
ஆணவப் படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றும் தேவை எழவில்லை எனக் கூறிய அரசை நோக்கி, இனியும் எத்தனை ஆணவப் படுகொலைகள் வேண்டும் எனக் கேட்பதற்கு, கவின் செல்வகணேஷ் என்னும் இளைஞனின் ஆணவப் படுகொலையும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. கவின் தனது சகோதரியைக் காதலிக்கிறான் என்பதற்காக சாதிவெறியுடன் வெட்டிக் கொன்றிருக்கிறான் சுர்ஜித் என்னும் இளைஞன். இவனின் பெற்றோர் காவல் துறையில் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள். கவின் குடும்பம் மற்றும் சனநாயக, முற்போக்கு அமைப்புகளின் போராட்டங்களுக்குப் பின்னரே சுர்ஜித் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் கடந்த ஜூலை 27, 2025 அன்று கவின் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கவின் ஐ.டி. ஊழியராவார். சென்னையில் வேலை செய்கிறார் மாதம் 1.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம் வாங்குகிறார். பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். பள்ளி காலத்திலிருந்தே உடன் நட்பாகப் பழகிய தோழியும், இவரும் காதல் வசப்பட்டிருக்கின்றனர். பண வசதியிலோ, படிப்பிலோ சுர்ஜித்தின் குடும்பத்தினரை விட கவின் எந்த வகையிலும் குறைந்தவராக இல்லாமலிருந்தும், அவர் பட்டியலினத்தவர் என்பதால் மட்டுமே, தனது சகோதரியை காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சாதி வெறியன் சுர்ஜித் கவினை வெட்டிக் கொன்றிருக்கிறான்.

கடலூர் மாவட்டத்தில் 2003 -ஆம் ஆண்டில், சாதி கடந்து காதலித்தார்கள் என்பதற்காகவே, முருகேசன்- கண்ணகியை, ஒரு கிராமமே சேர்ந்து 22 வருடங்களுக்கு முன்பு காதிலும், மூக்கிலும் விஷத்தை ஊற்றியே கொன்றார்கள். எத்தனை வருடம் கடந்தாலும் சாதிவெறி ஓயாமல் இளங்காதலர்களை பலிவாங்கிக் கொண்டே இருக்கிறது. கண்ணகி முருகேசன் வழக்கிற்கு பின்பு தான் சாதிய கொலைகளாக பதியப்பட்ட இக்கொடுமை கவுரவப் படுகொலை என்ற பெயரை பெற்றது. இதற்கு பின்பும் உடுமலை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன் என இவர்கள் மீதும் நடத்தப்பட்ட ஆணவப் படுகொலைகளின் கொடூரத்தினால் எழுந்த விவாதங்கள் இதனை சாதிய ஆணவப் படுகொலையாக மாற்றியது. மேலும் இதனை ‘சாதிவெறி ஆணவப் படுகொலை’ என மாற்றும் தேவையும் இருக்கிறது. இதன் பெயரை மாற்றும் அளவுக்கு விவாதங்கள் ஒரு பக்கம் எழுந்து கொண்டே இருந்தாலும், மறுபக்கம் சாதிய வெறியர்களால் இந்தக் குற்றங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.

மாற்று சமூகத்தில், குறிப்பாக பட்டியலின ஆண்களின் கருவை சுமக்கும் தங்களது பெண்ணைக் கொடூரமாக எரித்துக் கொல்லும் அளவிற்கு சாதிய வெறியர்களின் ஆணவப் படுகொலைப் பட்டியலில் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே இவை. இன்னமும் நூற்றுக்கணக்கான படுகொலைகள் வழக்கு பதியப்படாமல் வெளியே தெரியாதவாறு நடந்து கொண்டே தானிருக்கின்றன.
சுர்ஜித் பட்டியலின/ பழங்குடியின (SC/ST) வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
ஆணவப் படுகொலை செய்த சுஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தனிப்பட்ட விரோதத்தினால் நடந்த கொலை அல்ல. சாதிய வெறியினால் முன்கூட்டியே திட்டமிட்டுக் குறிவைத்து செய்யப்படும் வன்முறைச் செயல்களுக்கு பயன்படும் சட்டமாகும். அதனால் இச்சட்டம் இதற்கு போதாது என்பதே பலரும் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது.
சாதிவெறியினால் நிகழ்த்தப்பட்ட ஆணவப் படுகொலை என்பது, காதல் என்ற இயல்பான உணர்வின் மீது வலிந்து திணிக்கப்படும் சமூகக் கௌரவங்களால் ஏற்படுத்தப்படும் கொலை ஆகும். நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள் நடைபெற்ற பின்னும் SC/ST சட்டம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆணவக் கொலைகள் பட்டியலினத்தவர் மீது அதிகமாக நடத்தப்படுகிறது என்றாலும், மற்ற சாதியைச் சார்ந்த காதலர்களும் ஆணவப் படுகொலைக்கு இலக்காகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவற்றை கொலை வழக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பொதுவான சட்டத்திற்குள் இதன் தனித்துவமான விசாரணை, இதற்கான சட்டக் கட்டமைப்பு, தடுப்புகள் போன்றவை முன்னிறுத்தப்படும் வாய்ப்பு குறைவாகும் என்பது இந்த சட்டத்தை கோருபவர்களின் வாதமாக உள்ளது. எத்தனை சாதிவெறி ஆணவப் படுகொலை கொடுமைகள் நடந்த பின்பு, இந்த ஆணவப் படுகொலைகளுக்கு ஒரு தனி சட்டத்தை அரசு உருவாக்கும் என்கிற கேள்வியே எழுகிறது. எனவே கௌரவ அடிப்படையிலான ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் ஏற்படும் போதே இது கௌரவத்திற்காக படுகொலை செய்யும் சாதியவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க முடியும்.
பொதுவாக ஆணவப் படுகொலைகள், கொலைக் குற்ற தண்டனைகளைப் பரிந்துரைக்கும் IPC பிரிவு 302 மற்றும் 300, பட்டியலின/ பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சட்டம் (1989), குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் சட்டம் (2015) போன்றவற்றின் கீழே விசாரிக்கப்படுகிறது. 2018-ல் உச்சநீதிமன்றம் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில், கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும், சாதிப் பஞ்சாயத்துகளைத் தடுக்க வேண்டும், மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 2012ல் கூட இந்திய சட்ட ஆணையம் ஆணவப் படுகொலைக்கான தனி மசோதாவை இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ராஜஸ்தான் அரசு கூட இதற்கென தனி மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் இன்னும் தமிழ்நாட்டு அரசு அதற்கான முயற்சிகளையே முறிக்கும் விதமான, இதற்கான தேவையை எழவில்லை என்கிறது.
பெரும்பாலும், ஆணவப் படுகொலை குற்றங்கள் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டு விடுகின்றன. மேலும், இவற்றை குற்றவாளிகளின் செல்வாக்கு, அவர்களின் சாதி இவற்றையெல்லாம் வைத்து, ஒரு சமூகத்தின் உள்விவகாரங்களாக காவல்துறை வழக்கை கையாளுகிறது. ஆணவப் படுகொலை விசாரணைகள், தகவல்கள், தரவுகள், சாட்சியங்கள், ஆதாரங்கள் எனப் பல மட்டங்களில் நிகழ்த்த வேண்டிய காவல் துறையின் சாதிய மனோபாவமும் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் செயல்படுகிறது. இவ்வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சாட்சியங்களை சமர்ப்பிக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் புகாரளிக்கப்பட்டால், அவை வெவ்வேறு தண்டனை விதிகளின் கீழ் சிதறடிக்கப்படும் சூழல் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மேலும் அந்தந்த வட்டாரம் சார்ந்த சாதிய சங்கங்கள், அவர்களின் அரசியல் செல்வாக்கு, பணபலம் போன்றவை காவல் துறையின் அதிகாரம் வரையிலும் ஆளுமை செலுத்துகிறது. ஆணவக் கொலை செய்யும் குடும்பத்தை மிரட்டுதல், சாட்சியங்களை பிறழச் செய்தல் போன்றவையும் ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைக்காத வண்ணம் செய்து விடுகிறது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2020 – 2022 வரையான மூன்று ஆண்டுகளில் 76 ஆணவ படுகொலைகள் நிகழ்ந்ததாக கூறுகிறது. கடந்த காலங்களில் ஆணவப் படுகொலைகள் பற்றிய சரியான வரையறைகள் இல்லாததால் குற்றங்கள் தெளிவற்றவையாக இருப்பதாகவும், இறுதி அறிக்கைகள் தயாரிக்கப்படும் போது, ஆணவப் படுகொலைகள் அதிலிருந்து தப்பி விடுகின்றன என NCRB குறிப்பிடுகிறது. கௌரவக் குற்றங்களுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான ‘எவிடென்ஸ்’ போன்ற தன்னிச்சையான அமைப்புகள் அளித்த ஆதாரங்கள், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2022- வரையில், 180 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகின்றன. அதுவும் கடந்த 30 ஆண்டுகளில் 7 ஆணவப் படுகொலைகளில் மட்டுமே நீதி கிடைத்திருக்கும் அதிர்ச்சியான தகவலையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது. அதிலும் மேல் முறையீடு மற்றும் தண்டனை குறைப்பு செய்து கொள்கின்றனர் என்பதையும் குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
எனவே, ஆணவப் படுகொலைக் குற்றங்களும், அவற்றின் சூழலும் அங்கீகரிக்கப்படுவதற்கு முறையான சட்டக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஆணவக் கொலைகள் நேராமலிருக்க கடுமையான தண்டனையை இயற்ற வேண்டும். ஆணவப் படுகொலை சூழல், வரையறைகள், இழப்பீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கவனம் செலுத்தப்பட்ட சிறப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
ஏழைகளின் வீடுகளை இடிப்பதில், லாக்கப் மரணங்களை நிகழ்த்துவதில் காட்டும் ஆர்வத்தை சாதி வெறியர்களுக்கு எதிரான வழக்குகளில் காவல் துறை அதிகார வர்க்கம் காட்டுவதில்லை. கவின் ஆணவப் படுகொலையிலும், இந்த குற்றத்தைச் செய்த சுர்ஜித்தின் பெற்றோர் காவல்துறையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பதால் அவர்களின் புகைப்படம் 3 நாட்கள் கழித்து, பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் வெளியிடப்பட்டிருக்கிறது. தந்தையும் இப்போதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிகாரத்தைச் சார்ந்தவர்கள் ஆணவப் படுகொலை செய்தால் அதிகார மட்டம் அவர்களை காப்பாற்றுவதற்காக பல வகைகளில் முயற்சி செய்கிறது. இந்தக் காப்பாற்றுதல் என்னும் வலைப் பின்னல் பல மட்டங்களில் நீள்கிறது.
ஆணவப் படுகொலை செய்யும் சாதிவெறியர்களை காவல்துறை காப்பாற்றுகிறது. காவல்துறையை அதன் உயர் அதிகாரிகள் காப்பாற்றுகிறார்கள். இந்த அதிகாரிகளை ஆட்சியாளர்கள் காக்கிறார்கள். ஆட்சியாளர்களை அதிகாரவர்க்கம் காப்பாற்றுகிறது. இந்த கூட்டணியை தேர்தல் கட்டமைப்பு காப்பாற்றுகிறது. செய்தி நிறுவனங்கள் இந்த ஒட்டு மொத்தக் கூட்டமைப்பைப் பாதுகாக்கிறார்கள். ஊடக நிறுவனக் கட்டமைப்பை முதலாளிகள் காக்கிறார்கள். முதலாளிகளை சாதியம் காப்பற்றுகிறது. சாதியை மூலதனம் பாதுகாக்கிறது. இந்த சாதிய மூலதனத்தை, சாதிய அதிகாரிகளை, சாதிய முதலாளிகளை, சாதிய அரசியல்வாதிகளை, சாதிய ஊடக நிறுவனங்களை, சாதிய வகைப்பட்ட தேர்தல் அமைப்புகளைக் கொண்டு சாதி எனும் இரும்புக் கோட்டையை சனாதனம் காக்கிறது. இந்த வர்ண-இந்து சாதியக் கட்டமைப்பை இந்தியா எனும் அமைப்பு பாதுகாக்கிறது. இந்த சங்கிலி மேலதிக கண்ணிகளைக் கொண்டதாக, மிகவும் நீளமாக வளர்கிறது. இந்தக் கட்டமைப்பு பின்னிப் பிணைக்கப்பட்டது. இந்த இரும்புக் கோட்டையை முறியடிக்க வேண்டுமெனில் உறுதிமிக்க போராட்டம் தேவைப்படுகிறது. அதை இப்போதே நாம் செய்தாக வேண்டும்.
ஆணவப் படுகொலைகளுக்கான சிறப்புச் சட்டம் இயற்றும்போது, ஆணவப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரும் படியான சட்டக் கட்டமைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அதன் மூலம் சாதியக் குற்றவாளிகள் தப்பிக்கும் வழிகள் குறையும் வாய்ப்பும் அமையக் கூடும்.
கவின் போன்ற ஆற்றல்மிகு, அறிவார்ந்த இளைஞர்களை தமிழ் சமூகம் இழக்கும் முன்பாக, ‘ஆணவப் படுகொலை தடுப்பிற்கான சிறப்புச் சட்டம்’ உடனடியாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் இயற்றப்பட வேண்டும். இந்து மதம் உருவாக்கிய சாதியப் புரையோடிய சாதிவெறியை போர்க்குணத்துடன் எதிர்த்துப் போராட ஜனநாயக, முற்போக்கு ஆற்றல்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம்.

போராடாமல் நமது கொள்கைகள் வெல்லாது, சாதியத்தைக் கொன்றழிக்க வீதியை நிரப்ப வேண்டும் என்கிற போர்க்குணத்துடன் மே 17 இயக்கத்தினர் மறியல் போராட்டத்தை ஜூலை 30, புதன்கிழமை அன்று நடத்தினார்கள். தோழமை அமைப்புகளும் பங்கெடுத்தார்கள்.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினுக்கு நீதி கோரி நடந்த மறியல் போராட்டத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது
‘சாதி எளிதில் சாகாது, போராடாமல் அது வீழாது’