அண்ணல் காந்தியைக் கொலை செய்த, கர்மவீரர் காமராசரைக் கொலை செய்ய முயன்ற அமைப்பு ராஷ்டிரிய சுயம் சேவாக் பரிசத் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இது இந்தியாவில் மூன்று முறை தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் நடத்த இருந்த ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு நவம்பர் 6-ம் நாள் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகள் விதித்தது. ஆகையால், நவம்பர் 5ம் தேதி ஊர்வலத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகக் கூறி உயர்நீதிமன்ற நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஆர்.எஸ்.எஸ்அறிவித்தது.
கலவரங்களின் புகலிடம் என்னும் வகையில் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளின் சங்பரிவாரக் கும்பல்கள் பெயர் எடுத்தவை. ஆகவே, தமிழ்நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழமையாக இருந்து வருகிறது.
இந்து ராச்சியம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு கேசவ்ராவ் பாலராம் ஹெட்கெவர் என்பவர் ஐந்து சித்பவன் பார்ப்பனர்களுடன் இணைந்து 1925-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1926-ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிகள் தொடங்கப்பட்டன. பல சிந்தனை கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைவிட்டு, எந்த சிந்தனையும் போதனைகளும் இல்லாத நபர்களைத் தேர்வு செய்து பயிற்றுவிக்க வேண்டும் என்பதே பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
முஸ்லீம்களை எதிர்த்துப் போரிட்ட இந்து மன்னர்களின் கதைகள் வீராவேசமாகக் கூறப்பட்டு இளைஞர்கள் தூண்டப்பட்டனர். இங்குக் கம்பு, வாள், ஈட்டி, குத்துவாள் பயிற்சி தரப்பட்டன. உறுதிமொழிகள், விதிமுறைகள் என ஒவ்வொன்றும் முறையாக வகுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய விடுதலை அறப்போராட்டம் காந்தி வழியிலும், சுபாசுசந்திர போஸ் ஆயுத வழியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்க; ஆர்.எஸ்.எஸ் மதவெறி ஊட்டும் பயிற்சிப் பட்டறை சாகாக்களை விரிவாக்கம் செய்து மாணவர்கள், இளைஞர்களைத் திரட்டி இந்து தேசம் அமைப்பதற்கான அடித்தளத்தையும் வலுவாக ஊன்றிக் கொண்டிருந்தனர்.
வதந்திகளும், கலவரங்களும்
ஆர்.எஸ்.எஸ் கும்பல்களைப் பற்றிச் சுருங்கக் கூறுவதென்றால், கலவரங்கள் வரும் பின்னே, ஆர்.எஸ்.எஸ் தூவும் வதந்திகள் வரும் முன்னே என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வதந்திகளின் உண்மையான பெயர் ஆர்.எஸ்.எஸ். எங்கோ நடக்கும் சிறிய சண்டைகளைக் கூட, இந்துவை முஸ்லிம் அடித்துவிட்டதாக வதந்திகள் கிளப்பிவிடும் பொறியாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும். பின்னால் அது பற்றிக் கொண்டு இந்து முஸ்லிம் கலவரமாக வெடிக்கும். இந்தியா முழுக்க சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் ஏற்பட்ட மதக்கலவரங்களால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு முதல் விதையை ஆர்.எஸ்.எஸ் விதைத்தது.
1927ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நாக்பூரில் நடத்திய வகுப்புக் கலவரமே அது பரவலாக வளரக் காரணமாக அமைந்தது. நாக்பூரின் மகால் பகுதியில் உள்ள மசூதிக்கு முன்பாக இந்த ஊர்வலம் சென்றது. தடிக்கம்புகள், வாள்கள் ஏந்தியவாறு இசை வாத்தியங்களுடன் மதவெறியைத் தூண்டும் முழக்கங்களுடனும் சென்றனர். இதனால் உவர்ச்சிவயப்பட்ட சில இஸ்லாமிய இளைஞர்களும் ஆயுதங்களுடன் ஊர்வலம் கிளம்பினர். மதியம் 2 மணியளவில் மர்ம நபர்கள் கற்களை வீசத் தொடங்கினர். சிலர் முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீ வைத்தனர். கலவரம் பரவத் தொடங்கியது. இதில், 25 பேர் மரணமடைந்தார்கள் 100 பேருக்கு மேல் காயமடைந்தார்கள். இதே வழிமுறையைத் தான் அன்றிலிருந்து இன்றுவரை பின்பற்றி வருகிறது. சமீபமாக, வட இந்திய மாநிலங்களில் நடந்த ராமநவமி ஊர்வலம்வரை அச்சு அசல் மாறாமல் ஆர்.எஸ்.எஸ் அப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் ஊர்வலங்களின் போது முதலில் கல்லெறியும் மர்ம நபர்களை மட்டும் இதுவரையில் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை.
சாவர்க்கர் நடத்திய இந்து மகாசபை வட இந்தியப் பகுதிகள் முழுக்க ஆர்.எஸ்.எஸ்யை காலூன்ற வைத்தது. 1932-ல் நடந்த கராச்சி மாநாடு, டில்லி, காசி, சிந்து, பஞ்சாப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் வேகமாகப் பரவியது. 1947-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில், அகதிகள் பாதுகாப்பைத் தேடி ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் மற்றொரு பக்கமாக நகர்ந்தனர். உ.பி மற்றும் பீகாரிலிருந்து பல முஸ்லீம் குடும்பங்கள் கராச்சியில் அகதிகளாக வெளியேறினர். சிந்து இந்துக்கள் குஜராத் மற்றும் பம்பாய்க்கு வந்தனர். இவ்வாறு இரு மதத்தவர்களும் இடம் பெயர்ந்தபோது நடைபெற்ற கொலைகள் மட்டும் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.பெண்கள் வகை தொகையின்றி சீரழிக்கப்பட்டனர், குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர், 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு, இந்திய-பாகிஸ்தான் பிரிவின் போது ஏற்பட்ட கலவரங்கள் வரலாற்றின் பெருந்துயரமாக மாறியதற்குக் காரணம் மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இந்துத்துவ கும்பலும், அன்றைய மதவாத முஸ்லீம் லீக் அமைப்புகளும் ஆகும்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அன்றைய காங்கிரசு விரும்பியது. ஆனால், இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்-சும் முஸ்லிம்களை முழுவதுமாக விரட்டிவிட்டு பார்ப்பனியத்தின் தலைமையில் இந்து தேசத்தை அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டது.
1947 ஜூன் மாதத்தில் சகர்கர் என்ற பகுதியில் பூர்வீக இந்துக்களின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ் “அக்னி தளம்” என்ற அமைப்பை உருவாக்கி அதில் முஸ்லிம்களுக்கு எதிரான குண்டுவெடிப்புகள் நடத்திடப் பயிற்சி அளித்தது. இந்துக்களின் சிதைந்த சடலங்களைப் பற்றிய தவறான செய்திகளையும், சிதைந்த கோயில்களின் புகைப்படங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிட்டு முஸ்லிம்கள் அழித்ததாக மேற்கு பஞ்சாபின் முஸ்லீம் அல்லாத மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் பரப்பியது. சுயநலமிக்க ஒரு சிறு குழுவின் ஆதாயத்திற்காகத் தூண்டப்பட்ட வதந்திகள் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது. துண்டறிக்கைகள், பத்திரிக்கைகள் வாயிலாக வெளியாகிடும் நஞ்சுச் செய்திகள் லட்சக்கணக்கான மக்களின் உயிர்ப்பலிக்குக் காரணமாக இருந்தது.
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே முதலில் ஆர்.எஸ்.எஸ்-சில் இருந்து பிறகு இந்து மகாசபையில் சேர்ந்தான். தீவிர இந்துத்துவ வெறிப் பரப்புரையாளனாக மாறியவன் இந்து ராஷ்டிரா என்ற பத்திரிக்கையும் நடத்தி வந்தான். “இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். இனி, அவர்கள் இந்துஸ்தானில் இருக்கக்கூடாது உடனே வெளியேற வேண்டும். முஸ்லிம்கள் இந்துஸ்தானின் பரம எதிரிகள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கக்கூடாது. அப்படி இருந்தால் அதை உடனே பறித்துவிட வேண்டும்” என்று எழுதினான்.
பஞ்சாப் பிரிவினையின்போது, ஆர்.எஸ்.எஸ் நடத்திய இரத்தக்களரியில் முஸ்லிம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 1947ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்-காரர்கள் 700க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகப் பம்பாய் புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கபூர் ஆணையம் முன் சாட்சியளித்தார்.
1948ம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் நபரும், இந்து மகாசபையின் உறுப்பினருமான நாதுராம் கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவரை முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி கோட்சே சுட்டு வீழ்த்தினான். ஆனால், சனாதனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயன்றதால் தான் சித்பவன் பார்ப்பனர்களான கோட்சே மற்றும் சிலரால் ஐந்து முறைக்கும் மேல் மகாத்மா காந்தி கொலை முயற்சி நடந்தது என்கிற உண்மையை வரலாற்றாசிரியர்கள் முன் வைக்கின்றனர்.
1967ல் “பசுவதைத் தடுப்பு” ஊர்வலம் என்று சொல்லி டெல்லியில் நிர்வாண சாமியார்களை முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் கொடூர வன்முறைகளை ஆர். எஸ்.எஸ் நிகழ்த்தியது. நாடாளுமன்றத்தைப் பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு டெல்லி நகர வீதியெங்கும் வெறியாட்டங்களை நடத்தியது. 300க்கும் மேற்பட்ட கும்பல் காமராசரைக் கொல்ல அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு தீ வைத்தது. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகைக்குண்டு என எதற்கும் கட்டுப்படாமல் வெறிபிடித்த கூட்டத்தால் அன்று டெல்லி நகரம் சூறையாடப்பட்டது.
1970 ஆம் ஆண்டு சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிவாண்டியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் 220 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட 190 பேர் முஸ்லீம்கள் ஆவார்கள். 1980 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மொராதாபாத் நகரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது பன்றியை நுழையவிட்டு கலவரத்தைத் தூண்டினர். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை நீடித்த தொடர்ச்சியான மத மோதல்களால் அந்த மாவட்டத்தையே உலுக்கியது. பொதுமக்கள் மீது காவல்துறை சில சுற்றுகள் சுட்டதால் பெரும் கலவரமாக உருவெடுத்தது. கலவரம் காரணமாகக் குறைந்தது 400 பேர் கொடூரமாக உயிரிழந்தனர்.
1986 பிப்ரவரி 14 அன்று உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதிக்குச் சீல் வைக்கப்பட்ட பூட்டைத் திறந்ததை எதிர்த்து முஸ்லிம்கள் நகரில் கருப்புக் கொடிகளை ஏற்றினர். அதனால், அந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்ட கலவரங்களால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்துத்துவ அமைப்புகள் தூண்டிய கலவரங்களால் முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். அப்பாவி இந்துக்கள் சிலரும் சில முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். மே19 அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது இந்து வெறியர்கள், மாநகர ஆயுதப்படையின் உதவியுடன் நகரின் சில பகுதிகளைச் சூறையாடி எரித்தனர். சாதாரண முஸ்லிம் மக்கள் பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குறிப்பாக, சாஸ்திரி நகர்ப் பகுதியில் 33 பேர் (100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கும் நிலையில்) கொல்லப்பட்டனர்.
1949ல் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து ராமர் அவதரித்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ்-சின் துணை அமைப்பான விசுவ இந்து பரிசத் காணொளி பிரச்சாரம் செய்தது. இந்த அமைப்பு போலியாகத் தயாரித்த காணொளியைக் காட்டியே 1990 ஏப்ரல் 4ந் தேதி நடந்த பேரணியில் அயோத்தியில் படுகொலை நடந்ததாக அத்வானி பேசினார். ராமர் அவதரித்ததை நம்பிய கூட்டம் காணொளியைக் கண்மூடித்தனமாக நம்பியது. படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கரசேவகர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் அயோத்திக்குச் செல்லவேயில்லை என்பதையும் தி சன்டே அப்சர்வர், ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கைகள் பலமுறை நிரூபித்துவிட்டன. இப்படி அடிமட்டம் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை வதந்திகளைக் கையிலெடுத்துப் பரப்பி வந்தனர். பிரபலமான திரைப்பாடல்களின் மெட்டுகளில் மதவெறிப் பாடல்கள் பாடிய ஒலிப்பேழைகளை அங்கங்கே ஒலிக்கவிட்டனர். இந்து சாமியார்கள் தாக்கப்படுவதாக, இந்துப் பெண்கள் மானபங்கப்படுவதாக எடுக்கப்பட்ட போலி காணொளிகளும், ஒலிப் பேழைகளும் இந்து முஸ்லிம் வாழும் பகுதிகளில் கலவரங்கள் ஏற்படுத்திட பெரும் துணை ஆற்றின. பாபர் மசூதி சர்ச்சைகள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் பேரணிகளும், அதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசுவ இந்து பரிசத் போன்ற சங்பரிவார அமைப்புகள் தூண்டிய வன்முறைகளாலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக்கப்பட்டனர். ராமஜென்ம பூமி அமைக்கப் போவதாக சங்பரிவாரக் கும்பல்கள் 1992வரை (பாபர் மசூதி இடிக்கப்படும் வரை) யாத்திரை செல்வதாக ஒவ்வொரு மாநிலத்திலும் செய்த கலவரங்கள் கணக்கில் அடங்காதவை. விநாயகர் சதுர்த்தி, துர்கா பூசை, ராம நவமி என்று வேண்டுமென்றே முஸ்லீம்களின் மசூதி வழியாக ஊர்வலங்கள் சென்று அவர்களை வம்புக்கு இழுத்து சங்பரிவாரக் கும்பல் உள்ளூர் கலவரங்களை நடத்தின. ராமஜென்ம பூமி யாத்திரை என்று பல மாநிலங்கள் மானாவாரியாகக் கலவரங்களை நடத்தியது. 1992-93 பம்பாய் (மும்பை) கலவரத்தில் கோரேகான் பகுதியில் ஒரு அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட முஸ்லீம்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அறிக்கையின்படி பம்பாயில் 1992 டிசம்பர் மற்றும் 1993 ஜனவரியில் நடந்த இரண்டு கட்ட கலவரங்களில் 900 பேர் (575 முஸ்லிம்கள், 275 இந்துக்கள் மற்றும் இதர மக்கள்) கொல்லப்பட்டனர். காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 356 பேர், கத்திக்குத்துச் சம்பவங்களில் 347 பேர், தீ வைப்புத் தாக்குதலில் 91 பேர், கும்பல் வன்முறையால் 80 பேர் மற்றும் தனியார் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 22 பேர் இறந்தனர். வன்முறையால் 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகப் பிற மதிப்பீடுகளில் கூறப்படுகிறது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக முஸ்லீம்கள் அதிர்ச்சியிலும் கடும் கோபத்திலும் இருந்தனர். ஆனால், மோதல்கள் பலனளிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு யதார்த்த புரிதலிலிருந்தனர்.
1994 முதல் 2002 வரை ஆங்காங்கே சில கலவரங்கள் நடைபெற்று வந்தபோதிலும் பெருமளவில் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. காரணம் என்னவென்றால், அச்சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. அதனால் சங்பரிவாரக் கும்பல்கள் அமைதியாக இருந்தன. 2002ல் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அரசு நடத்திய வன்முறையாகக் குஜராத் கலவரம் இருந்தது. கோத்ரா ரயிலில் கரசேவகர்களை முஸ்லிம்கள் எரித்துவிட்டனர் என்ற வதந்தி வேகமாகப் பரப்பப்பட்டது. இதனால், காட்டுமிராண்டி ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தல் சங்பரிவாரக் கும்பல்கள் முதல்வராக இருந்த மோடியின் ஆசியுடன் வன்முறை வெறியாட்டம் போட்டன. குஜராத் நகரங்களெங்கும் 3000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியப் பெண்களை வன்புணர்வு செய்து படுகொலை செய்வது, குழந்தைகளை அடித்துக்கொள்வது போன்ற இவர்களின் வெறியாட்டங்களை தெகல்கா இதழ் அம்பலப்படுத்தியது.
2006 – 2008வரை மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜவுதா தொடர்வண்டி குண்டுவெடிப்பு, ஐதராபாத் மெக்கா மசூதி, ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என அனைத்தும் காவி பயங்கரவாதிகள் வெடித்தவை எனத் தீவிரவாத தடுப்புப்படை பின்னர் கண்டறிந்தது. இதை முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் யசுவந்த் சிண்டே நீதிமன்றத்தில் வாக்குமூலமாக அளித்துள்ளார். மேலும், குண்டுகளை உருவாக்கிடும் பயிற்சியை ராணுவ அதிகாரிகள் வழங்கினர் என்பதையும் பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கலவரங்கள்
வட இந்தியாவைப் போன்று தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் எளிதில் பற்றிக்கொள்வதில்லை. தமிழ்நாடு மதக்கலவரங்களின் ஆணிவேரான பார்ப்பனியத்தின் தன்மைகளை நன்கு அறிந்து இருந்த மாநிலம் ஆகும். இருப்பினும் வதந்திகளும், அச்ச உணர்வை விதைக்கும் தந்திரமும் அனுபவமாகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அதன் விளைச்சலை சில மாவட்டங்களில் அறுவடை செய்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்கள் அதில் குறிப்பிடத்தக்கது.
1982 கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல்களால் தூண்டப்பட்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் முக்கியமானது. இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் துணை அமைப்பும் நடத்திய கூட்டங்களும், பல வகையான வழிகளில் உருவாக்கப்பட்ட வதந்திகளும் கலவரம் உருவாகக் காரணங்களாகின. இதில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். “இந்துக்கள் இந்துக் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும்” என்று அந்த மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். கிருத்துவப் பிரசங்கிகள் எவ்வாறு இந்து தெய்வங்களை இழிவுபடுத்துகிறார்கள் தெரியுமா? எங்கள் ஊர் “ராமன் புதூரை” கார்மல் நகர் என்று பெயர் மாற்ற முயல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்று எழுதும் போது கன்னியாகுமேரி என்று மேரி பெயரைப் புகுத்துகிறார்கள். நாமெல்லாம் சும்மா இருந்துவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நமது மதம் வாழ இடமே இல்லாமல் போய்விடும்” போன்ற அச்ச உணர்வை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். இப்படியாகா, பல வகைகளில் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய வதந்திகளால் சிறுக சிறுக உருவான மதவாதத்தின் அறுவடையாகத் தான் இன்று பாஜக அங்கு வென்றுள்ளது. மதவாதத்தால் மக்களின் மனங்கள் மழுங்கடிக்கப்பட்டு வருவது தொடர்ந்தால் அது மதவெறியாக மாற்றமடைந்து குமரி மாவட்டம் சிதைந்துவிடக்கூடும்.
கோவையையும் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டம் தான் கோவைக் கலவரம். 1997ல் போக்குவரத்து காவலர் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவர் முஸ்லீம்களால் கொலை செய்யப்பட்டார் என்று மர்மநபர்கள் வதந்திகளைப் பரப்பினர். இதனையடுத்து, போக்குவரத்து காவலர்களும், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற சங்பரிவார அமைப்புகளும் இஸ்லாமியர் கடைகளைச் சூறையாடினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களால் 18 இஸ்லாமியர்களும் இந்துக்கள் இருவரும் இறந்தனர். 500 கோடி அளவிற்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தக் கலவரத்திற்கு எதிர்வினையாகக் குண்டு வைக்க “அல் உமா” என்ற முஸ்லிம் அமைப்பு திட்டமிட்டது. 1998ல் குறிப்பிட்ட சில இடங்களில் குண்டு வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதற்கும் அடியுரம் போட்டது ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். ஆனால், “அல் உமா” திட்டமிடுவதாக தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகக் கோவை மாநகர ஆணையர், தமிழக டிஜிபியிடம் முன்கூட்டியே ஆர்.எஸ்.எஸ் புகார் தெரிவித்ததாக சில முஸ்லிம் தலைவர்கள் கூறினர். கோவைக் கலவரத்தின் பலனாகக் கோவை நகரத்திலிருந்த இஸ்லாமியத் தமிழர்களின் கடைகள் பெரும்பாலானவை வட இந்திய மார்வாடிகளின் கைகளுக்குச் சென்றது. இன்று, மார்வாடிகளின் ஆக்கிரமிப்பினால் தமிழர்களின் வணிக தொழில் குறைந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ் வந்தது முன்னே, மார்வாடிகள் வந்தார்கள் அதன் பின்னே என்று சொல்வார்கள். இதனைத் தொடர்ந்து கோவை மாநகரத்தில் மார்வாடிகளின் நலவிரும்பி பாஜக வென்றிருக்கிறது. இந்துத்துவ கும்பல் மக்கள் மனங்களை மதவாதத்தால் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் அது மதவெறியாக மாறி கலவரங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தையும் அதன் பார்ப்பனிய தலைமையையும் நன்கு உணர்ந்த சமூக, ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள் தமிழ்நாட்டில் வலுவாக இயங்கி வருகின்றன. ஆகவே தான் மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அதேநாளில் சமூக நல்லிணக்கப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து ஜனநாயக சக்திகள் கைகோர்த்திட அழைப்புவிடுத்தார். அதன்படி, மே 17 இயக்கம் முதன்மையாகத் தாமாக முன்வந்து போராட்டத்தில் பங்கெடுப்பதாக அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அந்நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று சந்தேகித்து எந்த ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை என்று அறிவித்தது. அதன்பிறகு அக்டோபர் 11ம் தேதி அனைத்து ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ளும் மனிதச் சங்கிலி பேரணியைத் தோழர் திருமாவளவன் நடத்தினார். அதில் மே 17 இயக்கத் தோழர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பங்கேற்றனர்.
அரசு தடை செய்த ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி வாங்க நீதிமன்றத்தை நாடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எதிர்வரும் நவம்பர் 6ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தமிழக அரசு விதித்த சில கட்டுப்பாடுகள் தங்கள் கலவர நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் எனத் தவிர்த்திருக்கின்றனர்.
இதுவரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் கலவர வரலாறு ஒரு சிறு துளியே. இவர்கள் நடத்திய கலவரங்களின் பட்டியல் கணக்கிலடங்காதவை. இன்னும் கூட அவர்கள் நடத்தக்கூடிய பல கலவரங்கள் வரிசையில் இருக்கும். ஏனென்றால், பாஜக ஆட்சியைப் பிடித்து, மதநல்லிணக்கத்தை அழித்து இந்து ராஜ்ஜியத்தை நிறுவிட அவர்களுக்குக் கலவரங்கள் அடிப்படைத்தேவையாக உள்ளது. மதவாதத்தால் சரிவடையும் பொருளாதாரம், சமூக வளர்ச்சி; அதன் விளைவாக மக்களிடம் ஏற்படும் கோவத்தை மட்டுப்படுத்தவும் அதே இந்து-முஸ்லிம் மதக்கலவரங்களை உருவாக்கி மடைமாற்றுவார்கள். இவையே ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கும்பல்களின் கடந்த வரலாற்றுச் செயல்பாடுகளால் நமக்குக் கிடைத்த பாடங்கள் ஆகும். இக்கும்பலின் வதந்திகள், தந்திரங்கள், சூழ்ச்சிகள் எந்த வகையில் வருமென்று சாதாரண மக்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சமூக, ஜனநாயக அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைத்தும் இந்த மதவெறி கும்பலின் நோக்கத்தை முழுவதும் அறிந்தவர்கள். ஆகவே, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நகர்வுகளை முறியடிக்கும் வழிகளை நாம் அனைவரும் இணைந்து செய்து முடிப்பதே நம் முன் இருக்கும் பெரும்பணி ஆகும்!