விலங்கினங்களும், பறவை இனங்களும், பூச்சிகளும் கூட சுதந்திரமாக வாழும் இந்த உலகில், இன்றும் விடுதலைக் காற்றை சுவாசிக்காத இனம் பெண்கள் என்று தான் கூறவேண்டும். என்ன தான் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்து ஆளுமை மிக்கவளாக பெண் மாறினாலும், அல்லது பொருளாதார நிலையிலோ உயர் பதவியிலோ இருந்தாலும் பகலில் கூட அவள் பாதுகாப்பு கேள்விக்குறியே! காரணம் ‘பெண்’ என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறொன்றும் இல்லை.
சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் எந்த நிலையில் இருந்தாலும், ஒரு பெண் என்பவள் அடங்கி போகக்கூடியவளாகவும், பணியவைக்கப்படக்கூடியவளாகவும், போகப்பொருளாகவும், பலகீனமானவளாகவும், ‘குடும்ப கௌரவ’த்தை காப்பாற்றக்கூடிய இடத்தில் முதன்மை பங்கு வகிக்கக்கூடியவளாகவுமே பார்க்கப்படுவது தான் இங்குள்ள கட்டமைப்பாக உள்ளது. அவளது உடல்தான் முதலில் ‘புனிதம்’ கெடாமல் இருக்கக்கூடியதாகவும், அவளது உடலில்தான் ஒட்டு மொத்த கௌரவமும் கட்டிக்காக்கப்படுவதாகவும் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் எந்தவித பாலியல் அத்துமீறலோ அல்லது பல பெண்களிடம் உறவு வைத்தாலும் அது இன்றும் இயல்பாகவே சமூகத்தால் கடந்து செல்லப்படும் நிலையே இருக்கின்றது. “அவன் ஆண், எத்தனை பேருடனும் வாழலாம். வீட்டுக்கு வரும்போது காலை கழுவி சுத்தம் செய்துவிட்டு வந்தால் எல்லாமே அதோடு முடிந்தது. ஆனால் பெண் என்பவள் தலையை நிமிர்ந்து நடப்பது கூட குற்றம்” என்றே நம்மிடம் நம்வீட்டு பெண்களே சொல்வதை கேட்டிருப்போம். அந்த அளவிற்கு சமூகத்தில் ஆண்-பெண் பாலின பாகுபாடு இன்றளவும் நிலவி வருகிறது.
நூற்றாண்டுகள் கடந்தும் பெண்கள் சமூக பிரச்சினைகளுக்கு முன்வந்து குரல் கொடுப்பதும் போராடுவதும் அவர்களுக்கு சவாலாகவே உள்ளது. பல வீடுகளில் பெண்களுக்குத் தேவையான அனைத்தையும் (அதாவது நகை, பணம், உடைகள்) போன்றவற்றைக் கொடுத்து ‘மகாராணி போல் இருக்கலாம்’ என்று சொல்லி பொதுவெளிக்கு செல்ல விடாமல் அடிமைபடுத்தி வைத்து அதையே பெரும் கொடுப்பினையாக /பெருமையாக பெண்களையே பேச வைத்திருக்கும் சமூகம் இது. இந்த கட்டமைப்பை உடைத்து வெளிவந்த பெண்கள் மிகக்குறைவே.
பெண்கள் தடைகளைத் தாண்டி படித்து, முன்னேறி வரும் வேளையில் ‘பாலியல் வன்முறை’ எனும் கொடூரத்தால் தங்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து மீண்டும் கீழே தள்ளி விடப்படுகின்றார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் இத்தகைய வன்முறைகளின் பாதிப்புகளை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எதிர்கொண்டு, தங்கள் கனவுகளை மீட்டெடுப்பதே அவர்கள் முன்னிருக்கும் சவாலாக இருக்கின்றது.
தற்போது அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றுள்ள மாணவி பாலியல் வன்முறை சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 23, 2024 அன்று அக்கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. மாணவி தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வெளியில் இருந்து வந்த ஆண் ஒருவர் மாணவியின் நண்பரை தாக்கிவிட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக ஞானசேகரனை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்தக் குற்றச் சம்பவத்தில், மேலும் ஒரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பதே இன்னும் சரியாக அறிப்படாத நிலையில், மாணவியின் புகாரின் அடிப்படையில் காவல்துறையின் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்த மாணவியும், அவரது குடும்பத்தை பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
FIR-ஐ இணையவழியில் பதிவேற்றம் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் என்று சொல்லப்பட்டாலும், இது புகாரளித்தவருக்கு மிகுந்த இக்கட்டான சூழ்நிலையையும், வேறு விதத்தில் மன உளைச்சலையும் பிரச்சனைகளையும் கொடுக்கும் என்பது காவல்துறைக்குத் தெரியாமல் இருப்பது கவனக்குறைவே.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநரின் மைய இடமாக இருக்கக்கூடிய, அவர் அதிகாரம் அதிகம் செலுத்தக்கூடிய கல்வி அமைப்பின் வளாகத்தில் இத்தகைய குற்றம் நடைபெற்று இருப்பது கவனிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு பெரிய நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தில் வெளி ஆட்கள் சர்வசாதரணமாக வளாகத்தின் உள்ளே வந்து இத்தகைய குற்றத்தை செய்ய முடிகிறது என்றால் அது அங்குள்ள பாதுகாப்பு குறைபாடு என்றே சொல்லவேண்டும்.
மேலும் வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவியர்களின் பாதுகாப்பு என்பது இருட்டுவதற்கு முன்புவரை தானா? ஏன் அங்கு பாதுகாப்பு காவலாளர்கள் குறைவாக இருக்கின்றனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆளுநர் மாளிகையில் அந்த ஒற்றை மனிதருக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள காவல் துறையினரில் ஒரு பகுதி இங்கே மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தால் இத்தகைய குற்றத்தை தடுத்திருக்கலாம். ஆனால் ஆளுநரின் பாதுகாப்போடு ஒப்பிடும் போது மாணவர்களின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவே குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதில் மிகப்பெரிய கொடுமை, “பாதிக்கப்பட்ட மாணவி ஏன் தனியாக ஆண் நண்பரை சந்திக்க சென்றார்? அதனால தான் இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது” என்றும் “பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது” என்றும் பேசும் பிற்போக்கு மனவியாதி கொண்டவர்களும் இருக்கின்றார்கள். “பெண் என்பவளும் மனித இனம் தானே, ஆண்களைப் போன்றே அந்தந்த வயதிற்கேற்ற உணர்ச்சிகளும் பருவ மாற்றங்களும் பெண்களுக்கு ஏற்படுவது இயற்கை தானே” என்ற புரிதலற்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். இவர்களை போன்றவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக சித்தரித்து, உண்மை குற்றவாளிகளை மறைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதால் தான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்ல பெண்கள் அச்சப்படுகின்றார்கள்.
இந்தியா முழுவதும் இதுவரை நடந்த பாலியல் வன்முறைகளாலும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்ட ரீதியாக போதிய நடவடிக்கை எடுக்காததாலும் சமூக கொந்தளிப்பு அதிகமாகவே ஆகியிருக்கிறது. குஜராத் கலவரத்தில் பல பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள், மணிப்பூரில் நடந்த பாலியல் கொடுமைகள், காஷ்மீரில் சிறுமி பாலியல் செய்து கொலை, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் கொலை, பத்மாஷேசாத்திரி பள்ளி மாணவிகள் பாலியல் புகார், ஐஐடி, ஐஐஏஎம், கலாஷேத்ராவில் நடந்த பாலியல் சீண்டல், தஞ்சாவூர் பாலியப்பட்டு மாணவி, என தொடர்ந்து நடந்த பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கெதிராக அரசின் நடவடிக்கை கடுமையாக இருந்திருக்கிறதா? என்பது கேள்விக்குறியே.
பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தாலும் , குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு போக்சோ என்று தனிச் சட்டம் இருந்தாலும், இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு ஆண் பெண்ணை பலவீனமானவளாகக் கருதி மிக எளிதாக அவளிடம் தவறு இழைக்க/பாலியல் சீண்டல் செய்ய முயல்கிறான். பாதிக்கப்பட்ட பெண் துணிவுடன் காவல்நிலையத்திற்கு செல்லமாட்டாள், வலுக்கட்டாயமாக தன்னை உபயோகபடுத்திவிட்ட ஆணை பற்றியோ தன் நிலையை பற்றியோ அச்சத்தால் பொதுவெளிக்கு வரத் தயங்குவார்கள் என்ற எண்ணத்தினாலேயே துணிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறாள். பெண்ணின் ‘உடல் புனிதம்’ உடைந்ததாக கற்பிக்கப்படும் போதனைகளால்; சமூகத்தில் நிலவும்; ஏளன பேச்சுகளாலும்; போலி கட்டமைப்புகளாலும்; சட்ட உதவியை நாட மாட்டார்கள் என்ற கருத்தினாலேயே பல வன்முறைகள் பெண்களுக்கெதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதே மனநிலையோடுதான் குற்றவாளி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, இத்தகைய குற்றத்தை செய்ய முடிந்திருக்கிறது. இது அங்குள்ள பாதுகாப்பு குறைபாடு என்று மட்டும் சொல்லி கடந்துவிட முடியாது. உள்ளே வந்த நபரின் பின்புலம் என்ன? இவருக்கு இந்த அளவிற்கு பாலியல் வன்முறை செய்வதற்குப் பின்புலமும் துணிவும் கொடுத்த நபர் யார் என்று ஆராயவேண்டும்.
இப்போதும் பெண்கள் பொதுவிலோ, அல்லது குடும்பத்திலோ கையை உயர்த்தி அல்லது நீட்டி பேசுவது தவறு என்ற நடைமுறை இருக்கிறது. இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வெளிவரும் ஆண்கள் பெண்களை சமமாக பார்ப்பதில்லை. பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கும் ஆண் செய்யும் வன்முறையிலிருந்து திருப்பி அடிக்கவோ, தப்பி செல்லவோ முடியாத பலகீனமான பிறவியாகவே பெண் பார்க்கப்படுகிறாள். இதுவே பல ஆண்களின் திமிருக்கு அடித்தளமாக இருக்கலாம்.
மேலும் இத்தகைய பாலியல் வன்முறைக்கு காரணங்கள் கற்பிப்பதும் ஒருவகையான சமூக அவலமே. புதர்செடிகொடிகள் மண்டி இருந்ததே அண்ணா பல்கலைக் கழக பாலியல் கொடுமை நடக்க காரணம் என படித்த அதிகாரிகளே பேசுவது அவர்களின் குறுகிய பார்வையையே வெளிப்படுத்துகின்றது. ஒரு சில ஆண்களின் இத்தகைய கொடூர புத்தியை திருத்துவதற்கு முறையான சட்டத்தை கொண்டு தீர்வைத் தேட வேண்டுமே ஒழிய, அதிகார பலத்தினால் வேறு வழிகளில் இதை மூடி மறைக்கக் கூடாது.
இதில் மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. சட்டத்தின் கண்களில் கறுப்பு துணி கொண்டு கட்டாமல் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுத்தால்தான் இது போன்ற கேடுகெட்ட சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கமுடியும். முட்புதர்களை களைவதில் இல்லை பெண்களின் பாதுகாப்பு – சனாதன புதர்கள் மண்டிக்கிடக்கும் ஆணாதிக்க மனப்பான்மையை சற்றே சமூகம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியே முன்வந்து காவல்துறையில் புகார் அளித்ததை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வரவேற்றாக வேண்டும். பெண்கள் இன்னும் எத்தனை காலம் பழமையையை எண்ணி உண்மையை பேசாதிருப்பது? அச்சம் தவிர்த்து துணிச்சலுடன் நீதிக்காக இறங்கி வந்து புகார் அளித்த அந்த மாணவி செயலை வரவேற்போம். அவர்களுக்கு துணையாக நிற்போம், உண்மை குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க, ஓங்கி குரல் எழுப்புவோம்.