‘மிகப்பெரும் சனநாயக நாடு’ என்று மார்தட்டிக்கொள்ளும் நவீன இந்திய ஒன்றியத்தில், கும்பல் வன்முறைகளும் பெண்கள் மீதான வன்முறைகளும் பெருகிவருகின்றன. இதில் சாதிய ரீதியான வன்முறைகளில் பெண்களின் உடல் மீதான வன்முறை முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பாக, இந்திய ஒன்றியத்தில் இருக்கும் பெண்களின் மொத்தத் தொகையில் கிட்டத்தட்ட 16% இருக்கும் தலித் பெண்கள் பாலியல் ரீதியிலான வன்முறைகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவராக இருக்கிறார்கள்.
ஆண்டு | பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை |
2022 | 4,45,256 |
2021 | 4,28,278 |
2020 | 3,71,503 |
2019 | 4,05,326 |
2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4% அதிகரித்துள்ளன என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) டிசம்பர் 4, 2023 அன்று வெளியிட்டுள்ளது. அதல் தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 65.4% ஆகவும், குற்றப்பத்திரிகையில் 75.9% ஆகவும் உள்ளது. பாலியல் படுகொலை, பாலியல் வன்முறைகள், வரதட்சணை மரணங்கள், ஆசிட் தாக்குதல்கள், ஆசிட் தாக்குதல் முயற்சி, கணவர் அல்லது அவரது குடும்பத்தினரால் கொடுமைப்படுத்துதல், பெண்களைக் கடத்தல் மற்றும் கடத்த முயற்சித்தல், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல், சைபர் குற்றங்கள் ஆகியவை கணக்கிடப்பட்ட குற்றங்களாக வெளியிடப்பட்டன. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்றங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.
மாநிலம் | 2022 | 2021 | 2020 |
உத்திரப்பிரதேசம் | 65,743 | 56,083 | 49,385 |
ராஜஸ்தான் | 45,058 | 40,738 | 34,535 |
மகாராஷ்டிரா | 45,331 | 39,526 | 31,954 |
மேற்கு வங்கம் | 34,738 | 35,884 | 36,439 |
2022 ஆண்டில், மொத்த வழக்குகளில் பட்டியலினப் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக 57,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2021 ஐ விட 13.1% அதிகரிப்பைக் காட்டுகிறது (50,900 வழக்குகள்). இதில் இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றி ஆட்சி நடக்கும் உத்திரப்பிரதேசம் 15,368 வழக்குகளுடன் உள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆக இந்தியாவில் பட்டியல் சாதியினர் அல்லது தலித்துகளுக்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைப் பதிவு செய்வதில் பாஜக ஆளும் மாநிலம் மீண்டும் முன்னிலை வகிக்கிறது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகின்றது.
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் சதவீதம், அதிகாரப்பூர்வ கணக்கின்படியே கடந்த 10 ஆண்டுகளில் 44% அதிகரித்திருக்கிறது. இது பதிவு செய்யப்பட்ட புகார்களின் கணக்கு மட்டும்தான். குழந்தைகள் மீது (18 வயதுக்கு குறைவானவர்கள்) நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை பற்றியான புகார்களை சாதிவாரியாக தேசியக் குற்றப்பதிவு ஆணையம் வெளியிடுவதில்லை என்பதையும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெரும்பாலான தலித் பெண்கள், 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தலித் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் 80% பாலியல் வன்முறை, உயர்சாதியினரால் நடத்தப்படுகிறது என்று ’Swabhiman Society’ என்ற ஆய்வுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2009 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அரியானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 90%-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராவது உயர்சாதியைச் சேர்ந்தவர் என்றும் இந்த ஆய்வில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாதியும் – பாலியல் வன்முறையும்:
இந்திய ஒன்றியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பரவியிருக்கும் சாதிய-வர்க்க ரீதியாக வேரூன்றிய பாகுபாடு என்பது பெண்களின் குறிப்பாக தலித் பெண்களின் உடல் மீது செலுத்தப்படும் வன்முறையின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. சாதியக் கட்டமைப்பில் ’கற்பு மற்றும் களங்கம்’ இரண்டும் மிக முக்கியமான மையப்புள்ளிகளாக உருவகப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் சாதியக் கட்டமைப்பு மற்ற எல்லா காரணிகளையும் தாண்டி அகமண முறையில் (ஒரே சமூகக் குழு, அல்லது வகுப்புப்பிரிவுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையில்) உயிர் வாழ்கிறது.
சாதியக் கட்டமைப்பானது இத்தனையாண்டுகளாகியும் புது வடிவங்களை எடுத்தாலும் முழுமையாக சிதைந்துபோகாமல் மற்ற எல்லா காரணிகளையும் தாண்டி அகமணமுறையின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், சாதியக் கட்டமைப்பு என்பது உள்ளார்ந்த பல்வேறு படிநிலைகளில் அமைந்திருக்கும் சமமின்மையை (graded inequality) வைத்திருப்பதாகவும், அதில் அகமண முறை என்பது அந்த சாதியக் கட்டமைப்பின் அடிப்படை என்று அண்ணல் அம்பேத்கர் தனது ‘இந்தியாவில் ஜாதிகள்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் கூறுகிறார்.
பெண்கள் சாதியக்கட்டமைப்பின் கதவுகளாக இருக்கும்போது எவ்வாறு சாதிகள் பல்வேறு படிநிலைகள் மற்றும் உள்படிநிலைகளோடு இருக்கிறதோ, அதைப் போலவேதான், சாதியப் படிநிலைகளுக்கு ஏற்ப பெண்களும் வெவ்வேறுவிதமான வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
மேலும், இந்த சாதிய அமைப்பானது ’உயர்சாதி ஆண்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்வதற்கான உரிமையினையும் அதில் தண்டனை பெறாமல் தப்புவதற்கான வழியையும்’ வழங்குகிறது. உயர்சாதியினர் தங்கள் சாதிப் பெண்களின் பாலியல் தன்மை, கற்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் கவனத்தோடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அதே சாதியக் கட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தப் பெண்கள் உடமைகளாகக் கருதப்படுகிறார்கள்.
“ஒரு பெண் தன்னைவிட உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஆணோடு பாலியல் உறவு கொண்டால் அவளுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடையாது. ஆனால், அவள் தன்னைவிட கீழ் சாதியைச் சேர்ந்த ஆணோடு பாலியல் உறவு கொண்டால் மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும் என்கிறது மனுநீதி (வசனம் 8. 365). இப்படியாக மனுநீதியிலும் வேதங்களிலும் ஒடுக்கப்பட்ட பெண்களை பாலியல் சுரண்டல் செய்யவதற்கான உரிமை உயர்சாதி ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தேவதாசி முறையின் மூலம், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களை கடவுளுக்கு திருமணம் செய்துவைப்பதாகச் சொல்லி மதத்தின் பெயரில் பல ஆண்டுகாலம் பாலியல் சுரண்டல் நடந்திருக்கிறது (சில இடங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது). வட இந்தியாவில் ஹோலி, ஆந்திராவில் ஒக்காலி போன்ற பண்டிகைகளின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறது என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தலித் பெண்களின் பின்தங்கிய கல்வி-சமூக-பொருளாதார நிலை, அரசியல் தளத்தில் ஒலிக்க போதுமான குரல் இல்லாமை ஆகியவற்றோடு அவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் ‘பெண்’ என்ற காரணத்தினாலுமே அவர்கள் பாலியல் வன்முறைகளுக்கு தொடர்ந்து உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும், அதே ’ஆணாதிக்க சாதியக்கட்டமைப்பு இந்த பாலியல் வன்முறைகளில் இருந்து அவர்கள் தப்புவதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கிறது’.
சாதிக்கு எதிரான இயக்கங்களும், சட்டங்களும் இப்படியான இறுகிப்போன நிறுவனங்களை பல இடங்களில் கேள்வி எழுப்பினாலும், உயர் சாதியினரால் நடத்தப்படும் இந்த சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தண்டனைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பாலியல் வன்கொடுமையினையும் இணைத்திருந்தாலும், பாலியல் வன்கொடுமையில் சாதியின் பங்கு நீதித்துறையினாலும், பொதுச் சமூகத்தாலும் பெண்ணியவாதிகளாக-அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ளும் உயர்சாதி பெண்ணிய/சமூக(?) செயற்பாட்டாளர்களாலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சி அடுத்தக் கட்டுரையில் காண்போம்…