
வெனிசுலேவாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க, அந்நாட்டைத் தாக்கி, அதன் அதிபர் மற்றும் அவரது மனைவியை சட்ட விரோதமாக சிறைப்படுத்தியுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அத்துமீறல் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் அவர்கள் சனவரி 4, 2025 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தது.
வெனிசுவேலாவின் மீதான அத்துமீறி தாக்குதலை நடத்தி, அதன் அதிபர் மடூரோ மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமாக கடத்திச் சென்று சிறைப்படுத்தியுள்ளது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு.
உலகம் மிக மோசமான கொள்ளைக்கூட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஈராக் தொடங்கி லிபியா என தொடர்ந்து தற்போது வெனிசுவேலாவின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது அந்த நாடுகளின் கனிம வளங்களை களவாடும் கொள்ளை என்பதை தவிர வேறில்லை.
சனநாயகம் காக்கிறோம் எனும் பெயரில் கொள்ளையடித்தல் அப்பட்டமாக நடக்கிறது. அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கை தடுத்து நிறுத்தும் வலிமையை நாம் பெற்றாக வேண்டும். இல்லையெனில் நாமும் தாக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஒரு நாட்டின் தேர்தெடுக்கப்பட்ட அதிபரை வீடுபுகுந்து கடத்திச் செல்லும் அராஜகத்தை கண்முன்னால் காண்கிறோம். இவை வெனிசுவேலாவின் கச்சா எண்ணையை களவாடும் நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறில்லை. அமெரிக்காவிற்குள் போதை பொருட்களை கடத்துவதாக சொல்லி வெனிசுவேலா அதிபர் மடூரோவை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளார் ட்ரம்ப்.
போதை கடத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கி வைத்திருத்தல் என குற்றம் சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் அட்வகேட் ஜெனரல் அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன?
வெனிசுவேலாவின் மக்கள் ஆட்சியாளர்கள் இடதுசாரிகள். இவர்கள் தம் தாய்நாட்டின் கச்சா எண்ணை வளத்தை நாட்டுடமையாக்கினார்கள். இந்த நிறுவனங்களால் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கான வசதிகளை உருவாக்கினார்கள். பிற ஏழை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். இதனால் இந்த கச்சா எண்ணையை கொள்ளையடித்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் வாய்ப்பில்லாமல் தவித்தன. தற்போது மேலதிக கச்சா எண்ணை இருப்பிடங்களை வெனிசுவேலா கண்டறிந்துள்ளது. இது மிகப்பெருமளவில் லாபம் கிடைக்கக்கூடியதாக இருப்பதால் இந்த வளத்தை கொள்ளையடிக்க களம் இறங்கியுள்ளது அமெரிக்கா. இதற்காக, வெனிசுவேலாவில் பொம்மை அரசை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டில் போலியான எதிர்கட்சியை உருவாக்கி அதன் தலைவருக்கு நோபல் பரிசை கொடுத்தார்கள். போதை பொருட்கள் கடத்துவதாக சொல்லி தாக்குதல் நடத்தி அதிபரை கடத்தி சென்றுள்ளது அமெரிக்கா.
இதில் மேலதிகமாக கவனிக்க வேண்டிய விவரங்களும் உள்ளன.
வெனிசுவேலாவின் கச்சா எண்ணை சீனாவிற்கும், க்யூபாவிற்கும், வட கொரியாவிற்கும் ஏற்றுமதியாகிறது. இந்த கட்டமைப்பை தற்போது அமெரிக்கா முடக்கியுள்ளது. இதன் மூலம் சீனாவின் கச்சா எண்ணை இறக்குமதி மீது தாக்குதலாக இது அமைந்துள்ளது. சீனாவிற்கு இது மறைமுக நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலின் நோக்கம் இன்னும் மோசமானது. இது ஈரான் மீதான தாக்குதலுக்கு அடிப்படையை உருவாக்கியுள்ளது.

ஈரானை தாக்கினால், தனது பகுதியில் உள்ள ஹோர்முட்ஸ் சந்தியை ஈரான் முடக்கும். இதனால் உலகின் 40-60% கச்சா எண்ணை போக்குவரத்து முடங்கிப்போகும். இது அமெரிக்காவின் டாலர் மதிப்பினையும் பாதிக்கும். உலகளவில் கச்சா எண்ணை நெருக்கடியை உருவாக்கி ஈரான் பாதுகாக்கப்படலாம். அமெரிக்காவால் வளைகுடா நாட்டின் கச்சா எண்ணை இல்லாமல் இயங்க இயலாது. இந்த சூழல் இப்போது மாறுகிறது.
மே17 இயக்கம் நீண்ட காலமாக சொல்லி வரும், மத்திய ஆசியா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கான வழிவகை ஏற்படுத்தும் வகையிலேயே கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா தெற்காசியா-மேற்காசியா பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது. இவ்வகையிலேயே இந்திய பெருங்கடல் பகுதியில் காலூன்றவே ஈழத்தின் போராட்டத்தை நசுக்கியது. பிற்பாடு ஏமன், பாலஸ்தீனம், சிரியா, லெபனான் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. இவை அனைத்தும் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வீழ்கின்றன. இதன் நோக்கம் ஈரானை தனிமைப்படுத்துவதற்காகனது.
ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வீழ்த்த போதுமான சூழல் அமையாததற்கு காரணம், அதன் ’ஹோர்முட்ஸ் கடற்சந்தி’ கட்டுப்பாடு. ஆகவே கச்சா எண்ணை மீதான தமது ஆதிக்கத்தை ஈரான் தகர்த்துவிடும் வாய்ப்பினை கொடுக்காமல் இருக்க வேண்டுமானால், பிறபகுதியில் இதற்கு ஈடான கச்சா எண்ணையை ஈட்டியாக வேண்டும். அதை செய்ய ஒரே வாய்ப்பு வெனிசுவேலாவின் கச்சா இருப்பை கொள்ளையடித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். தற்போதைய தாக்குதலின் மூலம் வெனிசுவேலாவின் கச்சா எண்ணை வளங்களை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதை அமெரிக்கா சாத்தியமாக்கினால், ஈரானின் மீதான தாக்குதலை நடத்த வாய்ப்பு கிடைக்கும். அதாவது, ஹோர்முஸ் கடற்சந்தியை மூட வைத்து ஈரான் அரசு அமெரிக்காவிற்கு நெருக்கடி தந்து போரை தடுக்க இயலாது. இனி சுதந்திரமாக அமெரிக்காவால் ஈரானை நோக்கி தாக்குதலை நடத்தும் நிலையை உருவாக்கிவிடலாம். இந்நிலையை மாற்ற வேண்டுமானால் சீனா களமிறங்க வேண்டும். இல்லையெனில் அதன் ஆதரவு நாடுகளான வெனிசுவேலா, ஈரான் ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்.

இதுமட்டுமல்லாமல், தென்னமெரிக்காவில் இடதுசாரி அரசுகள் உருவாகி மக்கள் நல அரசை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சிக்கவிழ்ப்புகளை முன்பைப் போல அமெரிக்காவில் எளிதில் செய்ய முடிவதில்லை. வெனிசுவேலாவின் அதிபர் சாவேஸ் 2000ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் பொம்மை அரசுகளை முடிவுக்கு கொண்டு வந்தார். அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த கச்சா எண்ணை நிறுவனங்களை நாட்டுடமையாக்கி ஏழை, எளிய மக்களுக்கான நல திட்டங்களுக்கு பெரும் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தினார். கச்சா எண்ணை விற்பனை லாபங்களால் ஏழைகள் முதன்முறையாக லாபமடைந்தனர். இதனால் கோபமடைந்த அன்றய அமெரிக்க அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த வெனிசுவேலாவின் இராணுவத்தினை கொண்டு அதிபர் சாவேஸை கடத்தியது. ஆனால் வெனிசுவேலா மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அதிபரை விடுவிக்கு நெருக்கடி கொடுத்து அவரை மீட்டனர். இதன் பின் சாவேஸ் மிகப்பெரும் தலைவராக செயல்பட்டு க்யூபா உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி அவர்களுக்கு அமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்தார். சாவேஸ் மீது ரசாயண தாக்குதல் மறைமுகமாக நடத்தப்பட்டு அவர் புற்றுநோயால் மரணமடைந்தார்.
அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த தற்போதய அதிபர் மடூரோ முன்னர் இருந்த சாவேசின் வழிமுறையில் இயங்கி மக்களுக்கு சேவை செய்தார். இவரை தோற்கடிக்க அமெரிக்கா பலமுறை முயன்றது. தேர்தல் வெற்றியை நிராகரித்தது. போலியாக புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்ற முயன்றது. இவையெல்லாம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தின் முதலாளி எலான்மஸ்க், டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த வேண்டுமென பிரச்சாரம் செய்தனர். பின்னர் போதை பொருள் கடத்துகிறார்கள் என குற்றம் சாட்டினர். பின்னர் வெனிசுவேலாவின் கப்பல்களை தாக்கினர். அதன் மீனவர்களை தாக்கி கொன்றனர். இதன் அடுத்த கட்டமாக தற்போது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் மடூரோவை கடத்தியுள்ளனர்.

இந்த நிலை ஏழைகளுக்கான அரசுகளை மேற்குலக நாடுகள் தாக்கி அழிப்பது, கொள்ளையடிப்பதை வெட்கமின்றி வெளிப்படையாக செய்கின்றன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மே17 இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எவ்வாறு கடந்த 600 ஆண்டுகளாக மேற்குலகம் கொள்ளையடிப்பதை செய்துள்ளன என்பதை நூலாக கொண்டு வந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க வரலாற்று நூலை மொழிபெயர்த்து கொண்டு வந்துள்ளோம். அதை வாசிப்பதன் மூலம், இந்த கொள்ளையடித்தலின் 500-600 ஆண்டுகால வரலாறை அறிய இயலும். நிமிர் பதிப்பக நூலாக இந்நூல் திசை புத்தக நிலையத்தில் கிடைக்கும்.
இந்த காலனிய வரலாறை அறிவதன் மூலமாகவே தமிழ்த்தேசிய மக்கள் தமது எதிர்காலத்தினை உணர இயலும். வெனிசுவேலா என்பதுவும் பாலஸ்தீனம், ஈழம் என்பதுவும் வேறுவேறல்ல. எளியோர் போராட்டங்களின் வீரஞ்செறிந்த போர்க்களங்கள் இவை.
தற்போது வெனிசுவேலாவில் வெகுமக்கள் திரண்டு போராட்டங்களை தொடங்கியுள்ளார்கள். உலகெங்கும் வெகுமக்கள் போராட்டங்கள் மட்டுமே ஆதிக்கங்களை வீழ்த்தி, நீதியை வென்றுள்ளது.
ஏகாதிபத்திய ஆதிக்கம் ஒழிய ஒன்றிணைவோம். மே17 இயக்கம் வெனிசுவேலா நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், வெனிசுவேலாவின் மக்கள் அதிபர் மடூரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க இராணுவம் கடத்தியதை வன்மையாக கண்டிக்கிறது. சனநாயக ஆற்றல்கள் இந்த தாக்குதலையும், சர்வதேச சட்டமீறலையும் கண்டிக்க வேன்டுமென கோருகிறது.