இலங்கை இராணுவத்தின் ஊதுகுழலான “தி இந்து”
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருக்கின்றனர். மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கப்படுகின்றனர். படகுகள், மீன்வலைகள் உட்பட அனைத்து உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. நாட்கணக்கில் மாதக்கணக்கில் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையின் இனப்படுகொலை கூட்டாளியான இந்திய பார்ப்பனிய அரசு இலங்கையின் இந்த அராஜகப் போக்கை கண்டுக்கொள்ளாமல் தமிழர்களுக்குத் துரோகம் செய்துவருகிறது. இலங்கையின் அராஜகப் போக்கையும் இந்தியாவின் தமிழர் விரோத போக்கையும் நியாயப்படுத்தும் விதமாக ‘தி இந்து’ போன்ற தமிழின விரோத பார்ப்பன பத்திரிக்கைகள் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. தற்போது இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டின மீனவர் விசயத்திலும் கூட இதையே செய்திருக்கிறது.
ராஜ்கிரண், சேவியர் மற்றும் சுகந்தன் ஆகிய மூவரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள். இவர்கள் தங்களது விசைப் படகுகளில் கடந்த திங்களன்று (18 அக்டோபர் 2021) மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலை அப்பாவி மீனவர்களின் விசைப் படகின் மீது மோதவிடப்பட்டு அதை உடைத்திருக்கிறது. படகு உடைந்து தண்ணீரில் தத்தளித்த சேவியர் மற்றும் சுகந்தன் ஆகியோரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை. கடலில் மூழ்கடிக்கப்பட்ட ராஜ்கிரண் அங்கேயே இறந்து போயிருக்கிறார். ஆனால், இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரைக் கைது செய்திருப்பதாகவும் மூழ்கிய ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் இந்திய அரசுக்கு பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறது.
செய்தியை அறிந்து கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களைத் தேடி இரண்டு விசைப் படகுகளில் சென்றிருக்கின்றனர். இலங்கை கப்பற்படை கொல்லப்பட்ட ராஜ்கிரண் அவர்களது உடலையும் கைப்பற்றி எடுத்துச் சென்றுவிட்டு அரசுக்கு பொய்யான தகவலைக் கொடுத்திருப்பது மீனவர்களுக்குத் தெரியவந்தது. இது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இத்தகைய படுகொலைகளை செய்து கொண்டிருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையையும், இதனை துளியளவும் கண்டு கொள்ளாத இந்திய ஒன்றிய அரசையும், வெறும் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசினையும் கண்டித்து கோட்டைப்பட்டின மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிற இச்சம்பவத்தைக் கண்டித்து அனைத்து தரப்பு தலைவர்களும் கண்டனங்களை எழுப்பியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெரும்பாலான ஊடகங்களும் இலங்கை கடற்படையின் கப்பலைக் கொண்டு மீனவர் படகில் மோதி கொலை செய்யப்பட்டதாகவே செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால் தமிழின விரோத இந்து பத்திரிக்கை மட்டும் முதல் நாள் (19-10-2021) இலங்கைக் கடற்படையின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டது. மீனவர் கொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலை கிளம்பிய பிறகு கூட அடுத்த நாளான 20-10-2021 அன்று முந்தைய நாள் வெளியான அதே மாதிரியான சிங்கள பத்திரிக்கைகளின் செய்திகளைப் போன்ற இலங்கை கடற்படை சார்பான பொய்யான செய்தியை வெளியிடுகிறது.
தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை சம்பவத்தன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பு “இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவரின் படகைக் குறுக்கிட்டுத் தடுத்தபோது தமிழ்நாட்டு மீனவர் கடலில் விழுந்து மாயமானார்” என்கிறது. மேலும், “இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டத்திற்குப் புறம்பாகச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த (Poaching) தமிழ்நாட்டு மீனவர்களின் மூழ்கிய படகிலிருந்து இரு மீனவர்களை காப்பாற்றியது இலங்கை கடற்படை. மேலும் மாயமான ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறது” என எழுதியிருக்கிறது. இலங்கைக் கடற்படையின் அறிக்கையான “இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்தியப் படகுகளை விரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு படகு மட்டும் முரட்டுத்தனமாக (Aggressive maneuvers) விலகிச் செல்ல மறுத்தபோது அப்படகு கப்பலுடன் மோதியதாலும் கடலின் கடுமையான நிலைமையாலும் படகு மூழ்கியது” என்னும் செய்தியை வெளியிட்டது.
தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களின் மேல் நிகழ்த்தும் தாக்குதல்களையும் அது நடத்தும் கொலைகளை மறைமுகமாக மறுக்கும் விதமாகவும் இப்பிரச்சனைகளுக்கெல்லாம் தமிழ்நாட்டு மீனவர்களே காரணமென்று மடைமாற்றும் விதமாகவும் அடுத்த பத்திகளில் ”தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தங்களையும் தங்களது படகுகளையும் தாக்கிக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இலங்கை தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.” என்றும் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதால் பாக் ஜலசந்தியில் பிரச்சனை ஏற்படுவது பிரதான பிரச்சனையாக இருக்கிறது எனவும் எழுதியிருக்கிறது.
இன்றைய இதழில் இது பற்றிய செய்திக்கு “இலங்கையின் கப்பற்படைக் கப்பலில் படகு மோதியதால் தமிழ்நாட்டு மீனவர் நீரில் மூழ்கினார்” எனத் தலைப்பிட்டிருக்கிறது. உள்ளே “ புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரின் படகு இலங்கையின் கடற்படை கப்பலில் மோதியதால் மீனவர் கடலில் விழுந்து இறந்தார். சர்வதேச கடல் எல்லையை மீறியதால் அப்படகிலிருந்த மற்ற இரு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று எழுதுகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர், மீனவர்களுக்கு அதுவே பிரதான பிரச்சனையாக மாறுகிறது, தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் இலங்கை கடற்படையினருக்கும் சம்பந்தமில்லை என்பதே பார்ப்பன இந்துப் பத்திரிக்கை நீண்டகாலமாக இந்திய அளவில் செய்துவரும் பிரச்சாரமாகும்.
சிங்கள இனவெறி அரசின் தமிழர் விரோத கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் காலங்காலமாகத் தாக்குதல் நடத்தியும் கொலை செய்துகொண்டும் வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கத் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் கடிதம் மட்டுமே எழுதி வருவது 35 ஆண்டுக்கால வழிமுறையாக இருக்கிறது. கடந்த 04-10-2021 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சுட்டிற்கு ஆளாகியிருக்கிறார் என்பதைல் குறிப்பிட்டு, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தக் கோரி எழுதியிருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே இக்கொலை சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசு தமிழர் வரிப்பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தமிழரின் கோரிக்கையைக் குப்பைத் தொட்டியில் வீசிக் கொண்டிருக்கிறது. மேலும் இலங்கையுடன் சேர்ந்து கொண்டு ராணுவ ஒத்திகையை நடத்திக் கொண்டும் இருக்கிறது. இந்துப் பத்திரிக்கை போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளைத் திரித்து தமிழர் விரோதமாகச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. எக்காலத்திலும் பார்ப்பனியத்தின் தமிழின விரோதம் மாறப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.