தந்தை பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு திருமுருகன் காந்தியின் பதிலடி

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பரப்பும் அவதூறான கருத்துக்களுக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சத்தியம் தொலைக்காட்சிக்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி சனவரி 9, 2025 அன்று அவர்கள் அளித்த நேர்காணல்:

1: சமூக நீதிக்காக பெரியார் போராடவில்லை, ஆனைமுத்து தான் போராடினார் என்று சீமான் ஒரு பேட்டியில் கருத்தை தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே சமூக நீதிக்காகவும் பகுத்தறிவு, சுயமரியாதைக்காகவும் தந்தை  பெரியார் போராடினாரா, இல்லையா?

தோழர் திருமுருகன் காந்தி: ’கம்யூனல் ஜிஓ’ என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி அதற்காக 1919-லிருந்து போராடிய வரலாறு தந்தை பெரியாருக்கு உண்டு. அந்த வகுப்புவாரி உரிமை என்று சொல்லப்படக்கூடிய சமூக நீதிக்கான உரிமைக்காகத்தான் காங்கிரசிலிருந்து அவர் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை அவர் முன்னெடுத்துச் சென்றார். இந்தியா விடுதலை அடைந்ததற்குப் பிறகு, அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு அல்லது சமூக நீதி குறித்தான குழப்பமான பகுதிகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை எதிர்த்து, அந்த அரசியல் சாசனத்தில் திருத்தம் வரவேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி கல்வியில் இட ஒதுக்கீட்டு உரிமை கிடைப்பதற்கு உறுதி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். இதெல்லாம் வரலாற்று பதிவாகவே இருக்கிறது. இது குறித்தெல்லாம் அண்ணல் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் பதிவே செய்திருக்கிறார்கள்.

இந்த போராட்டங்களில் பங்கெடுத்த ஐயா ஆனைமுத்து, பெரியாரினுடைய மறைவிற்குப் பின்பும், பெரியாரினுடைய வழியிலே இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். ஐயா. ஆனைமுத்து அவர்கள் பெரியாரிய பெருந்தொண்டர். அவர் மார்க்சிய, பெரியாரிய, பொது உடைமை கட்சியை நடத்தியவர். அவர் பெரியாரியக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றால் சமூக நீதி கருத்தை பெரியாரிடமிருந்து பெற்றார் என்று தானே அர்த்தம். இதிலிருந்து இந்த மாதிரியான தற்குறித்தனமான கேள்விகளை எழுப்புவதிலே சீமான் வல்லவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2: வள்ளலார், வைகுண்டரைத் தவிர பெரியார் மிகப்பெரிய அளவில் சமூக நீதிக்காக என்ன சாதித்து விட்டார் என்று கேள்வி எழுப்புகிறாரே சீமான்?

பதில் : வள்ளலாரினுடைய காலத்தில் தேர்தல் அரசியலோ, நீதிமன்ற கட்டமைப்புகளோ, பள்ளிக்கூட கட்டமைப்புகளோ, மக்கள் அமைப்புகளாக திரளலாம் என்கின்ற அனுமதிகளோ இல்லாத காலகட்டம். அத்தகைய காலகட்டத்தில் வள்ளலார் இயங்கி இருக்கின்றார். இப்படியான அரசு கட்டமைப்புகள் உருவான காலகட்டத்தில், இந்த கட்டமைப்பிற்குள்ளாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழ்நிலையை மாற்றுவதற்காக தந்தை பெரியார் இயங்கினார். இரண்டு பேருடைய காலகட்டமும் வேறு வேறாக இருக்கிறது என்பது குறித்தான புரிதல் கூட இல்லாதவர்தான் திரு சீமான். வள்ளலார் ஆரியத்திற்கு எதிராக இந்து மதத்தினுடைய கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர். அவருடைய கருத்துக்களையும் தந்தை பெரியார் அவர்கள் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. இருவருடைய காலகட்டமும் வேறு வேறு.

ஆகவே தந்தை பெரியார் அவர்கள் இந்த போராட்ட காலகட்டத்தில் அரசியல் கட்சிகள், தேர்தல் கட்டமைப்புகள், நீதிமன்ற கட்டமைப்புகள், பள்ளிக் கட்டமைப்புகள், மருத்துவமனை கட்டமைப்புகள் என்ற இந்த நிர்வாக கட்டமைப்பிற்குள்ளாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருக்கிறது, பார்ப்பனர்கள் இந்த நிர்வாக கட்டமைப்பிற்குள்ளாக பிற சாதி மக்களை நுழைய விடாமல் தடுக்கிறார்கள் என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லியவர் தந்தை பெரியார். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி இந்த இடங்களில் நுழைவதற்காக, இந்த இடங்களில் பிற சாதியைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கான இடங்களை பெறுவதற்காக போராடி உரிமை பெற்றுக் கொடுத்தார் தந்தை பெரியார் அவர்கள். இந்த வரலாறே  தெரியாதவர், இது குறித்து எதுவுமே வாசிக்காதவர் திரு சீமான். அவர் வள்ளலார் குறித்தே வாசித்திருக்க மாட்டார். வள்ளலாருடைய திருமுறையைப் பற்றி கேட்டால், அவர் வாயிலிருந்து எதுவும் வராது.

 3. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள் என்று பெரியார் கூறியிருக்கிறார் என்று சீமான் ஒரு கருத்து சொல்கிறாரே?

பதில் : ’இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எதிரி’ என்று சீமான் தனது கட்சி அறிக்கையில் கூறியிருக்கிறார், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் எதிரிகள் அவர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று கூறியவர் திரு. சீமான். அது அறிக்கையாக, ஆவணமாக இருக்கிறது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தந்தை பெரியாரோடு சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது வரலாறு. அவர்களை அவர் எதிரியாக நடத்தவில்லை. இந்த மக்கள் இந்து மதத்தில் இருந்த கொடுமையின் காரணமாக, இந்து மதத்திலிருந்து வெளியேறி மற்ற  மதங்களிலே சேர்ந்தார்கள் என்பதை தந்தை பெரியார் அவர்கள் பேசியிருக்கின்றார்கள்.

அவர் அனைத்து மதங்களிலும் இருக்கக்கூடிய குறைபாடுகளை விமர்சித்தார். அவர் எந்த மதத்தின் குறைபாடுகளையும் ஏற்றுக் கொண்டவர் அல்ல. குறைபாடு என்று வந்துவிட்டால் அது எந்த மதமாக இருந்தாலும் அதை விமர்சிக்கக் கூடியவராக தந்தை பெரியார் இருந்தாரே ஒழிய எந்த தனி மனிதனுக்கும், எந்த மத நம்பிக்கை கொண்டவருக்கும் எதிரானவராக தந்தை பெரியார் அவர்கள் இல்லை. எனவே சீமான் கூறுவது முழுக்க முழுக்க கடைந்தெடுத்த பொய். ஆனால் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள் என்றும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் ’சாத்தானின் பிள்ளைகள்’ என்று சொன்னவர் திரு. சீமான். ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே இப்படி பேசியவர் திரு. சீமான். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களும் எதிரிகளாக தனது ஆவணங்களிலே பதிவு செய்தவர் திரு. சீமான்.

4. அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளுக்கும் தந்தை பெரியார் சிந்தனைகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது, அம்பேத்கரின் சிந்தனை கருத்துக்கள் அனைத்தும் வேறு, தந்தை பெரியாரின் சிந்தனை கருத்துக்கள் அனைத்தும் வேறு, இருவரையும் ஒப்பிடவே முடியாது என்று புதுச்சேரியில் நடைபெற்ற அந்த பேட்டியில் சீமான் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அவர்களின் சிந்தனைகளும், நோக்கமும் வேறு வேறா?

பதில் : அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், பெரியார் அவர்களையும் ஒப்பிடுவதற்கு அண்ணல் அம்பேத்கரையும் படித்திருக்க வேண்டும், தந்தை பெரியாரையும் படித்திருக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் சீமானிடம் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்ன கருத்துக்களை ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருந்தால் சீமான் உளறியிருப்பார். ஏனெனில் அவர் அண்ணல் அம்பேத்கர் கருத்துக்களை படித்தவர் இல்லை, தந்தை பெரியாரினுடைய கருத்துக்களையும் படித்தவர் இல்லை. வாய்க்கு வந்ததை உளறக்கூடியவர் சீமான். 

அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும்  இணைந்து பணியாற்றிய ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றன. உதாரணமாக மனுஸ்மிருதியை குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன ஆய்வு செய்திருந்தாரோ, அதே போன்ற கருத்துக்களை தந்தை பெரியார் அவர்களும் பதிவு செய்திருக்கின்றார். இந்து மதம் குறித்து தந்தை பெரியார் அவர்கள் எதை பேசியிருந்தாரோ, அதே கருத்துக்களை அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஆய்வு அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். பெண் விடுதலை குறித்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எந்த கருத்துக்களை முன்வைத்து அமைச்சரவையில் இருந்து பதவி விலகினாரோ அந்த பெண் உரிமைகளை குறித்து தொடர்ச்சியாக பேசி வந்தவர் தந்தை பெரியார் அவர்கள். ஆக இருவரினுடைய கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக இணைந்து செயல்பட்டவை என்பதை அண்ணல் அம்பேத்கரை படித்தவர்களுக்கும், தந்தை பெரியாரை படித்தவர்களுக்கும் தெரியும். இரண்டையும் படிக்காத கல்வி அறிவு இல்லாதவரைப் போலத்தான் திரு. சீமான் அவர்கள் பேசுவார்.

பத்திரிக்கையாளர் “அண்ணல் அம்பேத்கர் என்ன சொன்னார், என்ன புக் எழுதினார்?” என்று ஒரு வார்த்தை கேட்டாலோ, அண்ணல் அம்பேத்கர் என்னென்ன டிகிரி எல்லாம் படிச்சிருந்தார் என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சீமான் உளறிக் கொட்டியிருப்பார். அவருக்கு அதெல்லாம் தெரியவே தெரியாது. அவர் அண்ணல் அம்பேத்கரையும் படித்தது கிடையாது, தந்தை பெரியாரையும் படித்தது கிடையாது.

5: திருவள்ளுவர் மீது தந்தை பெரியார் தொடர்ந்து பல்வேறு அவதூறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் என்றும், திருவள்ளுவரை இகழ்பவரை நாம் ஏற்க இயலுமா என்ற கேள்வியும் வைத்திருக்கிறாரே சீமான்?

பதில்: திருக்குறள் குறித்த தந்தை பெரியாரின் நிலைப்பாடு குறித்து பலமுறை கூறிவிட்டோம். திருக்குறளுக்காக மாநாடு எடுத்தவர் தந்தை பெரியார். 1949-லே மாநாடு எடுத்துக் கொண்டாடியவர். தமிழர்களினுடைய அறநூலாக திருக்குறளை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர்களுடைய மதம் ‘வள்ளுவ மதம்’ என்று சொல்லுங்கள் எனக் கூறியவர் தந்தை பெரியார். இதெல்லாம் ஆவணமாகவே இருக்கிறது.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கட்சி ஆரம்பித்த இந்த 15 ஆண்டுகளில், சீமான் திருக்குறளுக்காக, திருவள்ளுவருக்காக என்றாவது மாநாடு நடத்தி இருக்கின்றாரா? என்றாவது அதற்காக அவர் புத்தகம் போட்டு இருக்காரா? அல்லது பத்து திருக்குறளை ஒன்றாக சொல்லி இருக்கிறாரா? அல்லது மேடைகளில் திருக்குறளைப் பற்றி, திருவள்ளுவரைப் பற்றி என்றாவது பேசியிருக்கிறாரா அல்லது இந்துத்துவவாதிகள் திருவள்ளுவர் சிலை மேல் காவி சாயத்தை ஊற்றி, திருவள்ளுவருக்கு பட்டை நாமத்தைப் போட்டு காவி உடையை அணிவித்தபொழுது, அதற்கு எதிராக போராடி இருக்கிறாரா? அப்பொழுது சீமானுக்கு ஏதாவது கோவம் வந்திருக்கிறதா? எதுவும் கிடையாது. ஆகவே ’சீமான் ஒரு தற்குறி’ என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சீமான் திருக்குறளையும் படித்ததில்லை, திருக்குறள் குறித்தான போராட்ட வரலாறுகளும் திரு சீமானுக்கு தெரியாது. திருக்குறளை தந்தை பெரியார் அவர்கள் ஊர் ஊராக கொண்டு சென்றதும் திரு. சீமானுக்கு தெரியாது. திராவிட இயக்கத்தவர்கள் திருக்குறளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றவர்கள். இந்த வரலாறு எல்லாருக்கும் தெரியும். எங்கள் குடும்பத்திலேயே என்னுடைய சிறிய தாத்தா தந்தை பெரியாரோடு இருந்தவர். அவர் திருக்குறள் அறிஞர். எனவே இது குறித்து எங்களுக்கு நேரடியாகவே தெரியும். இதெல்லாம் எதுவுமே தெரியாத ஒரு நபர்தான் திரு. சீமான்.

6: இந்த தமிழ்த்தாய் உங்களை படிக்க வைத்தாளா என்றும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும் பெரியார் சொன்னதாக சொல்கிறார். ஏற்கனவே பலமுறை அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அவர் கூறுகிறார். மொழி ரீதியான ஒரு கருத்தியலைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ் தேசிய அரசியலையும் புறந்தள்ளி அவதூறாக பேசியிருக்கிறார் என்று கூறுகிறார்.  தமிழ் மொழி தொடர்பான கருத்துக்களை மிகவும் விமர்சனப்பூர்வமாக தந்தை பெரியார் பலமுறை முன்வைத்திருக்கிறார். சீமான் மீண்டும் அதை முன்னிறுத்துறார். தமிழ் மொழிக்கு உண்மையிலேயே பெரியார் ஒரு எதிரியாக இருந்திருக்கிறாரா?

பதில் : முதலில் சீமான் தமிழறிஞராக புலவரா, தமிழ் ஆய்வறிஞரா? திரு. சீமானுக்கு முதலில் தமிழ் மொழியைப் பற்றி என்ன அறிவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அவர் தமிழ் மொழி படித்தாரென்று சொன்னால் தமிழ் குறித்து, தமிழ் மொழியினுடைய வளமை குறித்து, தமிழ் இலக்கிய மரபுகள் குறித்து, தமிழனுடைய இலக்கண மரபுகள் குறித்து, அதனுடைய செவ்வியல் சிறப்புத் தன்மை குறித்து, ஒரு இலக்கிய ஆய்வாக என்றைக்காவது  சீமான் ஏதாவது ஒரு மேடையிலே பேசியிருக்கிறாரா? அப்படி எதுவுமே கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் வெளிப்படையாக இது குறித்தெல்லாம் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் தமிழ் மொழியைக் குறித்து பேசியவை எல்லாம் வெளிப்படையான ஆவணமாகவே இருக்கிறது. தந்தை பெரியார் தமிழ் மொழி சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார். இன்றும் கூட சீமானுடைய நெருங்கிய நண்பர்களாக இருக்கக்கூடிய பாஜகவினர் சமஸ்கிருத மொழியை சேர்த்துத் தான் தமிழ் மொழியை பேசுகிறார்கள். தமிழ் மொழியைக் கூட சமஸ்கிருத வார்த்தைகளோடு பேசுகின்ற பழக்கத்தை பாரதிய ஜனதா கட்சியினர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தோடு இருக்கக்கூடிய மணிப்பிரவாள நடையிலே பலர் பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்த பொழுது, அந்த மொழி நடையில் பலர் பேசிக் கொண்டிருந்த பொழுது, சமஸ்கிருதம் கலக்காத வடமொழி கலக்காத தூய தமிழ் மொழியில் தனது பத்திரிக்கையை நடத்தியவர் தந்தை பெரியார். இதெல்லாம் ஆவணமாக விடுதலைப் பத்திரிக்கையையோ, குடியரசையோ எடுத்து பார்த்தாலும் தெரியும். அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் எடுத்து பார்த்தால் அது சமஸ்கிருத மொழி கலப்போடு இருக்கக்கூடிய பத்திரிகை கலவையாக, மணிப்பிரவாள நடை என்று சொல்லக்கூடிய அந்த சமஸ்கிருத பாதிப்போடு சமஸ்கிருத ஆதிக்கத்தோடு இருக்கும். அந்த மொழிநடையை நிராகரித்துவிட்டு தூய தமிழ் மொழியிலே இதழ் நடத்திய தந்தை பெரியாரைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு சீமானுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

7. திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ் தலைவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டார்கள். அதனால்தான் நாங்கள் இப்பொழுது ஒட்டுமொத்தமாக திராவிடத்தை எதிர்க்க வேண்டிய, ஒழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். திராவிட இயக்க அரசியலில் தமிழ் மொழிக்காக  போராடிய தமிழர்கள் உள்ளிட்டோரை திராவிட இயக்கங்கள் உண்மையிலேயே புறக்கணித்திருக்கிறதா?

பதில்: ”இந்தி ஒழிக; தமிழ் வாழ்க” என்று போராடிய திராவிட இயக்கத்தை பார்த்து அவர் இந்த கேள்வி கேட்கிறார். பெரியார் 1938 -39 இல் ஆரம்பித்து இந்திக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தாளமுத்து நடராசனில் ஆரம்பித்து, கீழ்ப்பழுவூர் சின்னச்சாமியிலிருந்து, பெரும் பட்டியலே திராவிட இயக்கத்திலிருந்து தமிழ் மொழிக்கான போராட்டத்திலே பங்கெடுத்தவர்கள் இருக்கிறார்கள். அதற்கான பெரும் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்திய சிறை சென்றார்கள். சிறையிலேயே மடிந்தார்கள். இதற்கான பெரும் பட்டியலே திராவிட இயக்கத்திற்கு இருக்கிறது.

தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தினால், அன்பினால், பாசத்தினால், அதன் மீதான பேரார்வத்தின் காரணமாக திராவிட இயக்கத்தினர் சங்க இலக்கியங்களை மேடைகளிலே பேசினார்கள். சிலப்பதிகாரத்தை மேடையிலே பேசினார்கள். தமிழுடைய இலக்கிய செழுமையை மேடையிலே பேசியவர்கள் திராவிட இயக்கத்தவர்களைத் தவிர வேறு யார்  பேசியிருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர் அந்த காலத்திலே பேசியிருக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் மொழியை இது போன்று வேறு ஏதேனும் இயக்கத்தை சார்ந்தவர்கள் பேசியிருக்கிறார்களா? திராவிட இயக்கத்தவர் தான் தமிழ் மொழியினுடைய சிறப்பைக் குறித்தும், தமிழ்நாட்டினுடைய சிறப்பைக் குறித்தும், தமிழருடைய பெருமையைக் குறித்தும் மேடைதோறும் பேசியவர்கள். இதெல்லாம் ஆவணப் பூர்வமாக நம் கண் முன்னே நடந்த வரலாறு. இதை திரித்து பேசுகின்ற காரணத்தினால் சீமானுக்கு லாபங்கள் கிடைக்கும் என்பது மட்டும்தான் உண்மையாக இருக்க முடியுமே தவிர வேறு ஒன்றுமே கிடையாது. பிஜேபிகாரர்களிடம் இருந்து வாங்கித் தின்ன இப்படி பேசுகிறார்.

8: தந்தை பெரியார் போராளியா அல்லது வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டோர் போராளியா என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று சீமான் கூறியிருக்கிறார். தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை முன்னிறுத்தாமல் பெரியாரை மட்டுமே முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்கிறாரே?

பதில் : முதலில் சீமானை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது திராவிட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்றால் அதிமுக, திமுகவிற்கு பெருமளவில் வாக்களித்து அவர்கள் ஏன் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்? ஒரு கவுன்சிலர் ஓட்டு கூட வாங்குவதற்கு வக்கற்றவராக திரு. சீமான் இருக்கிறார். இதுதான் இன்றைய நிலைமை.

ஐயா. வ.உ.சி அவர்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டவர். பெரியாரைக் குறித்து ஐயா. வ.உ.சி அவர்கள் நேரடியாகப் பேசியிருக்கிறார். வ.உ.சி அவர்களுடைய போராட்ட காலகட்டம் என்பது பெரியாரினுடைய காலகட்டத்திற்கு முந்தையது. 1905-லேயே அவர் தூத்துக்குடி கோரல் மில் போராட்டத்தில் ஆரம்பித்து அங்கே கப்பல் விடுவதிலிருந்து தொடர்ச்சியான போராட்ட காலகட்டத்தை முன்னால் நின்று நடத்தியவர். அப்படிப்பட்ட ஒரு பின்னணி வ.உ.சி அவர்களுக்கு இருக்கிறது. பெரியாரினுடைய காலகட்டம் அதற்கு பின்னால் வருகிறது. பெரியாரும் வ.உ.சி அவர்களும் சேர்ந்து பயணித்திருக்கிறார்கள், சேர்ந்து பேசியிருக்கிறார்கள். இது குறித்தான பல்வேறு கருத்துக்களை ஐயா. வ.உ.சி அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். வ.உ.சி-யே பெரியாரை ஏற்றுக்கொண்டு பேசியிருக்கின்றார். அதனால் இது ஏதோ புதிதாக இவர் இருக்கிறாரா, அவர் இருக்கிறாரா என்று துண்டு துண்டாக பேசுவது என்பதும், சீமான் முதலில் அறிவு இல்லாத அது குறித்தான வாசிப்பு இல்லாத தன்மை. இரண்டாவதாக அக்கறையற்ற தன்மை. மூன்றாவது பாஜகவிற்காக கூஜா தூக்குகின்ற ஒரு வேலை.

அவர் ரஜினியை சந்தித்தது எதற்காகவென்றால், பாஜகவோடு நெருக்கமாக போவதற்காகத்தான் சந்தித்திருக்கிறார். ரஜினி அரசியலிலே தொடர்பு இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் ரஜினிக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். பாஜக-வை நேரடியாக சந்திப்பதிலே அவருக்கு சிக்கல் இருக்கிறது. தனது முகமுடி கழண்டுவிடும் என்கின்ற காரணத்தினால், அவர் நேரடியாக சென்று முதலில் ரஜினியை சந்தித்திருக்கின்றார். ரஜினியை சந்தித்ததற்கு பிறகு அவர் என்னவெல்லாம் செய்தார்?

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிராக பேசுகிறார். இதுவரை நான்கு வருடமாக திமுகவுக்கு எதிராக எந்தப் பெரிய போராட்டத்தையும் செய்யாதவர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் குறித்தான போராட்டத்திற்காக முதல் முறையாக வெளியிலே வருகின்றார். அதேபோல அவர் பாரதியாருக்கு விழா எடுக்கின்றார். இப்படியாக படிப்படியாக பாரதிய ஜனதா கட்சியினுடைய சார்பில் நின்று பேசத் தொடங்குகிறார். இப்போது தந்தை பெரியாரை இழிவுபடுத்துகின்ற விசயத்தைப் பேசியிருக்கிறார்.

நீங்கள் கேட்ட எட்டு கேள்விக்கும் பதில் தெரியாத ஒரு தற்குறியாகத்தான் திரு சீமான் இருக்கிறார். இந்த கேள்விகளுக்கான பதில்கள் சாதாரணமாக திராவிட இயக்கத்தை கவனித்தவர்களுக்கே தெரியும். ஆனால் இது கூடத் தெரியாமல் ஒரு கட்சித் தலைவராக இத்தனை வருடம் எப்படியிருந்தார் என்பதுதான் தெரியவில்லை. மீதியுள்ள இரண்டு கேள்வியும் கேளுங்கள், அவரது அறியாமையை இன்னும் நாம் புரிந்து கொள்ளலாம்.

9: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு முன்பு வரை நான் திராவிட இயக்க சிந்தாந்த ஆதரவாளராக இருந்தேன். அதற்கு பின்னர்தான் தமிழர் தேசம், தமிழ் தேசிய அரசியல் என்பது பித்தலாட்டம் என்று தந்தை பெரியார் கூறியதை நான் புரிந்து கொண்டேன். அதற்குப் பின்னர்தான் நான் திராவிட அரசியலுக்கு எதிரான நிலையை எடுத்தேன். நான் படித்து கற்றுணர்ந்து தெரிந்து கொண்டேன். இப்போது தமிழ் தேசிய அரசியலில் பெரியாரை முதல் எதிரியாக பார்க்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்? இது குறித்து உங்கள் கருத்து?

பதில்: அவருக்கும் ஈழ அரசியலுக்கும் எந்த தொடர்பு இல்லை. தமிழினத்திற்கு அவரை இங்கிருந்து அனுப்பியவர்கள் பெரியாரிய தோழர்கள், பெரியாரிய தலைவர்கள் தான். தோழர். கொளத்தூர் மணி போன்றவர்கள்தான் அவரை இங்கிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். இதுதான் வரலாறு. அவருக்கு விடுதலைப் புலிகளோடு எந்த தொடர்பும் இல்லை. விடுதலைப் புலிகளுக்காக இங்கே பணியாற்றியவர்கள் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்களும் பெரியாரிய தோழர்களும்தான். அவர்கள்தான் திரு. சீமானை இங்கிருந்து அனுப்புகிறார்கள். அங்கே திரைப்படம் எடுப்பதற்கு பயிற்சி கொடுப்பதற்காக சென்றிருக்கின்றார். இதுதான் அங்கு நடந்தது. இது போல நிறைய பேர் அங்கு போயிருக்கார்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டினுடைய ஓவியர் ஐயா. மருது அவர்கள், மிகச்சிறந்த கவிஞர். இன்குலாப் போன்றவர்கள் தேசிய தலைவரை நேரடியாக சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் எல்லாம் இருக்கின்றன. அந்த உரையாடலே பதிவாகவே இருக்கின்றது. சீமான் தேசிய தலைவரோடு பேசிய எந்த உரையாடல் பதிவும் விடுதலைப் புலிகள் இதுவரை வெளியிடவில்லை. விடுதலைப் புலிகள் சீமானை பார்த்துப் பேசி அங்கீகரித்தனர் என்று எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் பேசவும் இல்லை, சொல்லவும் இல்லை. பல நூற்றுக்கணக்கான பேர் தேசிய தலைவரை சந்தித்திருக்கிறார்கள். ஈழத்திலே ஒரு தேசிய தலைவரை சந்திப்பது என்பது சாமானியர்களாலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான். அவர் ஒன்றும் இங்கே இருக்கக்கூடிய, இந்தியாவில் இருக்கக்கூடிய கட்சித் தலைவர்கள் மாதிரி யாரையும் சந்திக்க மாட்டோம் என்று சொல்வதில்லை. எளிய மனிதர்களும் அவரை சந்திக்கக்கூடிய வகையில் எளிய மக்களின் தலைவராக இருந்தவர். அப்படித்தான் இவர் சந்தித்திருக்கிறார், புகைப்படம் எடுத்திருக்காரே தவிர, அதைத் தாண்டி வேறு ஒன்றுமே கிடையாது. இவருக்கும், ஈழத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது குறித்து எந்தப் புரிதலும் இவருக்கு கிடையாது.

10. சீமான் சர்ச்சைக்குரிய வகையில் தந்தை பெரியார் பற்றி ஒன்று சொல்லி இருக்கிறார். தாய், மகள் உறவு தொடர்பாக, யாரும் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் ஒரு கருத்தை பெரியார் சொல்கிறாரே, அப்படி கூறிய ஒருவரை நாம் எவ்வாறு மதிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: முதலில் தந்தை பெரியார் அப்படி சொல்லவில்லை. அப்படி சொன்னதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை சீமான் தரவில்லை. தாய் மற்றும் மகளோடு உறவு கொள்ளலாம் என்பது சீமானுடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். இதை அவர் தந்தை பெரியாரின் பேரிலே அவதூறாக முன்வைக்கிறார். இந்த விருப்பம் சீமானுடைய தனிப்பட்ட விருப்பமே. அப்படியாகத்தான் பார்க்க முடியும். தந்தை பெரியார் உயிரோடு இல்லாத இப்பொழுது, அவர் சொல்லாத ஒன்றை அவர் பெயரில் சொல்கிறார். இது தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக சீமான் சொல்லுகிறார். அந்த அளவு சீரழிவான ஒரு பண்பாட்டுக்கு சொந்தக்காரராக திரு. சீமான் இருக்கிறார்.

சீமான் மீதான பெண்களின் குற்றச்சாட்டு என்பது அனைவரும் அறிந்ததுதான். அதனால் புதிதாக பேச வேண்டுமென்று அவசியம் இல்லை. சீமானுடைய தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால், சீமானிடத்திலே  பெண்கள் கவனத்தோடு இருப்பது நல்லது.

நெறியாளர் கேள்வி: இன்று இதே கேள்விகள் தொடர்பாக  புதுச்சேரியில் செய்தியாளர்கள் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் அதை சீமானுக்காக வெளியிடுவோம் என்று கூறியிருப்பதும், மேலும் சீமான் அந்த ஆதாரங்கள் எங்களிடம் இல்லை, பெரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படவில்லை, அதனால் அந்த ஆதாரங்கள் அவர்களிடம்தான் இருக்கிறது, அவர்கள்தான் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்களே. இது சரியான பதிலா ?

பதில் : குடியரசு இதழை அப்படியே படியெடுத்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. மொத்த இதழ்களுமே பதிப்பாக வெளியில் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் எடுத்து பார்க்கலாம், அதற்கு யாருக்கும் தடையெல்லாம் இல்லை. ஆகவே வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல இவர் சீமானுக்கு ஆதரவாக  வரும்போது தெரியவில்லையா? இரண்டு பேருக்குமான கள்ளக்கூட்டு என்பது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. பிஜேபிக்கு ஏன் பெரியாரை பிடிக்காது என்றால், தந்தை பெரியார் ”அவர்கள் வடநாட்டானுடைய ஆதிக்கம், வட இந்தியனுடைய ஆதிக்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்று தெள்ளத்தெளிவாக வெளிப்படையாகப் பேசியவர். தனது இறுதி உரையில் கூட வடநாட்டானின் ஆதிக்கத்தின் கீழ் உங்களை விட்டுச் செல்கிறேன் என்கின்ற ஆற்றாமையோடு நான் இருக்கிறேன்” என்று அவர் பேசினார்.

வடநாட்டானுடைய கட்சிதான் பிஜேபி. அது தமிழ்நாட்டானுடைய கட்சி அல்ல. ஆகவே வடநாட்டானுக்கு தந்தை பெரியாரைப் பிடிக்காது. தந்தை பெரியார் மீது அவனுக்கு வெறுப்பு உண்டு. அப்படிப்பட்ட கட்சியினுடைய தலைவராக, வட நாட்டானுக்கு அடிமையாக இருக்கக்கூடிய அண்ணாமலை சீமானுக்கு ஆதரவாக வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வடநாட்டானுக்கு இரண்டு அடிமைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒன்று, அண்ணாமலை. இன்னொன்று திரு. சீமான். இந்த இரண்டு அடிமைகளும் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகின்ற முயற்சியை தொடர்ச்சியாக செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு புரிகின்ற வழியிலே தமிழ்நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள் என்பதுதான் நிதர்சனம்.

சீமானின் பத்து கேள்வியுமே புரட்டல், பத்து கேள்வியும் பொய்யாக இருக்கிறது, எந்த அறிவும் இல்லாதது. பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு தெரிந்த விவரங்களை, வரலாறுகளை கூட தெரியாத ஒருவர் தமிழ்நாட்டிலே நான் ஆட்சி அமைப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவரை நம்பி ஓட்டு போடக்கூடிய அந்த இளைஞர்களை பார்த்துதான் எனக்கு மிக வருத்தமாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஆகவே இதுபோல ஒரு புரட்டல்வாதியை தயவு செய்து தமிழர்கள் நிராகரிக்க வேண்டும். திராவிட ஒழிப்பு என்று சொல்லிவிட்டு இரட்டை இலைக்காக மூன்று தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்தான் திரு. சீமான்.

இப்படிப்பட்ட ஒரு நபர் ஒரு பக்கம் திராவிடத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு, அந்த பக்கம் போய் அதிமுக ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்று கொண்டிருந்தார். எடப்பாடியார் நல்ல ஆட்சி கொடுத்தாரென்று சொன்னார். இரட்டை இலைக்காக ஓட்டு கேட்டு ஊர் ஊராக போனவர். இந்த மாதிரியான இரட்டைத்தன்மை கொண்டவர், இரட்டை நாக்கை கொண்டவர். இப்படியான ஒரு அரசியல்வாதியை தமிழ் மக்கள் கண்டுணர வேண்டும். இது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை காக்க முடியும்.

தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கான இறையாண்மை குறித்து பேசுவது, தமிழ் தமிழர்களுக்கான உரிமை குறித்து பேசுவது. டெல்லி அரசாங்கத்தில் இருந்து தமிழர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றே தமிழ் தேசியம் சொல்லுகிறது. இதைத்தான்  தோழர். தமிழரசன், புலவர். கலியபெருமாள், ஐயா பெருஞ்சித்தனார் போன்றவர்கள் தொடர்ச்சியாகப் பேசியும், எழுதியும், போராடியும் வந்தார்கள். அதற்கான படைகட்டி அதற்காக களத்தில் மாண்டும் போனார்கள். இப்படிப்பட்ட ஒரு வரலாறு தமிழ் தேசியத்திற்கு இருக்கிறது.

பிரபாகரன் அவர்கள் சிங்களத்திலிருந்து விடுதலை பெற்று தமிழருக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடியவர். அதுதான் தமிழ் தேசியம். இங்கே அண்ணாமலையிடம் கொஞ்சி குலாவி, ரஜினியிடம் கெஞ்சி பிச்சை எடுத்து, ஆளுநரிடத்திலே மண்டி போட்டு, டெல்லிக்காரனிடத்திலே கூழை கும்புடு போட்டு அரசியல் செய்வதெல்லாம் தமிழ் தேசியம் அல்ல, அது பித்தலாட்ட அரசியல். அதைத்தான் சீமான் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசுவது தமிழ் தேசியம் அல்ல. அவர் முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான அரசியலை, தமிழர் துரோக அரசியலை செய்து வருகிறார்.

பத்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள். 10 கேள்விக்கும் நான் பதில் சொல்லி இருக்கிறேன். என்னுடைய கேள்விக்கு முடிந்தால் திரு. சீமான் பதில் சொல்லட்டும், பார்ப்போம். அப்படி பதில் சொல்வதற்கான நேர்மையும் துணிச்சலும் அவருக்கு ஒருபொழுதும் இருக்காது,  வேண்டுமானால் நான் இந்த சமயத்திலே சத்தியம் தொலைக்காட்சி வழியாக சொல்லிக் கொள்கிறேன். திரு. சீமான் அவர்களே, உங்களுக்கு என்னவெல்லாம் பெரியாரை பற்றி சந்தேகம் இருக்கிறதோ, அதை எடுத்துக்கொண்டு வாருங்கள். மேதகு பிரபாகரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ, அதை எடுத்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தீர்கள் என்பதை நான் அம்பலப்படுத்துகின்றேன். ஈழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிங்களத்திற்கு ஆதரவாக நீங்கள் செய்த ஒவ்வொரு நகர்வையும் ஆதாரப்பூர்வமாக  வெளிப்படுத்துவதற்கு நாங்கள் (மே 17) தயாராக இருக்கிறோம். சீமான் வெளிப்படையாக வரட்டும். ஒரு பொது மேடைக்கு வரட்டும்.

சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நீங்கள் ஒரு மேடை அமையுங்கள். 2009க்கு பிறகான இந்த 15 வருடத்தில் திரு. சீமான் சிங்களவர்களுக்கு ஆதரவாக, ராஜபட்சேவுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களுக்கு எதிராக, என்னென்ன அரசியலை தமிழ்நாட்டில் செய்தார், அது எந்த காலகட்டத்தில் நடந்தது, எந்த மாதத்தில் நடந்தது, எந்த வருடத்தில், முடிந்தால் எந்த தேதியில் நடந்தது, எந்த இடத்தில் நடந்தது என்பதை மே 17 இயக்கம் சொல்லுவதற்கு தயாராக இருக்கிறது. வெளிப்படையாக நான் இந்த சவால் விடுகின்றேன். திரு. சீமான் இந்த 15 ஆண்டுகளில் சிங்களவர்களுக்கு ஆதரவாக, ராஜபட்சேவுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஈழத்திற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட அத்தனை அரசியலையும் நாங்கள் பட்டியல் போட்டு, தேதி வாரியாக, நாள்வாரியாக, வருட வாரியாக, மாதவாரியாக, சம்பவம் நடந்த இடங்கள் வாரியாக சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

துணிச்சல் இருந்தால், நேர்மை இருந்தால், சீமான் இது குறித்து பொது மேடையில் பேசுவதற்கு வரட்டும். நாங்கள் அம்பலப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்

சீமானின் பச்சை பொய்களை அம்பலப்படுத்திய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »