பாண்டிச்சேரி அரசியலில் பாசக நடத்திடும் சனநாயக படுகொலைகள்

ஒன்றியத்தில் 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாசக அரசு, அடுத்தடுத்து நடந்த மாநில தேர்தல்கள் சிலவற்றில் தேர்தல் மூலம் வெற்றியும், மிகப்பல மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளைக் கபளீகரம் செய்தும், எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்கியும் ஆட்சியைப் பிடித்தது. இதே சனநாயக விரோத நடவடிக்கையின் மூலம் எஞ்சியிருக்கிற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டுமென்று மிகத் தீவிரமாகப் பாசக முயற்சி செய்து வருகிறது. அதில் மிகச் சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த சிவசேனா கட்சியை உடைத்து  ஏக்நாத சிண்டே தலைமையில் புது அணியை உருவாக்கி, பாசக கூட்டணி அரசை அமைத்துக்கொண்டது.  இப்படியான நிலையில் பாசகாவின் அடுத்த இலக்காகப் பாண்டிச்சேரி மாறியுள்ளது. 

பாண்டிச்சேரி ஒன்றியம் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி தலைமையிலான பாசக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ’உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்’ பாசக. அங்கே முதல்வர் ரங்கசாமி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பாசக ஆட்சியைக் கொண்டுவரத் தொடர் சதிகளில் ஈடுபட்டுவருகிறது. முதலில் ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு தனது பலத்தைப் பெருக்கிவிட்டு பின் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவே இன்று அனைத்து வேலைகளையும் செய்கிறது பாசக. 

குறிப்பாகப் புதுச்சேரி ஒன்றியம் பிரதேசத்திற்கு முதல்வர் ரங்கசாமி கேட்ட பணத்தை வழங்காமல் இழுத்தடித்தது பாசக. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றுக்கும் நிதி ஒதுக்க முடியாமல் ரங்கசாமி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியது.  அடுத்ததாகப் புதுச்சேரியில் ஏற்கனவே அமலிலிருந்த விதவைகளுக்கான ஊக்கத்தொகை திட்டம், ஓய்வூதியத்திடம் உள்ளிட்ட பலதிட்டங்களுக்கு தீடிரென்று ஆளுநர் தமிழிசை அவர்கள் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் உரியத் தொகை மக்களுக்குப் போகாமல், அது மிகப்பெரிய பிரச்சனையாக ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு மாறியது. முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று மோடி அமித்சாவிடம் பேசி  ஒருவழியாக நிதியைப் பெற்று அந்த பிரச்சனையை அப்போதைக்கு முடித்தார். அடுத்து கூட்டணி ஆட்சியில் உள்துறை மற்றும் மின்சார துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட பாசகாவின் நமச்சிவாயம் முதல்வருடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

இதன் உட்சபட்சமாகத் தென்மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளும் தன்மண்டல அமைப்பு கூட்டம் கடந்த மாதம் 03ஆம் தேதி கேரளாவில் அமித்சா தலைமையில் நடந்தது. இதில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை ஓரங்கட்டிவிட்டு ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார்.  ஆளுநர் தமிழிசையின் இந்த சனநாயக விரோதச்செயலை எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவர்கள் அப்போதே மிகக்கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத பாசக தொடர்ந்து ரங்கசாமி ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் 28ஆம் தேதி ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசிற்கு ஆதரவு அளித்துவந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் வைத்து பாசக வெளிப்படையாக ரங்கசாமி அரசுக்கு எதிராகப் பேசவைத்து, புதுச்சேரியில் பாசக ஆட்சியமைக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தினார்கள். இப்படி தொடர்ச்சியாகக் கூட்டணி தர்மத்தை மீறி என்.ஆர். காங்கிரசின் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறது பாசக. 

இப்போது எந்த ஒரு அமைச்சரவை முடிவுமில்லாமல்  முதல்வருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக மின்சார துறை அமைச்சராக இருக்கிற பாசகவின் நமச்சிவாயம் புதுச்சேரி ஒன்றியம் பிரதேசத்தில் இருக்கிற மின் விநியோக உரிமை அனைத்தையும் 100% தனியாருக்கு விற்கிறோம் என்று ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்புக்கு எதிராகப் புதுச்சேரி மின் ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதைப் பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரி முழுவதும் ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு சாலை மறியல் உள்ளிட்ட வேலைகளை ஒரு பக்கம் செய்து சட்டம் ஒழுங்கை கெடுத்து வருகிறார்கள். இதுதான் சரியான வாய்ப்பு என்று ஆளுநர் துணை ராணுவப்படையைப் புதுச்சேரிக்குள் அனுமதித்து இருக்கிறார். மேலும் மின்சார ஊழியர்களைக் கைது செய்து அவர்கள் மீது எஸ்மா என்ற ஆள்தூக்கி சட்டம் போடவும் ஆலோசிக்கப்பட்டு வருதாக தெரிகிறது. ஒரு பக்கம் மின்சார துறையைத் தனியார் மையமாக்குவதும், அந்த மொத்த பழியையும் தூக்கி முதல்வர் ரங்கசாமி மீது போட்டு அவரது ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அவர் ஆட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவின் நமச்சிவாயம் முதல்வராக வேண்டும் என்கிற ஒரு வேலைத் திட்டத்தை எந்தவித ஜனநாயக நடைமுறையையும் பற்றி கவலைப்படாமல் புதுச்சேரியில் பாசக நடத்திக் கொண்டிருக்கிறது.

பாசகாவின் இந்த அருவெறுப்பான சுரண்டல் அரசியலை பார்த்தாவது இனி பாசகாவோடு யாரும் தேர்தல் கூட்டணி வைக்காமல் அவர்களை தனிமைப்படுத்தி அரசியலை விட்டே விரட்டியடிக்கவேண்டும். அதுவே மாநிலக் கட்சிகளுக்கும், மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் செயலாகும். அதை விடுத்து பாசகவோடு நாங்கள் நெருக்கமாகத்தான் இருப்போமென்று எந்த கட்சியாவது நினைத்தால் அது  கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொரிவதற்குச் சமமாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »