பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களும் புகையில்லா சமையலை சாத்தியமாக்க வேண்டுமென கொண்டு வந்த மோடி அரசின் உஜ்வாலா திட்டம்  (Ujjwala Scheme) இப்பொழுது எரிபொருள் நிறுவனங்களின் வருமானத்தின் மேல் கரியைப் பூசிய ஒன்றாக முடிந்திருக்கிறது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை போல பொதுத்துறையான எரிபொருள் நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்து புகழ் ஈட்டுவதற்காக தானம் செய்து அந்த நிறுவனங்களை கடனில் மூழ்க விட்டிருக்கிறது இந்த அரசு. அதனைப் பெற்றுக் கொண்ட மக்களுக்கும் கூட இந்தத் திட்டத்தால் பெரிதான பலன் ஒன்றுமில்லை. சிலிண்டர் விலையின் சுமைக்கு புகையின் எரிச்சலே பரவாயில்லை என்று உஜ்வாலா திட்டத்தின் படி புதிய சிலிண்டர் இணைப்பு பெற்ற பெரும்பான்மை குடும்பங்களும் சிலிண்டர் வாங்குவதை தவிர்க்கும் நிலையே ஏற்பட்டிருக்கிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் சமையல் எரிவாயு இணைப்பிற்கென்று உஜ்வாலா திட்டம் (PMUY) மோடி அரசால் மே 1, 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு இலவச சமையல் எரிகாற்று இணைப்பிற்காக ரூ 1,600 வழங்கப்படும் எனவும், 5 கோடி சமையல் எரிகாற்று இணைப்பு கொடுக்கப்படும் எனவும், மூன்று முறை இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம் என சொல்லப்பட்டது.

ஒரு சமையல் எரிகாற்று சிலிண்டரின் உற்பத்தி விலை ரூ 4,000-5,000 வரை. மொத்தமாக அரசு வாங்கியதனால் ரூ 3,200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் படி, ஒன்றிய அரசு சார்பாக 1,600 ரூபாயும், சிலிண்டரைப் பெறுபவர் 1,600 ரூபாயும் வழங்க வேண்டும். இதன் மூலம் பயனாளிகள் மீதமுள்ள தொகையை முழுவதுமாக செலுத்தலாம் அல்லது எரிகாற்று நிறுவனத்திடமிருந்து கடனாக பெறலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கடன் அடைபடும் வரை பயனாளிகள் முழு விலையில் சிலிண்டரை வாங்க வேண்டும். மானியத் தொகையிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் இந்தத் தொகையை பிடித்தம் செய்து கொள்ளும் என்பது வழிமுறையாக நிறுவப்பட்டது.

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெரும்பான்மையான மக்கள் 5,000 ரூபாய்க்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்களே. அவர்கள் ரூ 1,000 ஒதுக்கி சிலிண்டரை எப்படி வாங்க முடியும்? இந்த விலை உயர்வினால் இலவசமாக கொடுக்கப்பட்ட மூன்று முறைக்கு அதிகமாக பலரும் சிலிண்டரை நிரப்பாமல் இருந்து விட, இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மானியம் மூலம் கிடைக்கப் பெறும் தங்கள் தொகையான ரூ 1,600 கிடைக்கப் பெறாது நட்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

2017-18 ஆம் ஆண்டினில் இந்த திட்டத்தின் படி இணைப்புப் பெற்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 1.1 கோடி பயனீட்டாளர்களில் சுமார் 37 லட்சம் பேரும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் இணைப்பு பெற்ற 59 லட்சத்தில் சுமார் 22 லட்சம் பேரும் சிலிண்டரை நிரப்பாமல் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்துசுதான் ஆயில் நிறுவனத்தில், 2019 வரை 1.6 கோடி இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பலரும் விலையேற்றம் காரணமாக சிலிண்டரை நிரப்பாததால் சிலிண்டர் மானியத்திலிருந்து பெற வேண்டிய 1,600 ரூபாயை இழந்து விட்டன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். இதனால் ரூ. 4,000 கோடி அளவிற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலுவைத் தொகைகளை எண்ணெய் நிறுவனங்களுக்கு திரும்பிச் செலுத்த மோடி அரசு விரும்பவில்லை எனவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மீண்டும் இந்த ஆண்டும் 2021-22 புதிய ஒரு கோடி பயனாளர்களுக்கென உஜ்வாலா 2.0 திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் மோடி அரசின் உஜ்வாலா 1.0 திட்டம் உரிய நோக்கத்தை அடைந்ததா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கும் போது 2.0 திட்டமும் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே 2019-21-ல் சிலிண்டர் மானியத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 40,915 கோடியை 2021-22-ல் 12,995 கோடியாக குறைத்தும் விட்டது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கிய இணைப்புகளின் மொத்த சராசரி ஆண்டுக்கு 3.21 சிலிண்டர்கள் மட்டுமே. இதில் 1.05 கோடி பேர் இணைப்பு வாங்கிய பிறகு அதிக பட்சமாக 3 முறை சிலிண்டர் வாங்கியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு வாங்கும் நிலையில் அதன் விலையும் இல்லை. மானியமும் முறையாக வழங்கப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தின் படி இலவச இணைப்பு பெற்ற பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் கிராமப்புற மக்களான 86% பயனீட்டாளர்கள் சிலிண்டரை அதிகமான விலை கொடுத்து வாங்க இயலாத நிலையில் பழைய முறையிலேயே சமையல் செய்கிறார்கள் என்றும் அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு வீடுகளிலும் பெண்களின் நிலை விறகு கொண்டு வரவும், வறட்டி செய்யவும் என மீண்டும் ஊதியமில்லா பணியாளராக பாலின வேறுபாடுகளிலிருந்து மேலெழும்ப இயலா நிலையில் தொடர்வதாகவும் அவை தெரிவிக்கின்றன.

மேலும் இந்த திட்டத்தை ஆய்வு செய்த சிஏஜி (தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, இந்த திட்டமானது நுட்பமான கொள்ளை வழிகளை பலருக்கு திறந்து விட்டிருக்கிறது என்பதை அறிய வைத்திருக்கிறது. இந்த அறிக்கையின் படி சுமார் 19.8 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே மாதத்தில் 3 லிருந்து 9 முறை வரையிலும், 3.44 இலட்சம் இணைப்புகளுக்கு ஒரே நாளில் 2 லிருந்து 20 முறை வரையிலும் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நிரூபித்திருக்கிறது. பெரும்பான்மையான இணைப்புகள் மிகவும் குறைந்த அளவிலும், 10 இலட்சம் இணைப்புகள் மட்டும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறது. அவைகள் பெரும்பாலும் வணிக பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சிஏஜி அதிகாரிகள் கூறுகிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களை ஏமாற்றி இந்த வகையான முறைகேடுகள் செய்து கொள்ளை லாபம் பார்த்திருப்பவர்கள் அதிகார மட்டத்திற்கு நெருக்கமான விநியோக உரிமை பெற்றவர்களாகத் தானிருக்கும் என்பது கண்கூடான ஒன்று.

ஏற்கனவே 50% இயற்கை எரிவாயு இங்கேயே கிடைக்கப் பெற்றும் இறக்குமதி செய்யும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து 100  சதவீதத்திற்கும் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது சிலிண்டர் விலையும் உயர்கிறது. அதன் படி அக்டோபர் 21-மார்ச் 22 வரையிலான சிலிண்டர் விலை 50%-60% உயரும் என BPCL நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுபாஷ் குமார் கூறியிருக்கிறார். அதனால் தான் சிலிண்டரின் இன்றைய விலை ரூ 900 வரை ஏறியிருக்கிறது.

இனியும் ஏறும் சிலிண்டர் விலையின் நிலையை தடுக்கவும் முடியாது. அதற்கு மானியத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்த அரசுக்கு எண்ணமும் கிடையாது. கடந்த 8 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் வராக்கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 10 லட்சம் கோடி. நிலுவைத் தொகை சுமார் 9 லட்சம் கோடி. பனியா நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்வதில் பரந்த எண்ணம் கொண்டவர்கள் சாமானிய மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை பெரும் சுமையாகவே கருதுகிறார்கள். இதன் வெளிப்பாடு தான் இந்த ஆண்டு மானியத்திற்கான நிதி ஒதுக்கீடும் சென்ற ஆண்டினை விட 80% குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உஜ்வாலா திட்டத்தின்படி புதிய இணைப்பு கொடுத்தாலும் கிட்டத்தட்ட 1,000 ரூபாயை நெருங்கும் விலை கொடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களால் எப்படி வாங்க முடியும்? இதற்கு எதற்கு மீண்டும் உஜ்வாலா 2.0 என வெற்றுக் கூச்சலும், புதிதாக 1 கோடி இணைப்பாளர்கள் என வெட்டியான கவுரவமும் இந்த அரசுக்கு என்பது இந்தத் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்தவர்களின் கூற்றாக இருக்கிறது.

மக்களுக்கு நன்மை செய்வது போலவே ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் பொதுத்துறைகளை நட்டத்தில் விழ வைப்பதுமான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் மோடி. அதில் ஒன்று தான் இந்த உஜ்வாலா திட்டமும். மக்களுக்காக செய்வதாக அந்த மக்களுக்கே பெரிதும் பலனளிக்காத திட்டங்களை கொண்டு வந்து அதன் மூலம் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய பொதுத் துறைகளை விற்று கொண்டிருப்பது வாடிக்கையாக நிகழ்கிறது. பாரத் பெட்ரோலியம் முழுமையாக தனியார் வசம் சென்று விட்டதைப் போல மற்ற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களையும் தனியார் மயத்தின் கைகளில் வழங்கும் முன்னேற்பாடாக முதலில் நட்டத்தில் தள்ளி விட செய்த ஒரு ஏற்பாடு தான் உஜ்வாலாத் திட்டமும் என்பதே அரசியல் ஆய்வறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »