தென்சென்னை முதற்கட்ட பிரச்சாரம் – ஏப்ரல் 2, 2024

“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்“ என்பதை நோக்கமாகக் கொண்ட மே பதினேழு இயக்கத்தின் பரப்புரை தென் சென்னையில் ஏப்ரல் 2, 2024 அன்று பேரெழுச்சியுடன் துவங்கியது. பனையூரில் ஆரம்பித்த பரப்புரை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி எனத் தொடர்ந்து பள்ளிக்கரணையில் முடிந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அனைத்து இடங்களிலும் உரையாற்றினார். இயக்கத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கைகளை மக்களிடத்தில் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 2024, ஏப்ரல் மாதம் நடைபெறுவதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்கிறது. அதன்படி, தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கான பரப்புரை ஏப்ரல் 2-ம் நாள் முதல் துவங்கப்பட்டது. சென்ற இடமெங்கும் மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலையே மக்களிடம் இருந்தது. மக்கள் ஆதங்கங்களை பகிர்ந்தனர். பாஜக-வின் பத்தாண்டு கால ஆட்சியில் தாங்கள் பட்ட துன்பங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முதலாவதாக பனையூரில் ஆரம்பித்த பரப்புரையில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரையின் சுருக்கம் :

“மோடியின் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் நாம் முன்னேறவில்லை.  உலகத்தின் பல இடங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும், இங்கு மோடி விலை ஏற்றுகிறார். நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக இருந்தும், இந்தியாவின் அதிகரித்ததைக் குறித்து மோடி வாய் திறந்து பேசுவதில்லை. பத்து வருடத்திற்கு முன்பு ஒரு வீட்டுக்கு வாடகை எவ்வளவு கொடுத்தோம்? இப்பொழுது என்ன வாடகை தருகிறோம்? நிலம், பொருட்கள், மளிகை சாமான்கள் என அனைத்தும் பத்து வருடத்திற்கு முன்பு எவ்வளவு, இப்போது எவ்வளவு என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாத ஊதியம் 20 ஆயிரம் இருந்தால் பத்து வருடம் முன்பு வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் கறி வாங்கலாம், திரைப்படத்திற்கு போகலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால் அதே 20 ஆயிரத்தில் இன்று அதைப் போல செய்ய முடிகிறதா? அனைத்து விலையும் ஏறிவிட்டது.

மோடி ஜி.எஸ்.டி வரியை போட்டதனால், இட்லியிலிருந்து அனைத்திற்கும் வரி. எந்த நாட்டிலும் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு வரி போடுவதில்லை. செத்தால் கூட வரி போடும் மோடி, நல்லாட்சி தருகிறோம், ஓட்டு போடுங்கள் என்று மீண்டும் வருகிறார். நாம் ஏற்கெனவே காது குத்தியாகி விட்டது என்று சொல்ல வேண்டாமா? இந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நலனுக்கு ஒரு திட்டத்தையும் கொண்டு வராத மோடியும், பாஜகவின் வேட்பாளராக இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தர்ராசன் அவர்களும் என்றைக்காவது தமிழ்நாட்டின் பிரச்சினையை பேசியிருக்கிறார்களா? ஒன்றிய அரசு அலுவலகங்களான வங்கி, வருமான வரித்துறை, எல்ஐசி , அஞ்சல் துறை போன்ற அனைத்திலும் தமிழர்களுக்கு வேலை இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நீட் வேண்டாம் என்றால் அதற்கு எதிராக பாஜக ஓட்டு போடுகிறது. டெல்லிக்குத்தான் விசுவாசமாக இருப்பேன் என்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் தமிழிசை அவர்கள் பாஜக தலைவராக இருந்தார், புதுச்சேரி கவர்னராகவும் இருந்தார், தமிழரின் பிரச்சினையை என்றைக்காவது தீர்த்து வைத்திருக்கிறாரா? அண்ணாமலை தீர்த்து வைத்திருக்கிறாரா? அண்ணாமலை மாதிரி கோமாளி தமிழ்நாடு பார்த்ததுண்டா? வாயைத் திறந்தால் பொய் பேசுவதும், உளறிக் கொட்டுவதுமே அவரின் வேலையாக இருக்கிறது.

கச்சத்தீவு பற்றி யாராவது தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று தொலைக்காட்சியில் கேட்கிறார் அண்ணாமலை. நாங்கள் தயாராக இருக்கிறோம். கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து போராடியவர்கள் நாங்கள். திமுக-வும் அதிமுக-வும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மோடி ஆட்சியில்தான் வழக்கு தொடர்ந்தார்கள். அதற்கு என்ன பதில்? ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபரை கட்டிப் பிடித்து வரவேற்கிறீர்களே, சிவப்பு கம்பள வரவேற்ற கொடுக்கிறீர்களே, மோடி அவர்களே, கச்சத்தீவை கொடுங்கள் என்று கேட்கத் தெரியாதா? தமிழர்கள் செத்தாலென்ன? தமிழர்களின் சொத்து போனால் என்ன? என்பது தான் அவர்களின் எண்ணம். தமிழ்நாட்டு கட்சியாக இருந்தால் நாம்  கேள்விகள் கேட்கலாம். டெல்லி கட்சிகாரனிடம் என்ன கேள்வி கேட்க முடியும்?  தமிழிசை அவர்களிடம் சென்று மீனவர் பிரச்சனையை தீர்க்கவில்லை, காவிரி உரிமையை பெற்றுத் தரவில்லை, ஒக்கி புயலில் மீனவனை காப்பாற்ற வரவில்லை, கஜா புயலில் விவசாயியை காப்பாற்ற வரவில்லை, சென்னை வெள்ளத்தில் காப்பாற்ற வரவில்லை எனக் கேள்வி கேட்டால், டெல்லியை தான் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள். டெல்லிக்கு அடிமையாக இருக்கும் தமிழிசையை வைத்துக்கொண்டு இந்த தொகுதி எப்படி முன்னேறி விட முடியும்? தமிழ்நாட்டு பாஜக எல்லாமே டெல்லிக்கு அடிமைதான்.

மே பதினேழு இயக்கம் பத்தாண்டுகளாக மோடியையும், பாஜகவையும் எதிர்த்து போராடி வந்திருக்கிறோம். வழக்குகள் அடக்குமுறைகள், சிறை என பலவற்றை சந்தித்திருக்கிறோம். இருப்பினும் பாஜக-வை எதிர்ப்பதில் பின்வாங்கியதில்லை.

பாஜக சாதி, மதத்தை வளர்க்கிறது. நம்மோடு சகோதரர்களாக இருக்கக்கூடிய, நம்மோடு காலம் காலமாக வாழ்ந்து வரக்கூடிய பச்சை தமிழர்களான இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சியை எப்படி நம் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க முடியும்? மோடியை, அண்ணாமலையை, தமிழிசையை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் தமிழும் தமிழ் நாடும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருக்கிறோம். எந்த பதவி ஆசைக்கும் வரவில்லை. கூட்டணி தர்மத்திற்காக எல்லாம் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விடாதீர்கள். மோடி ஓட்டு வாங்கிய தர்மத்திற்கு, பிரதமராக இருக்கக்கூடிய தர்மத்திற்கு  நேர்மையாக இல்லை. பாஜக என்பது வடநாட்டான் கட்சி. வடநாட்டான் கட்சியை ஆதரிக்கக்கூடாது என்று நாங்கள் புதிதாக சொல்லவில்லை. பெரியார் சொல்லி இருக்கிறார். வடநாட்டான் கட்சிக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டிருக்கிறார்? இங்கு மாநில கட்சிகள் இருக்கிறது. எங்கேயோ இருந்து கொண்டு இங்கு வந்து கொடி நட்டு ஆட்சி பண்ண நினைக்காதே என்று பெரியார் சொல்லி இருக்கிறார். பாஜக வட நாட்டுக் கட்சி, மக்கள் விரோதக் கட்சி. மக்கள் அரசியல்படவில்லை என்றால் நாடு நாசமாகி விடும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் இரு மடங்கு ஏறும். ஜி.எஸ்.டி. இரண்டு மடங்காகும். தாய்மார்களே, அனைத்து துன்பமும் அனுபவிப்பவர்கள் நீங்கள் தான். ஆகவே இந்த பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வேலையை செய்து முடியுங்கள்”–இவ்வாறு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து ஈஞ்சம்பாக்கத்தில் உரையாற்றும்போது, “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாம் சந்திக்கப்போகும் கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். தமிழர்களின் வரிப்பணத்தை தனது நண்பர் அம்பானிக்கு தாரை வார்த்தவர் மோடி” என்று பேசினார் தோழர் திருமுருகன் காந்தி. தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சினையில் பாஜக அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார். மேலும் “அண்ணாமலை கச்சத்தீவு விடயத்தில் நேருக்கு நேர் எங்களுடன் உரையாடத் தயாரா?” என்று சவால் விடுத்த தோழர் திருமுருகன் காந்தி, இறுதியில் எந்த பதவிக்கும் ஆசைப்படாத மே பதினேழு இயக்கத் தோழர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாலவாக்கம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது சர்வதேச அளவில் பெட்ரோல் விலை குறைந்ததையும், இந்தியாவில் மட்டும்  பெட்ரோல் விலை உயர்ந்ததையும் சுட்டிக் காட்டினார். மேலும் “தமிழிசை புதுச்சேரியின் ஆளுநராக இருந்து மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன?” என்ற கேள்வியையும் முன்வைத்தார். “அரசியலை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும்” என்று தோழர் கூறியபோது மக்கள் ஆர்ப்பரித்து அந்தக் கருத்தை வரவேற்றனர்.

கொட்டிவாக்கம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது, சாலை ஒப்பந்தங்களின் மூலம் பாஜக செய்த ஏழரை லட்சம் கோடி ஊழல் குறித்துப் பேசினார் தோழர் திருமுருகன் காந்தி. சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை குறித்தும், தமிழர்களின் வரியினில் இந்தி பேசும் மாநிலங்கள் வளர்வது குறித்தும் உரையாற்றினார்.

பள்ளிக்கரணை பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, கொங்கு மண்டலத்தில் ஒரு லட்சம் விசைத்தறிகள் பாஜகவினால் முடங்கியது குறித்தும், பருத்தியை பதுக்கி அதன் விலையேற்றத்திற்கு காரணமான மோடி ஆட்சி குறித்தும் விளக்கினார். இவ்வாறாக இரண்டாம் நாள் முழுவதும் பத்தாண்டுகால மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகள் குறித்து பரப்புரை மேற்கொண்டனர் மே பதினேழு இயக்கத் தோழர்கள்.

தோழர்களுடைய பரப்புரையைக் கேட்டு, மக்கள் தங்களால் இயன்ற நிதி வழங்குவது முதல் குடிக்கத் தண்ணீர் வழங்குவது வரை தோழர்களுக்கு உதவி செய்தனர். உரையை முடித்தவுடன் மக்கள் தோழர் திருமுருகன் காந்தியிடம் கைக்கொடுத்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.

திருவான்மியூர் பகுதியில் பரப்புரை செய்து கொண்டிருந்த பொழுது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை’ பிஞ்ச செருப்பு’ என்று சொன்ன பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி பொதுமக்களை பார்த்து ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“ஒருவேளை இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் இங்கு ஒன்றிய அரசின் தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்திருக்கும். இந்த இரண்டுமே தமிழர்களாகிய நமக்கு அன்னிய மொழி. ஆனால் வடக்கே இருந்து வருபவனுக்கு இந்தி தாய்மொழியாக இருக்கும். இப்பொழுது சொல்லுங்கள் தமிழர்களே! தாய்மொழியில் பரீட்சை எழுதும் அவன் சிறந்த முறையில் வெற்றி பெறுவானா, அந்நிய மொழியை கற்றுக் கொண்டு எழுத வேண்டியிருக்கும் நாம் சிறந்த மொழியில் வெற்றி பெறுவோமா?” என்று கேள்வி எழுப்பினார்.

வேளச்சேரியில் பரப்புரை முடிந்ததும் ஒரு பெண்மணி மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி ஏற்றத்தால் தான் படும் துன்பங்களை விரிவாகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும் பேசினார். தமிழ்நாட்டு  மக்கள் மற்ற மாநில மக்களை விட அதிகளவில் அரசியல்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக விளங்கினார் அப்பெண்மணி. இவ்வாறு சிறப்பான மக்கள் எழுச்சியுடன் பரப்புரை நிறைவுற்றது.

தொடர்ந்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிரான பரப்புரையில் தோழர்கள், உணர்வாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள உரிமையோடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9884864010 எண்ணை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »