தமிழினத்தின் ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமார்

காணிக்கை சூடமல்ல நொடியில் எரிந்து முடிய…
கோரிக்கைக்காக ‘நின்று எரிந்த அறிவு நெருப்பு’ முத்துக்குமார்.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள பேரினவாதத்தின் பிடியிலிருந்து விடுதலை வேண்டி தமிழர்கள் போராடிய போது, அவர்களைக் கொல்ல இந்திய ஏகாதிபத்தியம் ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அவ்வேளையில் தன்னுயிர் ஈந்து, தன்னுடலையே மாபெரும் ஆயுதமாக ஏந்தி, தமிழ்நாட்டிற்கு போராட சொல்லிக் கொடுத்த போராளிதான் முத்துக்குமார்.

ஆம்… 28வயது மதிக்கத்தக்க ஒரு சாமானிய இளைஞர், தமிழீழ மக்களின் அழிவை தடுக்க தன்னால் இறுதியில் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய உறுதியாக முடிவெடுத்து தன்னையே உயிர்த்தியாகம் செய்யத் துணிந்தார். 29.1.2009 அன்று காலை ஒன்றிய அலுவலகமான சாஸ்திரி பவன் அருகே நடமாடிக்கொண்டு இருந்த சக மனிதர்களிடம் துண்டறிக்கை கொடுத்திருக்கிறார். அவர்களும் வழக்கம்போல் அரசியல்வாதிகள் அளிக்கும் துண்டறிக்கை தானே என கடந்து சென்று இருக்கக்கூடும். பிறகு, தான் கொண்டு வந்த மண்ணெண்ணயை தன்னுடைய உடலில் ஊற்றி எரித்துக் கொள்கிறார். பற்றி எரிந்த தீயிலும் அவர் குரல் ஓயவில்லை. “ஈழ மக்களுக்கு தீர்வு காணவேண்டும். என் தமிழினம் இனியும் வதைபடக்கூடாது” என முழக்கமிட்டு கதறியபடியே எரிந்திருக்கிறார். உடன் கோரிக்கைகளும் சேர்ந்தே எரிய, அப்போதுதான் அங்கே இருந்த மக்களும், காவல்துறை ஊழியர்களும் ஓடி வருகின்றனர். காப்பாற்ற இயலாத வகையில் ஊற்றி கொண்ட மண்ணெண்ணெய் அவரை முழுதும் தின்று விட முயல்கிறது..

 உடல் எரியும் போது கூக்குரல் இட்டு கதறுவதைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒருவன் தனது உடல் எரிந்து கொண்டிருக்கும் போதே கொள்கையையும் கோரிக்கையும் பற்றி பேசுவது என்பது அவனது உள்ள உறுதியையே காட்டுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகிறார். (60% தீக்காயம் அடைந்தவர்கள் இவ்வளவு விரைவாக இறக்கமாட்டார்களே! பிறகு ஏன் இவர் மட்டும் நீண்ட நேரம் உயிருடன் இருக்கமுடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அதிக தீக்காயம் அவர் இதயத்தை சுட்டிருந்ததாம்…)

முத்துக்குமார் (குமரேசன் முத்துக்குமார்) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரை சேர்ந்த 28 வயது இளைஞன். சென்னை கொளத்தூரில் தமது தங்கை வீட்டில் தங்கி “பெண்ணே நீ” என்ற இதழின் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்திருந்தவர்.

2009 காலகட்டத்தில் தமிழீழ உறவுகளை மிகவும் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்துகொண்டிருந்த இலங்கை அரசை எதிர்த்து கேள்வி கேட்காத இந்திய ஏகாதிபத்தியம், வேடிக்கை பார்த்து கொண்டும், ஆயுத உதவி மற்றும் இராணுவ உதவிகளை மறைமுகமாக செய்தும் கொண்டிருந்தது.ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்கவோ, போராட்டங்களை நடத்தி அதை நெருக்கடிக்கு உள்ளக்குவதோ செய்யாமல், மேலோட்டமாகவும் அதே வேளையில் போராட்டங்கள் வலுக்காத வண்ணமே இருந்தது. அருகே கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் தமிழ்பேசும் இனம் விடுதலை பெறுவது என்பதை வல்லரசுகள் ஏற்கவில்லை. எங்கே ஒரு இனம் போர்முனையில் வெற்றி பெற்று விடுதலைக் காற்றை சுவாசித்துவிட்டால் மற்ற போராடும் இனங்களுக்கும் அது வழித்தோன்றலாய் அமைந்து விடும் என்றே ஈழத்தில் தமிழினம் காக்க போராடிய புலிகளை உலகத்தின் கண்களுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்து காட்டியது ஒன்றிய அரசு. அதற்கு உறுதுணையாக சுப்ரமணியன் சாமி போன்ற சில நயவஞ்சக ஆசாமிகளும் தமிழின விரோத இந்து நாளிதழ் ராம் போன்றோரும் முக்கிய பங்கு வகித்தனர். இலங்கையில் நடக்கும் உண்மை நிலவரத்தை மக்களிடம் கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

ஈழ மக்களை ஆயுதங்களால் கொன்றழித்ததோடு நில்லாமல், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி சித்ரவதை செய்தும், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கொன்று குவித்த வேளை அது. தலைவர்களும் அவரரவர் வரம்பிற்கு உட்பட்டு சம்பிரதாய போராட்டங்களை நடத்திகொண்டிருக்க, மனக்குமுறலுடன் உயிரற்ற சடலமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்மக்களை தட்டிஎழுப்பியவர் முத்துக்குமார். மக்களைப் போராட்டக் களத்திற்கு வரவழைக்க நன்கு அறிவுக்கூர்மையுடன் சிந்தித்த முத்துக்குமார் தன்னையே ஈகம் செய்ய துணிந்திருக்கிறார்.

எப்போதுமே தமிழ்நாட்டு மக்களின் சிக்கல்களுக்கு முதலில் போராட்டக்களம் காண்போர் வழக்கறிஞர்களும் மாணவர்களும் தான். அதிகார வர்க்கம் செய்யும் பயங்கரவாதத்திற்கு அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெளிவாக உணர்ந்திருந்த முத்துக்குமார். தனது கடிதத்தில் இவர்களை போன்று அனைத்து தரப்பினருக்குமான மக்களுக்கும் அதாவது வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், வெளி மாநிலத்தவர்கள், சகோதர தேசிய இனங்கள், சிங்கள மக்கள், சிங்கள பத்திரிகையாளர்கள் முதல் அமெரிக்காவின் ஒபாமா வரை என சர்வதேசத்தையும் நோக்கி கேள்விகள் கேட்டுள்ளார் முத்துக்குமார். அரசியல் கட்சி தலைவர்களை நோக்கி அவர் கேட்கும் கேள்விகளைப் பார்க்கும் போது ஒரு எளிய மனிதன் தனக்குள் இருக்கும் கோபங்களையும் உணர்வுகளையும் வெளிப்படையாக போட்டு உடைத்திருப்பது தெளிவாகவே தெரிகிறது.

அவரது கடைசி கடிதம் (மரணசாசனம்) தமிழ் நாட்டு அரசியலையே முற்றிலும் மாற்றியது எனலாம். தமிழரின் நலன்களில் அக்கறையின்றி செயல்படும் கண்துடைப்பு அரசியலையும் தன்னல அரசியலையும் ஆட்டம் காண வைத்தது அந்தக் கடிதம். சில தனிநபர்களின் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவித்த அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தியது. தம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு தமிழ் மக்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் முத்துக்குமார். இந்தியா உடனடியாக தமிழீழத்திலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில் தொடங்கி, ஐ.நா, இலங்கை எனப் பல்வேறு தரப்புகள் மீதான விமர்சனப் பார்வையையும் கேள்விகளாக எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஈழ அரசியலை பேசவைத்தவர் முத்துக்குமார். எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர். “மாணவர்கள் உண்ணாநிலை போரட்டத்தை விடுத்துக் களம் காணுங்கள்” என்று கூறினார். “மாணவர்களே! உங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள், எந்த தலைவர்களின் பின்னாலும் உங்கள் போராட்டத்தை தொடராதீர்கள். அந்த மரபை அடித்து உடைத்து உங்களில் ஒருவனை தலைவனாக்குங்கள்!!” என்றும் முழங்கினார் முத்துக்குமார்.

“ஈழத்து மக்களின் தலைவனை போல் ஒரு உன்னத தலைவன் நமக்கு கிடைக்காதது ஒரு சாபமே!” எனக் கூறியுள்ள முத்துக்குமார் “ஓட்டு அரசியல் கட்சிகள் தேவையில்லை, மக்கள் இயக்கங்களை உருவாக்குங்கள்” என்பதையும் வலியுறுத்தி உள்ளார். மக்கள் அனைவருமே தன்னலமற்ற, அர்பணிப்பு உணர்வோடு போராட முன்வரவேண்டும் என்பதையும் கேட்டு கொள்கிறார்.

உலகமே கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டில் ஒரு அறிவு தீப்பிழம்பு அனைவரின் உணர்வுகளையும் தட்டி எழுப்பியது. அதுவரை தமிழினப் படுகொலையில் அமைதி காத்து வந்த அனைவரையும் முத்துக்குமாரின் கடிதம் உணர்வுரீதியாக உலுக்கியது என்றே நாம் கூறலாம். அவரின் உயிர்த்தியாகம் உலகத்தமிழர் நெஞ்சினில் இனஉணர்வு எனும் கனலை ஏற்றியது.

புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் அவர்கள் “உலகத் தமிழர் வரலாற்றில் வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் நிரந்தர இடத்தைப் பெறுவார்” என்று கூறினார். அவர் கூறியதை போலவே முத்துக்குமாரின் வாழ்க்கைப்பயணம் முடிவுற்றாலும் அவர் மூட்டிய நெருப்பு இன்றும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

இனப்படுகொலை நடந்து 10ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் கூட, இன்றும் தமிழ்நாட்டில் ஈழவிடுதலைக்காக தமிழ்நாட்டு தமிழர்கள் பல்வேறு துரோகங்களுக்கு இடையிலும், பல்வேறு அரசு, அடக்குமுறைகளுக்கு இடையிலும் உறுதியாக நிற்கிறார்களென்றால் அதற்கு முத்துகுமார் மூட்டிய நெருப்பே காரணம். ஈழவிடுதலை என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை சாத்தியமாக்க போராடுவதே நாம் முத்துகுமாருக்கு செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »