“நாங்கள் இந்து மதம் அல்ல…! திராவிட இனம்.” – இந்து சட்டத்தின் படி மன்னார் இறந்த பிறகு வாரிசை தத்து எடுத்தது செல்லாது என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக பார்ப்பனர்கள் வாதாடிய போது, இவ்வாறு வாதாடி மன்னர் வெற்றி பெற்றது தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையே பறைசாற்றுகிறது.
1860-ல் இராமநாதபுரம் மன்னர் இறக்கிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை. மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம். அதன் பிறகு இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டுக்குள் வந்து விடும் என்பது அப்போதைய (பிரிட்டிஷ்) சட்டம். ஆனால் இராணியாரோ கணவர் இறந்த பிறகு ஒரு ஆண் மகனை தத்து எடுத்து “முத்துராமலிங்க சேதுபதி” என பெயர் சூட்டி இளவரசராக்குகிறார். ராணி இறந்த உடன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகிறார். இந்நிலையில் மதுரை கலெக்டர் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். அப்போது தான் மனு அடிப்படையிலான இந்து சட்டம் தமிழர்களுக்கு பொருந்தாது, ஏனென்றால் தமிழர்கள் இந்துக்களே அல்ல என்பது நிரூபணமானது!
சேதுச்சீமையைப் பொறுத்தவரை மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 08-02-1795-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது. அவரது தமக்கையார் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை கும்பெனியார் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை. பிறகு கி.பி. 1803ல் கும்பெனித் தலைமையும் கலெக்டர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்டதுடன் முதல் ஜமீன்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது. அவருக்கு பிறகு அவரது தத்துமகன் அண்ணசாமியை ஜமீன்தாராக நியமித்தார். அவர்களின் வழியாக வந்தவர் தான் மன்னர் விஜயரகுநாத இராமசாமி சேதுபதி (கி.பி. 1814-30).
இராமசாமி சேதுபதிக்கு அவருடைய மனைவி ராணி பர்வதவர்த்தனி நாச்சியார் மூலம் மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இராமசாமி சேதுபதி கி.பி. 1830-இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் தத்தெடுப்புத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார்.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய பேரரசியார் இங்கிலாந்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். அதாவது இந்தியாவை ஆளும் மன்னர்கள் பாளையக்காரர்கள், ஜமீன்தார்களுக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம். அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச்சட்டம் இயற்றினார்.
இந்நிலையில் 1830-இல் இராமநாதபுரம் மன்னராக இருந்த இராமசாமி சேதுபதி இறக்கிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை.
விதவை இராணியான பர்வதவர்த்தினி 24-05-1847-ல் தன் கணவர் இறந்த பிறகு தன் தங்கை வீராயியின் ஐந்து வயது மகனை தத்தெடுத்து “முத்துராமலிங்க சேதுபதி” என பெயர் சூட்டி இளவரசராக்குகிறார். இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும், இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. ராணி இறந்த உடன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகிறார்.
இந்நிலையில் அன்றைய மதுரை கலெக்டர் இதை எதிர்த்து மதுரையிலும், சென்னையிலும் வழக்கு தொடுக்கிறார். சேதுச்சீமைக்கெதிராக இலண்டன் மகாராணி சார்பில் அறிக்கை விடுத்தார். ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்து சேதுபதி அரசு தரப்பு சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்.
மீண்டும் இவ்வழக்கு மேல்முறையீட்டில் லண்டன் பிரைவி கவுன்சிலில் (Privy Council, London) நடக்கிறது. இங்குதான் பார்ப்பனர்கள் தங்கள் விஷம விளையாட்டை தொடங்குகின்றனர்.
அங்கே கலெக்டர் தரப்பு “இந்து மதத்தில் ஒருவரை ஒரு விதவைப்பெண் தத்தெடுக்க வேண்டுமென்றால் கணவர் இறப்பதற்கு முன்பே தன் மனைவியிடம் சொல்லியிருந்தால் மட்டுமே தத்தெடுக்க முடியும். அது தான் இந்து மத சட்டம். எனவே அச்சட்டத்தின்படி முத்துராமலிங்கத்தின் அரசு பதவியேற்பு செல்லாது” என்று மனுஸ்மிருதி அடிப்படையில் வாதிடுகிறார்.
அதற்கு எதிராக மன்னர் சேதுபதி தரப்போ “எங்கள் சட்டம் Aryan school of law-வின் கீழ் வராது. நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். எங்களுடைய சட்டம் Dravidian School of law. எங்கள் திராவிட ஆகம விதிகளின்படி பங்காளிகள் ஒத்துக் கொண்டால் போதும்; அந்த தத்தெடுப்பு செல்லும்” என்று வாதாடி 1868-இல் வெற்றி பெறுகிறார்.
கவுன்சிலும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார மதுரை கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது. இத்தகைய நேர்மையான தீர்ப்பின் விளைவாக இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியே சேதுச்சீமையின் அரசராக நீடித்தார். அவருடைய சொத்துகளும் அவருக்கே உரியதானது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முத்துராமலிங்க சேதுபதி Vs மதுரை கலெக்டர் வழக்கு Moores Journal என்ற ஆங்கில பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஒன்றிய சட்டப்புத்தகத்தில் “இந்து குடும்ப சட்டத்திலும்” இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது.
ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை, தமிழர்களை உள்ளடக்கி இந்தியா, இந்து என்று உருவாக்கியதை வரலாரற்ற பார்ப்பனியம் வசதியாக பிடித்துக்கொண்டு பொய்யான வரலாற்றை எழுதும் வேலையை செய்துவருகின்றனர். தமிழர்களை இந்து மதத்தில் சூத்திரர்களாக அடக்கி ஆரியர்களின் அடிமைகளாக நிலைநிறுத்த விரும்புகின்றனர். ஆனால் தமிழர்களின் ஆரிய எதிர்ப்பு வரலாறு மரபாக தொன்றுதொட்டு 2000 ஆண்டுகளை தாண்டியும் நீடித்து வருகிறது. மன்னர் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி வாரிசு வழக்கில் வெளிவந்த தீர்ப்பு, தமிழர்கள் ஆரிய அடிமைகளான இந்துக்கள் அல்ல என்பதும், தமிழர்கள் வேறு ஆரியர்கள் வேறு என்பதும், ஆரியர்களது மதக் கோட்பாடுகள் எதுவும் தமிழர்களை கட்டுப்படுத்தாது என்பதையும் நிலைநாட்டியுள்ளது.
வழக்கு விவரங்கள் அடங்கிய நூல்
அடேங்கப்பா!! இது வெறும் வரலாற்றுக் கட்டுரை இல்லை. தமிழர்களை இந்துக்கள் எனக் கூறித் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டி வரும் பார்ப்பன மேலாதிக்கத்துக்கு முடிவுரை எழுதும் சட்டப் பேராயுதம்! இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்பொழுது தமிழர்களை ‘இந்து’ எனும் மதப்பிரிவுக்குள் கொண்டு வரும் இன்றைய வழக்கமே / சட்டமே செல்லாததாகிறது. இன்றைக்கும் இந்தத் தீர்ப்பை மேற்கொளாகக் கொண்டு யாராவது வழக்குத் தொடுத்துத் தமிழர்களை இந்து மதத்திலிருந்து விடுதலை செய்யலாம்.