செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
கொரானா நோய்த்தொற்றினால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே மருத்துவ ரீதியான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்த இந்தியா, உள்நாட்டின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில், சென்னைக்கு அருகிலேயே தடுப்பூசி ஆலைகளை கொண்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது என்னும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்திய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் (HLL LifeCare) நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் (HLL BioTech) நிறுவனத்தின் கீழ் செயல்படும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம், ரூ.903 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன தடுப்பூசி உற்பத்தி கட்டமைப்புடன் 2019-இல் உருவாக்கப்பட்டதாகும். எச்.எல்.எல். லைஃப்கேர் பொதுத்துறை நிறுவனத்தை மோடி அரசு 2018-இல் தனியார்மயமாக்க முடிவு செய்து விட்ட நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தையும் தனியாரிடம் கையளிக்க இயக்காமல் வைத்திருந்தது. தற்போது கொரானா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசி ஆலை ஏன் இயக்கப்படவில்லை என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழுந்துள்ளது.
கொரானாவிற்கான தடுப்பூசிகளை சீரம் (Serum) நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மோடி அரசு ரூ.4,500 கோடியை இந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் உற்பத்தியான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதை பெருமையாக சொல்லிக்கொண்டார் மோடி. ஆனால், இந்தியாவில் கொரானா தீவிரமடையும் போது, இந்திய மக்களுக்கான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் எவ்வித திட்டமும் இல்லாமல் பொறுப்பற்று நடந்து கொண்டது ஒன்றிய அரசு. இந்த கொரனா பேரிடர் நேரத்தில் தடுப்பூசி தயாரிப்பை பரவலாக்காமல், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க அனுமதிக்கிறது ஒன்றிய அரசு. இந்நிறுவங்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கி ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதும் தனது பொறுப்பை விட்டு விலகி, மாநில அரசுகளே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி ஒதுப்பட்ட நிலையில், டில்லி, மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு அரசு சர்வதேச டெண்டர் முறையில் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டமிடுதலில் இந்த தடுப்பூசி கொள்முதல் என்று அறிந்துகொள்ள முடிகிறது.
குறுகிய கால தீர்வுக்கு இது சிறந்த முறையாக இருக்கலாம். ஆனால், இயக்கப்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திலுள்ள தடுப்பூசி ஆலைகளை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தினால், தமிழ்நாட்டின் நீண்ட கால தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்துகொள்வதற்கும், மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யவும் முடியும். கொரானா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய தடுப்பூசிகள் செயலிழந்து போகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கான தடுப்பூசி ஆய்வு கூடத்தையும், உற்பத்தி ஆலையையும் வைத்திருப்பது நீண்டகால சிக்கல்களுக்கு நிரந்த தீர்வாக அமையும்.
செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைகள் இயக்கப்படுமானால், ஒரு சுழற்சியில் 40,000 தடுப்பூசி மருந்து குப்பிகள், அதாவது ஒரு நாளைக்கு மூன்று சுழற்சியில் 12,000 குப்பிகள் தயாரிக்க முடியும் என்றும், ஒரு குப்பி மருந்தில் 10 தடுப்பூசிகள் போட முடியும் என்றும், ஒரு தடுப்பூசிக்கான உற்பத்தி விலை வெறும் 8 ரூபாய்க்குள் முடியும் என்றும் தடுப்பூசி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவங்களுக்கு ரூ. 4,500 கோடிகள் அளித்து தடுப்பூசி பெறமுடியாத முடியாத நிலையில், வெறும் 300 கோடியில் இந்த ஆலைகளை இயக்க முடியும் என்கின்றனர். தமிழ்நாடு அரசே இதனை ஏற்று நடத்துமானால், தற்போது தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை விட பல நூறு மடங்கு குறைவான விலையில் அதே தடுப்பூசிகளை பெற முடியும்.
இதுவரை இயக்கப்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைகளை, கொரானா தீவிரத்திற்கு பின்பு இயக்க தனியார் நிறுவங்களை விண்ணப்பிக்க இந்திய அரசு அழைபபு விடுத்துள்ளது. 300 கோடி மதிப்புள்ள, 500 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அதனால் விண்ணப்பிப்பதற்கான தேதியை தள்ளி வைத்திருப்பதாக ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குஜராத் மார்வாடி-பனியா கூட்டத்தின் நலனுக்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களின் லாபத்தில் எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்றே, செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை இயக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. ஆலை இயக்கம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முன்வந்து ஆலையை இயக்க விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்று நடத்த முடியுமெனில் , மாநிலம் அந்த உரிமையற்றிருக்க இயலாது. தனியார் நிறுவனத்திற்கு கிடைக்கும் இந்த வாய்ப்பினை விட சனநாயக அரசு கட்டமைப்பான மாநிலங்களுக்கும் உரிமை உண்டு என்பதை உறுதி செய்வதன் மூலம் மாநில உரிமையினை வலுப்படுத்திட முடியும். லாபநோக்கிற்கு ஆதரவளிக்கும் ஒன்றிய அரசின் கொள்கை நிலைப்பாட்டினை கேள்வி எழுப்பவும் செய்யும்.
இவ்வாறு மக்கள் தேவைக்காகவும், நெருக்கடியை எதிர்கொள்ளவும் மக்கள் நல கொள்கை அடிப்படையில் இந்நிறுவனத்தை துணிந்து கையில் எடுப்பது வரலாற்று சிறப்பு மிக்க கொள்கை முடிவாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறான கொள்கை முடிவினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமெனவும், இம்முயற்சிக்கு அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு தமிழக அரசின் கொள்கையாக வலுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறான மக்கள் நல கொள்கை முடிவிற்கு மக்கள் ஆதரவை திரட்டும் பணியில் மக்கள் நல இயக்கங்களும் துணையாக நிற்கவேண்டுமெனவும் சனநாயக இயக்கங்களுக்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கையை முன்வைக்கிறது.
மே பதினேழு இயக்கம்
14-05-2021
https://www.facebook.com/mayseventeenmovement/posts/4612867465397343