மதுவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை

“ஓநாயிடமிருந்து ஆடுகள் எப்படி விடுதலையை எதிர்பார்க்க முடியும்? அதேபோல ஆண்கள் பெண்களுக்கு விடுதலை தருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது” என்றார் தந்தை பெரியார்.

அண்மையில் தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கையிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த தரவுகள் வெளியாயின. 2001 மற்றும் 2018-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பெரும்பாலாலும் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாக’ பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக குடிபோதையில் பெண்களைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அன்றாட நிகழ்வாகி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோர் என அனைத்து தரப்பினரிடையே மதுபழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. மது அருந்துவதை ஒரு கேடு கெட்ட செயலாக பார்க்கும் வழக்கம் மறைந்து, தற்போது அதை மிகச் சாதாரணமாக எடுத்து கொள்ளும் மனநிலையே மக்களிடையே மேலோங்கிக் காணப்படுகிறது. மதுவினால் தன் வேலை, வருவாயை இழந்து, வாழ்க்கைத் தரம் குறைந்து, ஒரு விலங்கு போல் மதுப்பிரியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சில இளைஞர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு, போதையில் தங்கள் வாழ்வைத் தொலைத்தப் பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் அவதியுறுகின்றனர்.

இன்றைய சூழலில் செல்வந்தர்களை விட ஏழைகள், கூலிவேலை செய்பவர்கள் போன்ற அடித்தட்டு மக்களே இந்தக் மதுக் கொடுமையில் உழன்று கொண்டிருக்கின்றனர். பிச்சை எடுப்பவர்கள் கூட தினமும் மது குடிப்பது இந்த அவலத்திற்கு மற்றுமோர் சான்று. சில குடி நோயாளிகளுக்கு உணவை விட மது மட்டுமே போதும் என்கிற அளவிற்கு அத்தியாவசிய பொருள் போல் ஆகிவிட்டது இந்த மது. தன்நிலை மறந்து எந்த மோசமான செயலையும் செய்யும் நிலைக்கு குடிநோயாளிகள் தள்ளப்படுகின்றனர்.

முன்பு மது என்பதை தீண்டத்தகாத ஒரு விடயமாக பார்த்த காலம்போய், இன்றைய காலத்தில் சிறு பிள்ளைகளும் மது குடிப்பது சமூகத்தில் பொதுவான செயலாகி விட்டது. பண்டிகை நாளோ, திருமணமோ, இறப்போ அல்லது குழந்தை பிறந்த நாள் விழாவோ, ‘ட்ரீட்’ என்ற பெயரில் கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அனைவரின் மத்தியிலும் கூட சிலர் மதுவை அருந்துகின்றனர். தன்னை பாதிப்பத்தோடு தன் மனைவி, குடும்பம் அண்டை வீட்டார் என சமூகத்தையே பாதிக்கக்கூடிய கேடு கெட்ட செயல் இந்த மதுபழக்கம் மட்டுமே.

முதலில் சிறிய அளவில் மதுவை அருந்த ஆரம்பித்து, நாளடைவில் அதிக அளவில் குடிக்கத் தொடங்குகின்றனர். இதனால் “போதையில் இருந்தாலே போதும் வேறு எதுவுமே தேவையில்லை” என்ற மனநிலை குடி நோயாளிகளுக்கு வந்து விடுகிறது.

மது குடித்தால் முதலில் பாதிக்கப்படுவது சிறுமூளை. அது பாதிக்கப்படும் போது சிந்தனை திறன் பாதிக்கும், நல்ல சிந்தனை இல்லாதபோது கெட்ட எண்ணங்களுக்கும் மூர்க்க குணங்களுக்கும் மூளை அடிமையாகிவிடும். அடுத்தது கல்லீரல் பாதிக்கப்பட்டு சரியாக உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. உணவின் சுவை தெரியாததால் வீட்டில் மனைவி சமைத்தது சரியில்லை என சண்டையிட்டு தட்டோடு உணவை தூக்கி வீசுகின்றனர் குடிநோயாளிகள். இதனால் பெண்கள் அடையும் மன உளைச்சல் அதிகமாகிறது.

பண வசதி உள்ள குடும்பத்தில் உள்ள தந்தை மது குடித்தால் குழந்தைகள் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களுக்கு அடிமை ஆகின்றார்கள். அதே போன்று ஏழைக்குடும்பத்தில் உள்ள தந்தை மது குடிப்பதால் பாதுகாப்பு இல்லாத மனநிலையைப் பெறும் குழந்தைகளும் பாதை மாறி போய்விடுகிறார்கள்.

இந்தக் குழந்தைகள் கல்வி கற்கும் சூழ்நிலை இருக்காது. அப்படியே படித்தாலும் பட்டம் படிக்கும் நிலைக்கு போவது மிக குறைந்த சதவிகிதம் தான். இதுபோன்ற குடி நோயாளிகளின் தவறுகளால் அவர்களின் குழந்தைகள் திருட்டு, போதை பொருட்கள் விற்பனை, அடியாட்கள் என பணத்திற்காக தீய செயலில் இறங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் ஈடுபடும் எந்த குழந்தையும் கெட்டவர்களாக பிறப்பதில்லை. அவர்கள் வளரும் சூழ்நிலையே அவ்வாறு மாற்றுகிறது.

ஒரு ஆண் மதுகுடிப்பதால் பாதிக்கப்படுவது முதலில் குடும்பத்தில் உள்ள பெண்களே. அவர் மகனாக இருந்தால் தாயும், கணவனாக இருந்தால் மனைவியும் முதலில் உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவரின் குழந்தைகளின் வாழ்க்கை தரமே மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

சிறுவயதிலேயே மதுவுக்கு அடிமையான பிள்ளைகள் ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. இதனால் குடும்ப பொருளாதார சூழ்நிலையை சரிசெய்ய படிக்காத தாய்மார்கள் வீட்டு வேலை, பூ விற்பது, காய்கறி விற்பது, மீன் சுத்தப்படுத்துவது எனவும் சிலர் பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களை சேகரித்து எடைக்கு போட்டு காசாக்குவது போன்ற பல வேலைகளை செய்கிறார்கள்.

இப்படி கடின உழைப்பின் மூலம் வரும் பணத்தை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பே TASMAC கடைக்கு கல்லாகட்டுவதற்கு போய் நிற்கிறார்கள் குடி நோயாளிகள். மீறி பணம் தர மறுத்தால் பெற்ற அம்மாவிடம் தன் பலத்தை காண்பிக்கும் குடிமகன்களும் உண்டு.

தள்ளாத வயதில் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டிய பெற்றோர்களை துன்புறுத்தி பிச்சை எடுக்க தெருவின் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு சில்லறை சேர்ந்தவுடன் எடுத்துக்கொண்டு மதுகுடித்து விட்டு மீண்டும் இவர்களிடமே வந்து சண்டையிடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

மது அருந்தும் கணவனால் மனைவி படும் துயரங்கள் சொல்லி மாளாது. தினமும் அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு திருப்பி அடிக்க முடிந்தாலும் அடிக்காத ஒரு அடிமையாக, ஒரு குடி நோயாளியின் மனைவி ஆகி விடுகிறார். கணவர் அடித்தாலும் அந்த உடல்வலியை கூட தாங்கிக் கொள்ளும் பெண்கள் தவறான வார்த்தைகளை மட்டும் சகித்து கொள்வதில்லை. இவ்வாறு மது குடிப்பவர்கள் ஆயுதமில்லாமல் ரத்த சிந்தவைக்கும் கேடுகெட்ட வார்த்தைகள் பல உயிர்களையும் எடுத்திருக்கிறது.

கணவன் சரியில்லாத குடும்பத்தில் பெண்கள் குடும்ப சுமையை தூக்கி சுமக்க தயாராகிவிடுகிறார்கள். சில படித்த பெண்கள் நல்ல வேலைக்கு போய்விடுகின்றனர் ஒரு சிலர் ஏற்றுமதி நிறுவனங்களில் (எக்ஸ்‌போர்ட்ஸ்) உதவியாளர்களாகவும், வீடுகட்டும் பணியில் சித்தாளாக செங்கல், மணல் தூக்கியாவது தனது குடும்பத்தை கரையேற்றி விடுவோம் என பாடுபடுகின்றனர்.

இவ்வாறு வேலை முடித்து வீடு திரும்பும் பெண்களை நிம்மதியாக சமைத்து சாப்பிடக்கூட விடாமல் சண்டையிட்டு இரவில் தூங்க விடாது பாடாய் படுத்தும் குடிகார கணவனின் துன்புறுத்தல் மிகக் கொடுமையானது. இதனால் சரியான தூக்கமின்மை பயம், எரிச்சல், சத்தமாக சண்டையிடுதல் போன்ற செயல்களால் பெண்களுக்கு குடல் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. அடுத்து அடிவயிற்றில் புண், எரிச்சல் ஏற்படுகிறது. இவ்வாறு குடிக்கும் கணவனைவிட அதிகமாக பாதிக்கப்படுவது அவனது மனைவியே என்றால் அது மிகையாகாது.

சிறு வயதிலேயே மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு நாளடைவில் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் தனது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். நாளடைவில் மனைவி நடைத்தையின் மேல் சந்தேகம் வர ஆரம்பிக்கும். தனது தீயப்பழக்கத்தால் ஏற்பட்ட தனது உடல் குறையை மறைக்க, மனைவி வேறு யாருடனும் பேசினாலோ பழகினாலோ, சந்தேகத்தின் பேரில் கொடும் வார்த்தைகளால் அவரை குத்திக்காட்டுவது தொடரும். இதன் காரணமாகவே சில பெண்கள் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்கிறார்கள்.

குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும்போது, கணவனின் மேலேயே கவனத்தை வைத்து, அவன் மது குடிக்கவிடாமல் சுற்றி சுற்றி வந்து பார்த்து கொள்வதும், நிகழ்ச்சி முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு துடிக்கும் பெண்களும் உண்டு.

கணவன் குடிக்கக் கூடாது என்ற பதற்றம் ஒரு புறம், கணவனை யாரும் எதுவும் தவறாக பேசிவிடக் கூடாது என்ற சுய மரியாதை மறுபுறம். இவை அனைத்திலும் சோர்ந்து விடாது கணவனை மதுவிலிருந்து மீட்கவும், சமூகத்தில் நிமிர்ந்து நன்னடை போடவும் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் ஒரு வகையில் போராளிகளே.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் வலுத்த போது, வீதியில் இறங்கி போராட்டம் செய்த பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒரு காவல்துறை அதிகாரி. இதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டியபோதும் எந்தவித தண்டனையும் அளிக்காமல் அவருக்கு பதவி உயர்வு தந்து பாராட்டியது அப்போதைய அதிமுக அரசு.

மதுவினால் பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் மது குடிப்பதை அரசுகளும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து அரசின் வருமானத்திற்காக குடி மக்களின் வாழ்க்கை தரத்தையே சீரழிக்கின்றன.

பொருளாதாரம், வேலையிழப்பு, உடல்நலக்கேடு, சமூகக்கேடு என அனைத்து சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணி இந்த மது. ஆனால் அரசுகளைப் பொறுத்தவரை TASMAC வருமானம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது. மக்களின் உடல் நலனோ அவர்களது குடும்ப பொருளாதாரமோ பின்னோக்கி போவது பற்றிய அக்கறை சிறிதும் இல்லை.

மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே பெரும்பாலும் ஆளும், ஆண்ட கட்சிகளின் பினாமிகள்தான் என்றால் அரசு எப்படி மதுவை ஒழிக்க முன்வரும்? மது என்பதை பண்டம் என்றே நினைத்து, வியாபாரத்தை பெருக்க அளவீடுகள் சொல்லி, ஊக்கத்தொகை கொடுத்து விற்பனை பெருக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் தமிழ்நாடுதான். அதேவேளை இந்தியாவிலேயே அதிகமானோர் மதுவால் தற்கொலை செய்து கொண்ட மாநிலமும் தமிழ்நாடுதான். இது போன்ற தற்கொலை மரணங்களின் பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே.

மதுவினால் ஏற்படும் சாலை விபத்துககளில், வாகனம் ஓட்டிச்செல்லும் பெண்களும் ஆண்களும் பல குழுத்தைகளுமே பலி ஆகின்றனர். இதற்கு அரசு பெரிய தண்டனை கொடுப்பதும் இல்லை. DRUNKEN DRIVE வழக்கு மட்டுமே பதியப்படுகிறது. பிறகு தண்டனையாக பணம் கட்ட வேண்டும். ஒரு உயிரின் மதிப்பு இதோடு முடிந்து விடும் அவலம் தொடர்கிறது. அதிலும் ஒரு சில பணக்கார குடிகாரர்களின் ஓட்டுநர்கள் குற்றவாளி என தண்டனை ஏற்றுக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் சட்டத்தை தன் சட்டைக்குள் சொருகி கொள்ள பணம் படைத்தவர்களால் மட்டுமே முடிகிறது.

கஞ்சா, ஹெராயின் போன்றவைகளை மட்டுமே போதை பொருளாக நினைத்து அவற்றை மட்டுமே கட்டுப்படுத்த கறாராக பேசியுள்ள முதல்வர் முதலில் மதுவை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும். மது ஒழிப்பு என்பது வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் மட்டுமே இருந்து விடக் கூடாது. பெண்களை சமமாகவும் சக உயிர்களாகவும் பார்க்க வேண்டும் என்று முழங்கிய பெரியாரின் திராவிட வழிதோன்றலாக வந்த திமுக பெண்களின் நலன்கருதி மது ஒழிப்பை நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வியை முன்வைத்து முடிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »