நூற்றாண்டிற்கு முன்னர் நடந்தவைகளுக்கு சற்றும் குறையாத வகையிலே தற்போது திமுக அரசின் அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. தமிழக காவல் துறை சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக தேடிச் சென்று கைது செய்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை சமூக விரோதிகள் போல நடத்தியது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த அடக்குமுறையை தமிழ்நாட்டின் சனநாயக சக்திகள் பலரும் கண்டித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறிபெரும்புத்தூரில் உள்ளது சாம்சங் நிறுவனம். இது துவங்கப்பட்டு 17 வருடங்களாகிறது. இந்நிறுவனம் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட்ட பல பிரச்சனைகளுக்காக அவ்வப்போது சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றிருக்கிறது. இதனால் நிர்வாகம் அவர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்து சிரமப்படுத்தியிருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தரும் பாதிப்புகளுக்கு தனித்தனியாக நின்று சண்டையிடுவதை விட, தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கென்று ஒரு உறுதியான தொழிற்சங்கம் அமைப்பதே தீர்வு என்ற நிலைக்கு தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதன் அடுத்த கட்ட முயற்சியாகவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதி செய்தபடி, சிஐடியு சார்பில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தொழிலாளர்கள் எடுத்தனர். இதனை சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. இதனால் செப்டம்பர் 9, 2024 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அன்று தொடங்கிய போராட்டம் இன்றுவரை நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. சங்கம் அமைக்கும் முடிவைத் தவிர ஏனைய கோரிக்கைகள் குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது. தங்களின் நிரந்தரத் தீர்வுக்கு சங்கம் அமைப்பதே ஒரே வழியென தொழிலாளர்களும் போராடுகின்றனர். இதனால் இரு தரப்பின் சார்பாகவும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க ஊர்வலம் செல்ல முயன்றதாகக் கூறி, செப்டம்பர் 16-ல் சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உட்பட 100 பேரைக் கைது செய்தது காவல்துறை. இதைப் போல சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டது. சனநாயக உரிமைகளான ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் கூட தமிழ்நாட்டுக் காவல் துறையால் முடக்கப்படுவதாக தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த கைதைக் கண்டித்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், அப்பலோ டயர், ஜே கே டயர், ஹூண்டாய், யமஹா,தாய் சுமித், யோகா பாரிவேர் தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பு கூட்டம் நடத்தினர். தொழிலாளர் நல சங்கங்கள் பலவும் இப்போராட்டத்திற்கு துணை நிற்பதாக நிதிகள் அளித்தன. தென்கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை அளித்திருந்தது. இந்தியாவின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி நொய்டா தொழிற்சாலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அக்டோபர் 1, 2024 அன்று காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகம் நோக்கி சாம்சங் ஊழியர்கள் பேரணி சென்றனர். இதில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சாம்சங் நிறுவனத்தின் சீருடை அணிந்து இரவுப் பணி முடிந்து செல்லும் ஊழியர்களை கைது செய்வதாகவும், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக காவல் துறை செயல்படுவதாகவும் சிஐடியு நிர்வாகிகள் குற்றச்சாட்டு சுமத்தினர்.
ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போராட்டத்தில், தொழிலாளர் துறை ஆணையரிடம் நடந்த பேச்சுவார்த்தையிலும், தொழிற்சங்கத்தை அனுமதிக்கவே முடியாது என சாம்சங் நிறுவனம் கூறிவிட்டது. அதன் பின்பு இப்பிரச்சனைக்கு முடிவு காண்பதற்காக, அரசு சார்பில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொழில்துறை அமைச்சர்களும் தொழிலாளர்கள் பிரச்சனையில் தொழிற்சங்கம் தலையிடுதல் கூடாது என்கிற சாம்சங் நிறுவனத்தின் அதே கூற்றையே பேசினர். அதற்கு சிஐடியு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டு பேர உரிமை, தொழிற்சங்கத்தில் வெளி நபர்களும் பொறுப்பு வகிக்கும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை என அனைத்து உரிமைகளும் சட்டப்படி இருக்கும் போது, சட்டப் புரிதல் இல்லாமல் அமைச்சர்கள் பேசுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொழிற்சங்கம் அமைப்பதும் தொழிற்சங்கத்தில் வெளியாட்களும் பொறுப்பு வகிக்கும் உரிமையையும் அடிப்படை உரிமை என்பதற்கு நூற்றாண்டின் போராட்ட வரலாறு உள்ளது. அதை அரசியல் சட்டமே உறுதிப்படுத்தியிருக்கிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 1500 தொழிலாளர்களில் ஒப்புதல் இல்லாமல், போராட்டத்தில் ஈடுபடாத சில ஊழியர்களிடம் கையொப்பம் வாங்கி, சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதாக அறிவித்துள்ளனர். இந்த செயல் சனநாயக மாண்பற்றது, மிகவும் மோசமான நடைமுறை என சிஐடியு பிரதிநிதிகள் குற்றச்சாட்டு வைத்தனர். சிஐடியு-உடன் இணைவது தொழிலாளர்களின் முடிவே தவிர, சிஐடியு வற்புறுத்தல் அறவே இல்லை எனவும், தொழிற்சங்கம் அமைக்கும் முடிவு எட்டும் வரை சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நீடிப்பதாகவும் கூறினர்.
அரசியல் அமைப்பு சட்டப்படி தொழிலாளர்களுக்கான சங்கத்தை பதிவு செய்த 45 நாட்களுக்குள் தொழிலாளர் துறை அனுமதி தர வேண்டும். ஆனால் 105 நாட்களாகியும் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது. அரசின் தாமதத்தைப் பற்றி பேசாமல், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தொழிற்சங்கம் அமைப்பது குறித்த முடிவெடுக்க முடியாது என அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த சூழலில் சாம்சங் தொழிலாளர்களை சந்திப்பதற்காக போராட்ட பந்தலுக்கு, சனநாயக் கட்சிகள் செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் காவல் துறை இரவோடு இரவாக போராட்ட பந்தலை கலைத்து விட்டு, தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்யும் இந்த அடக்குமுறையை நிகழ்த்தியுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மனித மாண்பையும், வாழ்வுரிமைகளையும் மீட்க இந்தியாவில் முறைப்படி முதன்முதலாக ஒரு சங்கத்தை பிரசவித்த மண், இன்று சாம்சங் தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க உரிமை மறுக்கும் அன்றைய சென்னை மாகாணமே.
அன்றைய சென்னை மக்களின் சமூக வாழ்வை, அந்நிய முதலாளிகளின் பக்கிங்காம், கர்னாடிக், டிராம்வே, மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய்-பெட்ரோல் நிறுவனங்கள் தீர்மானித்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ‘சென்னை தொழிலாளர் சங்கம் (மதராஸ் லேபர் யூனியன்)’ என்கிற பெயரில் அந்த சங்கம் உருவாக்கப்பட்டது.
ரஷ்யாவில் நடைபெற்ற பாட்டாளி வர்க்க புரட்சியின் (1917 நவம்பர் 7) உணர்வு சென்னையின் உழைக்கும் மக்களை தட்டி எழுப்பி, அது வரை சங்கம் சேரும் உரிமை மறுக்கப்பட்டதை மீறி கம்பீரமாக உருவாக்கப்பட்டதுதான் ‘சென்னை தொழிலாளர் சங்கம்’. பி.பி. வாடியா அதன் தலைவராகவும், தமிழ் தென்றல் திரு.வி.க. மற்றும் கேசவ பிள்ளை துணைத் தலைவர்களாகவும், செல்வபதி மற்றும் ராமானஜலு செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
தொழிலாளர் அல்லாத இவர்கள் தொழிற்சங்கத்தில் பொறுப்பு வகிக்கக் கூடாது என்று அன்றும் முதலாளிகள் நிபந்தனை விதித்ததை ஆங்கில அரசு ஏற்றுக் கொண்டு, முதலாளிகளின் சம்பளமில்லாத காவல்காரர்களைப் போல காவல் துறையை இயக்கியது அன்றைய ஆங்கிலேய அரசு. துப்பாக்கி சூடு, தடியடி போன்ற கட்டற்ற வண்முறையை ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக ஆங்கில அரசு செய்தது.
அத்தனையையும் கடந்து பல தொழிலாளர்களின் பல்வேறு காலகட்ட தொடர் கிளர்ச்சிக்கு பின்னரே, இன்று நாம் பார்க்கும் பல ‘தொழிலாளர் நல சட்டங்கள்’ வடிவம் பெற்றன.
அன்று அந்நிய நிறுவனங்கள் காலனிய நாடான இந்தியாவில் தங்களால் முடிந்த அளவிற்கு சுரண்டும் வேலையை செய்தன. அந்த வாய்ப்பை ஆங்கில அரசு அவர்களுக்கு வழங்கியது. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் அதே சுரண்டல் வேலைகளை செய்கின்றன. திராவிட மாடல் திமுக அரசு மூலதன குவிப்பு என்கிற போலி வளர்ச்சியின் பெயரில் அதை ஆதரிக்கிறது.
சாம்சங் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நின்று தொழிற்சங்கம் அமைப்பதை மறுக்கிறார்கள். தொழில் அதிபர்களின் நலனுக்காக இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு (ClI), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FlCCl), செபி (SEBI) போன்ற அமைப்புகள் இருக்கும் போது, தொழிலாளர்களின் நலனுக்காக சங்கம் அமைப்பதை இடையூறாக அரசு பார்க்கிறது. அயல்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் என்பதற்காக, ”அவர்கள் தொழில் துவங்க நீர், நிலம், மின்சாரம், வரிச்சலுகை போன்ற பலவிதமான சலுகைகள் வழங்கப்படும் போது, அதில் பணி செய்யப் போகும் தொழிலாளர்களுக்கென உரிமைகளை கேட்டு வாங்குவதில் அரசு உடன்பாடில்லாமல் நடந்து கொள்கிறது”.
குடிமக்களின் வளங்களை தொழில் அதிபர்களுக்கு அள்ளி வழங்கும் போது, ஊழியர்களுக்கான உரிமைகளில் முதன்மை உரிமையாக இருக்கும் சங்கம் வைத்துக் கொள்வதை தடை செய்வது அநீதி. போர்டு நிறுவனம் மூடப்படும் போது, இழப்பீட்டு உரிமை கிடைக்கப் போராடிய ஊழியர்களுக்கு, மே 17 இயக்கம் துணை நின்றது. அவர்களின் ஜனநாயக உரிமைக்காக ஆர்ப்பாட்டம், பரப்புரைகள் செய்தது. போர்டு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசு, பிபிடிசி நிறுவனத்திடமிருந்து மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீட்டுத் தொகை வாங்கித் தராமல் கைவிட்டது. ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறைப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என நீடிக்கும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் சுமூக முடிவு எட்டப்படாமல் நீடிக்க வைக்கிறது. இன்று சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை மறுத்து அடக்குமுறை ஏவுகிறது. அறிஞர் அண்ணா ஆட்சியில் மாஞ்சோலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை தொழில்துறை அமைச்சராக இருந்த ரத்தினவேல் பாண்டியன் மூலம் பேசி உடனடியாக நிறைவேற்றினார். இன்று திமுக முதலாளிகளுக்கான கட்சியாக மாறியிருக்கிறது.
”தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது திராவிட இயக்கம். அதன் வழி நடந்து திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக, தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும்”. சமூகத்தின் அனைத்து மட்டத்திற்கும் சென்று சேரும் உள்ளார்ந்த வளர்ச்சி நிலையை சிந்திக்கும் ஆட்சி, தொழிலாளர்களின் உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது. திமுக அரசு கவனத்தில் கொண்டு சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை ஆதரித்து நிற்பதே சனநாயகமானது.
திமுக தொழிற்சங்கமான ‘தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பு(LPF)’ சாம்சங் ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது திமுக அதிகார மட்டத்தின் சிந்தனை வேறாக இருப்பதையும், அதன் தொழிற்சங்கத்தின் சிந்தனை தொழிலாளர் உணர்வு நிலையில் இருப்பதையும் வெளிப்படையாக காட்டுகிறது. தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாத நிலையில் திமுக-வின் தொழிற்சங்கமும், அதை நேரடியாக ஆதரிக்கும் நிலையில் திமுக அமைச்சர் குழுவும் இருப்பதே திமுக அரசின் முதலாளித்துவ திராவிட மாடலை அம்பலப்படுத்தும் நிகழ்வாக உள்ளது.
’வளர்ச்சி என்கிற பெயரில் பன்னாட்டு மூலதன குவிப்பு ஒரு புறமும், Ease of Business என்கிற பெயரில் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மறுபுறமும் செயல்படுவது என்பது ஒரு நாளும் திராவிட மாடல் ஆகாது’. அது தரகு முதலாளித்துவ மாடலாகதான் இருக்கும். அதனால் தமிழ்நாட்டிற்கோ, மக்களுக்கோ எந்த உண்மையான வளர்ச்சி வந்து விடாது. சங்கம் கோரும் நம் நூற்றாண்டு வரலாறை உணராமல் சங்கம் வைக்க மறுக்கும் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவது அதன் தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது.
தொழிலாளர் அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் உரிமைக்கானது. தொழிலாளர் ஒற்றுமை என்பது சாதி பேதமற்ற சமூக உருவாக்கத்திற்கு அடிப்படையானது. இவ்வகையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் ஆதரவளிக்கிறது.