவே முன்வந்து புகார் அளித்ததுதான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறக் காரணமாக அமைந்தது.
மனித உடலுக்கு புனித பிம்பம் கட்டி, அதற்கு கற்பு என்னும் பிற்போக்குத்தனத்தைப் புகுத்தி பெண்ணடிமையை உருவாக்கியவர்கள் சனாதனவாதிகள். பெண்ணின் உடலை மற்றொரு ஆண் பார்த்துவிட்டாலோ அல்லது பாலியல் வண்புணர்வு செய்துவிட்டாலோ ‘கற்பு போய்விட்டது’ என்று பிதற்றும் கோமாளித்தனத்தை சனாதனவாதிகள் தொடர்கின்றனர். ஆண்களிடம் ‘கற்பு’ பார்க்காமல், பெண்ணின் உடலிலேயே கற்பை வைத்து தைத்துவிடுகின்றார்கள். ஆனால் உண்மையாகவே கற்பு என்றால் சொன்ன சொல்லை காப்பாற்றுவதும், செயலில் தூய்மையும் நேர்மையுமே என சொல்லலாம்.
ஆண்களுக்கு எவ்வித கட்டுபாடுகளும் கற்பிப்பதில்லை, என்ன செய்கிறான் எங்கு செல்கிறான் என்ற கேள்வி எழுவதுமில்லை. பாலியல் வன்முறை நிகழ்ந்தால் பெண்ணை மட்டுமே ‘கற்பு’ எனும் குடுவைக்குள் அடைத்து குற்றம் சுமத்தினர் பலர். ஆண் எத்தகைய கொடூர குற்றங்களைப் புரிந்தாலும், “பெண் ஏன் தனியாக ஆணுடன் செல்ல வேண்டும்? இவள் மீதுதான் குற்றம்” எனப் பேசும் சனாதனவாதிகளின் நாக்கும் பிற்போக்குவாதிகளின் விரல்களும் பெண்ணையே குறி வைக்கின்றன. அவற்றை எல்லாம் உதறித்தள்ளி பாதிக்கப்பட்ட பெண்கள் துணிவுடன் சட்டப் போராட்டம் நடத்தி இன்று குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தந்துள்ளனர்.

சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். ஆனால் இதே சட்டம் தஞ்சை ஒரத்தநாட்டில் இதேபோன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அலைக்கழித்தது. மருத்துவமனையில் உடனடியாக சேர்த்து சிகிச்சை பெற கூட சிரமப்பட்ட அந்தப் பெண், தன் வலியையும் மீறி காவல்துறையில் புகார் அளிக்க சென்றார். ஆனால் அந்தப் பெண்ணின் புகாரை பெண் காவல் அதிகாரியே நிராகரித்துள்ளார். இத்தனை தடங்கல்களையும் தாண்டி அந்த பெண் வலியுடன் போராடி புகார் அளித்தார். அவருக்காக மே பதினேழு இயக்கமும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அந்த பெண்ணுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதும் முன்னெடுக்கப்படுகிறது.
அதேபோல் தனக்கு தீங்கு விளைவித்தாலோ பாலியல் சீண்டல் செய்தாலோ அதை மறைக்காமல் துணிவுடன் சட்டப் போராட்டம் செய்யவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரவும் பெண்கள் தயங்க கூடாது. ஆண்-பெண் இருவருக்கும் இந்த மண்ணில் சமமாக வாழ உரிமை உண்டு. போராடும் பெண்கள் அனைவரும் பெரியார் பேத்திகளாக உலா வரும் இச்சமூகத்திலே, இனி பெண்கள் சட்டரீதியாக தங்கள் நீதியைப் பெற தயங்கக் கூடாது என்பதையே பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நமக்கு எடுத்துரைத்திருக்கின்றது.