தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியாரின் முழக்கம் மொழி வழி மாநிலமாக உறுதிப்பட்ட நாள் தமிழ்நாடு நாள். எல்லை மீட்புப் போராளிகளின் உயர் அர்ப்பணிப்பால் எல்லைகள் வகுக்கப்பட்டு தமிழர்களிடம் கையளிக்கப்பட்ட நாள். இந்நாள் அனைத்து தமிழின உணர்வாளர்களாலும் தமிழர்களின் தாயக நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுமைக்கும் உரிமை கொண்டாட தமிழர்களே உரிமையுள்ளவர்கள் என்பது அண்ணல் அம்பேத்கரின் வரலாற்று ஆய்வுக் கூற்றாக இருக்கிறது. அவ்வாறு பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்டு வாழ்ந்த தமிழினம் தென்னகத்தில் சிறு நிலப்பரப்பில் சுருங்கியது. இதற்கு தமிழினை வேர்ச்சொற்களாகக் கொண்டு பரவிக் கிடக்கும் திராவிடப் பழங்குடி மக்களே இன்னமும் சான்றாக இருக்கிறார்கள். அந்நியப் படையெடுப்புகளாலும், வந்தேறிகளான பார்ப்பனிய சூழ்ச்சியாலும், தமிழர்கள் வரலாற்றை மறந்ததாலும் குறுகிப் போன தமிழர்களின் நிலப் பரப்பளவை மேலும் குறைப்பதற்காக சூழ்ச்சிகள் மேற்கொள்ளும் போதுதான் தமிழர்கள் விழித்தனர். எல்லை மீட்புப் போராளிகள் களமாடினர். திராவிட இயக்கத்தாரால் உருவான தமிழினப் பற்று தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்தது. கடுமையான போராட்டங்களால் எல்லைகள் உறுதியாயின. முந்தைய வரலாற்று ரீதியான நிலப் பரப்பளவு குறித்த ஏக்கம் நிறைந்திருந்தாலும், இன்று தமிழர்களுக்கு உறுதிப்பட்ட எல்லைப் பரப்புகளைக் கொண்டாடுவதே, இனியும் நாம் விழிப்புணர்வு அற்றுப் போவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என தமிழின உணர்வாளர்களால் சிறப்பிக்கப்படும் நாளே தமிழ்நாடு நாள்.
இந்திய துணைக்கண்ட கட்டமைப்பிற்குள் நவம்பர் 1, 1956 ல் ஒவ்வொரு இனமும் எல்லை வரையறை வழியான நில உரிமையைப் பெற்றது. தமிழ்நாட்டின் வட எல்லையாகத் திருத்தணியும், தென் எல்லையாக கன்னியாகுமரியும் இருக்கின்றன. தமிழ்நாடு எல்லை மீட்பு என்பது நிலம் சார்ந்தது மட்டுமல்ல, தமிழர்களின் மானம் சார்ந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் வசம் இருந்த பல தமிழர் பகுதிகளை மீட்கும் முனைப்புடன் களம் கண்ட தியாகப் போராளிகளை நினைவு கூற வேண்டிய நாள் இது. அதே நேரத்தில் நிலத்தின் வழி உரிமையைப் பெற்ற தமிழினம் மற்ற உரிமைகளையும் பெற்று இறையாண்மையைத் தக்க வைத்துக் கொண்டதா அல்லது இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் ஓர்மைத் தன்மையால் உரிமைகளை இழந்து வருகிறதா என்கிற விவாதமே இன்று முனைப்பு பெற்றிருக்கிறது.
திராவிடக் கோட்பாட்டின் தத்துவார்த்த பின்னணியில் இருந்து, இந்திய ஆதிக்க பார்ப்பனிய கட்டமைப்பிற்குள் வலுபெற்றிருக்கும் சாதி, மதம் போன்ற சிக்கலுக்குள் இருந்து தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என எண்ணியவர் பெரியார். தேர்தலில் ஈடுபடும் திராவிடக் கட்சியாக இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டாக வேண்டிய சூழலில், அந்த கட்டமைப்பிற்குள் தன்னாட்சி உரிமைகளைப் பெற வேண்டும் எனப் பேசியவர் அண்ணா. அந்தப் பின்னணியில் தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சியும், உரிமை இழப்புகளும் பரந்த தளத்தில் இன்று விவாதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மாநில அரசின் பட்டியல், ஒன்றிய அரசின் பட்டியல், பொதுப்பட்டியல் என பல துறைகளின் அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டன. இந்திய ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு, வெளியுறவு, நிதி போன்ற அதிகாரங்கள் மட்டுமே ஒன்றிய அரசின் வசம் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது, இந்திரா காந்தி தலையிலான காங்கிரஸ் அரசு, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, வனப் பாதுகாப்பு, நீதி போன்ற முக்கியமான அதிகாரங்களை பொதுப் பட்டியலில் மாற்றிக் கொண்டார். இரயில்வே, தந்தி, அஞ்சல், வருமான வரி என 99 அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் உள்ளது. போக்குவரத்து, மாநிலத்திற்குள் நடக்கும் தொழில், வணிகம், காவல், மீன்பிடிப்பு போன்ற 66 அதிகாரங்கள் மாநில அரசின் கைகளில் உள்ளது. 47 அதிகாரங்கள் பொதுப் பட்டியலில் உள்ளன. பொதுப்பட்டியலையும் படிப்படியாக ஒன்றிய அரசே மேலாதிக்கம் செய்யும் சூழல் அன்றைய நிலையிலும் அமைந்தது. இன்றைய மோடி அரசோ மாநில அரசின் உரிமைகளை மொத்தமாய் சுருட்டுவதில் முனைப்புடன் செயல்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்திலும், ஒன்றியத்திலும் ஒரே கட்சியின் ஆட்சியே இருந்ததால் மாநில உரிமைகள் சமரசம் செய்து கொள்ளப்படும் சூழல் நிலவியது. இதனால் தேசிய இனங்களின் உரிமை சிதைந்த ஒன்றாக மாறிய நிலையில், மாநில நலன்கள் குறித்து பேசும் மாநில கட்சிகள் உருவாயின. இந்த காலகட்டத்தில்தான் அண்ணாவின் தன்னாட்சி உரிமை முழக்கம் முதன்மை பெற்றது. தமிழ்நாட்டின் தன்னுரிமைகள் சுரண்டப்படுகிறது என்னும் கருத்தாக்கங்கள் வலுவடைந்தது.
இந்தக் கருத்தாக்கங்கள் மிகவும் முக்கியமான மூன்று உரிமைகளை மாநில மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என விவாத களத்தில் நகர்த்தியது. அதில் முதலாவதாக தனிநபர் உரிமை. தனி நபருக்கான கருத்து சுதந்திரம், மத வழிபாட்டு உரிமை, அரசைக் கேள்வி கேட்கும் உரிமை எனப் பல உரிமைகளை உள்ளடக்கியது. மோடி ஆட்சியில் இந்த உரிமைகள் காப்பாற்றப்படுகிறதா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. மோடி அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களும், இயக்கவாதிகளும் குறி வைத்து கைது செய்யப்படுகிறார்கள். மதமாற்று தடைச் சட்டத்தை கொண்டு வர துடிக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் என்னும் இரைச்சலை இந்துவாக இருக்கும் நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடும் மக்கள் மீதும் திணிக்கிறார்கள். கிறித்துவர்களை, இஸ்லாமியர்களை அதே கூச்சலால் தாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள். தனிநபர் உரிமை என்பது மோடி ஆட்சியில் கனவாகவே இருக்கையில் ஒரு இனத்தின் தன்னுரிமை அடகு வைக்கப்படும் சூழலே உருவாகிறது.
தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது தன்னுரிமைக்கான இரண்டாவது நோக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழர்களின் நீண்ட காலப் பண்பாடாகத் தொடர்ந்து வருகிற ஜல்லிக்கட்டை முடக்குவதற்கு பாஜக அரசு காட்டிய முனைப்பு அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் தனித்த அடையாளங்களை அழிக்க வேண்டும் என்கிற வன்மத்தில் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமையைக் கூட நீதிமன்றத்தில் எதிர்த்து வாதிட்டனர். மேலும் பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்திற்காக ஆளும் மோடி அரசு, தமிழர்களின் பண்பாட்டு இலக்கியங்களின் மீது சனாதன சாயத்தைப் பூசுகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் போன்ற நம் தொல் இலக்கியங்களை ஆரியப் பண்பாட்டில் செரிக்க வைக்கும் முயற்சிகள் தொடர்கிறது.
மூன்றாவதாக மிக முக்கியமான உரிமையாக இருப்பது நிலவியல் உரிமை. தன் மக்கள் வாழும் நிலப்பரப்பின் எல்லைக்குள் தனக்கான சட்டம் வகுத்துக் கொள்ளும் உரிமை அல்லது சட்டத்தின் வழியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமையை ஒரு இனம் அடைந்தால்தான் தன்னுரிமை பெற்ற இனமாக கூறிக் கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரவை மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்றினால், அதைக் கிடப்பில் போடுவதற்கென்றே ஒரு ஆளுநரை தேர்ந்தெடுத்து அனுப்பிய மோடி அரசினால் இந்த உரிமை தமிழ்நாட்டிற்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் தமிழர்களின் முக்கியமான நலத்திட்டங்கள் முடங்கிக் கிடக்கிறது. தமிழர்கள் புறக்கணிக்கும் நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்க மசோதா, பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா என 25 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. இந்த உரிமையிலும் தமிழினத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாமல் மோடி அரசு செய்து விட்டது.
தன்னுரிமை பெறும் இனம் நிதித் தன்னாட்சியிலாவது தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சியின் 9 ஆண்டுகளில் பனியா குஜராத்தி மார்வாடி நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி செய்த தொகை மட்டும் 25 லட்சம் கோடியென தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது. ஆனால் ஏழை, எளிய சாமானிய மக்களின் தலையில் நிதிச்சுமையை இறக்குகிறது. நமக்கான ஜி.எஸ்.டி வரிகளின் நிலுவைத் தொகைகளை தராமல் இழுத்தடித்து நம் மாநிலத் தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளச் சொல்கிறது. நாம் வரியாக 2 ரூபாயை செலுத்தினால் நமக்கு திரும்பவும் 40 பைசாவே வரும் வகையில் நம் நிதித் தன்னாட்சி உரிமை சுரண்டப்படுகிறது.
தமிழர்களிடம் வளங்களின் தன்னாட்சி கூட இல்லை. ஒன்றிய அரசு நிறுவனங்களால் காவிரிப் படுகையில் எடுக்கப்பட்ட பெட்ரோலிய நீர்ம வளங்கள் குறித்து எந்த கணக்கீடும் இல்லை. அதற்கான இழப்பீடும் இல்லை. மக்களின் நிலங்களைப் பறித்து நிலக்கரியை சுரண்டிக் கொள்ளையடித்து சுற்றுச் சூழலில் பாதரச நச்சை பரப்புகிறது ஒன்றிய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். அந்நிறுவனத்தின் வேலைக்கு கூட தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வடநாட்டுக் கொள்ளை நிறுவனங்கள் மலை வளத்தை சுரண்டுகின்றன. வன வளம், கடல் வளம் என வளம் தரும் அனைத்து துறைகளிலும் ஒன்றிய அரசின் ஆதிக்கப் பிடியில் இருக்குமாறு மோடி அரசு சட்டத்தை திருத்தி வைத்திருக்கிறது. நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் வேதாந்தா நச்சாலைக்காக நம் தமிழர்களின் உயிர்கள் பலியிடப்பட்டன. வளங்களின் இறையாண்மையை முற்றும் இழந்த இனமாக மாற்றப்பட்டு விட்டோம்.
தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரை தராமல் கர்நாடக மாநிலம் அலைக்கழிப்பதை இந்திய ஒன்றிய அரசு கண்டு கொள்வதில்லை. எல்லைப் பிரிவினையில் தமிழர்களாக இல்லாமல் இந்தியத் தேசியவாதிகளாக நடந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைகளால் காவிரி உற்பத்தியாகும் குடகுப் பகுதி கர்நாடகாவிற்குச் சென்றது. அதன் விளைவுகளை நூற்றாண்டுகளாக அனுபவிக்கிறோம். மேலும் கல்வி உரிமையில் தலையிட்டு நீட் தேர்வை, தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது. இந்தியைத் திணிப்பதில் மும்முரமாக செயல்படுகிறது.
ஒரு இனத்தின் அனைத்துத் தடங்களையும் தன்னகத்தே பாதுகாத்து வைப்பது மொழி. தன்னாட்சி கோரும் இனம் அதன் மொழியிலிருந்தே அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே வரலாறு. அம்மொழி வளர்ச்சி அடைந்தால்தான் அந்த இனத்தினுடைய பொருளாதர வளர்ச்சியும், சமூக மேம்பாடும், பண்பாட்டு உயர் நிலையும் அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது என்பது அர்த்தம். ஆனால் இந்திய சூழலில் தமிழுக்கான வளர்ச்சி வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக எழுகிறது. 2014-ம் ஆண்டிலிருந்து சுமார் 30 ஆயிரம் மக்கள் மட்டுமே பேசும் ஆரிய மொழியான சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1,487 கோடி ரூபாயும், 8 கோடி பேரின் தாய்மொழியான தமிழுக்கு வெறும் 74 கோடி ரூபாயும் ஒதுக்கியிருக்கிறது என்றால் தமிழ் மொழியை வஞ்சிக்க வேண்டும் என்ற அடிப்படை அல்லாமல் வேறென்ன காரணமாக இருக்க முடியும். அரசு அதிகாரத்திற்குள் மொழியின் பங்கு இல்லையென்றால் அம்மொழி வரலாற்றில் பதிவு செய்யப்படாத மொழியாக மாறும். மோடி அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே பெயர் வைக்கப்படுகிறது. நம்முடைய வரியில் ஒரு மொழியை வளர்த்து விடும் இப்போக்கினில் ஒவ்வொரு இனத்திற்கும் மொழித் தன்னாட்சி மறுக்கப்படுகிறது. திணிப்பு மொழியான இந்தி மொழியின் ஆட்சியையே மோடி ஆட்சி நடத்துகிறது.
இந்தியா குடியாட்சி என்ற நிலையிலிருந்து பேரரசு என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே மாநிலங்களின் உரிமைப் பறிப்புகள் கூறுகின்றன. இந்தியக் கட்டமைப்பின் சோசலிசத் தன்மை பொதுத் துறைகளால் இதுவரை பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட குசராத் பனியா மார்வாடி முதலாளிகளுக்கு பொதுத்துறைகளை தாரை வார்க்கும் சூழலில், மாநிலங்களின் உரிமையை இந்திய ஒன்றியம் வேட்டையாடுகிறது.
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைகள் முற்றிலுமாக சிதைந்த காலத்தில்தான் அவர்கள் தனியாட்சி கோரி நகர்ந்தார்கள். ஐநா சாசனத்தின் இரண்டாம் பிரிவும், ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதை உருவாக்கிக் கொள்வதற்கான முழு உரிமையும் உண்டு என்று சொல்கிறது. தன்னாட்சிக்கான கூறுகள் அழிக்கப்படுகையில், சுயமரியாதை கொண்ட ஒரு இனம் தனியாட்சி நோக்கியே நகரும்.
குடியரசு என்றால் இந்திய வளங்களையும், உரிமைகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் இந்தியா என்பது இந்துத்துவ காலனியாக, ஆரியக் காலனியாக மாறிப் போயிருக்கும் காலத்தில்தான் தமிழர்களின் போர்க்குரல் உயர்கிறது. இந்தப் போர்க்குரலை கற்றுத் தந்தவர் பெரியார். இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தப் போர்க்குரலை உயர்த்தியவர் அண்ணா. தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான குரல்களாக இவ்விரு குரல்களும் இந்திய பார்ப்பனிய பனியா ஆதிக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒலித்தன. அக்குரல்களின் வழிகளில் பயணிப்போம். தமிழ்நாடு நாளினை தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகள் வலுவடையும் நாளாகக் கொண்டாடுவோம்.