அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்க கடவுளே வழிகாட்டியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி. ஒய். சந்திரசூட் பேசியிருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பற்று தீர்ப்புகளைச் சொல்ல வேண்டிய நீதிபதி பதவியில் இருப்பவரான இவர், தனது தனிப்பட்ட நம்பிக்கையில் வழிபடும் கடவுளின் தீர்வாக இந்த தீர்ப்பைக் கூறியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. சந்திரசூட்டின் இந்த பேச்சு, அரசியல் அமைப்பு சட்டத்தின் கண்ணியத்தையே சிதைத்திருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, பாபர் மசூதியை இடித்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பல். அன்றைய பாஜக தலைவரான அத்வானி தலைமையில் டிசம்பர் 6, 1992-ல் ஒன்று கூடிய இந்த மதவெறிக் கும்பல், இந்தியாவின் 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த புராதனப் பெருமைகளில் ஒன்றான பாபர் மசூதியை உடைத்தது. அன்றிலிருந்து 27 ஆண்டுகளாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இசுலாமியர்கள் போராடினர்.
அவர்களுக்கு மேலும் அநீதியை இழைக்கும் தீர்ப்பினை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு அளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு பதிலாக இசுலாமியர்களுக்கு அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பையே கடவுள் தந்த தீர்வாக சமீபத்தில் சந்திரசூட் கூறியிருந்தார்.
அரசியலமைப்பு சட்டத்தில் உயிர்நாடியைப் போன்ற மதச்சார்பின்மையை கடைபிடிக்காமல், கடவுளிடம் தீர்வைக் கேட்ட இந்த அயோத்தி தீர்ப்பைப் போலவே, அவர் கூறிய ஒவ்வொரு தீர்ப்பும் இருந்ததா? என்கிற கேள்வியை சட்ட நிபுணர்கள் எழுப்புகிறார்கள். இது போலவே கடந்த மாதத்தில் பிள்ளையார் சதுர்த்தி அன்று மோடியை தனது வீட்டிற்கு வரவழைத்து பூசை நடத்தி, அதனை காணொளியாக வெளியிட்ட நிகழ்வும் பலரின் கண்டனத்திற்கு உள்ளானது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர், தன்னிச்சையாக செயல்பட வேண்டிய நீதித்துறைக்கும், அரசின் நிர்வாகத்திற்கும் இடைவெளி இல்லாமல் போனால், தீர்ப்புகளில் நேர்மைத் தன்மை இருந்திருக்க முடியுமா என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.
அவரின் தீர்ப்புகளில் சில முற்போக்குத் தன்மையாக வெளிப்பட்டாலும், பல தீர்ப்புகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவே இருந்திருகின்றன. குறிப்பாக தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகரிப்பு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, தேர்தல் பரப்புரையில் மதத்தைக் கலக்கக் கூடாது போன்ற தீர்ப்புகளை வழங்கி முற்போக்காளர் தோற்றத்தைப் பெற்றார். சில வழக்குகளில் முற்போக்கு தீர்ப்புகளையும் கொடுத்த படியே, பாஜக அரசாங்கம் சார்பான வழக்குகளுக்கு ஆதரவு நிலையிலான தீர்ப்புகளும், பாஜக குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் வழக்கு விசாரணைகளை இழுத்தடிக்கும் வேலையை செய்ததும் நுட்பமாக நடந்ததாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சில வழக்குகளை அவசர வழக்குகளாக தேர்ந்தெடுத்து தீர்ப்பு சொல்லியதும், சட்ட நிபுணர்களின் கருத்துக்களுக்கு ஏற்றபடி இருந்தது. ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையம் தொடர்பான வழக்கை உயர்நீதி மன்றத்திலிருந்து அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்திற்கு பெற்று உடனே விசாரித்தது. இது ஈசா மையத்தில் சேர்க்கப்பட்ட தங்கள் மகள்களுக்காக, அவர்களின் பெற்றோர் தொடுத்த ஆட்கொணர்வு மனு குறித்தான வழக்கு. அந்த வழக்கின் பின்புலங்கள் விசாரிக்கப்படாமல், அவசரம் காட்டப்பட்டு, ஜக்கிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதைப் போல, தாய் மற்றும் மகன் ஆகிய இருவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் சேனலின் (Republic channel) செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மகாராஷ்டிரா காவல் துறையால் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் பிணை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார் அர்னாப் கோஸ்வாமி. இதனை விசாரித்த சந்திரசூட், மாநில அரசையும், உயர் நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி, ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைக் குறைத்தால் அது நீதியின் கேலிக்கூத்து என்று பிணை வழங்கினார்.
அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஜக்கி வாசுதேவ் வழக்குகளை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு வருடமாக சிறையில் இருக்கும் உமர் காலித் வழக்கினை கிடப்பில் போட்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித். வன்முறையைத் தூண்டியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பலகீனமான நிலையில் இருந்தாலும் கூட இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் 2023-ம் ஆண்டில் ஒரு முறை கூட அவர் மீதான வழக்கை விசாரிக்கப்பட எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடந்த வன்முறைக்கும் இவருக்கும் தொடர்பில்லை என போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் உயர்நீதிமன்றம் பிணை கொடுத்தது. ஆனால் அதே நாளில் மீண்டும், போராட்டத்திற்கு திரட்டிய மக்கள் ஆதரவை, வன்முறைக்கு திரட்டுவதாக திரித்து விட்டு, சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக உபா வழக்கில் கைது செய்தது மோடி அரசு. இந்த வழக்கில் 4 ஆண்டுகளாக பிணை வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் உமர் காலித்.
அதைப் போலவே, பீமா கோரேகான் வழக்கில், பழங்குடி மக்களின் நிலம் மற்றும் வாழ்வுரிமைக்காகப் போராடிய ஸ்டேன் சாமி, பேராசிரியர் சாய்பாபா, வரவரராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 11 மனித உரிமை செயல்பாட்டாளர்களை, மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து மோடியைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறி 2018-ல் கைது செய்தது மோடி அரசு. அந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்கு உத்தரவிட்டவர் சந்திரசூட். அந்த வழக்கில் பொய் ஆதாரங்களை அவர்களின் மடிக்கணினிக்குள் புகுத்தியிருந்தது தடயவியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சமர்பிக்கப்பபட்ட பின்னும், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 6 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. இதில் சிறையில் அனுபவித்த சித்திரைவதைகளால் 86 வயதான ஸ்டேன் சாமி சிறையிலேயே இறந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா, பிணையில் வெளிவந்த ஒரு வருடத்திற்குள் கல்லீரல் நோயினால் மறைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் பேராசிரியர்கள், வழக்கறிஞர்களாக இருக்கும் அறிவாளர்கள். இன்னும் அவர்கள் சிறையில் உள்ளனர்.
மேலும், மோடி அரசு பதவியேற்றதும் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் தரும் 370-வது பிரிவை ரத்து செய்தது. ஜம்மு – காஷ்மீர் தனி இறையாண்மை கொண்டதாக செயல்படும் எனவும் இந்திய அரசின் எந்த சட்டமும் பொருந்தாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்ட மாநிலம் இது. தனி அரசியலமைப்பு கொண்ட மாநிலமாகவே செயல்பட்டது. அம்மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டே, குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மோடி அரசு எடுத்த 370-பிரிவை நீக்கும் முடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விட்டார். இதற்கு எதிராக அம்மாநில அரசு வழக்கு தொடுத்தது.
சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. குடியரசுத் தலைவர் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக இருப்பதால், குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என தீர்ப்பு கூறி, அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும், அதன் சிறப்பு அதிகாரமான 370- பிரிவை நீக்கியது செல்லும் என்றும் 2023-ல் தீர்ப்பெழுதப்பட்டது காஷ்மீர் மக்களுக்கு செய்த அநீதி என எதிர்கட்சிகள், மாநில கட்சிகள் முதற்கொண்டு சட்ட வல்லுநர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது மட்டுமல்ல, மோடியின் நண்பர் அதானி பல லட்சம் கோடி பங்குச்சந்தை ஊழலில் கொள்ளை அடித்திருக்கிறார் என ஹிண்டென்பெர்க் என்னும் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி இருந்தது. இது குறித்தான வழக்கை ஒன்றிய புலனாய்வு குழு மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்காமல், ‘பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்பான செபியிடமே சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்தது. செபியின் தலைவரான மாதாபி பூச் என்பவரே அதானியின் ஷெல் நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்த மோசடி சமீபத்தில் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதானியின் பங்கு மோசடி குறித்து விசாரித்த புலனாய்வு பத்திரிக்கை வலையமைப்பான OCCRP ஆய்வறிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. செபி-யின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியதாக இருக்கும் போது, செபியின் முன் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க OCCRP-யிடம் கூறியது. ஹிண்டன் பெர்க் நிறுவனத்தை ஒரு தரப்பாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அது சொல்லிய அறிக்கைப்படி முடிவெடுத்து தீர்ப்பு சொன்னதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறினர். நிபுணர் குழுவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அதானியை குற்றமற்றவராக்கிய செயலை செய்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.
அரசியல் கட்சிகளுக்கு பெரும் நிறுவனங்கள் அளிக்கும் பல கோடிகள் அளவிலான தேர்தல் பத்திரங்கள் குறித்த சந்திரசூட்டின் தீர்ப்பும் முழுமையடையவில்லை. இந்த பத்திரங்கள் குறித்து வெளிப்படைத்தன்மைக் கோரி நீண்ட காலமாக சர்ச்சைகளும், போராட்டங்களும் பரவலாக எழும்பிய வண்ணம் இருந்தன. இதன் காரணமாக 2024- மக்களவை தேர்தலுக்கு முன்பு, சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, தேர்தல் பத்திரங்கள் குறித்து அறிவிக்க வங்கிக்கு காலக்கெடு விதித்தது.
வங்கியும், அரசியல் கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றத்தின் முழு விவரங்களையும் அளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம், இதற்குப் பின்னர் இதன் காரணங்களை விசாரிக்கக் கூடிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தேர்தல் பத்திர நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீதான எந்த விசாரணையும் இல்லை, கோடிக்கணக்கான அளவிலான நிதிகள் எந்தெந்த முகாந்திரத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தான விசாரணைகளும் இல்லை.
இவற்றுடன் மற்றுமொரு தீர்ப்பாக சந்திரசூட் அமர்வு விசாரித்த ஞானவாபி மசூதி வழக்கு இருந்தது. மசூதியில் தொல்லியல் ஆய்வு செய்ய ஒரு குழுவை வாரணாசி உயர்நீதிமன்றம் அமைத்தது. இதை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. வழிபாட்டுத் தலங்களுக்கான 1991-ம் ஆண்டு சிறப்பு சட்டத்தின் படி, பாபர் மசூதி பிரச்சனை தவிர ஆகஸ்ட் 15, 1947-க்கு முன்பான வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ, அவற்றை அப்படியே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஞானவாபி வழக்கில் நீதிபதி சந்திரசூட், ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையை கண்டறிவதை 1991-ம் சட்டம் தடுக்கவில்லை. அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்வதாக கருத்தினை முன்வைத்தார். 1991-ம் சட்டத்தின்படி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, ஆய்விற்கு தடை விதித்திருக்க வேண்டும் எனவும், சந்திர சூட்டின் இந்த கருத்து இந்துத்துவவாதிகள் கையில் பிடிமானத்தை அளித்த வகையில் அமைந்தது எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
இவை மட்டுமல்ல, பாஜக அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கில் அவரின் பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் ஆணைய நியமன சட்டத்தை 2023-ல் மாற்றி, தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழுவே நியமித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அதனை தடை செய்ய மறுத்தது. மேலும் மக்களவைத் தேர்தல்-2024-ல், நடந்த பல கட்ட வாக்குப்பதிவில், முதலில் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்கு எண்ணிக்கைக்கும், அதன் பிறகான இறுதி வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் 5 கோடி வாக்குகள் வித்தியாசங்கள் இருந்ததாக Vote for Democracy அமைப்பு குற்றச்சாட்டு சுமத்தியது. அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக சந்திரசூட் பதவி விலக 5 நாட்களே இருக்கும் நிலையில், நீதி தேவதையின் சிலையிலும் மாற்றம் செய்திருக்கிறார். நீதி கோரி வருபவர்களுக்கு எந்தவித பாரபட்சமற்று நீதி வழங்கப்படும் என அடையாளப்படுத்த, நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணி நீக்கப்பட்டுள்ளது, தலையில் கிரீடம், நெற்றியில் திலகம், இடது கையில் வாளுக்குப் பதில் அரசியல் சாசனம் என முற்றிலும் மாற்றப்பட்ட சிலையை, சந்திரசூட் திறந்து வைத்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்காமல் அவசரகதியில் எடுக்கப்பட்டதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதி தேவதையின் நெற்றியில் திலகத்தை வைத்து மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார் சந்திரசூட்.
இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான சந்திரசூட், ராமர் கோயில் கட்டுவதை, தான் சார்ந்த மதத்துக்குரிய கடவுள் தந்த தீர்ப்பாக கூறியுள்ளார். இதேப்போல் ஒரு கிருத்துவ அல்லது இசுலாமிய நீதிபதி யாராவது தன் மதம் சார்ந்து தீர்ப்பு சொல்லியிருந்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மதம் என்ற ஒன்றே வரக்கூடாது, ஆதாரத்தின் அடிப்படையில் வழங்குவது தானே நீதி.
அதைப்போல நீதி தேவதை சிலையில் திலகம் வைத்து தான் சார்ந்த மதத்திற்கு சேவகம் செய்ய தனது பதவியை பயன்படுத்தியிருக்கிறார். சந்திரசூட் அவர்களின் பல தீர்ப்புகளை கேள்விக்குறியாக்கும் சாட்சியங்களாக இவைகள் இருப்பதாகவும், அவரின் பெரும்பாலான தீர்ப்புகள் பாஜக-விற்கு நெருக்கடி அளிக்கும் வகையில் வெளியில் தெரிந்தாலும், உண்மையில் பாஜகவை நெருக்கடியிலிருந்து தப்பிக்க வைக்கும் தன்மை கொண்டதாகவே இருந்ததாகவும், அவரின் தீர்ப்புகளை ஆய்வு செய்த மூத்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சில முற்போக்கு தீர்ப்புகளால் இவற்றை சமன் செய்திருக்கும் யுக்தி உடையதாகவே அவரின் தீர்ப்புகளை பார்க்க வேண்டுமென அவர்கள் அம்பலப்படுத்தினர்.
இன்னும் சில நாட்களில் (நவம்பர் 10, 2024) சந்திர சூட் ஓய்வு பெற இருக்கும் நிலையில், ஏற்கனவே இதுபோல தலைமை பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, பல்வேறு பதவிகள் மோடி அரசால் வழங்கப்பட்டு இருப்பதை நாம் கவனத்தில் கொண்டு, இவருடைய இந்த செயல்பாடுகளை பார்க்க வேண்டுமா? இன்று அறிஞர்கள் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
குடிமக்களின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்படுவது நீதித்துறை. அந்த நம்பகத் தன்மையையே கேள்விக்குறியாகும் சூழலை, பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து சந்திர சூட் பேசிய பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறையின் அடிக்கட்டுமானமான மதச்சார்பின்மையை சரித்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை நீதிபதிகளே மதிக்காமல் இந்துத்துவ சார்பு நிலைக்கு செல்லும் போக்கு, இந்தியாவிற்கு உருவாகியிருக்கும் ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மோடியின் பத்தாண்டு காலம் எப்படி இந்தியா முழுக்க சீரழிவை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதுபோல நீதித்துறையையும் சீரழிவை நோக்கித் தள்ளியிருக்கிறது. இதற்காகவே நீதித்துறையில் இட ஒதுக்கீடு மிகவும் அவசியம் என்று நாம் சொல்கிறோம்.