பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசை விமர்சிக்கும் சமூக வலைதள கணக்குகளை முடக்குவதும், பாலஸ்தீனற்கான ஆதரவு கருத்துக்களின் பரவல் வரம்பை குறைப்பதாகவும் சமூக வலைதளத்தின் பிரபலங்கள் மற்றும் அதன் பயனர்கள் கூறுவதாக அல்ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ளது.
“Free Palestine” மற்றும் “IStandWithPalestine” போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் மறைக்கப்படுவதாக உலகெங்கிலும் உள்ள சமூக வலைதள பயனர்கள், ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். பாலஸ்தீனத்தை குறிப்பிடும் இடுகைகளுக்காக சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக சொல்லி அதனை நீக்கியதாக சில பயனர்கள் மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களை பகிர்வதற்காக தங்கள் இன்ஸ்டாகிராம் கதைகள் மறைக்கப்பட்டதாக மற்றவர்கள் தெரிவித்தனர். சிலர் தங்கள் இன்ஸ்டாகிராம் சுயசரிதைகளுக்கு அருகில் பயங்கரவாதி என்ற வார்த்தை தோன்றுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளங்களான Facebook, instagram, X, youtube, TikTok – கணக்குகளை தணிக்கை செய்வதாக உலகெங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான சமூக வலைதளப் பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களில் சிலர் அல்ஜசீராவிடம் தெரிவித்தவை:
- அக்டோபர் 24, 2023 அன்று பெல்ஜியத்தின் திரைப்படத் தயாரிப்பாளரான தாமஸ் மேடன்ஸ் என்பவர் TikTok செயலியில் “இனப்படுகொலை” என்ற வார்த்தையுடன் வெளியிட்ட பாலஸ்தீனத்திற்கு ஆதரவான காணொளி ஒன்று ஆரம்பத்தில் உச்சத்திற்கு சென்ற பின்பு, திடீரென்று அந்த தளத்திலிருந்து முடங்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
- பிரஸ்ஸல்சை சார்ந்த 26 வயதான பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மார்க்கெட்டிங் மேலாளர், தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடுகையிட்ட போது பார்வையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை கூறினார். பொதுவாக 800 பார்வையாளர்களைக் கொண்ட தனது பக்கத்தை 200 பார்த்து விடுவார்கள், ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்துகள் வெளியிட்ட போது பார்வையாளர்கள் வெகுவாக குறைந்ததாக கூறுகிறார். வெறுப்புணர்வு கருத்தோ அல்லது வேறு கிராஃபிக் படங்களோ கூட போடவில்லை, பாலஸ்தீன மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டதற்கே தடையிட்டதாக கூறுகிறார்.
- இந்தியாவை சார்ந்த 29 வயதான பயனர் ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் நடந்த போராட்டங்களை தனது பக்கத்தில் வெளியிட்ட போது பார்வையாளர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக காண்பித்ததாக தெரிவிக்கிறார். பின்னர் அவரின் சுய படத்தை (Selfie) வெளியிட்ட போது எப்போதும் போல வழக்கமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
- புலிட்சர் விருது பெற்ற பத்திரிக்கையாளரான அஸ்மத், தனது டிவிட்டரில், காசா போரைப் பற்றியான ஒரு கதையை வெளியிட்ட பிறகு அவரது கணக்கு பிறரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டதாக புகார் அளித்திருக்கிறார்.
- பாகிஸ்தானிய எழுத்தாளர் பாத்திமா பூட்டோவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட “சட்டவிரோதமான போரில் ஜனநாயக நாடுகளும், பெரும் தொழில்நுட்பங்களும் இணைந்து தகவல்களை முடக்குவதற்காக செயல்படுவது பற்றி நான் அதிகம் கற்றிருக்கிறேன்” என வெளியிட்ட காணொளி அவரைப் பின்தொடரும் பார்வையாளர்களுக்கு காட்டவில்லை என்கிறார்.
- இஸ்லாமிய பிரச்சினைகளை மையமாகக் கொண்ட செய்தி இணையதள ஆசிரியரான 25 வயது அமீர்-அல்-கதாத்பேக், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் தங்கள் செய்திகள் குறைவானவர்களையே சென்றடைவதாகவும், போருக்கு முன்பு வரை 12 லட்சமாக இருந்த பார்வையாளர் எண்ணிக்கை போர் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் 1.6 லட்சமாக மாறியிருப்பதாக கூறுகிறார்.
- மேலும் சிலர் வார்த்தைகளையே மாற்றுவதாகவும் கூறியுள்ளனர். பாலஸ்தீனிய சமூக செயல்பாட்டாளர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட சில பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வார்த்தைகளை உடைப்பதாக கூறினார். இதனால் ‘Palestine, ethnic cleansing, apartheid’ போன்ற வார்த்தையில் இடையில் புள்ளியோ அல்லது / போன்றோ உடைத்து அந்த அல்காரிதத்தை தான் உடைத்ததாக சொல்கிறார்.
- எகிப்தின் கெய்ரோவில் முகமது டார்விஷ் என்கிற பிளாக் செயின் நிறுவனர் “Free Palestine.Bydotpy” என்கிற இணையதளத்தை இந்த பிரச்சனைகளின் காரணமாக உருவாக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் தணிக்கை செய்யப்படும் வார்த்தைகள் இவரது இணையதள செயலி வழியாக பயன்படுத்தும் போது உடைக்க முடியாதது போல் தயாரித்ததாக கூறுகிறார்.
- அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய சார்பு செய்தி நிறுவனமான Mondoweiss-ன் கணக்கை Tiktok தடை செய்திருக்கிறது. பின்னர் அதை பாடுபட்டு மீட்டெடுத்ததாக அந்த நிறுவனம் சொல்கிறது.
- பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட Quds News Network-ன் தளம், முகநூலான META -வினால் இடைநிறுத்தப்பட்டதாக X (டிவிட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனியம் சார்பான பதிவுகள் இடும் கணக்குகளில் பயங்கரவாதி என்கிற சொல்லை சேர்த்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அரபு மொழி பெயர்ப்பினால் ஏற்பட்ட பிரச்சனை இது என மெட்டா தளத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் பிபிசியிடம் கூறியிருக்கிறார். வலைதளத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக உலகெங்கிலும் உள்ள கணக்குகள் பாதிக்கப்பட்டதாவும் தனது X தளத்தில் (டிவிட்டர்) பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நிறுவனத்தின் முடிவுகளுடன் உடன்படாத பயனர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டிக்டாக் தளத்தின் செய்தித் தொடர்பாளர், டிக்டாக்கின் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை மட்டுமே நீக்கியதாக கூறியுள்ளார். யுடியுப் மற்றும் டிவிட்டர் தளங்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை என அல்ஜசீரா தெரிவிக்கிறது.
பெரும்பான்மையான ஊடகங்கள் மேற்குலக சார்புத் தன்மையுடன் இயங்கி, அவை வடிவமைக்கும் கருத்துக்களையே மக்களிடையே சேர்க்கின்றன. அதற்கு மாற்றாக சமூக வலைதள ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குபவை என சொல்லிக் கொண்டாலும் அவையும் தீவிர வலதுசாரி தன்மையுடையவையாகவே செயல்படுகின்றன. அரசுகள் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டே நடக்கின்றன. சமூக வலைதள ஊடகங்கள் என்பது அரசுகளை எதிர்க்காத கருத்துரிமைக்கான தளங்களாக மாறி விட்டன.
பாலஸ்தீனம் சார்பான செய்திகள் வெகுமக்கள் தளத்தில் பரவக்கூடாது என ஆதரவுக் குரல் எழுப்புவர்களின் கணக்குகளை முடக்குவதும், ஆதரவுக் கருத்துக்களை சமூக விதிகளுக்கு எதிரானது என நீக்குவதுமான செயல்பாடுகளில் அரசின் நிறுவனங்கள் போலவே இவை இயங்குகின்றன. சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்திய போது தென்னிந்தியாவின் பார்ப்பனீய ஊடகங்கள் இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதள ஊடகங்கள் செயல்படத் துவங்கிய காலகட்டத்தில்தான், பார்ப்பனிய ஊடகங்களை அம்பலப்படுத்திய சமூக செயல்பாட்டாளர்களின் கருத்துகள் வெகு மக்களிடத்தில் சென்று சேர்ந்தன.
இதன் வலிமையை உணர்ந்த தருணத்தில்தான், இந்த மக்களின் ஊடகத்தை அரசுகள் தங்களின் ஊதுகுழலாக மாற்றி விட்டன. போலி செய்திகள் பரவலாக பலரிடமும் சென்று சேர்வதும், அறம் சார்ந்து நீதியின் பக்கம் நிற்பவர்களின் கருத்துகள் முடக்கப்படுவதும் தொடர்கின்றன. மேற்குலகமும், அதன் ஆதரவு நாடுகளும் கட்டுப்படுத்தும் தளமாக சமூக வலைதள ஊடகங்கள் செயல்படுவதையே பாலஸ்தீனத்திற்கு ஆதரவானவர்களின் கணக்குகள் முடக்கப்படுவது காட்டுகிறது.