தமிழ்த் தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தமிழினத்திற்காக போராடிய தேசியத் தலைவரின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்டப்பிரிவை எரித்த நாள், அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பாக ‘முப்பெரும் விழா’, 24-11-2024 ஞாயிறு மாலை சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் ஆகியோர் பேருரை ஆற்றினர்.

மதிமுகவின்  கொள்கை விளக்க அணிச்செயலாளர் தோழர் ஆ. வந்தியத்தேவன், விசிகவின் துணை பொதுச்செயலாளர் தோழர் வன்னி அரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் உ. தனியரசு, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவையின் தலைவர் தோழர் எஸ். ஆர். பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரேடியோ வெங்கடேசன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வினிடையே, தமிழினத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், சாதி ஒழிப்பு வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும்விதமாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. நிகழ்வினை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை :

தமிழ் தேசியத்திற்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டே போகின்ற காரணத்தினால் தமிழ் தேசிய கூட்டணியை வெளிப்படையாக அறிவித்தோம். இங்கு தமிழ் தேசியம் என்பதை ஒரு ஓட்டு அரசியலுக்குள்ளாக கொண்டு போய் நிறுத்தி, அந்த ஓட்டு அரசியலில் இருந்து, அவரவர் தேவைக்கு ஏற்றவாறு தங்களது சுயநலத்திற்காக, தங்களது தேவைகளுக்காக மடை மாற்றுகின்ற ஒரு வேலை நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்கின்ற காரணத்தினால் நாங்கள் தமிழ் தேசிய கூட்டணி என்று ஆரம்பித்தோம்.

தமிழ் தேசியம் என்று மேடைக்கு மேடை பேசுவதெல்லாம் தமிழ் தேசியமாக மாறிவிடாது. தமிழ் தேசியத்திற்கு என்று சில கோட்பாடுகள் இருக்கின்றன. அந்த கோட்பாடுகளுக்காக உயிர் விட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து சிறைக்கு சென்றவர்கள் இருக்கிறார்கள். அந்த கோட்பாடு நிறைவேற வேண்டும் என்று களத்தில் நின்று சுயநலம் இல்லாமல் போராடிக் கொண்டிருப்பவர்கள் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான அரசியலை அடையாளப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக நாங்கள் எங்கள் மௌனம் கலைத்து தமிழ் தேசியக் கூட்டணி என்கின்ற கூட்டணியை உருவாக்கினோம்.

தமிழ் தேசியம் என்பது என்ன, திராவிடம் என்பது என்ன என்று ஒரு பெரிய விவாதத்தை தமிழ்நாட்டிற்குள்ளாக உருவாக்கிவிட்டார்கள். 2009-க்கு பின்பான ஒரு மிகப்பெரிய  மனநெருக்கடி அதற்கு முன்பு எந்த காலகட்டத்திலும் நமக்கு கிடையாது. நாம் மிகப்பெரிய நெருக்கடியை எல்லாம் நாம் எதிர்கொண்டதில்லை. அப்படி 2009 -லே உருவான அந்த மனநிலையை பயன்படுத்திக் கொண்டு அன்றைக்கு கோபத்தோடு திரண்டு எழுந்த தமிழின இளைஞர்களை எல்லாம் திராவிடத்திற்கு எதிராக கொண்டு போய் நிறுத்தி, தமிழ்நாட்டிற்குள்ளாக ஒரு பிளவு அரசியலை செய்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் தேசியத்தையும் விளக்கிச் சொல்லவில்லை, திராவிடத்தின் பங்களிப்பையும் சொல்லவில்லை.

தமிழ் தேசியம் என்றால் என்னவென்று பேசவே இல்லை. நான் ஐயா மணியரசனில் இருந்து சொல்லுகின்றேன். அவராக இருந்தாலும் சரி, நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமானாக இருந்தாலும் சரி. இரண்டாமவருக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் தேசியத்தை பத்தி எதுவுமே தெரியாத ஒரு நபர் அவர் (சீமான்). ஏனென்றால் திராவிடம் என்றால் என்னவென்று தெரியாமலே பத்து வருடம் மேடையில் பேசியவர். அவர் பெரியார் என்ன சொன்னார் என்பதை வாசிக்காமலேயே 10 /15 வருடமாக நான் ஒரு பெரியாரிய பேரன் என்று மேடையிலே பேசியவர். அவருக்கு தேவை மேடையும், மைக்கும் தான். அந்த மேடைக்கு ஏற்றவாறு அவர் அரசியலை பேசிக் கொண்டிருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

2009க்கு பின்னால் ஈழப்படுகொலை நடக்கும் என்று நாம் நினைத்து கூட பார்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அழிவார்கள் என்று நாம் சற்றும் கனவில் கூட யோசிக்கவில்லை ஒரு மிகப்பெரிய அழிவு நம் கண் முன்னால் நடந்தது. நான் எனது மாணவப் பருவத்திலிருந்து ஈழ அரசியலுக்காக இயன்ற பொழுதெல்லாம் எங்களது குரலை எழுப்பி இருக்கின்றேன். மாணவர் காலத்திலிருந்து 1991லிருந்து எனது தலைமுறை பார்த்த அந்த அரசியல் 2009ல் உச்சகட்டத்தில் ஒரு நெருக்கடியை வந்து சந்தித்தது யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிகரமானது. ஒரு அரசியல் முடிவாக 2009-லே அந்த போர் அமைந்தது. தமிழ்நாட்டில் இருக்கிற நமக்கெல்லாம் இருக்கக்கூடிய மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், ஈழத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கக்கூடிய நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை  மோசமான ஒரு சூழலிலே இருந்தோம். அன்றைக்கு தமிழ்நாட்டிலே மிகத் தெளிவாக குரல்கள் எழுந்தன. அன்றைய தமிழ் தேசியத் தோழர்கள், பெரியாரிய தோழர்கள் களத்தில் நின்று இந்திய அரசு ஈழத் தமிழர்களை பாதுகாக்க இயலாமல் நம்மை தடுத்துக் கொண்டிருக்கிறது என்று  சொன்னார்கள்.

 2008/2009 காலகட்டத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் படகை எடுத்துக்கொண்டு கடலில்  சென்றார்கள். கடல் எல்லையிலே அவர்களைக் கைது செய்தார்கள். தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு போராட்டங்கள் முடக்கப்பட்டன. அன்றைக்கு திமுக நம்மையெல்லாம் காப்பாற்றும் என்று நினைத்தோம். அங்கு மிகப்பெரிய ஒரு மனித சங்கிலி எல்லாம் நடந்தது. அண்ணா சிலையில் ஆரம்பித்து செங்கல்பட்டு வரை மிகப்பெரிய மனித சங்கிலியில் எல்லோரும் பங்கெடுத்தோம். அவர்களை மிரட்டினார்கள், அந்த கட்சி பின்வாங்கியது. 2009 ஜனவரி இரண்டாம் தேதி அல்லது மூன்றாம் தேதி அன்று, கலைஞர் ஒரு தீர்மானத்தை போட்டார். ஐயோ தமிழினம் அழிகிறதே என்று ஒரு தீர்மானத்தை போட்டார். ஏதோ நடந்துவிடும் ஏதேனும் நடந்துவிடும் என்று நினைத்தோம்.

ஆனால் அனைத்து போராட்டங்களும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே வந்த சமயத்தில்தான், சென்னை அண்ணாசாலையிலே ஒரு தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த ஐயா ஒருவர் இந்திய கொடியை எரித்தார். எதற்காக இந்திய கொடி ஒருவர் எரிக்கிறார் என்று அதுதான், முதல் அளவிலே ஒரு மிகப்பெரிய பார்வையை எல்லோருக்கும் கொடுத்தது. அவர் பெயர் நாத்திகன் கேசவன். தோழர். தியாகு இயக்கத்தில் இருந்தவர்.  இந்த படுகொலைப் போரிலே இந்தியப் பங்களிப்பிற்காக  கண்டிக்கிறேன் என்று முழங்கிக்கொண்டு எரித்தார். செங்கல்பட்டிலே மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் முத்துக்குமார் தன் உடலுக்கு தீ வைத்து முழங்கினார். இந்த போரில் யாரெல்லாம் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு பெரும் பட்டியலை எடுக்கிறார். பெரும் பட்டியலில் திமுகவையும் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் உலகளாவிய அளவிலே என்ன சிக்கல்கள்  நடக்கிறது என்றும் விரிவாக எழுதியிருந்தார். முத்துக்குமார் மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அதுவரை இந்த அரசியலை கவனித்து இருக்கின்றோம். அது அரசியலுக்காக பங்கு பெற்றிருக்கின்றோம். எங்கெல்லாம் போராட்டம் நடந்திருக்கிறதோ அந்த போராட்டத்தில் சென்று நின்று இருக்கின்றோம். ஆனால் முத்துக்குமாரினுடைய இழப்பிற்கு பிறகு அமைப்பாக திரள வேண்டும் என்று முடிவெடுத்து திரண்டு நின்றோம்.

2009, ஜனவரி இறுதி வாரத்திலே முத்துக்குமார் தீ குளிக்கிறார். அவர் புரட்சிகர இயக்கத்தைச் சார்ந்தவர். தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர். அதற்குப் பிறகு இரண்டு நாட்களில் பள்ளப்பட்டி ரவி தீக்குளிக்கின்றார். அதற்கு அடுத்த நாளிலே வடசென்னையிலே அமரேசன் தீ குளிக்கின்றார். அமரேசன் திமுககாரர். அதற்குப் பிறகு சீர்காழியிலே  ரவிச்சந்திரன் தீக்குளிக்கின்றார். அவர் காங்கிரஸ் கட்சிக்காரர். வாணியம்பாடியிலே சீனிவாசன் தீக்குளிக்கிறார். அவர் தேமுதிக கட்சிக்காரர். கடலூர் ஆனந்த் தீக்குளிக்கிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர். அனைத்து கட்சியைச் சார்ந்தவர்களும் அன்றைக்கு தீக்குளித்தார்கள்.

இவர்களெல்லாம் யாரை எதிர்த்து தீக்குளித்தார்கள் என்பது மிகவும் முக்கியம். இன்றைக்கு நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நாம் இந்த வரலாறை சொல்ல வேண்டி இருக்கிறது. நாங்கள் மிகக் கவலையோடு அவர்களைப் பார்க்கின்றோம். பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் தங்கள் கட்சிகளின் நிலைப்பாடுகளை எல்லாம் கடந்து அல்லது தங்கள் கட்சி ஈழத்திற்கு ஆதரவாக இருக்கின்ற காரணத்தினால் ஆதரவு தெரிவித்து தீக்குளித்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்குள்ளாக 18 பேர் தீக்குளித்தார்கள். மூன்று மாதத்திற்குள்ளாக இரண்டு நாளைக்கு ஒருவர் தீக்குளிக்கின்ற விகிதத்தில் இந்திய அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் தீக்குளித்து மாண்டார்கள்.

அன்றைக்கு இந்திய அரசினுடைய கப்பல் படையும், விமானப்படையும், உளவுப்படையும் முழுமையாக இலங்கை அரசிற்கு துணை செய்தன அதை எதிர்த்து கேட்கின்ற திராணி திமுகவிற்கு இல்லை என்கின்ற கோபம் எங்களுக்கு இருந்தது. ஆனால்  இந்திய அரசு தானே போரை நடத்தியது. அன்றைக்கு 2009-லே களத்தில் இருந்த அத்தனை பேரும் இந்திய அரசு செய்கின்ற இந்த அட்டூழியத்தை எதிர்த்து தானே போராட்டம் நடத்தினோம்.

இந்திய ராணுவத்தினுடைய பங்களிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி கிட்டத்தட்ட 72 ராணுவ வாகனங்களை ஆயுதம் தாங்கிய ராணுவ வாகனங்களை கோவையின் எல்லையிலே மறித்து நின்றார் தோழர் கோவை திரு. ராமகிருஷ்ணன் அவர்கள். அன்று நடந்த போராட்டங்களில் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள், பெரியாரிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள், அதிமுக காரர்கள், புரட்சிகர இளைஞர் இயக்கங்கள் என கட்சி சார்பற்ற எண்ணற்றோர் கலந்து கொண்டார்கள்.

2009 இனப்படுகொலை  நடந்து முடிந்த பிறகான ஆற்றாமையாக, இந்திய அரசு நம்மை வஞ்சித்து விட்டது என்கின்ற கோபம் எல்லோருக்கும் இருந்தது. அப்படி என்றால் இந்திய அரசை தானே கேள்வி கேட்க வேண்டும். இந்திய அரசை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்கிற போராட்டம் தமிழ்நாடு முழுக்க நடந்தது. ராணுவம், கப்பல் படை, உளவுப்படை, யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது? இந்தியாவில் கட்டுப்பாட்டில் தானே இயங்குகிறது. தஞ்சை விமான நிலையத்திலிருந்து அங்கே உதவிக்கு விமானங்கள் சென்றன என்று செய்தி வந்த காரணத்தினால், அன்றைக்கு தஞ்சையில் இருக்கக்கூடிய ராணுவ விமான தளத்தை ஐயா. மணியரசன் முற்றுகையிட்டார். பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் அதை முன்னெடுத்தது.

இந்திய அரசை எதிர்த்து நிற்பதற்கு அன்று திமுக தயாராக இல்லை  அல்லது அதனால் இயலவில்லை. ஏனென்றால் இன்றைக்கு மோடி ஒரு மாநில ஆட்சிக்கு என்ன நெருக்கடி கொடுக்கிறாரோ, அதைப் போல அன்றைக்கு காங்கிரஸ் செய்தது.  மாநில கட்சிகளை முடக்கியது. அதை எதிர்த்து நின்று மக்கள் போராட்டத்தில் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை திமுகவும், கலைஞரும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கோபம் ஏமாற்றம் எல்லோருக்கும் இருந்தது. அதனால் தமிழ்நாட்டிலே ஒரு மாற்று அரசியல் புரட்சிகரமான ஒரு அரசியல், தேர்தல் களத்தையும் கையாளக்கூடிய அரசியல் தேவை என்று எல்லோரும் உணர்ந்தார்கள். அப்படியாகத்தான் இங்கே ஒரு அமைப்பு திரட்சி வர ஆரம்பித்தது.

அந்த சோர்வான காலகட்டத்தில் நாம் அடுத்து ஏதேனும் ஒன்றை நகர்த்த வேண்டும் என்று ஒரு இயக்கத்தை உருவாக்கினார்கள். அதில்  பிரச்சாரகராக இருந்தவரே சீமான். நாம் தமிழர் கட்சியிலே இருந்த சீமான் ஒட்டுமொத்தமாக தனது கட்சியினுடைய ஏகபோக அதிபராக மாறியதுதான் அந்த கட்சியினுடைய பலவீனம். அன்றைக்கு சீமானை ஊக்குவித்த தலைமைகள் பெரியாரிய தலைமைகள் கண்டித்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறினார்கள். ஒன்றரை வருட காலகட்டத்திற்குள்ளாக அந்த கட்சி வளர்வதற்காக எல்லா இடத்திலும் ஓடித் திரிந்தவர்கள் பெரியாரிய தோழர்கள் மற்றும் திராவிட இயக்கத் தோழர்கள். ஆனால் ஒன்றரை வருட காலத்திற்குள்ளாக திராவிட எதிர்ப்பு  நிலைப்பாட்டை எடுத்தார். 2009ல் அதிமுகவிற்கு ஆதரவு, 2011 ல் அதிமுகவிற்கு ஆதரவு, 2014 ல் எனத் தொடர்ச்சியாக அதிமுகவிற்கு ஆதரவு என்று ஒரு கட்சி சார்பாக ஒட்டுமொத்த இளைஞர் கூட்டத்தையும் கொண்டு போய் நிறுத்தி விட்டார்.

தமிழ்த் தேசிய போராட்ட எழுச்சி 2009க்கு பிறகு வருகிறது. தமிழர்களுக்கு என்று ஒரு இறையாண்மை, ஒரு கோரிக்கை இருக்கிறது. மூன்று மாத காலகட்டத்திற்குள்ளாக தமிழ்நாட்டின் வீதிகளிலே 20 பேர் தீக்கிரையானார்கள். தீயிற்கு உடலை கொடுத்து ஈகியரானவர்களுடைய குரல் என்ன? இந்திய அரசு துரோகம் செய்தது என்பது தானே. இந்தியத்தினை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கோபத்தோடு கிளம்பிய இளைஞர்களை எல்லாம் என்ன செய்தார் சீமான்?  இங்கே திராவிடம் என்கின்ற பெயரில் தெலுங்கர்கள் வந்து இதையெல்லாம் செய்துவிட்டார்கள் என்று பசப்பிய பச்சை துரோகத்தை சீமான் செய்தார்.

ஏன் எங்களைப் போன்ற, திமுக மீது விமர்சனம் வைக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களை எல்லாம் தனது மேடையில் ஏற்ற மாட்டேன் என்கிறார்?    அவர் முகத்திரை கிழிந்துவிடும் என்பதால் தான். அவர் 2009, 2011, 2014 வருடங்களில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டது போல, எந்த இடத்திலும் நாங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு போய் வீதியில் நிற்கவில்லை. அன்று காங்கிரசிற்கு எதிராக, திமுகவுக்கு எதிராக வீதியிலே நின்றோம். அதற்கு பிறகு பாஜகவிற்கு எதிராக நின்றோம். பாஜகவுடன் அதிமுக கைகோர்க்கிறது என்றவுடன் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக நின்றோம். என்றைக்கும் வேறொரு கட்சிக்காகவோ, திமுகவிற்காகவோ, அதிமுகவிற்காகவோ வீதியில் வந்து நிற்கவில்லை.

நாங்கள் நேர்மையான அரசியலுக்கு சொந்தக்காரர்கள்.  இந்திய அரசு, மன்மோகன் சிங், பா.சிதம்பரம் என இனப்படுகொலையில் பங்கு வகித்த குற்றவாளிகளை எதிர்த்து யாரெல்லாம் போராட்டம் நடத்தினார்களோ, இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று போராடினார்களோ, அந்த தோழர்கள் மீது அவதூறுகளை பரப்பி, அவர்களை எல்லாம் தெலுங்கர்கள் என பேசி,  திராவிடர்கள் என பேசி, அந்த போராட்ட திரட்சியை ஒழித்துக் கட்டியவர் சீமான். 15 வருடம் கழித்து இதனை பேசுவதன் காரணம், இத்தனை ஆண்டுகள் கிட்டத்தட்ட 2016 வரை நாங்கள் பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுத்தோம். திமுகவிற்கு மாற்றாக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு தேர்தல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பலமுறை பேசினோம். இதனை இல்லை என்று சீமான் அவர்களால் சொல்ல முடியாது.

இன்று ரஜினிகாந்த்திடம் சென்று நிற்கிறீர்களே (சீமான்) ? வெட்கமாக இல்லையா? இந்த வார்த்தையை எத்தனை முறை உபயோகிப்பது? இந்த ‘வெட்கமா இல்லையா’ என்கிற வார்த்தையை சீமானுக்காகவே எழுதி வைக்க வேண்டி இருக்கிறது. காஷ்மீருக்கு ஆதரவு, கமலஹாசன் கட்சி ஆரம்பித்தால் சென்று கை கொடுப்பது, ரஜினிகாந்தின் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பது, விஜய் எனது தம்பி என்று சொல்லி விட்டு, அவர் திராவிடக் கொள்கையில் பயணிப்பதாக சொன்னதும் உடனே எனக்கு எதிரின்னு சொல்லி விடுவது, திராவிடன் என்று சொல்லி விட்டால் கோவத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெடிப்பது என எவ்வளவு சொல்வது!. திராவிடன் என்று சொன்னால் கோவமாய் வெடிக்கக்கூடிய சீமான், சங்கி என்று சொன்னால் சிரித்து புன்னகையோடு அதற்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கின்றார். உங்கள் (சீமான்) முகத்தை நீங்களே காட்டியதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்துத்துவ அமைப்பு தமிழை ஏற்கவில்லை, தமிழ்நாட்டை ஏற்கவில்லை, தமிழர்களை ஏற்கவில்லை, விடுதலைப் புலிகளை ஏற்கவில்லை, பிரபாகரனை காப்பாற்ற முன்வரவில்லை, ஈழத்திற்காக எதுவும் செய்யவில்லை. சிங்களத்தோடு கைகோர்த்து இருக்கக்கூடிய சங்கிகளை, அதனை எனது நண்பன் என்று சொல்லக்கூடிய ஒருவரை வீழ்த்துவதுதான் தமிழ் தேசியத்தினுடைய முதல் படியாக இருக்க வேண்டும். பச்சை துரோகியான சீமான், உனக்கு எதிராக எங்கள் படை நிற்கும்.

நாங்க திமுக-வை எதிர்த்து நிற்கிறோம். நாங்கள் திமுக ஜெயித்த உடனே ஐயா. ஸ்டாலின் அவர்களை சந்தித்து மாலை போடவில்லை. ஜெயலலிதா அம்மையாரிடம் சென்று கைகட்டி நிற்கவில்லை. நாங்கள் துணிந்து நிற்பவர்கள். இந்த கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி இல்லை. உங்கள் கட்சி போன்று நாங்கள் பேசுவதற்கு எல்லாம் அனுமதி கொடுக்கக் கூடிய இடம் கிடையாது. ஆனால் போராடி பெற்றோம், போராடிக் கொண்டிருக்கிறோம், நாங்கள் நிற்போம், நாங்கள் வெல்வோம்.

சீமான், எச்சரிக்கை விடுகின்றேன், இந்த 15 ஆண்டில் இந்த இளைஞர்களை எல்லாம் சிதைத்து, சீரழித்து, அவனது பொருளாதாரத்தை சுரண்டி, அவனது உணர்வை சுரண்டி அவனது அரசியலை சுரண்டி, மடைமாற்றி, உம்மை மேடை ஏற்றி அரசியலுக்கு அழைத்து வந்த இந்த பெரியாரிஸ்டுகளை எல்லாம் கொச்சைப்படுத்தி, பெரியாரை இழிவுபடுத்தி இத்தனையும் செய்துவிட்டு, சீரழிவு அரசியலை செய்து விட்டு, இன்று ரஜினியோடு கைகோர்த்து நிற்கக்கூடிய சீமான் அரசியலை ஒழித்துக் கட்டுகின்ற வேலையை செய்வோம்.

 ஏனென்றால் திமுகவிற்கு எதிரான சரியான மாற்று அரசியலை செய்ய வேண்டுமென்றால் இந்த மாதிரி புல்லுருவிகளை புடுங்கி வெளியே வீசினால் மட்டும்தான் செய்ய முடியும். எங்களுக்கு திமுகவிற்கு மாற்று தேவை. ஆனால் அந்த இடத்தில் சீமான் கிடையாது. சீமானுக்கு முதுகெலும்பு கிடையாது. துணிச்சலும் கிடையாது. நாங்கள் பல வழக்குகளை வாங்கிக்கொண்டு நிற்கின்றோம்

தமிழ்நாட்டில் திரண்டு எழுந்த தமிழ் தேசிய அரசியலை சிதைத்து, வந்த இளைஞர்களினிடத்தில் பொய்யான கதை பேசி சீரழித்தவர் சீமான். இங்கு கே. எம். ஷரீப் தோழருடைய கட்சித் தோழர்கள், விடுதலைத் தமிழ் புலி கட்சியினுடைய தோழர்கள், ஐயா. தனியரசினுடைய தோழர்கள், விடுதலை சிறுத்தை தோழர்கள், தோழர் எஸ். ஆர். பாண்டியனுடைய இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், இளமாறன் கட்சியை சார்ந்த தோழர்கள் இத்தனை பேரும் இங்கே இருக்கிறோம். இத்தனை தலைவர்களும் மேடையில் இருக்கிறோம். எங்கள் யாருக்கும் ஒருவருடைய தொண்டர்களை இன்னொருவர் பறித்துக்கொண்டு சென்று விடுவார் என்கின்ற எந்த அச்சமும் கிடையாது. ஆனால் சீமானுக்கு உண்டு.

வேறு எந்த கட்சித் தலைவரையும் தனது மேடையில் ஏற்றுவதற்கான துணிச்சலே அவருக்கு கிடையாது. எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது. ஏனென்றால் எங்கள் கருத்துக்கள் தெளிவானவை, அதை விட எங்கள் அரசியல் முற்போக்கானவை. நாங்கள் களத்திலே வீதியிலே மக்களோடு இருக்கின்றோம். வெறும் வாய் சவடால் அரசியல் செய்யவில்லை. கோட்டைப்பட்டினத்தில் மீனவன் இறந்தான். இலங்கைப் படை கொன்றது. உங்கள் ஊரில் இருந்து எவ்வளவு தூரம் அது இருக்கும்? சுமார் 50/60 கி.மீ தான் இருக்கும். நெய்தல் படை கட்டுவேன், பொய்தல் படை கட்டுவேன் என்று  பேசிய சீமான் அங்கு போகவில்லை. மூன்று நாட்கள் நானும், தோழர். குழந்தை அரசன் அவர்களும் கோட்டைப்பட்டினத்தில் தான் நின்றோம். நாங்கள் அந்த மீனவர்களோடு நின்றோம். கொல்லப்பட்ட மீனவனுடைய புதைத்த உடலை எடுத்து முதல் முறையாக  பிணக்கூறாய்வு செய்வதற்கான போராட்டத்தை நடத்தினோம். செய்து காட்டினோம். வெறும் நெய்தல் படை என்று சொல்லிவிட்டால் அனைத்தும் முடிந்து விடுமா? இது என்ன சினிமாவா?

நாம் தமிழர் கட்சியிலிருந்து இன்று நிறைய பேர் கோபப்பட்டு வெளியே செல்வதை பார்க்கின்றேன். அந்த இளைஞர்களை பார்த்து நான் பரிதாபப்படுகின்றேன். இவர்கள் அந்த கட்சியில் ஏமாந்ததை மட்டும் பரிதாபமாக பார்க்கவில்லை. வெளியில் வந்ததற்குப் பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் இருப்பதை பார்த்துதான் பரிதாபம் வருகிறது. அந்த நபர், இவர்களுக்குள் செய்த மிகப்பெரிய சீரழிவு கட்சிக்குள் மட்டும் அல்ல, கட்சிக்கு வெளியில் செல்லும் பொழுது அனாதைகளாக, அனாதரவாக விட்டாரே, அதுதான் அவர் செய்த மிகப்பெரிய சீரழிவு. அவர்களுக்கு கொள்கையை சொல்லித் தரவில்லை, கோட்பாட்டை சொல்லித் தரவில்லை, வரலாற்றை சொல்லித் தரவில்லை, போராட்டத்தை சொல்லித் தரவில்லை, துணிவை சொல்லித் தரவில்லை,

எனக்கு முன்பு பேசிய இளமாறன் நாம் தமிழர் கட்சியிலே மாநில பொறுப்பில் இருந்தவர். இளைஞரணி பொறுப்பாளராக இருந்தவர். நாம் தமிழர் வரலாற்றிலேயே முதல் மிகப்பெரிய மாநாட்டை கோவையிலே நடத்தி காட்டியவர் இளமாறன். இளமாறன் ஏன் கட்சியிலிருந்து வெளியே வந்தார்?

பாலசந்திரன் படுகொலையான புகைப்படம் வெளியில் வருகிறது. சேனல் 4-ல்  வெளியான அந்த புகைப்படத்தைப் பார்த்து எல்லாரும் கொந்தளிக்கின்றோம். நாம் நேசித்த தலைவனுடைய பிள்ளையை படுகொலை செய்திருக்கிறார்கள், ஒரு பிஸ்கட்டை கொடுத்து அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்திற்கு பின்பு படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படத்தையும் பார்க்கின்றோம்.  பத்து வயது குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றான். நம் தேசிய தலைவனுடைய மகன் படுகொலையாகி கிடக்கின்றான். அவன் முகத்தில் எந்தவிதமான அச்சமும் இல்லை. சிங்களர்களுடைய கோட்டையிலே அமர்ந்திருக்கக்கூடிய அந்த குழந்தையினுடைய முகத்தில் எந்த அச்சமும் இல்லை. ஏனென்றால் அவன் பிரபாகரன் மகன். விடுதலைப் புலிகளோடு வளர்ந்தவன்.

அந்தப் பிள்ளையை சுட்டுக் கொலை செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்து பதறிப்போய் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைகிறது. இளமாறனும், அவரது நண்பர்களும் கொந்தளித்து மத்திய அரசினுடைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதைப் பூட்டி, அதை மிகப்பெரும் ஒரு போராட்ட களமாக மாற்றி சிறைக்குச் செல்கிறார்கள். கோவை சிறையிலே அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் அடைக்கப்படுவதற்கு முன்பாக அவரிடம் சீமான்,  உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? எதுக்கு இந்த வேலையை செய்கிறாய். இப்படியே போராடிக் கொண்டிருந்தால் கட்சியை எவனும் அங்கீகரிக்க மாட்டான், கட்சியை தடை செய்து விடுவான், போராட்டத்தை நிறுத்து என்று சொல்லியிருக்கிறார். அந்த  காரணத்தினால் தான் அவர் வெளியேறினார்.

கட்சியில் இருந்து போராட முடியாதவர்களுக்கு எல்லாம் எதற்கு கட்சி? அவருக்கு சினிமா படம் எடுக்கவும் தெரியவில்லை. அரசியலும் தெரியவில்லை. வரலாறும் தெரியவில்லை. புரட்சி பண்ணவும் தெரியவில்லை. கோழைகளுக்கு எதற்கு கட்சி ? நாங்கள் எல்லாம் சீமானை மாதிரி மேடையில் மட்டும் வசனம் பேசும் ஆட்கள் இல்லை. ஆனால் களத்தில் நேருக்கு நேராக நின்று மோதக்கூடியவர்கள். ஒரு அடி கூட பின்னால் வைக்க மாட்டோம். எத்தனை போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். போராட்டங்களின் மூலமாக நாங்கள் வளர்ந்தோம்.

அன்பான தோழர்களே, நீங்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பிரபாகரனை நெஞ்சில் ஏற்று இருக்கக்கூடிய நீங்கள் வீதியில் இறங்க வேண்டும். மக்களை வென்றெடுக்க வேண்டும். நீங்கள் வென்றெடுக்கவில்லை என்றால் புல்லுருவிகள் தான் கட்சியை வளர்ப்பார்கள். நீங்கள் அதை செய்யவில்லை என்றால் தமிழ் தேசியத்தை அழிக்கக்கூடியவர்கள், தமிழினத்துக்கு துரோகம் செய்யக்கூடியவர்கள்தான் இந்த மண்ணிலே தங்கள் கட்சியை வளர்ப்பார்கள்.

விடுதலைப் புலிகள் என்று சொன்னால் ஒரு மாபெரும் மரியாதை, ஒரு பெரும் நேசம் இருக்கிறது.  அந்த மரியாதையையும், நேசத்தையும் ஏதோ சினிமா பட கதை சொல்வது போல, சாப்பாட்டு கதை சொல்வது போல, முனியாண்டி விலாஸ் கதையாக சொல்லியவர் சீமான். அதை கேட்கக்கூடிய இளைஞர்களுக்கெல்லாம் அதைப் பற்றியான பிம்பம் என்ன வரும்? 

2009க்கு பிறகு, அந்த கட்சியில் சேர்ந்த  இளைஞர்களிடத்தில் எல்லாம் விடுதலைப் புலிகளை பற்றி கேட்டால் எந்த அரசியல் வரலாறும் சொல்லத் தெரியாது. அவர்கள் கேட்டதெல்லாம் மீன் சோறு போட்டார்கள், கறி சோறு போட்டார்கள் என்பதைத்தான்.  தின்பதற்காக போன ஒரு ஆளு கட்சி நடத்தினால் தின்பதை பற்றி தானே அவர்களும் பேசுவார்கள். போராடுவதற்காக சென்ற கே.எம். ஷெரிப் போன்ற தோழர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் போராட்டத்திற்காக வந்தவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுடைய அரசியல் எல்லாம் முன்னுக்கு வராமல், இப்படிப்பட்ட ஒரு போலியான அரசியல் முன்னுக்கு வந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளுடைய அனைத்து சின்னத்தையும் தன்னுடையதாக மாற்றிக் கொண்டு விட்டார். விடுதலைப் புலிகள் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒரு சால்வையை போடுவார்கள். அதையும் அபகரித்து ஒரு பக்கம் தலைவர் முகத்தையும் மறுபக்கம் இவர் முகத்தையும் வைத்து சால்வை தயாரிக்கிறார்கள். கரப்பான் பூச்சியை பார்த்து கூட பயந்து ஓடுகிற இவரும், இந்திய படையை எதிர்த்து துணிந்து நின்ற பிரபாகரனும் ஒன்றா?

நான் எப்போதும் ஒருமையில்  பேசுபவன் அல்ல. ஆனால் இன்று பேச வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. இங்கே ஒரு கொச்சையான அரசியல் திரும்பத் திரும்ப கட்டி எழுப்பப்பட்டு, அதுதான் தமிழ் தேசியம் என்று சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு நபர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. விடுதலைப் புலிகள் சின்னங்களையெல்லாம் கொள்ளை அடித்து, அதன் மூலமாக பெரும் பொருளை ஈட்டி, அதை வைத்து அரசியல் நடத்துவதாக திராவிடத்திற்கும், பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் எதிரான அரசியலை கட்டமைத்துக் கொண்டிருக்கக்கூடிய இடத்திலே இவரின் மீதான எந்த மதிப்பும் வைத்துக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டிலே நமக்கென்று ஒரு மாற்று அரசியல் வேண்டும், வலிமையான அரசியல் வேண்டும், அதை நாம் செய்தாக வேண்டும். ஆனால் ஒரு பொய்யின் மீது அதை செய்ய முடியாது. ஒரு கோழைத்தனத்தின் மீது அதை செய்ய முடியாது. நமக்கென்று ஒரு மிகப்பெரும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பு என்னவென்றால், ஒரு லட்சம் இந்தியப் படையை விரட்டி அடித்த மேதகு பிரபாகரன் அவர்களுடைய அரசியலை படியுங்கள். அந்த அரசியலை படித்து அதன் மூலமாக அரசியலை கற்றுக் கொள்ளுங்கள். பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார் எழுதிய புத்தகங்கள் இருக்கின்றன. அவரது உரைகள் இருக்கின்றன. அதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய உரைகளைத் தேடி எடுத்து படித்து வாசித்து அதில் கற்றுக் கொள்ளுங்கள். இதிலிருந்துதான் அரசியல் பிறக்கும்.

இங்கு இருக்கும் இயக்கங்களுக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலை சீமானிடமிருந்து காக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. இங்கே தமிழ் தேசிய கூட்டணி என்று நாங்கள் உருவாக்கியதற்கு காரணம், தமிழ்நாட்டிற்குள்ளாக தமிழ் தேசியம் என்பது தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து, மிகப்பெரிய ஈகத்தை செய்து கட்டி எழுப்பியது. அந்த அரசியலைக் கொச்சைப்படுத்துகின்ற விதமாக, இழிவுபடுத்துகின்ற விதமாக, நடத்தப்படக்கூடிய அரசியலை நாம் வீழ்த்தியாக வேண்டியிருக்கிறது. இந்த மேடையில் சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்ததென்றால், நாங்கள் இவ்வளவு காலமாக அதைப் பேசியது இல்லை. 15 வருடமாக பேசியது இல்லை. ஏதாவது ஒரு புள்ளியிலே அவரிடத்தில் ஒரு மாற்றம் வரும் என்று நினைத்தோம்.

 கே.எம். ஷெரீப் அவர்கள் கூட எத்தனையோ முயற்சி எடுத்தார். அவரிடம் நேரடியாக பேசினார். கூட்டங்களுக்கு சென்றார். விவாதித்தார். அவர்தான் சீமானிடம்  பழனி பாபாவை அறிமுகப்படுத்துகிறார். பழனி பாபாவை சீமானுக்கு அறிமுகப்படுத்தியவர் தோழர் கே.எம். ஷெரீப். ஆனால் இன்னைக்கு அவர் (சீமான்)  மேடையில என்ன பேசுகிறார் என்றால்,  பழனி பாபாவை என்னைத் தவிர வேறு யாராவது தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்களா என்று பேசுகிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் சேகுவேராவையே நான்தான் தமிழ்நாட்டில் கண்டுபிடித்து கொண்டு வந்தேன் என்று சொன்னவர்.  2010-ல் நான் தான் சேகுவேராவை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னார். நல்ல வேளை பிடல் காஸ்ட்ரோவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று சொல்லாமல் விட்டார். சிறிய தம்பிகளுக்கு பிடல் காஸ்ட்ரோ பற்றியெல்லாம் தெரியாது. அவர்களுக்கு ஏற்றாற் போல கதை சொல்லலாம்,’ நம் தம்பி தான் அவர், தாடி வைத்திருப்பார், சண்டை நன்றாக போடுவார், தாடிக்கு எண்ணெய், ஷாம்பு எல்லாம் போட சொன்னேன், நல்ல சாப்பாடு போடுவார்’ எனப் பல கதைகளால் பிடல் காஸ்ட்ரோ பற்றி சொல்லி விட்டிருப்பார்.

இப்படிப்பட்ட ஒரு இழிவான ஒரு அரசியல் செய்து, விசில் அடிக்கக்கூடிய தம்பிகள் கூட்டத்தை வளர்க்கிறார். அவர்களைத்தான் பாதுகாக்க வேண்டும். அந்த இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு தேவை. அவர்கள்தான் இந்த இனத்தின் மீது, தமிழர்கள் மீது இனப்பற்றோடு வந்தவர்கள். தமிழர்களுக்கு ஒரு அரசியல் தேவை, அதிகாரம் தேவை என்று வந்த இளைஞர்கள். அவர் (சீமான்) பின்னால் போய் நிற்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஏனென்றால் எந்த கூட்டத்துக்கும் போவதில்லையே, எந்த கட்சிக் கூட்டத்துக்காவது போனால் தானே அவர்களுக்கு, அரசுக் கட்டமைப்பு என்றால் என்னவென்று  தெரியும்.

அவர்களிடம் என்ன சொல்லி இருப்பார் என்றால் குடந்தை அரசன் ஒரு தெலுங்கன், திருமுருகன் ஒரு தெலுங்கன் என இப்படி ஒவ்வொருவர் பற்றியும் அவர்களின் மண்டைக்குள் போட்டு வச்சிருக்கிறார்கள். அதன் பிறகு அவன் எதையுமே கேட்க, யோசிக்க மாட்டான். கடைசியில் சீமானை பற்றியான பிம்பம் என்னவென்று உண்மை தெரிந்த பிறகு எல்லாருமே தப்பாக இருக்கிறார்கள் என்கிற ஒரு விரக்தி மனநிலையில் வெளியேறுகின்றான்.

சீமான் மரியாதை நிமித்தமாக யாரை சந்திக்கிறார்? மரியாதை நிமித்தமாக வானதியை சந்திப்பார், மரியாதை நிமித்தமாக பொன்னாரை சந்திப்பார், மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்திப்பார். ஆனால் மரியாதை நிமித்தமாக என்றைக்கும் தமிழினத்துக்காக போராடக்கூடிய எவரையும் சந்தித்ததில்லை. என்றைக்காவது சந்தித்த போட்டோ வந்ததை பார்த்திருக்கீங்களா? தமிழ்நாட்டில் போராடக்கூடிய எவரையாவது மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்திருக்கிறாரா?

தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக ஒரு  மாற்று அரசியல் கொண்டு வரவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள், இங்கே மண்ணுக்காக போராடக்கூடிய பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் உறவு வைத்திருக்கிறாரா?அணுவுலை எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய உதயகுமார், ஸ்டெர்லைட் போராட்டத்தை நடத்திய பாத்திமா, கூடன்குளம் போராட்டத்தில் நின்ற  முகிலன் என இப்படி தமிழ்நாட்டில் பல்வேறு போராட்ட களத்தில் இருந்த யாரோடாவது அவர் உறவு வைத்திருக்கிறாரா? யாரையாவது மேடையில் ஏற்றி இருக்கிறாரா?

சாதி எதிர்ப்பு போராட்ட களத்தில் நின்றவர்கள், சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள், இப்படி யாரையுமே மேடையில் ஏற்றியதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நம்மாழ்வார் அவர்களை தெலுங்கு என்று சொல்லி அந்த கட்சி பரப்புரை செய்தது. அவர் உயிருடன் இருந்த போது மீத்தேன் போராட்டத்தை கட்டி எழுப்பி நடத்திக் கொண்டு இருந்தார். இவர் அப்பொழுதெல்லாம் அங்கு போய் சேரவில்லை. நம்மாழ்வார் இறந்தவுடன் இவர் தான் ஒரு விவசாயி என்பதை போல நம்மாழ்வார் படத்தை எல்லா இடத்திலும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார். நம்மாழ்வாருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? பூவுலகின்  நண்பர்களுடைய நிகழ்ச்சியிலே நம்மாழ்வார் வருவார், பேசுவார். பல்வேறு விவசாய சங்கங்களுடைய நிகழ்ச்சியிலே அவர் பேசியிருக்கின்றார். போராட்டகருத்துடைய  எல்லாரையும் ஒருங்கிணைத்திருக்கின்றார். குடந்தை அரசன் உள்ளிட்டவர்கள் எல்லாம் அவருடன் நின்றிருக்கிறார்கள். அடுத்தவர்களுடைய உழைப்பைத் தின்று வாழக்கூடாது என்கின்ற நேர்மையான எண்ணம் இந்த தலைவர்களுக்கு இருப்பதனால் அதை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் திருடுவார் சீமான்.  கேட்க யாரும் இல்லை என்கிற எண்ணம்.  நம்மாழ்வார் குடும்பத்திலிருந்து யாராவது உமக்கும் நம்மாழ்வாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் தான் உண்டு.

உங்களுக்கு (தம்பிகளுக்கு) உண்மையாகவே தமிழ்நாட்டிலே ஒரு மாற்று அரசியலை கட்ட வேண்டும் என்றால் அது மாற்று இயக்கங்களாக, கடந்த 40/50 ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கங்களோடு கைகோர்த்து தான் நீங்கள் உருவாக்க முடியும். அப்படி கைகோர்க்கவில்லை என்றால் ஒன்று நீங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். அப்படி உங்களுக்கு போராட்டத்தை நடத்துவதற்கு துணிவோடு ஒரு தலைவன் இருந்தால் அதை செய்யுங்கள். உங்கள் தலைவர் (சீமான்)தான் துணிச்சல் இல்லாதவராக இருக்கிறாரே, போராடுவதற்கான எந்த துணிச்சலும் இல்லாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு எப்படி ஒரு போராட்ட அமைப்பை கட்டுவீர்கள்?

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 150 லிருந்து 200 கூட்டங்கள், போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடியவர்கள் நாங்கள் . எத்தனை போராட்டங்கள் இங்கே ஆளுங்கட்சிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது என்று அவருக்கு (சீமானுக்கு) தெரியாது. ஒரு வாரத்துக்கு மூன்று நான்கு கூட்டங்களிலே இந்த அரசு செய்யக்கூடிய தவறுகளை கண்டித்து போராடுகின்றோம். ஆனால் எங்களை திமுக காரர்கள், தெலுங்கர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பிஜேபிக்கும் நாம் தமிழர் கட்சியினுடைய தலைமைக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒன்றாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் (சீமான்) இங்கே இருக்கக்கூடிய போராடக்கூடியவர்களை எல்லாம் தெலுங்குன்னு சொல்லுவார். ஆனால் பிஜேபி தலைவர் ஒருத்தரைக் கூட தெலுங்கு என்று சொல்ல மாட்டார். பெரியாரை தெலுங்கு என்று சொல்லுவார். இங்கு போராடக்கூடிய அனைவரையுமே தமிழர் அல்ல என்று சொல்பவர்,  பிஜேபி-யில் இருக்கக்கூடிய வானதி தமிழரா , தமிழிசை தமிழரா , அமரபிரசாத் ரெட்டி தமிழரா, அர்ஜூன் சம்பத் தமிழரா என்று கேட்க மாட்டார். அவருக்கு பிஜேபி எதிரியில்லை. வீட்டுக்குள்ளாக இருக்கக்கூடிய மூத்த சகோதரர்களுடன் நமக்கு சண்டை இருக்கிறது.  சண்டை போட்டுட்டு இருக்கும் போது, அந்த சமயத்துல வீட்டுக்குள்ளே ஒரு நல்ல பாம்பு வந்தது என்றால், அது நம் சகோதரனை கடிச்சு அவன் செத்ததற்கு பிறகு வீடு நமக்குத் தானே என  நினைப்பவன் எவ்வளவு முட்டாளோ, அதுபோல நமக்கும் திமுகவுக்கும் முரண்பாடு இருந்தாலும், அந்த சமயத்தில் நல்ல பாம்பாக பாரதிய ஜனதா கட்சி உள்ளே வருகிறது என்றால் நம்ம முரண்பாடை முதலில் ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல பாம்பை அடிக்காமல் இருப்போமா?

விடுதலை சிறுத்தைகளோ, அதிமுகவோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ அல்லது இதர அமைப்புகளோ திமுக கூட்டணிக்கு, 2009, 2014, 2016ல் போகவில்லை. 2021ல் போனார்கள் என்றால் பாஜக மோடி என்கின்ற ஒரு வடநாட்டான் இங்கே கொடி நட்டுக் கொண்டிருக்கிறான், மார்வாடிகளை சேர்த்து தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க வருகிறான் என்பதால் தானே. தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கக்கூடாது, தமிழ்நாட்டுக்கு சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை கொடுக்கக்கூடாது, தமிழ்நாட்டிலே ஆளுநரை வைத்து திருவள்ளுவர்  உள்ளிட்டவர்களை எல்லாம் சீரழிக்க வேண்டும், அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டும், தமிழ் மொழியை இழிவுபடுத்த வேண்டும், என்று டெல்லியிலே ஒரு கட்சியை வைத்து, அதன் மூலமாக தமிழ்நாட்டை பாடுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்றால் யாரு நமக்கு முதல் எதிரி? பிஜேபி தானே எதிரி. அவர் (சீமான்) மேடையில் மட்டும் பிஜேபிக்கு எதிராக பேசுவார். மோடிக்கு எதிராக பேசுவார். அவர்களுக்கு எதிராக பேசுவது போல சிரித்து விட்டு கடந்து போயிடுவாரு. ஆனால் ஒரு போராட்டத்தைக் கூட கட்டியது கிடையாது. ஒரு இடத்தை கூட பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவோ, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவோ போராட்டத்தை கட்டியது கிடையாது. நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் திமுகவை கேட்டாயா என்று கேட்பார்கள். திமுக சரியில்லை என்று சொல்லித்தான் நீங்கள் வந்தீர்கள். திமுகவை கை காட்டி விட்டு, திமுகவை விட அதிகமா கொள்ளை அடிக்க தயாராகுகிறீர்கள். ஒரு கவுன்சிலர் சீட் கூட இல்லாத நீங்கள் இவ்வளவு கொள்ளை அடிக்கிறீர்கள் என்றால்,  இத்தனை எம்எல்ஏ வைத்திருப்பவர்கள் ஏன் அதை செய்ய மாட்டார்கள்?

ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வெல்வதற்கு  யோக்கியம் இல்லை. திமுகவை மட்டும் எதிரி என்கிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எதிரி இல்லையா? பாஜக முதன்மை எதிரி.  டெல்லியிலிருந்து வந்திருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்தான் தமிழ்நாட்டிற்கு எதிரி. டெல்லியில இருந்து வந்தவன்தான் பிரச்சனை. நமக்கு இத்தனை சீரழிவு வந்திருக்கிறது என்றால் டெல்லிக்காரன் கொடுத்த நெருக்கடி, இங்கே அவன் கொண்டு வந்த சட்டங்கள், அவன் பறிக்கக்கூடிய திட்டங்கள் தானே. இங்கு மாநில அரசால் எந்த சட்டத்தை, எந்த திட்டத்தை கொண்டு வர முடிகிறது. ஒன்றுமே செய்ய முடியவில்லை.

நமக்கு அதிமுகவோடு முரண்பாடு இருக்கிறது, திமுகவோடு முரண்பாடு இருக்கிறது, அவர்கள் மாற்றாக ஒரு கட்சி உருவாக வேண்டும் என்பதிலே நமக்கு வேறுபட்ட கருத்து கிடையாது. வீடு இருந்தால் தானேய்யா ஓடு மாற்ற முடியும் என்று அண்ணா சொன்னார். வீட்டை இடித்து விட்டால் என்ன செய்ய முடியும்? இன்று தமிழ்நாட்டை பாரதிய ஜனதா கட்சியிடம் விட்டுக்கொடுத்துவிட்டால் என்ன செய்யும்? எடப்பாடியார் எல்லா இடத்திலும் இந்துத்துவ ஆட்களை கொண்டு வந்து ஆட்சியிலே, அதிகாரத்திலே அமர்த்துகின்ற வேலையை செய்தார். ஆர்எஸ்எஸ் செய்வதை எல்லாம் அனுமதித்தார். நாம் ஏன் எடப்பாடி  ஆட்சியை எதிர்த்தோம் என்றால் இதற்காகத்தான்.

நாங்கள் மாநில கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தை கூர் தீட்டவில்லை. மாநில கட்சிகளிடம் ஆயிரம் குறை இருக்கிறது. மாநில கட்சிகளினுடைய அதிகாரம் ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். மாநில கட்சியினுடைய ஊழலை கையாள முடியும், எதிர்கொள்ள முடியும், மாநில கட்சியோடு நீங்கள் உரையாட முடியும், கேள்வி கேட்க முடியும். அவர்களை எதிர்த்து போராட முடியும். ஆனால் டெல்லியில் இருக்கும் அதிகாரத்தை  யார் கேள்வி கேட்பது? இங்கு எம்ஜிஆர் நகரில் இந்த மூன்று (அம்பேத்கர், பெரியார், பிரபாகரன்) பெரிய ஆளுமைகளுக்கு கூட்டம் நடத்தக்கூடாது என்று ஒரு மாநில கட்சி சொல்லுமா?  ஆனால் டெல்லிக்காரன் சொல்லுவான். இந்த புரிதல் கூட இல்லை என்றால் எப்படியான அரசியல் செய்ய முடியும். 

இங்கே திருவள்ளுவர் சிலைக்கு கொச்சையாகக் காவி உடை போடுவது, திருக்குறளை சனாதனம் என்று சொல்லுவது, இந்தி மொழியை திணிப்பது, நமக்கான வரிவருவாய் நிறுத்தி வைப்பது என இத்தனையும் செய்யக்கூடியது யாரு? இதை செய்பவன் தானே நமக்கான எதிரியாக இருக்க முடியும். அதை எதிர்த்து போராடவில்லை என்று அதிமுகவையும் திமுகவையும் குறை சொல்லலாமே ஒழிய, அதிமுக திமுக மட்டும்தான் முதன்மை எதிரி என்று சொன்னோம் என்றால் பாரதிய ஜனதா கட்சியில் இணக்கமாக இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

ஆக, இங்கே முதன்மை எதிரியாக இருக்கக்கூடிய அந்த இந்துத்துவத்தை, சாதிய இந்துத்துவத்தை, சனாதன இந்துத்துவத்தை எதிரியாக முன்னிறுத்தாதவன் தமிழ் தேசியவாதி கிடையாது. சாதியை குடி என்று சொல்லி ஒருவன் ஏமாற்றுகிறான் என்றால் அவன் தமிழ் தேசியவாதி கிடையாது. குடி என்றால் பழங்குடிக்கு தான் குடி என்ற பெயர் சொல்வார்கள். ஏனென்றால் பழங்குடிகளுக்குத்தான் தனி சொத்து கிடையாது. ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு கிடையாது. மீனவர்களை பழங்குடி என்று சொல்லுகிறார்கள். காரணம் மீனவனுக்கு கடல் பொதுவானது. கடலில் ஏக்கர் போட்டு பிரித்தா  வைக்க முடியும்?

 தனியாக காட்டிலே வசிக்கக்கூடிய பழங்குடிகளை குடிகள் என்று சொல்லுகிறோம். ஏனென்றால் காடு பொதுவானது. அதனால் குடி என்று சொல்லுகிறோம். அவனை ஜாதி என்று சொல்வதில்லை. ஆனால் தனி சொத்திலிருந்து ஏற்றத்தாழ்வு வரை வைத்திருக்கக்கூடிய அந்த கட்டமைப்பை ஜாதிதான் கொண்டு வந்தது. ஜாதி ஒருபொழுதும் குடியாகாது. குடி என்பது ஜனநாயக பண்பு கொண்டது. ஜாதி என்பது சனாதன பண்பு கொண்டது. அந்த ஜாதியை எவனாவது குடி என்று சொன்னால் அவன் சாதி வெறியன், அவன் சாதி வெறியன், அவன் சாதி வெறியன் என்று சொல்லி சாதி ஒழிக்கக்கூடிய தமிழ் தேசியத்தைத் தான் தமிழரசன் உயர்த்தி பிடித்தார். அந்த தமிழரசன் சொன்னதுதான் தமிழ் தேசியமே ஒழிய, இங்கே வந்திருக்கக்கூடிய சீமான்களும், கோமான்களும் சொல்வதெல்லாம் தமிழ் தேசியம் இல்லை. அந்த தமிழ் தேசியக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »