பாபர் மசூதி வரிசையில் இந்துத்துவாவின் இலக்காகிய ஞானவாபி மசூதி!

இந்தியாவில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உரிமைகளை படிப்படியாக அழித்து, வாழ்வைப் பறித்து அவர்களை சொந்த நாட்டிலே அகதிகளை போன்று நடத்த தேவையான அத்தனை வேலைகளையும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செவ்வனே செய்து வருகின்றன. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, NRC, CAA என ஒன்றன்பின் ஒன்றாக இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவது என இஸ்லாமியரை பல வழிகளில் அடக்கி ஒடுக்கி வருகிறது மோடி அரசு. அதோடு பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவ பாசிச கும்பல் அபகரித்ததோ அதுபோல தற்போது உத்திரப்பிரதேசத்தில் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியையும் அபகரிக்க திட்டம் தீட்டி காய் நகர்த்த தொடங்கி விட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில் அருகேயுள்ள ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் பல நூற்றாண்டுகளாக தொழுகை செய்து வரும் நிலையில், எப்போதும் இல்லாமல் தற்போது திடீரென்று இந்த மசூதி, காசி விசுவநாதர் ஆலயத்தை இடித்து கட்டப்பட்டது என்றும், மசூதிக்குள் சென்று நாங்கள் காசி விசுவநாதரை வழிபடுவோம் என்றும் கூறி புது தில்லியை சேர்ந்த திருமதி ராக்கி சிங் என்பவர் தலைமையில் 5 பெண்கள் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கண்ணுக்கு புலப்படுகின்ற, புலப்படாத தெய்வங்களை எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்யவும், ஆரத்தி, பூஜைகள் செய்து வழிபடுவதற்கும் உத்தரவு இடும்படி கோரியுள்ளனர். நீதிமன்றமும் இந்த அதிசய வழக்கைக் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த வழக்கிற்கு எதிராக ஞானவாபி மசூதி கமிட்டி தாக்கல் செய்தது. அதில், ‘சுமார் 600 ஆண்டுகளுக்கும் பழமையான ஞானவாபி மசூதி உள்ளது என்றும், மேற்படி மசூதியில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த இஸ்லாமியர்கள் தினமும் அவர்களது வழக்கப்படி 5 முறை தொழுகையும், ஜூம்மா & ஈத் தொழுகைகளையும் எந்தவித இடையூறு ஏதுமின்றி தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்றும், தாவா இடமானது வக்பு சொத்து என்பதன் அடிப்படையிலும் உரிமையியல் நடைமுறை சட்ட விதிகளின் (Order 7 Rule 11) படி இவ்வழக்கானது விசாரணைக்கு உகந்தது அல்ல நிராகரிக்கப்பட வேண்டியது’ என்று குறிப்பிடுகின்றனர்.

வாதிகள் தங்கள் வாதத்தில், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் முகமதிய மன்னன் ஔரங்கசிப்பினால் தாவா கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இஸ்லாமியர் தொழுகை செய்வதற்காக ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த இடம் கோவிலின் ஒரு பகுதியே என்றும் கூறியுள்ளனர். மேலும் வாதிகள் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள தெய்வ உருக்களை நீண்ட காலமாக தொடர்ந்து 1993ம் ஆண்டு வரை இடைவிடாமல் வழிபட்டு வந்ததாகவும், 1993க்கு பிறகு வருடத்திற்கு ஒரு முறை தொடர்ந்து வழிபாடு நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி மாவட்ட நீதிபதி திரு. முனைவர் அஜய கிருஷ்ணா விஸ்வேஸா அவர்கள் கடந்த 12-09-2022 அன்று ஜாமியா மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து, “மசூதியில் சென்று காசி விசுவநாதரை வழிபட வேண்டும் என்று 5 பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது” என்று ஒரு அதிசய தீர்ப்பை அளித்திருக்கிறது.

சமீபகாலமாக ஞானவாபி மசூதி கட்டுகதைகளைப் போல பல விடயங்களை இந்துத்துவ சனாதன கும்பல் நீ‌திம‌ன்ற உதவியுடன் அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தாஜ்மஹாலை ‘தேஜோ மஹாலயா’ கோயில் என்றும், குதூப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வதுல் இஸ்லாம் மசூதியில் பூஜையும் அர்ச்சனையும் நடத்த வேண்டும் என்றும், கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் அங்குள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்ற மனுவை ஏற்று விசாரிக்க அனுமதி அளித்த மதுரா மாவட்ட நீதிமன்றம் என பட்டியல் நீளுகின்றது.

அதேபோலத்தான் டெல்லி ஜாமா மசூதியில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன என இந்து மகாசபை கூறியதும், அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய கடிதம் எழுதப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2019, நவம்பர் 9-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, நாட்டு மக்களுடன் உரையாற்றிய மோடி, “இந்த தீர்ப்புக்கு பின், புதிய தலைமுறை புதிய இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும், இது ஒரு புதிய தொடக்கம்” என்றும் கூறினார். இதற்கு பிறகுதான் படுவேகமாக தங்களுக்கென வரலாறு என்ற ஒன்றே இல்லாத இந்துத்துவ பார்ப்பன கும்பல் அடுத்தடுத்த புனையப்பட்ட புதிய புதிய கதைகளுடன் தங்களுக்கான வரலாற்றை கட்டமைக்க அடுத்தடுத்த பொய் புரட்டு வேலைகளை செய்து வருகின்றன.

வழக்கு தொடுத்த ஐந்து பெண்கள்

அதன் தொடர்ச்சியாக தான் கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் புது தில்லியைச் சேர்ந்த ராக்கி சிங் என்ற பெண் 4 பெண்களுடன் சேர்ந்து ஞானவாபி மசூதியின் வளாகத்தில் சிருங்கார் கௌரி மற்றும் வேறு சில தெய்வங்களை வழிபட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.

மேலும் காசி விசுவநாதர் பாதையை ஒட்டி அன்னை சிருங்கார் தேவி, அனுமான் உள்ளிட்ட கண்ணுக்கு புலப்படாத பல தெய்வங்கள் இருப்பதாகவும் இந்தப் பெண்கள் கூறியுள்ளனர். இங்கு இந்த எல்லா சிலைகளும் இருப்பதை உறுதி செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றையும் இவர்கள் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தான் தற்போது ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உள்ளது நீதிமன்றம்.

இவ்வழக்கில் 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், முக்கிய பங்கு வகிக்கிறது. 1991-இல் அயோத்தி பாபர் மசூதி பிரச்சினை தீவிரமாக இருந்த காலகட்டத்தில், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசு 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தினை இயற்றியது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர், ஆனால் அயோத்தி பிரச்சினைக்கு இச்சட்டம் பொருந்தாது என்பதனை பாஜகவினர் வரவேற்றனர்.

இந்த சட்டப்படி நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த அதே நிலையிலேயே தொடரப்பட வேண்டும் என்றும் அதற்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்றும் தெளிவாக குறிப்பிடுகிறது. இச்சட்டம் இயற்றப்பட்ட காலத்திலேயே காசி, மதுரா முதலிய இடங்களிலுள்ள மத வழிபாட்டு பிரச்சினைகளையும் விதிவிலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரியது.

காசி விஸ்வநாதர் கோவில்

மேலும், 16-ஆம் நூற்றாண்டில் காசி விஸ்வநாத கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப் இங்கு மசூதி கட்டியுள்ளார் என்று கூறி, உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் வாரணாசியில் உள்ள சாதுக்களால் 1991-ஆம் ஆண்டே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் தடையுத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பின் தொடர்ச்சியாக 2021-ஆம் ஆண்டு பெண்கள் ஐவர் வழிபாட்டாளர்கள் என்ற தகுதியின் அடிப்படையில் ஞானவாபி மசூதிக்கு எதிராக இந்த உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தனர். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் விதிவிலக்கான அயோத்தி பாபர் மசூதியின் வழக்கின் தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கில் முக்கிய முன்தீர்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளது.

மேலும், ‘வாதிகளின் கூற்றுப்படி, அவர்கள் 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகும் தெய்வ உருக்களை தவறாமல் வழிபட்டு வந்துள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 வாதிகளின் வழக்கிற்குத் தடையாக இல்லை’ என்று நீதிமன்றம் கூறுகிறது. அதேசமயத்தில் இஸ்லாமியர்களது 600 ஆண்டுகால தொடர் தொழுகை குறித்து நீதிமன்றம் ஏதும் பெரிதாக குறிப்பிடவில்லை.

உத்திரப்பிரதேச அரசால் ‘ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் சட்டம்’ 1983-இல் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், அதன் துணைக் கோவில்கள், மண்டபங்கள், வளாகத்தில் உள்ள அனைத்து கடவுள்கள் மற்றும் தெய்வ உருக்களை பராமரிக்கவும், பூஜைகள் செய்யவும் அறங்காவலர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அக்குழு நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது பிரச்சனைக்குரிய கோவில் சுற்றுச்சுவர் சாளர பாதையில் உள்ள தெய்வ உருக்களின் பூஜைகள் மற்றும் அதன் வழிபாடு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதனை நிர்வகிக்கும் அறங்காவலர் குழுவால் அல்லாமல் தனிநபர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு நிலைநிற்க தக்கதல்ல எனும் பிரதிவாதிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தள்ளுபடி செய்து, வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வழிபாட்டாளர்களுக்கு வழக்கு தொடுக்க உரிமை உண்டு என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதியை தகர்க்கும் இந்துத்துவா கும்பல்

மேலும் வழக்கு தொடரப்பட்டுள்ள சொத்தானது மஸ்ஜித் இந்தஜாமியா நிர்வாக குழுவினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் வக்பு சொத்தாகும். எனவே வக்பு சட்டம், 1995-இன் படி சிவில் நீதிமன்றங்களுக்கு ஆளுகை வரம்பு கிடையாது என்றும் லக்னோ வக்பு தீர்ப்பாயத்தின் முன்பு தான் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நான்காம் பிரதிவாதி மனுவில் கூறியுள்ளார். எனினும், இவ்வழக்கின் வாதிகள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும், இஸ்லாமியர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு மட்டுமே வக்பு செல்ல வேண்டும் என்றும் வாதிகள் சொத்தில் உரிமை கேட்கவில்லை வழிபாடு செய்ய வேண்டியே வழக்கு தொடுத்துள்ளார்கள் என்றும் நீதிமன்றம் கருதி வக்பு குறித்த வாதத்தையும் தள்ளுபடி செய்தது.

இரண்டு சமூகங்கள் வழிபாட்டு உரிமை கோரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாட்டு உரிமையை நிர்ணயிப்பதற்கு ‘இருப்பதில் முதல்’ அல்லது ‘இருப்பதற்கு முன்’ என்ற கொள்கை முதன்மையானதாக கருதப்பட வேண்டும் என்ற இந்துக்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பின் நீட்சியாகவே ஞானவாபி மசூதி தொடர்பான மனுவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு கருதப்பட வேண்டும். ஒன்றிய அரசின் சிறப்பு சட்டம், சிறுபான்மை மக்களின் வக்பு சட்டம் மற்றும் உத்திரப்பிரதேச அரசின் கோவில் சட்டங்களை இந்து மதத்தின் வழிபாட்டு உரிமை பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளதை இத்தீர்ப்பில் தெளிவாக காணலாம்.

பாபர் மசூதி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பல மசூதிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளை இந்துத்துவ பாஜக கும்பல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன என்பதை தற்போது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்திற்கும் எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை பார்க்கும் போது நீதிமன்றங்கள் உள்ளி்ட்ட அனைத்து அரசு அதிகார எந்திரங்களும் பாசிச பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

வாரணாசி நீதிமன்றம்

ஒன்றிய அரசை பாஜக பிடித்த பிறகு 2018-ம் ஆண்டு முதல் உத்திரப்பிரதேச அரசு, ஞானவாபி மசூதியைச் சுற்றிலும் ஏறத்தாழ 45,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி விட்டதாகவும், இப்போது வெட்ட வெளியில் ஞானவாபி மசூதி மட்டும் தனித்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மசூதி செயலாளர் சையத் யாசீன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பும் அந்த மசூதியை சுற்றி இருந்த நிலங்களும் இவ்வாறாக கையகப்படுத்தப்பட்டு, பாபர் மசூதி மட்டும் தனித்து விடப்பட்டதையும் ஒப்பிட்டுக் காட்டி உள்ளதும் கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும்.

ஞானவாபி – கடந்து வந்த பாதை!

 1. 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே ஞானவாபி மசூதி இடத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்துத்துவ சாதுக்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், ‘வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே இப்போது இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும்’ என்று 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 2. அதன்பின், பாஜக ஆட்சியில் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இந்துத்துவ கும்பலுக்கு சாதகமாக வந்த ஒரு மாதத்திற்கு பிறகு 2019, டிசம்பரில் ஞானவாபி மசூதியை ஆய்வு செய்யக்கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதியமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 3. 2021-ல் வாரணாசி நீதிமன்றம் மீண்டும் இதுபோன்ற இன்னொரு வழக்கை ஏற்று, ஞானவாபி மசூதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
 4. உயர்நீதிமன்றத்தின் தடை இருந்தபோதிலும், வாரணாசி சிவில் நீதிமன்றம் 2021 ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் தொடங்கி மசூதியை ஆய்வு செய்ய அனுமதித்தது.
 5. இந்நிலையில் தான் ஆகஸ்ட் 18, 2021-ல் டெல்லியைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
 6. இதை எதிர்த்து 2021-ல் மசூதி கமிட்டியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினர். பின்னர் உயர்நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அதை கண்டித்தது.
 7. ஆனாலும் 2022 ஏப்ரலில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிவில் நீதிமன்றம் பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்று மசூதி நிர்வாகம் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து 2022 மே மாதம், மசூதி கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
 8. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்பாக மே 16 அன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் (சிவலிங்கம் என்று கூறுவது மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன்பு தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று என்று மசூதி தரப்பு தெரிவித்துள்ளது) இருப்பதாக கூறப்படும் பகுதியை சீல் வைக்கவும், தொழுகைக்கும் தடை விதித்து வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 9. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்க்காததால், இப்போது கள ஆய்வுக்குத் தடை விதிக்க முடியாது” என்றது. அதோடு மே 17, 2022 அன்று, சிவலிங்கத்தின் (நீரூற்று) பாதுகாப்பிற்காக அந்த குளத்திற்கு சீல் வைக்கவும், அதே நேரம் மசூதியில் தொழுகையை தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 10. பின்னர் மே 20, 2022 அன்று உச்சநீதிமன்றம், இந்த வழக்கு மேலும் விசாரிக்க தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு கூறியுள்ளது. இதன் பிறகே ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து கடவுளை வழிபட அனுமதி கோரிய இந்துப் பெண்களின் மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 12 அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பை நிராகரித்தது.
 11. செப்டம்பர் 22, 2022 அன்று நடைபெற்ற விசாரணையில், வழிபாட்டு உரிமை கோரும் பெண்கள் தரப்பு, சிவலிங்கத்தின் (நீரூற்று) கார்பன் வயதை கண்டறிய கேட்டுக்கொண்டதை ஏற்று, வாரணாசி நீதிமன்றம் மசூதி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் சட்டத்திற்குப் புறம்பான குற்றச் செயல்களுக்கு சட்ட அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் அநீதி, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவும் இந்த நாட்டின் நீதிபதிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது தற்போதைய பாஜக ஆட்சியில் இன்னும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இவர்களின் பாசிச நடவடிக்கைகள் ஞானவாபி மசூதியோடும் கண்டிப்பாக முடிவடையப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »