தேசத்தந்தையாகப் போற்றப்பட்ட காந்தியைக் கொன்ற பார்ப்பனனான கோட்சேவைத் தேசபக்தர் எனக் கொண்டாடி வழிபடுகிறது ஒரு கும்பல். தேசத்தின் மீது கொண்ட பக்தியின் காரணமாகவே காந்தியைக் கோட்சே கொன்றான் என்று மக்களை மூளைச்சலவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.-சங்பரிவாரக் கும்பலின் சூழ்ச்சி வேலைகள் பல்வேறு தளங்களில் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. தேசபக்தியால் அல்ல சனாதன வெறித்தனத்தால் தான் காந்தியைக் கோட்சே கொன்றான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தும் வரலாற்றை மாற்றி எழுதும் கும்பல் இதனைத் துணிந்தே செய்கிறது.
கோட்சேவின் பெற்றோருக்கு அடுத்தடுத்து பிறந்த மூன்று குழந்தைகளின் இறப்பிற்கு பின் கோட்சே பிறக்கிறான். அதனால் தனது குடும்பத்தில் ஆண் குழந்தைகளின் மீது சாபம் இருப்பதாக நம்பி கோட்சேவைப் பெண் குழந்தை போல வளர்க்கின்றனர். கோட்சேவிற்கு பிறகு குழந்தைகள் வரிசையாக பிறந்ததால் குடும்பத்தினர் கோட்சேவினால் சாபம் நீங்கியதாக நினைத்து அவனை மந்திர தந்திரங்களை கற்க வைக்கின்றனர். தெய்வீக சக்தியுள்ள பிள்ளை என்று கேட்சேவை நம்ப வைக்கின்றனர். உயர்ந்த சாதி எனக் கருதப்பட்ட சித்பவன் பார்ப்பன குலத்தில் பிறந்ததினால் சனாதன மேலாதிக்கக் கருத்துக்களை உள்ளத்தில் வலுவாக ஊன்றி வளர்க்கப்படுகிறான் கோட்சே.
சித்பவன் பார்ப்பன சாதிப் பெருமையுடன் வளர்ந்த கோட்சே அதே சாதியை சேர்ந்த சாவர்க்கருடன் நெருக்கமானான். 1930-களில் சாவர்க்கரை சந்திக்கும் கோட்சே ஆங்கிலேயர் எதிர்ப்பிலிருந்து பின்வாங்கி முழு நேர சனாதன வெறியனாகிறான். பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் முகமது அலி ஜின்னா 1940-ம் ஆண்டில் தான் முன் வைத்தார். ஆனால் 1924-லிலேயே இந்து மகாசபையின் சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ்.-இன் கோல்வால்கர் போன்ற சனாதனவாதிகள் மத ரீதியான இரு தேசக் கோட்பாட்டை முன்னிறுத்தினர். இந்த சமயத்தில் ஜின்னா காங்கிரசுடனும், காந்தியுடனும் சேர்ந்து ஒற்றை தேச விடுதலையையே ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார். 1937-ல் இரு நாடு கொள்கையை இந்துமகா சபையின் தலைமை உரையில் கூறியவர் சவர்க்கார். அதற்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பே 1923-ல் யார் இந்து? (Who is Hindu) என்ற புத்தகத்தில் இந்துக்கள் ஒரே இனம், ஒரே மொழியான சமஸ்கிருதத்தைக் கொண்டவர்கள் என்று எழுதியவர். அதாவது சனாதனத்தின் மொழி தான் மற்ற இனங்களின் தாய்மொழிகளுக்கெல்லாம் தாய் என்றார். கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகள் மேய்த்து பிழைப்பு தேடி வந்த வந்தேறிகள் பேசிய மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்திருந்த இங்கிருந்த தமிழ் உட்பட பல மொழிகளுக்கும் தாய் என்ற நஞ்சினை எழுதி வைத்தார்.
இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த சாவர்க்கரைத் தான் கோட்சே கொன்றிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவினைக்காக காந்தியைக் கொன்றதாக கோட்சே கூறியது முற்றிலும் பொய் என்பதே உறுதியான ஆதாரமாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சித்பவன் பார்ப்பனக் கூட்டாளிகளால் 1934-ம் ஆண்டிலிருந்து 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாளில் காந்தி கொல்லப்பட்டது வரை ஆறு முறைக்கு மேல் காந்தியைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்திருக்கிறது. சனாதன மேலாதிக்கம் நிலை நிறுத்துதற்காக செய்யப்பட்ட கொலையை தேசப் பிரிவினைக்காக செய்த கொலையென்று நிறுவ பொய்களை அடுக்கியவனே கோட்சே.
பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகப் புரட்சியாளர்கள் இந்திய விடுதலையை விட சமூக விடுதலையே முதன்மையானது என களங்களைக் கட்டியமைத்தனர். சனாதனத்தை கண்மூடித்தனமாக பின்பற்றிக் கொண்டிருந்த இருந்த காந்தி இவர்களின் போராட்டங்களை கூர்ந்து கவனிக்கத் துவங்கியிருந்தார். சமத்துவத்தின் நேர் எதிரானது சனாதனம் என்பதைப் புரிந்து கொள்ளாமலே சனாதனம் மேலாதிக்கம் செய்யப் புகுத்திய சீர்கேடுகளை களைந்து விட்டால் சமத்துவம் பிறக்கும் என நம்பினார். அதனால் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். இந்து மதத்தின் புனித காரியம் என சனாதனம் நியாயப்படுத்திய தேவதாசி முறையை காந்தி கண்டித்தார். “தேவதாசி வழக்கம் ஒரு பெருங்குற்றம். நாம் நமது சகோதரிகளைக் கொடிய வேட்கைக்குப் பயன்படுத்திவிட்டு அதற்குக் கடவுள் பெயரை வைப்பது நாம் இழைக்கும் இரட்டைக் குற்றம். சமூகத்தின் வேரையே இதைப் போன்ற கொடுமைகள் அரித்துவிடும்” என்று சாடியது சனாதனிகளுக்கு கோவமூட்டியது. பம்பாயில் ஒரு கோயிலின் முன்னே நடைபெற்ற ஆலய நுழைவு வாக்கெடுப்பினில் தீண்டத்தகாதார் என்றவர்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக 24,797 வாக்குகளும், எதிராக 445 வாக்குகளும் விழுந்தன. காந்தியின் உண்ணாவிரதம் சாத்தியமாக்கியிருந்த இது சனாதனிகளுக்கு எரிச்சலூட்டியது. “வரதட்சணையை ஒழிப்பதன் மூலம் சாதிய வேறுபாடுகள் களையலாம்” என்று ‘ஹரிஜன்’ இதழில் எழுதியது, குழந்தை திருமணங்களை பற்றி “சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டி இந்த அநீதியான வழக்கத்தைப் புனிதப்படுத்த முடியாது” என்பது போன்ற சீர்திருத்த கருத்துகளால் சனாதனிகள் வெகுண்டனர். “மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது விதவை நிலையானது பெண்கள் மீது திணிக்கப்படுகிறது. இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இப்படித் திணிக்கப்பட்ட விதவை நிலையானது ஒழிக்கப்பட வேண்டும் ” என்ற காந்தியின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் பொருமினர். காந்தி காலனி ஆட்சிக்கு எதிராக பெண்களையும் நாடு தழுவிய அளவில் திரட்டியதற்கும் பெண்ணடிமைக் கருத்துக்களை சமூகத்தில் விதைத்த சனாதனிகள் ஆத்திரமடைந்தனர். காந்தியினால் வெகுமக்களிடையே இந்த சீர்திருத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்த மாற்றங்களை சீரணிக்க முடியாத சனாதனக் கூட்டத்தின் வெறுப்பின் வெளிப்பாடு தான் காந்தி படுகொலையேத் தவிர இரு நாட்டுப் பிரிவினையால் தேசபக்தரான கோட்சேவுக்கு ஏற்பட்ட கோவமே காந்தி கொலை செய்யப்படக் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுவது கயமைத்தனமானது. முழுமையான பொய்மையானது. மக்களை குழப்பக்கூடியது.
இத்தகைய சீர்திருத்தங்களின் தேவையை மேற்கொண்டதனால் தான் பெரியார் காந்தியின் மறைவின் போது “இருந்த காந்தியார் ஆரியர் காந்தியார். ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தியார். நம் எதிரிகளின் காந்தியார். ஆனால் இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்த ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால்தான், நாம் மற்றவர்களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம்” என உரையாற்றினார். பார்ப்பன சூழ்ச்சியை உணர்ந்து காந்தி தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாரோ அன்று பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் எனப் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இப்பொழுது கோட்சேவை தேசபக்தராக கட்டமைக்க மெனக்கெடுவது போல் அப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.-இன் பிதாமகனும், ஆங்கிலேயரின் சேவகராக சிறை மீண்டவருமான சாவர்க்கர் வெள்ளையர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு தரகராக மாறி முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் கட்டமைப்புகளை கட்டி எழுப்பினார். அதற்கு சேனையாகப் பயன்பட்டவர்கள் தான் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் சிலர். ஆப்தேவும் சித்பவன் பார்ப்பனர். கோட்சேவுடன் சேர்ந்து காந்தி கொலைக்காக தூக்கிலிடப்பட்டவன். இவர்கள் இருவரும் அக்ரனி என்ற பத்திரிக்கையை 1944-ல் துவங்குகின்றனர். இதற்காக ரூ 15000 முன்பணமாக வழங்குகிறார் சாவர்க்கர். அன்றைய மதிப்பின் படி அந்த தொகை மிகவும் அதிகம். காந்தியையும், காந்தியவாதிகளையும் எதிர்க்க சாவர்க்கரியவாதிகளான கோட்சேவும், ஆப்தேவும் முஸ்லீம்கள் மீது வகுப்பு வாதம் தூண்டும் படி எழுதுகின்றனர். அதற்காகவே இந்தப் பத்திரிக்கை ஆங்கில அரசால் 1945-ல் தடை செய்யப்பட்டது. ஏற்றத்தாழ்வை போதிக்கும் வர்ணாசிரம தர்மத்தின் கூறுகளை காந்தியின் அகிம்சையும், உண்ணாவிரதமும் சமத்துவம் நோக்கி வெகு மக்களின் மன இயல்பை மாற்றி விடுமோ என அஞ்சினர் சித்பவன் பார்ப்பனர்கள். அந்த எண்ணத்தில் காந்தியை அழிக்க சாவர்க்கரால் கூர் தீட்டப்பட்டவனே கோட்சே.
சனாதனம் நிகழ்த்திய கொடுமைகளை அப்பட்டமாக தோலுரித்தவர் பெரியார். அதனால் தான் காலந்தோறும் சனாதனவாதிகள் வரலாற்றைத் திரிபுபடுத்துபவர்கள் என்கிற சூழ்ச்சிகளை வருங்காலத் தலைமுறையினரும் பெயரைக் கேட்டதுமே எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம் தொலைநோக்குடன் “இந்த தேசத்திற்கு காந்தி தேசம் எனப் பெயரிடலாம் என்றார். பொதுவான கிறிஸ்து, முஸ்லீம் ஆண்டு போல காந்தி ஆண்டு துவங்கலாம். சத்தியமே கடவுள் என அவர் வாழ்வு அமைந்ததால் காந்தியின் பெயரால் காந்தி மதம் என புதிய மதம் தோற்றுவிக்கலாம் எனவும் காந்தியின் பெயரால் உருவாகக் கூடிய இவை அனைத்தும் சனாதனம் நிலை நிறுத்திய கடவுள் தன்மை, சாதி மதவெறி போன்றவைகளுக்கு மாற்றாக அமையும்” எனவும் விளக்கமாக தனது பத்திரிக்கையான விடுதலையில் (11-3-1948) பெரியார் எழுதினார்.
மேலும், காந்தி மதம் எனத் தோற்றுவித்து விட்டால் “அகிம்சையையும், அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தை கொண்டதான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் சாதி வேறுபாடுகளும், மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா? அதன் மூலம் இன்று வரைக்கும் சாதி மத பேதங்களை உண்டாக்கவும், மக்களைக் காட்டுமிராண்டி காலத்திற்கு அழைத்துச் செல்லவுமே பெரிதும் பயன்பட்டு வந்த இந்துமதம், போலிக் கடவுள் அழிய வழி பிறக்காதா?”… “ஆகவே, என்ன காரணம் முன்னிட்டேனும், இன்றையக் கடவுள் தன்மையும், மதத் தன்மையும் மாற்றப்பட்டாக வேண்டும். இன்றைய ஏற்பாடுகள் இன்றைய ஆர்டர் எப்படியும் மாற்றப்பட்டாக வேண்டும்” – என தங்களை நல்வழிப்படுத்த மதமும், கடவுளும் தேவை என்ற அகவுணர்வு மேலோங்கும் மக்களுக்காக காந்தி பெயரைக் கொண்டு தோற்றுவித்தால் தான் என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்.
காந்தி வர்ணாசிரமப் படிநிலையை இந்து தர்மம் என ஏற்றுக் கொண்டார். ஆனால் கீழ்ப்படிநிலை வாசிகள் அனைவருக்கும் சமதள உரிமை கிடைக்க வேண்டுமென நினைத்தார். இரும்பின் உறுதி கொண்ட படிநிலை அடுக்குகளை சமூக சீர்திருத்த உதிர் மணல்களை கொண்டு சமமாக்கத் துடித்தார். ஆனால் சனாதனம் தகர்ந்து விடாது காக்கும் பார்ப்பனீய மேலாதிக்கம் எப்படி பார்த்துக் கொண்டிருக்கும்? கோட்சே என்னும் சனாதன வெறியனை கருவியாக்கியது. காந்தியைத் தகர்த்தது. இன்னமும் சமூகம் சமத்துவம் அடைந்து விடாமலிருக்க பார்ப்பனியம் வைத்திருக்கும் கருவிகள் தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ அமைப்புகள். இதனைத் தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் கோட்சே என்கிற கொலைபாதகனை சிறிது காலத்திற்குள் தேசத்தந்தையாக மாற்றிவிடும் ஆபத்தை சனாதனிகளான பார்ப்பனர்கள் கட்டமைத்து விடுவார்கள். சனாதன வெறியன் கோட்சேவால் காந்தி கொலை செய்யப்பட்ட உண்மையை அப்பாவி இந்துக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நினைவூட்டிக் கொண்டே இருப்போம்.