பாஜகவின் ‘காசியில் தமிழ் சங்கமம்’ எனும் நாடகம்

நம் கையை வைத்தே நம் கண்ணையே குத்த வைக்கும் செயலே “காசியில் தமிழ் சங்கமம்” என்று மோடி துவங்கி வைத்த நிகழ்ச்சி. நம் மொழியை அரவணைப்பது போல நம் பண்பாட்டை இந்துத்துவத்திற்குள் கரைப்பதை உள்நோக்கமாகக் கொண்டவர்களால் இது முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை ஐஐடி நிறுவனமும், காசி வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக் கழகமும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சென்னை ஐஐடி நிறுவனம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து, சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடி பட்டமளிப்பு விழாவினை நடத்திய ஓர் ஒன்றிய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். அதைப் போலவே பனாரசு இந்து பல்கலைக்கழகம் வளர்ச்சிக்கான அறிவியல் அறிவை தீவிர இந்துத்துவ சடங்கு, சம்பிரதாயங்களுக்குள் கரைக்கும் கல்வி நிறுவனமாகும். இவர்கள் தான் உலகப் பொதுமையாக வழிகாட்டும் நீதி நெறிகளைத் தந்த தமிழையும், தமிழர் பண்பாட்டையும் காசியில் சங்கமிக்க வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் மொழியை மேடைகள் தோறும் உயர்த்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மோடி, தமிழுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்பதை அலசிப் பார்த்தாலே அவரின் இரட்டை வேடம் புரிந்து விடும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கால் பதிக்க ஆடும் தந்திரம் என்பதும் தெரிந்து விடும். பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அவர் இந்த நிகழ்வில் பேசினார். கடந்த 2021-ம் வருடமும் இதையே தான் பேசினார். இனி அடுத்த வருடமும் பேசினாலும் வியப்படைய வேண்டியதில்லை. ஆனால் இதில் என்ன வியப்பான செய்தி என்றால், ஏற்கெனவே அங்கு தமிழ் இருக்கை இருக்கிறது என்று கடந்த வருடமே, அந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு பெண்மணி தெரிவித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிறகு ஏன் இந்த நாடகம் என்பது மோடியின் நோக்கம் அறிந்த தமிழர்கள் தெளிவாகவே உணர்வார்கள். தமிழர்களைக் கவர நினைக்கும் தந்திரம் என்பதையும் அறிவார்கள்.

மேலும் தமிழ்நாடு மொழி வளர்ச்சி நிதியை 2017-2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து, ரூ.22 கோடி மட்டுமே ஒதுக்கியது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு. அதே வேளையில் இந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தின் வளரச்சி நிதியாக ரூ.643 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். 8 கோடி மக்கள் பேசும் மொழிக்கு 22 கோடியும், 30 ஆயிரம் மக்கள் கூட பேசாத மொழிக்கு கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம் ஒதுக்கியவர்கள் தான் இன்று தமிழை சங்கமிக்க வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக இயக்குநரே போடவில்லை. 150 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் ஒன்றிய அரசின் நிதியின் மூலம் வழங்கப்பட்டு வந்த தமிழாய்வுக்கான குடியரசுத் தலைவர் விருதினை 2016-லிருந்து எவருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால் சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற மொழியாய்வுக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. விருது வழங்குவதில் கூட தமிழர்களின் மீது பாகுபாடு காட்டியவர்கள் தமிழர்களின் மீது பேரன்பு கொண்டவர்களாக நடிக்கிறார்கள்.

2022-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழகத்தில் வெள்ளையர்களை எதிர்த்த முதல் சுதந்திரப் போரின் வீராங்கனையான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்றோரைக் கொண்ட அலங்கார ஊர்தி மாதிரிகளை நிராகரித்தது மோடி அரசாங்கமே. தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் புறக்கணித்தவர்கள் தான் தமிழர் பண்பாட்டை காசியில் சங்கமம் என்று காவிச் சாயத்தில் மூழ்கடிக்க முன்வருகிறார்கள்.

தமிழர்களின் கீழடி தொல்லியல் அகழ்வாய்வு ஆய்வுகள் தமிழர்களின் பண்பாட்டில் ஒரு மைல்கல். ஆனால் அது வெளிவரக்கூடாதென்று ஒன்றிய அரசு அந்த ஆய்வில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றியது. உயர்நீதிமன்றத்திற்கு சென்று சாதகமான தீர்ப்பைப் பெற்று மீண்டும் அவரை கீழடி ஆய்விற்கே அழைத்து வந்தவர்கள் தமிழின உணர்வாளர்கள். தமிழர்கள் மூத்த நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் என்னும் உண்மை நிரூபனமாகி உலகெங்கும் பரவலானதும் இன்று மோடி தமிழ் தொன்மையைப் பற்றிப் பூரிக்கிறார். ஆனால் இந்த ஆய்வுகள் வெளிவரக் கூடாது என்று சூழ்ச்சிகள் செய்து, போதிய அளவிலான நிதி ஒதுக்காமல் முடக்கி விட நினைத்த முக்கியக் காரணமே, எந்தவிதமான மதம் சார்ந்த அடையாளங்களும் இந்த அகழ்வாய்வில் கண்டறியப்படவில்லை என்பது தான். தமிழின் தொன்மையைப் பேசுபவர் இதைக் குறித்து பெருமையாக எப்போதும் பேசமாட்டார். இதைப் பேசினால் தான் மோடிக் கும்பலின் மதவாத அரசியல் செய்யும் அடிப்படையே ஆட்டம் கண்டு விடுமே.

தமிழ்நாட்டின் இந்திய ஒன்றியத் துறைகளின் பணிகளில் 90%-த்திற்கும் மேல் வட இந்தியரையே நியமிக்கும் சூழ்ச்சி வேலைகளை திட்டமிட்டு செய்கிறது மோடி அரசின் நிர்வாகம். 2017-ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல்துறை, என்.எல்.சி, பாரத மின்மிகு நிலையம், வருமானவரித் துறை, உளவுத் துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது. திருச்சி பொன்மலையில் 2300 பேர், தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் என காலிப் பணியிடங்கள் முழுதும் வட இந்தியரே சேர்க்கப்படுகின்றனர்.

இதைப் போல ஒவ்வொரு பணியாளர் தேர்விலும் தமிழர்களுக்கு அநீதியை இழைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் நிலங்களை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கொடுத்ததற்கு பிரதிபலனாக, அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு உறுதிகளை மீறி இப்போது அங்கு வட இந்தியர்கள் மட்டுமே பணியில் சேர்க்கப்படுகின்றனர். 2021-ல் 259 பணியிடங்களின் பேரில் வெறும் 8 பேர் தான் தேர்வு செய்யப்பட்ட பட்டியிலில் இடம் பெற்றனர். இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூடத் தமிழரில்லை.

அஞ்சல் துறையில், வங்கிகளின் உயர் பதவிகளில் என எங்கும் வட இந்தியரின் முகங்களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக்கூட தகுதி இல்லை என்று பாஜக அரசு முடிவுசெய்து விட்ட பின்பு எதற்காக, யாரை நம்ப வைப்பதற்காக இந்த சங்கம நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் 90 லட்சம் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனிற்கு ஆதரவாகவும், தமிழ் பெருமையை உயர்த்துவதாகவும் மோடி பேசுவது நகைமுரண் என்பது தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆளுநரைக் கைப்பாவையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இயற்றிய நீட் எதிர்ப்பு மசோதா முதற்கொண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு – 2022, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு – 2022, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு -1983, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்ட முன்வடிவு – 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு கையொப்பமிடாமல், சனாதனத்தை ஊர் ஊராக சென்று வளர்த்துக் கொண்டிருக்கும் ஆளுநரின் மோதல் போக்கிற்கு உரமூட்டி வளர்த்து விடும் மோடியின் தமிழைப் பெருமையாகப் பேசும் பேச்சை அடிமைகள் தான் தலையாட்டி ரசிப்பார்கள்.

தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒருமனதாக நிறைவேற்றிய எழுவர் விடுதலையை, காலதாமதப்படுத்திய ஆளுநரால், உச்சநீதிமன்றம் நவம்பர் 11, 2022-ல் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை சாத்தியப்படுத்திய ஜனநாயக சக்திகளால், இந்தியப் பார்ப்பனிய அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியால் சிறைக்கு சென்ற ஆறு பேரும் 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் சில மாதங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தமிழர்களின் ஒருமித்த கொள்கை முடிவுகளால் வந்த தீர்ப்பினைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களை மீண்டும் சிறையிலடைக்க உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை ஒன்றிய அரசு போட்டிருக்கிறது. இப்படி தமிழர்களின் ஒட்டுமொத்த முடிவுகளைக் கூட அங்கீகரிக்காத பாஜக அரசாங்கம் தமிழர் பண்பாட்டுக்கு பல்லக்கு தூக்குகிறது என்றால் அதனை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை.

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்று முன்னேறிய மக்களே, இலவசங்களைப் பெற்று நாட்டின் வளர்ச்சி சீரழியக் காரணமானவர்கள் என சாடையாகப் பேசி வருகிறார் மோடி. மோடி திடீரென்று அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளாலும், ஒரே நாடு ஒரே வரி என்று கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிகளாலும் தமிழகத்தில் நசிந்த சிறு குறு தொழில்கள் இதுவரை மீளவில்லை. மின்சார சீர்திருத்தச் சட்டம், மீன்வள திருத்தச் சட்டம், வேளாண்மைத் திருத்த சட்டம், சுற்றுச்சூழல் திருத்த சட்டம், தொழிலாளர் திருத்தச் சட்டம் என்று பனியா மார்வாடி நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி கொண்டு வந்த சட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் கனிம வளங்களும் இயற்கை வளங்களும் கொள்ளைப் போகிறது. “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்று சொல்லி நமது வளங்களை பெரு நிறுவனங்களின் காலடியிலும், அதிகாரப் பதவிகளை பார்ப்பனியத்தின் தோள்களிலும் ஏற்றியவர் எப்படி தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்றவராக இருப்பார்?

இந்த நிகழ்வில் மோடியுடன் இணைந்து இசை ஆளுமையான இளையராசாவும், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆற்றிய உரைகளும் மோடியைப் போலவே தமிழர் பண்பாட்டை சிறுமைப்படுத்தியிருக்கிறது. திரைத்துறைப் பிரபலங்களை தங்களவர்களாக மாற்றிக் கொண்டு அவர்களைப் பின்தொடரும் ரசிகக் கூட்டத்தை வளைத்துப் போடுவதை யுக்தியாகவே வைத்திருக்கிறது பாஜக. இந்த வழியில் பாஜக-விடம் மாட்டியவர் தான் இசைஞானி என்று நாம் கொண்டாடும் இளையராசாவும். அவருக்கு எம்.பி பதவியைக் கொடுத்ததனால், அவர் மோடியைப புகழ்வது அவரின் தனிப்பட்ட துதிபாடலாக இருக்கலாம். ஆனால் அவரின் கற்பனைக் கதையை தமிழர்களின் பண்பாட்டாக முன்வைப்பது நரித்தனமானது.

ஈராயிரமாண்டு முந்தையதும், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நமது திருக்குறளை சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்த வடநாட்டு ஆன்மீகக் கவிஞரான கபீர்தாசோடு இணைத்துப் பேசுகிறார் இளையராஜா. முத்துசாமி தீட்சிதர் கங்கை நதியில் மூழ்கி எழுந்த போது கடவுளான சரஸ்வதி வீணையைத் கொடுத்ததாகவும், அந்த வீணை இன்றும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தான்தோன்றித்தனமாக பேசுகிறார். ஒரு கற்பனைக் கதையை வரலாறாகப் பேசி, இவரைக் கொண்டாடும் பல கோடி மக்களின் மூளையில் புனைவை வரலாறாகத் திணிக்கும் வேலையை செய்திருக்கிறார். இவை தமிழர் பண்பாடா அல்லது பார்ப்பனியத்தின் பண்பாடா? மேலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களைக் கொன்ற கறை படிந்தவர்களின் முன்பு, நாம் நேசித்த கலைஞன் வணங்கி நிற்பதைப் பார்த்து தமிழர்கள் சீற்றமே கொண்டனர்.

இந்தியாவின் நடக்கும் பாலியல் குற்றங்களின் பட்டியலிலிருந்து நடக்கும் பல்வேறு குற்றங்கள் வரையான பட்டியலில் முதலிடத்தை என்றுமே விட்டுத் தராத உத்திரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் பேசியதும் தமிழறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. சிவபெருமான் வாயிலிருந்து வந்த இரண்டு மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இன்னொன்று சமஸ்கிருதம் என்றும் தமிழை சமஸ்கிருதத்தோடு இணைத்தார்.

சமஸ்கிருதம் என்பதன் அர்த்தமே சுத்திகரிக்கப்பட்டது அல்லது உருவாக்கப்பட்டது என்பதாகும். பழைய பிராகிருத, பாலி மொழிகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம். உலகின் மூத்த மொழிகளில், ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே இலக்கண, இலக்கியங்கள் படைத்தது நம் தமிழ் மொழி. அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளில் இருந்த பெயர்களின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே எளிய மக்களிடையும் கல்வியறிவுப் பரவலாகி பொதுவுடைமை சமூகமாக வாழ்ந்ததை எடுத்துரைத்தது நம் தமிழ் மொழி. கி.பி முதலாம் நூற்றாண்டில் முதன் முதலாக கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சமஸ்கிருதக் கல்வெட்டும் ஆரிய மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான பிராகிருத மொழியில் தான் இருக்கிறது என்பது மொழியியல் அறிஞர்களின் சான்று. இவ்வாறு ஆரிய மூல மொழியிலிருந்து உருவான ஒரு மொழியை, திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியுடன் இணைத்துத் திரிக்கும் வேலையை காவி தமிழ் சங்கமம் என்ற பெயரால் இந்துத்துவவாதிகள் அரங்கேற்றுகிறார்கள்.

ஆகவே, தமிழர் வரலாற்றில் சமத்துவத்திற்கு எதிரான கொள்கையைக் கொண்ட மனுதர்மத்தையும், சனாதனத்தையும் எதிர்த்து நின்ற தமிழ் மண்ணை காசியில் சங்கமம் என்று சொல்லி இந்துத்துவத்துடன் செரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியே “காசி தமிழ் சங்கமம் “. தமிழர்கள் விழிப்புடன் இருப்பதே பல்வேறு வழிகளில் தமிழகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்க உதவும். சமத்துவமும், சமூக நீதியும் உயிரெனக் கொண்ட தமிழர் பண்பாட்டை கங்கையில் கொண்டு எரிப்பதற்கு சமம் காசியில் நிகழ்த்தப்படும் தமிழ் சங்கமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »