‘வீழட்டும் பாஜக வெல்லட்டும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த தேர்தல் பரப்புரையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்:
தென்சென்னை பகுதியில் மக்களின் பேராதரவோடு மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே 3/4/2024 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கியது. தொடர்ந்து மந்தைவெளி, தேனாம்பேட்டை என பல பகுதிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பரப்புரை நிகழ்த்தி துண்டறிக்கை வழங்கினர். பெரும்பாலும் சிறு வணிகர்கள், பெண்கள் நடத்தும் சிறுகடைகள் இருந்த பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் பரப்புரை தொடர்ந்தது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றும் போது மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர். உரை முடிந்ததும் தோழரிடம், மோடி ஆட்சியில் தாங்கள் பத்தாண்டுகளாக சந்தித்த வேதனைகளை பதிவு செய்தனர். மேலும் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள் தோழருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
3/4/2024 அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“நம் குழந்தைகள் நலனுக்காக நாம் பாஜக கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். தமிழர் நலனுக்காக தந்தை பெரியார் வகுத்த கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்த தேர்தல் பரப்புரை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக வட இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும். தற்போது கச்சத்தீவு விடயத்தை கையில் எடுத்திருக்கும் பாஜக, தன் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவுக்காக என்ன செய்தது? தமிழர் நிலமாக இருந்த கச்சத்தீவை 50 ஆண்டுகளாக இலங்கை ஆக்கிரமித்திருந்ததை எதிர்த்து பாஜக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இலங்கையைத் தட்டி கேட்டிருக்கிறதா?
இன்று தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார். புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய இரு இடங்களில் ஆளுநராக இருந்த தமிழிசைக்கு அங்குள்ள மக்களின் ஆதரவு இருந்ததா? அங்கு மக்களின் ஆதரவு இல்லாததால் தான் பாஜக வேட்பாளராக தென்சென்னையில் நிற்கிறார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழர்களுக்கு நல்லது செய்வாரா ?
பாஜக கட்சி ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் இரண்டு ஆண்டு வருவாயைக் காட்டிலும் அதிகம். இன்று அரிசி, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தமிழர்கள் அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால் இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் மதவெறி அரசியல், இந்தித்திணிப்பு அரசியல் மட்டுமே செய்கிறது பாஜக. தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் நிலையில் வட இந்தியர்கள் இருக்கும்போது, பாஜக இந்தியைத் திணிப்பது யாருக்காக?
இங்கே (தென்சென்னை பகுதியில்) இருந்த கோவில் ‘அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவில்’ என்ற பெயருடன் இருந்தது. இப்பொழுது ஸ்ரீமத் தண்டுமாரியம்மன் கோவில் என்று பெயர் மாறி இருக்கிறது. ஸ்ரீமத் என்ற வடமொழிப் பெயரை இணைத்தது யார்?”
இவ்வாறு பாஜகவின் இந்தித் திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தைக் கடுமையாக சாடினார் தோழர் திருமுருகன் காந்தி. இறுதியாக நேர்மையான அரசியலை விரும்பும் இளைஞர்கள் மே பதினேழு இயக்கத்துக்கு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை முடிந்ததும் 35-40 வயது மதிக்கத்தக்க தோழர் ஒருவர் தாமாகவே தன் வாழ்க்கையில் பாஜகவினால் நடந்த கசப்பான விடயங்களை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறுவயதிலேயே தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த அவர், மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியினால் தொழில் முடங்கி, தனது வாழ்க்கை சீரழிந்து போனதைக் கண்ணீருடன் விவரித்தார். வேறொரு பகுதியில் ஒருவர் தாமாக முன்வந்து, இப்படியான சிறப்பு உரை பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இருக்கும் இடத்தில் பேசப்பட வேண்டும் என ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு பேச வருமாறு அழைப்பு விடுத்தார். மிகவும் வறுமையான சூழலில் இருந்த ஒருவர் தோழரின் உரையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் பையில் இருந்த 500 ரூபாயை கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு மக்களின் உணர்வு நிறைந்த வழியனுப்புதலுடன் அன்றைய பரப்புரை நிறைவுற்றது.
தொடர்ந்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9884864010 எண்ணை அணுகவும்.