சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம்
ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதன் குடிமக்கள் என்ற வகையில் நாட்டின் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவது அவசியமானது. அதேவேளை ஒரு நாட்டின் சட்டங்கள் அங்கு வாழும் மக்களின் கலாசார மற்றும் மத சுதந்திரங்களை மீறுகின்ற வகையில் உருவாக்கப்படுவதோ, நடைமுறைப் படுத்தப்படுவதோ ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். அது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கு ஒப்பாகும்.
குறிப்பாக, பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் பல இன மக்களின் கலாசாரம் மற்றும் மதம் தொடர்பான சுதந்திரங்களும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தியா, இலங்கை போன்ற பன்முக சமூக கட்டமைப்பு கொண்ட நாடுகளில் சிறுபான்மை மக்களின் அடையாளங்களையும் தனித்துவங்களையும் பாதுகாப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பு மற்றும் கடமையாகும்.
ஒரு நாட்டின் அரசால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறையை (Life Style) தீர்மானிக்கவோ, அல்லது மாற்றி அமைக்கும் வகையிலோ சட்டமியற்ற முடியாது. அதோடு மதம், கலாசார, சமய சுதந்திரங்களில் தலையிட அரசுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதையும், அதோடு எந்தவொரு சமூகத்தின் கலாசார மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்கும் அதிகாரமும் எந்த அரசுக்கும் இல்லை என்பதையும் அனைத்து சர்வதேச சட்டங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தேசம், ஒரு சட்டம் எனும் மோடியின் மறுமுகம் தான் கோத்தபய ராஜபக்சே
இந்தியாவில் சட்டங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கிரிமினல், மற்றொன்று சிவில் சட்டம். இதில் கிரிமினல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சிவில் சட்டத்தில் மட்டும் மதங்களுக்கு ஏற்ப சில தனிச்சட்டங்கள் உள்ளன. எனினும் சிவில் சட்டத்தில் 80 % மேலான விசயங்கள் எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது.
மேலும் மக்கள் தங்களுக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளும் மதம் தொடர்புடைய மிகச் சில விசயங்கள் மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் எனப்படுகின்றன. அந்த தனியார் சட்டங்கள் மட்டும் சிலவற்றில் மாறுபடுகின்றன.
மொகலாயர்கள் ஆட்சி முதலே இந்தியாவில் முஸ்லிம்களும், இந்துக்களும் அவரவர் மத நம்பிக்கைப்படி செயல்பட தனியாக சட்டங்கள் இருந்திருக்கிறது.
நிலைமை இப்படியிருக்க இந்துமத வெறிப்பிடித்த இந்துத்துவ பாஜக அரசு, முஸ்லிம்களுக்கு எதிராக அனைத்து சட்டங்களையும் சட்ட விரோதமாக மாற்றி வருகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், அடுத்ததாக நாடு முழுவதும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் நோக்கில் காயை நகர்த்த துவங்கியுள்ளனர். இது நடக்கும் பட்சத்தில் மத சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதேபோலவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு, அங்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக ரத்து செய்து, அதற்கு பதிலாக பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்து இருந்த நிலையில், தற்போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனாவின், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த குழு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தின் அமுலாக்கம் குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றன. இந்த செயலணியில் முஸ்லிம்கள் நால்வர் இடம்பெற்ற நிலையில், தமிழர் ஒருவரும் இடம்பெறாதது அவர்களின் தமிழர் விரோத மனப்பான்மையை அப்பட்டமாக காட்டுகிறது.
ஒரே நாடு – ஒரே சட்டம் நோக்கம்
ஒரே நாடு ஒரு சட்டம் என்று கூறுவதன் மூலம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை இலங்கை அரசு உறுதிப்படுத்தியது என்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதும், இலங்கை அரசு கட்டமைப்பை ஒற்றையாட்சி முறைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டும் ராஜபக்சே அரசு இந்த ‘ஒரே நாடு ஒரு சட்டம்’ என்ற வாசகத்தை கையில் எடுத்துள்ளது.
பண்டாரநாயகாவின் தனிச்சிங்கள சட்டத்தின் விளைவுகளையும், 30 ஆண்டு காலமாக போரையும், இறுதியில் 2009 முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்கு கோத்தபயவின் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற வாசகம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. ஆனாலும் வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பது உறுதி.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் அனைத்தும் அங்கு வாழும் அனைவருக்கும் பொதுவானவை. அவை இன, மத, பிரதேச, கலாசார வேறுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானவை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்பது முஸ்லிம் தனியார் சட்டம் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்ற உள்நோக்கிலே கொண்டு வர பட்டதாகவே பார்க்க முடிகிறது. ஏனெனில் இதற்கு முன் அங்கு நடந்த விடயங்கள் அனைத்தும் இதனைத் தான் எடுத்து காட்டுகிறது.
குறிப்பாக ஞானசார தேரர், முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் பிரச்சாரம் செய்து வருவதும், இதை நிறைவேற்ற இக்கோரிக்கையை அரசிற்கு முன்வைக்கப் போவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சிங்கள மக்களுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இது போன்றே இந்தியாவில் RSS கும்பல்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது, கடந்த 300 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் தமது மத அடிப்படையில் விவாகம், விவாகரத்து போன்றவற்றை கையாள இச்சட்டம் உருவாக்கப் பட்டது. பின்னர் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டம், சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசுகளால் சில திருத்தங்களோடு அங்கீகரிக்கப்பட்டு இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. இச்சட்டம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. அதோடு முஸ்லிம்கள் அவற்றைப் பின்பற்றுவதனால் நாட்டுக்கோ அல்லது மற்ற எந்த சமூகத்திற்கோ எவ்வித நட்டமோ, அச்சுறுத்தலோ, பிரச்சினையோ இல்லை என்பதே உண்மை.
இப்படியான ஒரு தனியார் சட்டத்தை ஒழிக்க அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற முஸ்லிம் விரோத விஷம பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஷமிகள் தமது வாதத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்கில் தனியார் சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளாது, சம்பந்தமில்லாத விடயங்களையும் போலியான செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.
சிங்கள பௌத்த பேரினவாத அரசு இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதென்பது, அப்பட்டமான உரிமை மீறலாகும். மேலும் இது மத சிறுபான்மையினரின், மத கலாசார தனித்துவத்தை துடைத்து அழிக்கும் கீழ்த்தரமான செயலாகும். இதைத்தான் இந்துத்துவ பாஜக அரசும் இந்தியாவில் செயல்படுத்தி வருகிறது.
கோத்தபய ராஜபக்சேவும் ஞானசார தேரரும்
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் எவ்வாறு பயங்கரவாத செயல்களுக்கு பெயர்போனதோ அதேபோல இலங்கையில் தற்போது அதிகம் பேசப்படும் தீவிரவாத பௌத்த அமைப்பு தான் பொதுபல சேனா என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் தான் தற்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவர். இவர் ஒரு பௌத்த இனவெறியாளர்.
இந்த அமைப்பிற்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலர் பாதுகாப்பு வழங்குகிறார். இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு பதிலாக மேலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு கோத்தபாய ஆதரவு தருகிறார்.
பொதுபல சேனாவின் தலைவரான ஞானசார தேரர் பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுவதற்கு, நாட்டின் பாதுகாப்புப் படையினர் அதற்கான அனுமதியை அவருக்கு வழங்குகின்றனர். இதன் மூலம் பாதுகாப்புச் செயலருக்கும் தேரருக்கும் இடையிலான தொடர்பு எத்தகையது என்பதை அறியலாம்.
இங்குள்ள பெரும்பாலான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும், இதில் கோத்தபாயவின் ஆதரவு உள்ளது என்பதால் அமைதி காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்துத்துவா கும்பலை போன்றே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர் இவர். 2018ல் நான்கு முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட இவரை, ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளது மிகவும் வேடிக்கையாகவும், முரணாகவும் உள்ளது.
ஞானசார தேரரை கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்
இலங்கையிலும் இந்தியாவை போன்றே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முதலில் அம்பாறை பகுதியிலும் பிறகு கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு பெரும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. இதுகுறித்து பலரும் இதற்கு காரணமான ஞானசாரா தேரரை கைது செய்ய வலியுறுத்திய நிலையில், தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேரரை கைது செய்ய வேண்டி தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதில் இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பிற்குப் பிறகு அங்கு வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கலவரங்கள் நடைபெற்று வந்துள்ளன. முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரங்களும் சிங்கள பயங்கரவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இலங்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அவசர நிலை எவ்வகையிலும் உதவவில்லை. இந்த அறிவிப்பிற்குப் பிறகும் முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.
எனவே உடனடியாக ஞானசேரா உட்பட கலவத்தின் மூல ஊற்றாக செயல்படும் பயங்கரவாதிகளை இலங்கை அரசு கைது செய்ய வேண்டும் என்று கோருகின்றோம். சர்வதேச சமூகம் இதற்கான அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் மேதகு பிரபாகரனின் விடுதலை புலிகள் அமைப்பைத் வஞ்சித்து அழித்து இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியதால் போர் கதாநாயகன் என போற்றப் படும் கோத்தபாய ராஜபக்ச, இன்று இலங்கையை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவராக உள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்தியாவின் அழிவிற்கு எப்படி மோடி காரணமோ, அதேபோல் இலங்கைக்கு ராஜபக்சே. தீவிரவாதத்தை ஊக்குவித்து காரியம் சாதிக்கும் தமிழின விரோதிகளான இவர்களின் நட்பை, இலங்கையின் மோடி ‘ராஜபக்சே’ என்றும், இந்தியாவின் ராஜபக்சே ‘மோடி’ என்றும் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.