ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்

ஆரிய திராவிடப் போர் இன்னும் முடியவில்லை என்பதற்கு, சமீபத்தில் செம்மொழித் தமிழாய்வு மையம் ஏற்பாடு செய்த அகத்தியர் பற்றியான நிகழ்ச்சிகளே சான்றாக இருக்கிறது. ’பார்ப்பனர்களின் புராணப் புரட்டுகளால் உருவாக்கப்பட்டவர் அகத்தியர்’. அவரே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியரின் ஆசிரியர் எனும் கட்டுக்கதையை நீண்ட நாட்களாக பார்ப்பனர்கள் சொல்லி வருகின்றனர். இதனை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்காகவே, தமிழர்களின் கல்வி நிறுவனங்களை தொடர்பு கொண்டு இப்போட்டிகளை நடத்தியுள்ளனர்.  

இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு துணைத் தலைவராக கடந்த வருடம் 2024-ல் பார்ப்பனரான மருத்துவர் சுதா ஷேசய்யன் நியமிக்கப்பட்டார். செம்மொழி தமிழின் ஆய்வுத்தளத்தில் பணி செய்த தமிழறிஞர்கள் பலர் இருக்க, தமிழாய்வுகள் குறித்தே அறிந்திராத, ஆர். எஸ்.எஸ் பின்புலம் கொண்ட பார்ப்பனரான இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் நியமனம், பார்ப்பனர்களின் புராணப் புளுகல்களை எல்லாம் உண்மையென நம்ப வைக்கும் தந்திரம் என தமிழர்கள் கண்டனம் தெரிவித்தும், மோடி அரசு செவி சாய்க்காமல் அவரையே நியமித்தது.  

தமிழ் என்பது இயற்கையின் ஒலிகளைக் கொண்டு உருவானது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதன் வேர்ச்சொல்லை கொண்டே இந்திய மொழிகள் பலவும், அயல்நாட்டு மொழிகள் முதற்கொண்டு உருவாகியுள்ளது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றாக இருக்கிறது. இப்படியான சிறப்பியல்பு கொண்ட தமிழை ‘சிவனின் உடுக்கையிலிருந்து வெளிவந்த இரு மொழிகளில் ஒன்றே தமிழ், மற்றொன்று சமஸ்கிருதம்’ என நீண்ட நாட்களாக பல தளங்களிலும் பரப்பி வருகின்றனர். அவ்வாறு சிவனிடமிருந்து பெற்ற தமிழைப் பரப்புவதற்காக அகத்தியர் தென்னாடு வந்து, தொல்காப்பியருக்கு ஆசிரியராக ஆனார் எனப் போலியாக சித்தரிக்கின்றனர். 

தமிழர்கள் கீழடி போன்ற தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ் மொழியின் தொன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கும் போது, பார்ப்பனர்கள் ஆய்வுகளின்றி கற்பனைகளால் கட்டுக்கதைகளை நிரப்பி தங்களின் மேன்மையை நிறுவ முயல்கின்றனர். கீழடி தொல்லியல் ஆய்வில், நெல் உமி மூலம் கிடைத்த தமிழி எழுத்து 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிறுவியுள்ளது. இந்த ஆய்வு கூட இறுதியானதில்லை, தமிழி என்கிற தமிழர்களின் ஆதி மொழி இன்னும் பல காலம் முந்தையதாகக் கூட இருக்கலாம் என்றும் தொலியலாளர்கள் கணிக்கின்றனர்.

ஆனால் சமஸ்கிருதத்தைப் பற்றி ஆய்வு செய்கையில் அதனை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலிருந்து பிறந்திருக்கலாம் என்றே இந்திய ஆய்வாளர்கள் மட்டுமல்ல, உலக ஆய்வாளர்களே முன்வைக்கின்றனர். யுரேசியாவின் (ரஷ்யா மற்றும் ஐரோப்பா) ஸ்டெப்பி புல்வெளிகளில்  இருந்து வந்தவர்களின் மொழிக் குடும்பத்திலிருந்து பிறந்த மொழி என ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘நேச்சர்’ எனும் இதழில் இதனை வெளியிட்டுள்ளனர். இதற்காக யுரேசியா முழுவதும் தொல்பொருள் தளங்களிலிருந்து 435 நபர்களிடமுள்ள பண்டைய மரபணுவை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள், ஆரியர்களே, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் மொழியையும், பண்பாட்டையும் பரப்பியவர்கள் என கட்டமைக்கப்பட்ட பொய்யை உடைத்திருக்கிறது. ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதம் என்பது அந்நிய மொழி என்பதையும், அதன் வழி வந்த இந்தியும் அந்நிய மொழியாகவே இருக்க முடியும் என்பதையும் அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வுகளை எல்லாம் மறைக்கவே, சிவனின் உடுக்கையில் இருந்து தமிழும், சமஸ்கிருதமும் பிறந்தது என தமிழுக்கு இணையாக புராணங்களின் மூலமாக சமஸ்கிருதத்தை நிறுவப் பார்க்கின்றனர். அதற்கு அகத்தியர் என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அகத்தியர் பற்றி கூறப்படும் புனைவுக் கதைகளை 1931-ம் ஆண்டிலேயே சென்னை கலாசாலை தமிழ் ஆசிரியராக இருந்த திரு. நமச்சிவாய முதலியார் என்பவர் எழுதிய ‘அகத்தியர் ஆராய்ச்சி’ என்னும் நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

பார்ப்பனர்கள், புராணங்களில் அகத்தியர் பற்றி எழுதி வைத்துள்ள பல புளுகு மூட்டைகளை ஆசிரியர் இந்நூலில் கட்டவிழ்க்கிறார். அகத்தியர் விந்திய மலையை அடக்கிய கதை, இந்திரனின் சாபத்தால் அக்கினி அகத்தியரான கதை, பிரம்மனின் காம வீரியத்தினால் கும்பத்தில் விட்ட விந்துவிலிருந்து கும்பமுனி என்கிற பெயர் பெற்ற கதை, சிவனின் திருமணத்தால் தேவர்கள் எல்லாம் வடபுலத்தில் கூடும் போது, தென்புலம் தாழ்வானதை சமமாக்க அகத்தியரை அனுப்பி வைத்த கதை என எண்ணிலடங்கா கதைகளைப் பற்றி புராணங்களில் கூறியுள்ளதை விரிவாக திரு. நவச்சிவாய முதலியார் அவர்கள் எடுத்துரைக்கிறார்.

மேலும் பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், பாண்டிய மன்னனின் உதவி பெற்று முதல் தமிழ்ச்சங்கம் நிறுவியதாகவும், அச்சங்கத்தில் 4400 ஆண்டுகள் சிவன், முருகன், இந்திரன் முதலிய கடவுளர்கள் இருந்ததாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். இரண்டாம் தமிழ் சங்கத்தை தொல்காப்பியர் மற்றும் சில அறிஞர்களைக் கொண்டு அகத்தியர் நிறுவியதாகவும், இரண்டு சங்கமும் சேர்ந்து 8140 ஆண்டுகள் இருந்ததாகவும் புராணங்களில் உள்ளன. ஆக இத்தனை ஆண்டுகள் அகத்தியர் உயிரோடு வாழ்ந்தார் எனப் புனைந்துள்ளதைப் பற்றி ‘அகத்தியர் ஆராய்ச்சி’ புத்தகத்தில் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இருக்க, அகத்தியரால் எழுதப்பட்ட இலக்கண நூல் என்று எதுவும் இல்லை. இந்த இன்மையை மறைப்பதற்காகவும் ஒரு புராணக் கதையை எழுதியுள்ளனர். அக்கதையில், அகத்தியர் தனது மாணவரான தொல்காப்பியரிடம் தனது மனைவியை அழைத்து வரச் சொல்கிறார். அதற்கு ‘முன்னாக, பின்னாக நாற்கோள் அளவில் நின்று’ என்கிற விதிப்படி மனைவியை அழைத்து வர வேண்டும் என கட்டளையிடுகிறார், தொல்காப்பியரும் அவ்வாறே அழைத்து வர, இடையினில் திடீரென ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கில் அகத்தியரின் மனைவி சிக்கினார். அதன் காரணமாக, அப்பெண்ணைக் காப்பாற்றியதால், அகத்தியர் கூறிய விதிப்படி அழைத்து வர முடியவில்லை எனத் தொல்காப்பியர் அகத்தியரிடம் கூறுகிறார்.

இதனால் சீற்றமடைந்த அகத்தியர் ‘நீ சொர்க்கம் புகாது ஒழிக’ என தொல்காப்பியருக்கு சாபமிட, உடனே தொல்காப்பியர் ‘அகத்தியம் இறந்து படுக’ என சாபமிட்டதால் அகத்தியரின் தமிழ் இலக்கணம் இல்லாமல் போய்விட்டது எனப் புராணக் கதைகளில் எழுதியுள்ளனர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் என்பவர் இந்த கதையைக் கூறுகிறார். ஆனால் தொல்காப்பியத்திற்கு இவருக்கு முன்பாக, முதலில் உரை எழுதிய இளம்பூரணர் கூறாத செய்தி இது. இதனை நச்சினார்க்கினியார் இடைச் செருகலாக கூறியுள்ளார். இப்படியான இடைச்செருகல்கள் மூலமாக விரிவாக்கப்பட்டதே அகத்திய பிம்பம் என ‘அகத்தியர் ஆராய்ச்சி’ நூலின் ஆசிரியர் எழுதுகிறார்.

தொல்காப்பியர் தமது தமிழ் இலக்கண நூலில், தமிழ் மொழியின் ஒலி உச்சரிக்கும் விதங்களைப் பற்ற அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்குகிறார். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பல தமிழ்ச் சான்றோர் இருந்ததாக, அவர் மேற்கோள் காட்டும் வரிகள் தெரிவிக்கின்றன. அந்த சான்றோரையே, புராணங்களில் குறிப்பிடும் அகத்தியர் என நிறுவ முயல்கின்றனர்.

தொல்காப்பியர் இயல் தமிழில் மட்டுமே இலக்கணத்தை படைத்துள்ளார். ஆனால் அகத்தியர் இயல், இசை, நாடகம் என மூன்றிலும் இலக்கணத்தைப் படைத்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் இதில் நாடகம் என்பது தமிழ்ச் சொல்லே இல்லை என இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு சொல்லே தமிழாக இல்லாத போது, அதற்கே இலக்கணம் படைத்துள்ளதாகக் கூறுவது அகத்தியர் என்னும் பிம்பத்தின் மூலமாக, பார்ப்பனியம் மேன்மையை நிலைநிறுத்த செய்யும் பித்தலாட்டங்கள் என்பதையே அறிய முடிகிறது.

அகத்தியர் என்பவர் பதிணென் சித்தர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது. சித்த மரபு என்பது கிபி 5ம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலர் மரபிலிருந்து துவங்குகிறது. பல சித்தர்கள் அகத்தியர் பெயரிலே நூல்கள் எழுதியிருக்கலாம் என்கிற கருதுகோளும் இருக்கிறது. சித்தம் என்பதற்கு அகம் எனும் பொருளும் உண்டு. அகத்தியர் பெயரில் பண்டைய மூலிகை மருத்துவம், வானவியல், யோகம், வர்மம் போன்ற பல துறைகளில் நூல்கள் வெளிவந்துள்ளன. இவை யாவும் வார்த்தைச் செறிவுகள் கடினமான சங்க இலக்கியப் பாடல் வகைமையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படைப்புகள் தற்காலத் தமிழில் தான் உள்ளன.

மேலும், அகத்தியர் கிறித்துவத்தை தழுவியதாகவும் ‘ஞானம் நூறு’ என்ற புத்தகத்தில் 30 பாடல்கள் பாடியுள்ளதாகவும், அதனை உலகக் கிறித்துவப் பேரவை 1983- 2014 வரை ஐந்து பதிப்புகள் வரை  வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. கால்டுவெல் அவர்கள் இந்நூலில் இருந்து ஒரு பாடலை ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம்’ நூலில் மேற்கோளாகக் காட்டுகிறார் என தமிழாய்வாளர் பொ.வேல்சாமி அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்கான மேலதிகமான ஆய்வுகளும் தேவைப்படுகிறது.

https://www.facebook.com/share/1BfrgQRpNt

இவ்வாறு முதலில், இந்தோ- ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதம் இம்மண்ணிற்கு உரிய மொழியல்ல என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்த ஆய்வு, சிவனின் உடுக்கையில் இருந்து சமஸ்கிருதம் பிறந்திருக்க முடியாது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அதற்கடுத்து, கற்பனைக்கு எட்டாத புராணக் கதைகளின் மூலமாக அகத்தியர் சிவனின் கட்டளைப்படி இங்கு வந்தார் என்பவை யாவும் புனைவுகள் என்றே புலனாகிறது. அதன் பிறகு தமிழில் முதல் இலக்கணம் என்று அறியப்படும் தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியரை மட்டுப்படுத்துவதற்காக, அவரின் ஆசிரியரே அகத்தியர் என்ற நம்ப வைக்கப்பட்டவை அனைத்தும் புளுகல்கள் என்பதையும் அறிய முடிகிறது. இறுதியில் 18 சித்தர்களில் ஒருவராக அகத்தியர் இருக்கலாம் என்கின்ற கருதுகோள்களுக்கே அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன.

சித்த மரபு என்பது தமிழர்களின் ஞானமரபாகவே அறியப்படுகிறது. அதனை செரித்துக் கொள்ளவே பார்ப்பனியம் இடைக்கால சித்த மரபில் தோன்றிய அகத்தியரை உள்வாங்கி, அவருக்கு புராணக் கதைகளைப் பூசி தமிழ் மொழியின் பிறப்பையே கட்டமைத்தவர் என்கிற போலித்தனத்தை ஊட்டுகிறது என்பதுவே அம்பலமாகிறது.

இந்தப் போலித்தனத்தை வளர்த்தெடுக்கவே பார்ப்பனர்கள் காலம் காலமாக அகத்தியரை கையில் எடுக்கின்றனர். அந்நிய மொழியான சமஸ்கிருதத்துக்கு பல நூறு கோடிகளை வாரி வழங்கி இந்தப் புராணப் பொய்களை மாணவர்கள் மத்தியில் பரப்பி பார்ப்பன மேன்மையை வலுப்படுத்துகின்றனர். யுரேசிய ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்த பார்ப்பனர்கள், தங்களின் பார்ப்பனிய மேன்மையைத் தக்க வைக்க, அகத்தியர் என்னும் பிம்பத்தை தூக்கிப் பிடிக்கின்றனர். அதற்கெனவே  இப்படியான போட்டிகளை நடத்துகின்றனர்.

இன்று பாஜக அரசு வற்புறுத்தும் மும்மொழிக் கல்வித் திட்டத்தின் வழியான இந்தித் திணிப்பும், அதன் தாய்மொழியான சமஸ்கிருதத் திணிப்பின் ஆரம்பப் படிநிலையே ஆகும். இதனை ஏற்கும் வரை தமிழ்நாட்டின் கல்விக்குரிய நிதியைத் தர மாட்டோம் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மிரட்டுவதும் நடக்கிறது.

செம்மொழித் தமிழாய்வு மையம் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி மற்றும் ஆய்வுக்கானதே தவிர, பார்ப்பன முகாம்களின் புரட்டுகளுக்குரிய இடமல்ல. இந்தப் புராணப் புரட்டுகளை எல்லாம் தமிழ் துறை சார்ந்த அறிஞர்கள் தோலுரித்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்டைய வரலாறு மூலமாகவும், தமிழ் துறைசார் குறித்தான ஆய்வுகள் மூலமாகவும் அகத்தியர் உள்ளிட்ட பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆய்வுகளை மக்களுக்கு கடத்த வேண்டும் என்கிற நோக்கத்திலே, மார்ச் 15, 16-ம் நாட்களில் மே 17 இயக்கம் அறிஞர் அவையம் மாநாடு நடத்துகிறது. தமிழ் அறிஞர்களின் வாயிலாக தமிழர்களின் கடந்த காலங்களை அறிவோம்.

தமிழர்களே, வாருங்கள்.     

தமிழ்நாட்டின் கல்வி திட்டத்தை, திராவிட கொள்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஆளுநரின் சிபாரிசு கொண்ட ஒருவர், பக்தி கதைகளும் ஆன்மீக வரலாறும் பேசும் சுதா சேஷையன், சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்கும் ஒருவர் எவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்? என்பது பற்றியான கட்டுரை இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »