கோடியக்கரை கிராமத்தில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடக சந்திப்பு

நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமையைக் கண்டித்து மே பதினேழு இயகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 14, 2025 அன்று ஊடக சந்திப்பு நடத்தினார். இந்த ஊடகச் சந்திப்பில் விடுதலை தமிழ்ப்புலிகள் சார்பில் தோழர்கள் பொறுப்பாளர்கள் செருகை சுரேஷ், வீரமணி, அய்யம்பதி ராசா மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பொறுப்பாளர் தோழர் ராஜசேகரன் அவர்களும், மே17 இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிராமமான அண்ணாநகரில் பட்டியலின மக்கள் மீதான சாதிய வன்கொடுமையைக் கண்டித்து மே17 இயக்கம் களமிறங்கியுள்ளது. அந்த ஊரின் தேநீர்க் கடையில் கடைபிடிக்கப்படும் இரட்டை குவளை முறை, பட்டியலின மக்களுக்கு ஊரில் முடிவெட்டாதது, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மண்டபம் மறுக்கப்படுவது என பல தீண்டாமை வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. மேலும் பட்டியல் சமூகத்தினர் உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் சமயத்தில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை, நின்றுகொண்டுதான் பேசவேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர். கோவிலில் மரியாதை கொடுக்கும் நிகழ்வுக்கும் அனுமதியில்லை. கோவிலுக்குள்ளாக ஒரு எல்லை கடந்து பிறரை போல அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முதல்மதிப்பெண் பெற்ற பட்டியலின மாணவர்களுக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பது, சிறுவர்கள் கூட 70 வயதுக்கு மேற்பட்ட பட்டியலின மக்களை பேர் சொல்லி அழைப்பது, சாதிய கொடுமையை எதிர்த்துப் போராடுவதால்  வேலை மறுக்கப்படுவது என இன்றளவும் சாதிய வன்கொடுமை நடந்துவருகிறது. பட்டியலின மக்கள் மீதான இந்த வன்முறையை அறிந்து கடந்த 06-அக்டோபர்-2025ம் தேதி அன்று, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி இயக்கத் தோழர்களுடன் கருப்பம்புலம் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். மேலும் கள ஆய்வு செய்து அறிந்தவற்றை முதல்கட்ட தகவலாக பதிவு செய்தார்.

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகச் சந்திப்பில் பேசியவை பின்வருமாறு:

“தமிழ்நாட்டிலே சாதிய சிக்கல்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை நாம் அறிந்து வருகிறோம். பல்வேறு சாதிய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நிலக்கோட்டை அருகே ஒரு ஆணவப் படுகொலை நடந்திருக்கின்றது. தமிழ்நாட்டில் பரவலாக இரட்டை குவளை முறை, ஒதுக்குதல் முறை ஆகிய தீண்டாமை நடைமுறைகள் இருப்பதை பல்வேறு கிராமங்களுக்கு நேரில் செல்லும் பொழுது அறிய முடிகிறது. இந்த பிரச்சினை அங்கு ஏதேனும் சிக்கலோ அல்லது மோதலோ நடக்கும் பொழுது மட்டும்தான் வெளியுலகத்துக்கு தெரியக்கூடிய அளவிலே தமிழ்நாட்டில் பரவலாக இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காததும், தீண்டாமையை / சாதிய வன்கொடுமையை ஒழிப்பதற்குரிய துறைகள், அதற்கான பொறுப்பாளர்கள் இயங்காததின் விளைவுகளை நாம் இன்றளவும் பார்த்து வருகிறோம். சாதிய ரீதியாக பட்டியல் சமூக மக்களை, பழங்குடி மக்களை ஒதுக்குதல், தீண்டாமையை கடைபிடித்தல், சமூக விலக்கம் செய்தல் மேலும் அவர்கள் மீது தாக்குதலை நடத்துவது என்பது தமிழ்நாட்டினுடைய சமூக நீதி அரசியலுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.

ஆகவே இந்த நவீன காலத்திலும் சாதிய வன்கொமை தொடர்வது என்பதை அவமானகரமான ஒன்றாகத்தான் பார்க்கிறோம். அந்த வகையில் தொடர்ச்சியாக சாதிய சிக்கல்களைக் குறித்து நாங்கள் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்வதும், அதை மக்கள் மன்றத்தில் கொண்டு வருவதும், குற்றவாளிகளை கைது செய்வதற்கான போராட்டங்களை நடத்துவதுமான பல்வேறு செயல்பாடுகளிலே கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம்.

அந்த வகையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்திலே கோடியக்கரை கிராமத்தின் அண்ணாநகர் பகுதியிலே வசித்து வருகின்ற பட்டியலின மக்கள் மீது தொடர்ச்சியாக சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அங்கே ’கந்தசாமி’ என்கின்ற ஒரு மாற்று திறனாளி ஒருவரை கடுமையான வகையில் தாக்கி இருக்கிறார்கள். அந்த தாக்குதலை எதிர்த்து அந்த மக்கள் நீதி கேட்டபொழுது, அந்த மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிக்குள் 20-30 பேர் நுழைந்து அவர்கள் வீடுகளை அடித்து நொறுக்கி அங்கே இருக்கக்கூடிய மக்களையும் தாக்கி இருக்கிறார்கள். இது குறித்தான வன்கொடுமை வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையில் கூட வன்கொடுமை வழக்கு பதியப்பட்டும் கூட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அந்த குற்றவாளிகள் அதே கிராமத்திலே இன்றும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அவர்கள் இன்றும் பட்டியல் சமூக மக்களை மிரட்டி வருகிறார்கள். அவர்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கிறார்கள். மேலும் பட்டியல் சமூக மக்களை வேலையிலிருந்து நீக்கம் செய்யக்கூடிய ஒரு வன்கொடுமையை நடத்தி வருகிறார்கள். அவர்களை வேலைக்கு கூப்பிடக்கூடாது என்கின்ற முடிவெடுத்து அவர்கள் இயங்கி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த கிராமமே எந்த வெட்கமும் இன்றி இந்த வன்முறையை நிகழ்த்தி வருகிறது. நாங்கள் அங்கு (கள ஆய்வுக்கு) சென்ற போது அங்கு இரட்டை குவளை முறை நடைமுறையில் இருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். பட்டியல் சமூக இளைஞர்களுக்கு அங்கு முடிவெட்டுவதில்லை. அவர்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தள்ளி வேதாரண்யம் சென்றுதான் முடிவெட்ட வேண்டிய நிலை அங்கு இருக்கிறது. அங்கே இருக்கக்கூடிய கோவிலில் ஒரு எல்லையை கடந்து அவர்கள் வணங்குவதற்கு செல்ல முடியாத வகையிலே ஒரு கோடை(code) வைத்திருக்கிறார்கள். இதை நானே நேரில் கண்டேன். அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட மண்டபத்திற்குள்ளாக பட்டியல் சாதி குடும்பத்தினரை எந்த நிகழ்வுக்கும் அவர்கள் அனுமதிப்பதில்லை. பட்டியல் சமூக மக்கள் தங்கள் இல்லத்தினுடைய நிகழ்வுக்கு அங்கிருந்து 10 கிலோமீட்டர் தள்ளி வேதாரண்யத்திற்கு போய்தான் ஒரு மண்டபத்தை பிடித்து தங்கள் குடும்ப நிகழ்ச்சியை நடத்தக்கூடிய அளவுக்கு மிக மோசமான வன்கொடுமை அங்கே இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அங்கே இருக்கக்கூடிய அரசு பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியல் சமூகத்தவராக இருந்தால், அந்த மாணவரைப் பாராட்டி ஒரு பேனர் கூட அங்கே வைக்க முடியாது.

ஆனால் அதே பள்ளியிலே பட்டியல் சமூகம் அல்லாத மாணவர்கள் யாராவது முதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் பேனர் வைக்கலாம். நான் அந்த ஊருக்கு போன பொழுது, அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒரு பெரிய மனிதர் என்று சொல்லப்படுபவருடைய பேனர் அங்கே இருக்கிறது. அவர் 10 அடிக்கு பேனர் வைத்திருக்கிறார். ஆனால் பட்டியல் சமூக மக்கள் அங்கே பேனர் வைக்க முடியாது. இந்த பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் மிகச் சிறந்த கலைஞர். அவர் வரைந்த ஓவியம் தமிழ்நாடு அரசினுடைய நிகழ்ச்சிகளிலே தேர்வாகி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கல்வி அமைச்சர் நேரடியாக அந்த  ஓவியரை அழைத்துப் பாராட்டி இருக்கின்றார். இவ்வாறு கல்வி அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அந்த ஓவியருக்கு மரியாதை செலுத்துகின்ற விதமாக ஒரு பேனர் வைப்பதற்கு கூட அந்த ஊரிலே அனுமதி இல்லை. இப்படிப்பட்ட ஒரு நிலை இந்த காலத்திலும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பற்றி விசாரிக்க சென்றபோது, எங்களை சுற்றி இருசக்கர வாகனத்தில் வருவதும் போவதுமாக அவர்கள் ஆதிக்க மனநிலையை காட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு மோசமான நிலை. இது குறித்து இன்றைக்கும் நாகை மாவட்டத்தினுடைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். வழக்கு பதிவு செய்தாயிற்று, அவர்கள் வேதாரணியத்தில் ஆர்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை நாகப்பட்டினத்திலும் ஆர்பாட்டம் நடந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் இதற்கான ஒரு கண்டன ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர்களும் ஒரு ஆர்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். வழக்குகளை முன்னகர்த்துவதற்கான அனைத்து உதவிகளும் செய்திருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மாவட்டத்தினுடைய கண்காணிப்பாளர் இது குறித்தான உரிய பதிலை அளிக்கவில்லை. இதுவரைக்கும் ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதற்கான பதிலை அவர் அளிக்கவில்லை. மாறாக “நீங்கள் இரண்டு பேரும் சமாதானமாக போங்கள்” என்று கூறுகின்றார்கள். இது எப்படி ஒரு மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது துணை கண்காணிப்பாளருடைய பணியாக இருக்க முடியும்?

ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றால் குற்றவாளிகளோடு சமரசம் செய்து கொள்ளக்கூடிய ஒரு போக்கை காவல்துறை சார்ந்தவர்கள் எப்படி சொல்ல முடியும்? இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்துதான் ஆதி திராவிட நலத்துறையை சார்ந்தவர்கள் மற்றும் மனித உரிமை கமிஷனை சார்ந்தவர்கள் வந்திருக்கின்றார்கள். நாங்கள் செல்வதற்கு முந்தைய நாள்தான் ஆதி திராவிட நலத்துறை வந்து பட்டியல் சமூக இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்று முதல் முறையாக அந்த ஊரில் அவருக்கு சவரம் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாரிகளை வைத்துதான் அந்த சலூன் கடையில் சவரம் செய்யக்கூடிய அளவுக்கு நிலைமை மிக கீழ்த்தரமாக இருப்பதற்கான அடிப்படை காரணம் மாவட்ட நிர்வாகம். மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, காவல்துறை கண்காணிப்பாளருக்கு எந்தெந்த கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத விடயமல்ல.  

அந்த கிராமத்தில் நடந்த வன்முறை குறித்து வீடியோக்கள் வெளிவந்திருந்தது. அந்த வீடியோக்கள் வெளிவந்தப் பிறகு அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விசாரித்த பொழுது, இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற தகவல் தெரிந்தவுடன் நான் நேரடியாக சென்றேன்.

நான் சென்றதற்குப் பிறகு அந்த கிராமத்து மக்களிடத்தில்  “எப்படி மே 17 இயக்கத்திற்கும் திருமுருகன் காந்திக்கும் இந்த ஊர் பிரச்சனை தெரிந்தது, யார் அழைத்து வந்தீர்கள்?” என்று விசாரித்த காவல்துறை, அதே ஊரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய லட்சுமணன், சுப்பிரமணியன், ராஜ்குமார் மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட அந்த நான்கு குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை.

காவல்துறைக்கு தெரியாமல் இந்த வன்கொடுமை நடப்பதில்லை. காவல்துறை இந்த வன்கொடுமைக்கு உடந்தையாக இருக்கிறது. காவல்துறை முதலில் தீண்டாமையை (இரட்டை குவளை முறையை) தடுத்திருக்க வேண்டும். ஆனால் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு மாதங்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைக்கு தமிழ்நாட்டில் காவல் துறையினுடைய பெரும்பாலான அதிகாரிகள் துணை போகிறார்கள். அண்ணல் சனநாயக சக்திகள்  கேள்வி கேட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் “அவங்க கிட்ட எல்லாம் பேசாதீர்கள், பிரச்சனை பெரிதாகிவிடும், தேவையில்லாத சிக்கல் வந்துவிடும்” என்று பேசுவதை மட்டுமே காவல்துறை ஒரு வேலையாக செய்கிறது. இதை செய்வதற்கு தமிழ்நாடு மக்கள் காவல் துறைக்கு சம்பளம் தரவில்லை. அரசியல் சாசனத்தில் தீண்டாமை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஆனால் காவல்துறை அதிகாரிகள்  தீண்டாமை கொடுமை செய்பவர்களை பாதுகாக்கக்கூடிய வேலையை செய்வதை மிக மிக அவமானகரமானதாக நாங்கள் பார்க்கிறோம்.

இது குறித்து காவல்துறை ஆணையரோ மாவட்ட ஆட்சியாளரோ கவலைப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அந்த ஊரில் போராட்டம் செய்திருக்கின்றார்கள். வேதாரண்யத்தில் போராட்டம் நடந்திருக்கிறது. நாகப்பட்டினத்தில் போராட்டம் நடந்திருக்கிறது. செய்தி அறிக்கை வெளி வந்திருக்கிறது. வீடியோ வெளி வந்திருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் நாகை மாவட்ட ஆட்சியர் என்ன செய்திருக்கிறார்? அந்த மக்கள் அங்கிருந்து சென்னைக்கு வந்து ஊடக சந்திப்பு நடத்துவதற்குள் பலமுறை தொலைபேசி அழைப்புகள் பண்ணக்கூடிய காவல்துறை, அந்த குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை? இந்த குற்றவாளிகளுக்கு துணையாக நாகை மாவட்டத்தினுடைய காவல்துறை செயல்படுகிறது என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

அந்த செயல்பாட்டிற்கு துணையாக நாகை மாவட்ட ஆட்சியரும் காவல்துறை ஆணையாளரும் இருக்கிறார். இப்படிப்பட்ட அவமானகரமான நிகழ்வு நடந்திருக்கும் போது ஆட்சியர் நேராக போய் பார்க்க வேண்டாமா? அவருடைய அதிகாரத்தின் கீழாக இப்படிப்பட்ட தீண்டாமை நடந்திருக்கிறது. அவர் இதை தடுத்திருக்க வேண்டாமா? எல்லா பள்ளி மாணவர்களிடம் ஐஏஎஸ் / கலெக்டர் ஆகும் ஆசையை வளர்க்கக்கூடிய இந்த சமூகத்தில், இத்தகைய வன்கொடுமை நடந்திருக்கிறது. நாங்கள் இங்கிருந்து 600-700 கிலோமீட்டர் சென்று உண்மையை வெளியே கொண்டு வரக்கூடிய நிலையில்தான் தமிழ்நாட்டினுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் இந்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதோடு  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதமாக வேலை தரவில்லை. இது அத்தனைக்கும் அந்த மாவட்ட ஆட்சியாளரும் காவல்துறை கண்காணிப்பாளரும் மட்டுமல்லாமல் அந்த பகுதியினுடைய எம்எல்ஏ ஓஎஸ் மணியன் அவர்களும் பொறுப்பு. இந்த மக்களிடம் என்ன சொல்லி அடுத்த ஆண்டில் ஓட்டு கேட்பீர்கள்? அந்த வன்கொடுமையை செய்தவர் திமுக கட்சிக்காரர். எம்எல்ஏ அதிமுக கட்சிக்காரர். இரு கட்சிகளும் சாதி கொடுமையை பாதுகாக்குறீங்களே, உங்கள் கட்சி தலைமை என்ன செய்கிறது? 

திமுக சமூகநீதி பேசுகிறது. ஆனால் அதே திமுகவை சார்ந்த அந்த பொறுப்பாளர் வன்கொடுமை செய்திருக்கிறார். இது அந்த கட்சிக்கு அவமானமாக இருக்காதா? அண்ணாவுடைய பெயரை வைத்திருக்கக்கூடிய அதிமுகவும் திமுகவுடன் சாதி ரீதியாக சேர்ந்து விடுகின்றது.

தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த இடத்திலும் வந்து நிற்காத இந்த கட்சி பிரமுகர்கள் சாதிக்கு பிரச்சனை என்றால் ஒன்றாக நிற்க கூடிய அவமானகரமான கட்சி கட்டமைப்புதான் தமிழ்நாட்டில் இருக்கின்றது. இந்த பிரச்சனைய திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளால் தீர்க்க முடியாதா?

இந்த வன்கொடுமையை செய்த திமுகவை சேர்ந்த ’சுப்பிரமணி’ என்பவரை உடனடியாக கட்சியில்  இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற நபர்களை எல்லாம் கட்சியில் வைத்திருப்பது என்பது அந்த கட்சிக்கு அவமானம். அவரை கைது செய்வதற்கு திமுகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் எங்களுக்கு மக்கள் முக்கியம். மக்களுக்காகத்தான் நாங்கள் நிற்கிறோம்.

இந்த வன்கொடுமை வழக்கிலே கிட்டத்தட்ட நான்கு பேர் நேரடி குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். மேலும் அந்த ஊரில் கலவரம் செய்த 20 பேர் இருக்கின்றார்கள். இதில் ’மாரியப்பன்’ என்ற ஒருவரின் வீடு புகுந்து அடித்திருக்கிறார். ஆனால் காவல்துறை FIRல் அவருடைய பேரை சேர்க்காமல் தவிர்த்திருக்கிறது. ஏனென்றால் மாரியப்பன் வெளிநாட்டுக்கு சென்று வருபவர். அவர் மேல் வழக்கு பதிவு செய்தால் அவரால் வெளிநாடு போக முடியாது என்கின்ற காரணத்தினால் காவல்துறை அவரை பாதுகாத்திருக்கிறது. இந்த மாரியப்பன் மேலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த வன்கொடுமைக்கு மாவட்ட காவல்துறை துணையாக இருக்கிறது என்று நாங்கள் பகிரங்கமாக போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். குற்றவாளி மேல் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? அவரை காப்பாற்றும் முயற்சியை காவல்துறை ஏன் செய்கிறது? மாரியப்பன் மீது வழக்கு பதிந்து அவரை சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கக்கூடிய நிலையையும் பார்க்கிறோம். அந்த மக்கள் தேனீர் கடையில் நடைபெற்ற இரட்டை குவளை முறையைப் பற்றி அவர்களே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே முக்கிய குற்றவாளி மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

ஊர் மக்களே என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்கள். உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சிகளைத் திரட்டி நாகை மாவட்டத்திலே காவல்துறையையும் ஆட்சியாளரையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை வருகின்ற இரு வாரங்களுக்குள்ளாக நடத்துவதாக நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம். தேதியை உடனடியாக நாங்கள் அறிவிப்போம்.

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் இது போன்ற அவல நிலையை அம்பலப்படுத்துகின்ற விதமாக இந்த பகுதி மக்களே ஒரு தேநீர் கடையை திறக்கப் போகின்றார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுப்போம். மிக முக்கியமாக இந்த மக்கள் உழைத்து அவர்களே வருமானம் ஈட்டக்கூடிய ஒரு நுணுக்கமான அறிவு கொண்டவர்கள். அவர்களுக்கு முதலீடாக எந்த வங்கியிடமிருந்தும் நிதி உதவி கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்கு கடன் தருகின்ற முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இல்லை என்றால் எந்த வங்கிகள் கடன் தரவில்லையோ அந்த வங்கிகளையும் நாங்கள் முற்றுகையிட வேண்டியருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் கிட்டத்தட்ட 45 நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை என்றால் அவர்கள் குடும்ப நிலைமை என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து கட்சிகள் இணைந்து நடத்த இருக்கின்றோம். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இந்த போராட்டம் விரிவடையும்.

ஏனென்றால் தீண்டாமை / சாதிய கொடுமை இதை எல்லாம் இனிமேல் சகித்துக் கொள்ள முடியாது. சகித்துக் கொள்ளும் அவசியம் இங்கே யாருக்கும் கிடையாது. ஆகவே இது கடுமையான போராட்டமாக மாறும் என்பதை இச்சமயத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல திமுக அரசு இது போன்ற வன்கொடுமைகள் குறித்தான மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள். சாதிய வன்கொடுமை குறித்தோ ஆணவப் படுகொலை குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு கடந்து கொண்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அந்தப் பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 மேலும் அந்த மாவட்டத்தின் பிற பகுதியில் நடக்கும் சாதி வன்கொடுமைகளை தடுப்பதற்கான முயற்சியில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இதை கட்சி பிரச்சனையாக பார்க்காதீர்கள். இது ஒரு சமூக பிரச்சனை. இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட  மக்களினுடைய சுயமரியாதையை உறுதி செய்வதற்கு அனைவரும் கரம் கோர்க்க வேண்டும் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்து இந்த ஊடக சந்திப்பை நாங்கள் நிறைவு செய்கின்றோம். நன்றி!

கோடியக்கரை அண்ணாநகர் சாதிய வன்கொடுமை குறித்த ஊடக சந்திப்பு காணொலி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகச் சந்திப்பு குறித்து செய்தி சேனல்களிலும் பத்திருக்கை செய்திகளிலும் வெளியானது. அதன் இணைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://www.facebook.com/reel/2519156988456370/?mibextid=rS40aB7S9Ucbxw6v

https://www.thenewsminute.com/tamil-nadu/caste-violence-and-economic-boycott-alleged-in-nagapattinam-two-from-dmk-among-accused

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »