வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை..

வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை..

நீர்நிலைகளை ஆக்கிரமித்திடும் அரசு திட்டங்களும், தனியார் நிறுவனங்களும்

கடந்த 2015ல் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், சென்னை பெருநகர் மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டதை நாம் மறந்திருக்க முடியாது. வங்காள விரிகுடாவின்  கடற்கரையின் மீது அமைந்துள்ளதால், கனமழை மற்றும்  புயல்கள் சென்னைக்கு புதிதல்ல. ஆயினும், பெரு வெள்ளம் மற்றும் மழை நீர் தேங்குவது என்பது தொடர் நிகழ்வாகிவிட்டது. வெள்ளத்தினால் மக்களின் உயிர், உடைமைகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் கரைகளில் கார்பரேட் ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னை நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த தனியார் ஆக்கிரமிப்புகளால் ஆறுகளின் அகலம் பாதியாகக் குறைந்தது விட்டதாகக் சூழலியல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளும் தொடருகின்றது. குறிப்பாக, கடந்த 2015 வெள்ளத்தின் போது  சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள தெற்கு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்படைந்தன.

அடையாறு கழிமுக பகுதி ஆக்கிரமிப்பு

பள்ளிக்கரணையில் உள்ள  சதுப்பு நிலப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) 2008ல்  தெளிவாக எச்சரித்தும்,  பல ஆண்டுகளாக அப்பகுதி திடக்கழிவுகளைக்  கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், அங்கு வடிகால் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சிறிதளவு மழைநீர் கூட வெள்ளமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2020ல், அடையாறு மற்றும் கூவம் கழிமுகப் பகுதிகளில் உலக வங்கி நிதி உதவியுடன் 500 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளதாகவும், சென்னையில் பல்வேறு இடங்களில் மாநில நிதி ஆதாரத்தின் கீழ் 400 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். “கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.2,800 கோடி செலவில் உலகத் தரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி   நிறைவடைந்தால் வடசென்னை பகுதியில் தண்ணீர் தேங்காது” என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை நிலைமை மாறவில்லை.

சென்னையில் உள்ள சுமார் 1,519 நீர்நிலைகளில் 25% முதல் 35% வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதில், தனியார் மட்டுமல்லாது  அரசாங்கமும் இது போன்ற நீர்நிலைகளில் கட்டிடங்களை கட்டி வருவது தான் அதிர்ச்சிக்குரிய தகவல். உதாரணத்திற்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் ஓடுபாதை அடையாறு ஆற்றின் மீது கட்டப்பட்டது தான்.

பல ஆண்டுகளாக, ஏரிக்கரையோரங்களிலும் ஆற்றங்கரைப் பகுதிகளிலும் அரசாங்கமே குடியிருப்புகள் மற்றும் இதர கட்டுமானங்களை திட்டமிட்டு கட்டி வருகின்றது. கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மீதான விரைவுச்சாலை போக்குவரத்து கட்டுமானம் ஆற்றின் ஓட்டத்தை பாதிக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும், கூவம் ஆற்றின் மீது கட்டப்படும் இணைப்புசாலை போன்றவை வெள்ளவடிகாலுக்கு எதிரானது. கூவம் மீதுள்ள கட்டுமானங்களின் அருகில்  கால்வாயின் வண்டல் மண் படிந்துள்ளதால் அப்பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில், ஆதனூர் – மணப்பாக்கம் வரை 19 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட அடையாறு ஆற்றங்கரை 4 நாட்கள் மழைக்கே பெருங்களத்தூர் அருகே உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

கூவத்தை ஆக்கிரமித்து அரசு விரைவு சாலை திட்டம்.

இப்படியான அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்களாலும்; அப்பல்லோ, மியாட் போன்ற தனியார் மருத்துவமனை ஆக்கிரமிப்புகளாலும் 2015ல் சென்னை வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்திற்கு உழைக்கும் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடிசை வாழ் மக்கள் தான் பலிக்கடா ஆக்கப்பட்டனர். 1990களின் பிற்பகுதியில் தொடங்கி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிசை வாழ் மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். 2015 வெள்ளத்திற்குப் பின்னர் 52,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அவர்கள் வாழ்விடங்களை வாழ்வாதாரத்தைவிட்டு அப்புறப்படுத்தி பெரும்பாக்கம் போன்ற  புறநகர் பகுதிகளில் அரசு குடியமர்த்தியுள்ளது. இப்படியாக தூக்கிவீசப்பட்டுள்ள மக்கள்,  தங்கள் புதிய வாழ்விடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல்;  முறையான போக்குவரத்து, பள்ளி மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சரியான கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் அவதிப்படும் இந்த குடும்பங்களின் இளைஞர்களை காவல்துறையினர் தங்கள் வழக்குகணக்கு காட்டுவதற்காக பொய் வழக்குகளை புனைந்து அவர்கள் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமையும் அதிகமாக நடைபெறுகிறது.

கழிவுநீர் வடிகால் உள்கட்டமைப்பிற்காக அதிக அளவு நிதி செலவழிக்கும்  மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இருப்பினும், சரியாக திட்டமிடப்படாத வடிகால், முறையற்ற வகையில் கட்டுமானங்களுக்கு அனுமதியளித்தது,  இயற்கை நிலப்பரப்பு மற்றும் நீர்-புவியியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் போனது போன்ற காரணங்களால் வழக்கமான பருவ மழை கூட  மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாக உருவெடுக்கிறது.

2015 வெள்ளத்தில் இருந்து நாம்  இன்னும் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதையே இது தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முறையான வடிகால் அமைப்புடன் கூடிய ஆக்கபூர்வமான நகர்ப்புற திட்டமிடல் காலத்தின் தேவை. தனியார் நிறுவனங்கள் செய்யும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. அப்போது தான் இது போன்ற பேரிடர்களில் இருந்து மக்களைக் பாதுகாத்திட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »