பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916

1917 ஆம் ஆண்டு, முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடந்த பொழுது அதில் உரையாற்றிய முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் கீழ் உள்ளவாறு கூறினார்.

“பார்ப்பனரல்லாத சமூகங்கள் எப்பொழுதும் ஒரு பொதுவான சமூக ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் இருந்ததில்லை. கல்வி அறிவு என்னும் நீரூற்றை நெருங்கும் உரிமையோ வாய்ப்போ அவர்களுக்கு இருந்தது இல்லை”

பனகல் அரசரின் இந்த வரிகள் தேசம் கடந்து, வரலாறு கடந்து பேசப்பட்ட ஓர் உண்மை.  உலக அளவில் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவும் ஒடுக்குமுறை பிரிவுக்கு எதிராக ஓர்மையாக திரட்டிய இயக்கமாக இருந்ததே இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்திற்கும் பொருந்தும். திராவிட இனத்திற்கும் பொருந்தும்.

இந்த நிலை 18-ம் நூற்றாண்டுக்குப் பின், குறிப்பாக பிரஞ்சு புரட்சி மற்றும் ஐரோப்பிய காலனியாக்கத்திற்கு பின், ஒவ்வொரு தேசத்திலும் சற்று மாறத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் வருகையால் மேற்கத்திய கருத்துகளும், ஐரோப்பிய கல்வி முறையும் அன்றைய ஆங்கிலேயே இந்தியாவிற்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியது. குறிப்பாக பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு தடை செய்யப்பட்டிருந்த கல்வி உரிமை கிடைத்தது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசியல் அரங்குகளில் பங்கேற்கும் உரிமையும், அதிகாரத்தில் பங்கேற்கும் உரிமையும் கிடைத்தது. இவை அனைத்தும் இந்த நிலப்பரப்பில் குறிப்பாக அன்று சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு-கேரளா-ஆந்திர-பீகாரின் ஒரு சில பகுதிகள் உள்ளடக்கிய நிலப்பரப்பில் பார்ப்பனர் அல்லாத எழுச்சியை உருவாக்கியது.  

அந்த காலகட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார்  வெளியூர்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை விட அங்கே தங்குவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. உணவகங்கள் வெளிப்படையாக ‘இங்கு பார்ப்பனர் அல்லாதவருக்கு அனுமதியில்லை’ என்று அறிவிப்போடு இயங்கின. மாணவர்களுக்கு தங்கும் விடுதி அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் அவற்றுக்கான வாடகை மிக அதிகமாக இருந்தது.

இது போன்ற பிரச்சனைகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் கல்வி ஆர்வலர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருந்த பலர் தங்களால் இயன்ற வசதிகளை மற்றும் உதவிகளை செய்து வந்த  வந்திருந்தாலும் அவற்றில் ஓர் போதாமை இருந்தது. இக்குறைகளை நன்கு ஆராய்ந்த திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் சி.நடேசனார் அவர்கள், 1916 ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் ‘திராவிடன் இல்லம்’ என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியும் விடுதியிலேயே உணவு உண்ணும் வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். இம்முயற்சியே திராவிட சமூகத்தில் குறிப்பாக சென்னை மாகாணத்தில் கல்வி கற்ற பல்வேறு திராவிட இயக்க போராளிகளை உருவாக்கித் தந்தது என்று கூறலாம்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிக்கட்சியின் முக்கிய தலைவர் ஆர்.கே.சண்முகம் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய டி.எம்.நாராயணசாமி அவர்கள்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பிற்காலத்தில் நீதி அரசராகவும் பணியாற்றிய திரு.சுப்பிரமணியம் அவர்கள் அனைவரும் இத்திராவிட இல்லத்தில் தங்கிப் படித்து புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைகள் விரைவிலேயே பிட்டி தியாகராயர், பனகல் அரசர் போன்ற ஆங்கிலேயே அரசோடு இறுக்கமான உறவு கொண்ட புரவலர்களை உதவி செய்யத் தூண்டியது. இதன் விளைவாக மிகக் குறைந்த காலத்திலேயே திராவிட சங்கங்கள் பல்வேறு இடத்தில் தோன்றி இது போன்ற நற்செயல்களில் ஈடுபடத் தொடங்கின. சென்னை மட்டுமல்லாமல் மதுரை போன்ற பல்வேறு இடங்களில் குறிப்பாக பார்ப்பனர் அல்லாத தமிழ் ஆர்வலர்கள் இருந்த நகரங்களில் தோன்றத் தொடங்கின. 

ஆனாலும் மருத்துவர் சி.நடேசனார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் நோக்கம் வெறும் கல்வி உதவி செய்வது மட்டுமல்ல. இம்மண்ணிலிருந்து பார்ப்பன ஆதிக்கத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. திராவிட சமூகத்திற்கான அந்த வாய்ப்பினை ஆரிய எதிரிகளே தேடிக் கொடுத்ததுதான் நினைத்து நினைத்து மகிழ வைக்கும் வரலாற்றுப் படிமம். 

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி என்ற அரசியல் அமைப்பு தோன்றுவதற்கு முன்பு  இக்கட்சியின் முப்பெரும் தலைவர்களாக அறியப்படும் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் சி. நடேசனார் ஆகியோர் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்தன. குறிப்பாக பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் டி.எம்.நாயர் அவர்களுக்கும் நேரடி வாக்குவாதங்கள் நடந்த சம்பவங்கள் உண்டு. 

1916 ஆம் ஆண்டு சென்னை மாமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தீர்த்த குளத்திற்கு சென்னை  நகரசபை சார்பாக இலவசமாக தண்ணீர் விட வேண்டும் என்று அக்கோரிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை  நகரசபையில் இருந்த டி.எம்.நாயர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். 

இதுகுறித்து  திரு டி.எம்.நாயர் அவர்கள் பேசுகையில் “திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளம் ஒன்றும் பொது குளம் இல்லை. அது கோயிலுக்கு சொந்தமான தனியார் குளம். அக்கோயிலும் வருமானம் வராத ஏழை கோயில் இல்லை. எனவே இதற்கு இலவசமாக தண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணம் கட்டி தண்ணீர் பெற்றுக் கொள்வது தான் கோயிலுக்கும் உகந்த மரியாதையாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசினார். மனதில் தோன்றியதை எவ்வித தயக்கமும் இன்றி பொட்டில் அடித்தார் போல் பேசும் இத்தகைய போர்க்குணமே டி.எம்.நாயர் அவர்களை ‘திராவிட லெனின்’ என்று தந்தை பெரியார் புகழக் காரணமாக இருந்தது. 

ஆனால் அதே மன்றத்திலிருந்த பிட்டி தியாகராயர் இதனைக் கடுமையாக எதிர்த்தார்.   தன்னளவில் பக்தி உணர்வும், வைதிக வழிபாட்டு ஆதரவும் கொண்டிருந்த பிட்டி தியாகராயர் டி.எம்.நாயர் அவர்களை எதிர்ப்பதில் வியப்பில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பிட்டி தியாகராயரும் டி.எம்.நாயர் நேரில் சந்திப்பதை கூட தவிர்த்து வந்த காலகட்டத்தில்தான் வரலாற்றுப் சிறப்பு பெற்ற ‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிகழ்வு’ நடந்தது. 

பிட்டி தியாகராயர் அவர்கள் அடிப்படையில் அரசர் குடும்ப வாரிசாக அறியப்பட்டவர்.   தன் வாழ்நாள் முழுவதும் வெண்மை நிற உடை மட்டுமே அணிந்த காரணத்தினால் ‘வெள்ளுடை வேந்தர்’ என்று விளிக்கப்பட்டவர். பொதுவாகவே அரசர்களுக்கு என்று இருக்கும் தாராள குணமும், மிடுக்கும், தனக்குரிய மரியாதையை எதிர்பார்க்கும் தன்மையும் கொண்டவர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக பிட்டி தியாகராயர் அவர்களிடம் நன்கொடை கேட்ட பொழுது ரூபாய் 10 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருந்தார். இன்றைய பண மதிப்பில் இது பல லட்சங்களைத் தாண்டும் என்பதை நினைவில் கொண்டால் அவருடைய தாராள மனதினையும், அவர் கொண்டிருந்த பக்தி உணர்வினையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அன்றைய காலகட்டத்தில் குடமுழுக்கு அதிகமாக நன்கொடை கொடுத்திருந்தவர் பிட்டி தியாகராயரே. 

குடமுழுக்கிற்கான நாளன்று கோயில் அரங்கத்திற்கு பிட்டி தியாகராயர் வந்திருந்தார்.   அங்கு அவருக்கான இருக்கை மேடையில் போடப்படாமல் மேடைக்கு கீழே தரையில் போடப்பட்டிருந்ததது. ஆனால் அவரிடம் வேலை பார்க்கும் பார்ப்பனர்களுக்கு மேடையில் இருக்கைகள் தரப்பட்டிருந்தன. ‘தாம் எவ்வளவு பெரிய அரசராக இருந்தாலும், வைதீக சனாதன தர்மத்தில் பார்ப்பனர்களுக்கு கீழாகத்தான் நம்மை நடத்துவார்கள்’ என்பதை நேரடியாக கண்டு கொண்டு பிட்டி தியாகராயர் திரு டி.எம்.நாயர் அவர்கள் ஏன் இத்தனை காலம் பார்ப்பனர்களை எதிர்த்து வந்தார் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டார். அடுத்த கணமே பல ஆண்டுகளாக தான் கொண்டிருந்த முரண்களை மறந்து, தானே டி.எம்.நாயர் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரை ஆரத்தழுவி தங்களுக்குள் இருந்த பிணக்குகளை கைவிட்டு திராவிட சமூகத்தின் இழிவு நீங்க உழைப்பது என்ற முடிவுக்கு வந்தார். 

இந்த முடிவு டி.எம்.நாயரை விடவும் அதிகமாக மகிழ்ச்சியை தந்தது சி.நடேசனார் அவர்களுக்குதான். ஏனென்றால் பலகாலமாக இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கப் படாத பாடுபட்ட பெருமகனார் சி.நடேசன் அவர்களே. 

அதன் பின்னால்  நடக்க வேண்டிய செயல்கள் வெகு வேகமாக நடந்தன. பார்ப்பனர்களை முறியடிப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை என்பதை ஏற்கனவே இத்தலைவர்கள் புரிந்து வைத்திருந்தனர். தனிமனிதர்களாக பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடி வெற்றி காண்பது இயலாது என்பதை புரிந்து கொண்டு இத்தலைவர்கள் திராவிட இனத்தை ஓர் இயக்கத்தின் கீழ் ஒன்று கூட்ட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர். இதன் விளைவாகவே 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் ‘தென்னிந்திய மக்கள் சங்கம்’ என்று அழைக்கப்படும் நீதிக்கட்சியின் தோற்றுவாயை தொடங்கி வைத்தனர். 

அடிப்படையில் தென்னிந்திய மக்கள் சங்கம் ஒரு பங்குச்சந்தை சங்கமாகவே உருவாக்கப்பட்டது. ‘கொள்கை மற்றும் கூட்டம் இருந்தால் போதாது, நிதி மூலதனம் பார்ப்பனர்களை வீழ்த்துவதற்கு மிக முக்கியமான ஆயுதம்’ என்பதை இத்தலைவர்கள் புரிந்து வைத்திருந்ததால், தென்னிந்திய மக்கள் சங்கத்திற்காக பெரும் நிதியை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சரியாக ஒரு மாத காலத்தில், அதாவது டிசம்பர் 20 1916, அன்று வரலாற்று புகழ் மிக்க “பார்ப்பனர் அல்லாதவர் கொள்கை அறிக்கை” வெளியிடப்பட்டது. இன்றளவும் திராவிட இயக்கங்களுக்கு அடித்தளமாக விளங்கும் கொள்கை அறிக்கை பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கைதான். அந்த கணத்தில் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்களின் வீழ்ச்சி தொடங்கியது என்று கூறலாம்.

 அதன்பிறகு 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய மக்கள் சங்கத்தின் சார்பாக ‘ஜஸ்டிஸ்’ என்ற செய்தித்தாள் தொடங்கப்பட்டது. இச்செய்தித்தாளை முறியடிக்க ‘ஹோம் ரூல்’ இயக்கத்தின் பார்ப்பன சக்திகள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர். ஆனால் டி.எம்.நாயர் அவர்களே, இதற்கு ஆசிரியராக பொறுப்பேற்று பத்திரிக்கை தங்கு தடையின்றி வெளிவருவதற்கான வேலைகளை முடித்துக் காட்டினார். அதே 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியும் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கை திராவிட சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்றிய காரணத்தால் இக்கட்சி ஜஸ்டிஸ் கட்சி அல்லது ‘நீதிக்கட்சி’ என்றே அழைக்கப்பட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. 

திராவிட இயக்கத்தின் அடிநாதமாக  முன்வைக்கப்படும் பார்ப்பனர் அல்லாதவரின் எழுச்சி இம்மூன்று தலைவர்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை என்பது மிகையில்லை.   தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட  இந்த அமைப்பின் செயல்பாடுகள் பல நூறு ஆண்டுகளாக தங்களுக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிக் கிடந்த திராவிட இனத்தின் விடுதலை உணர்வை தட்டி எழுப்பி இருந்தது.  

தியாகராயர் அவர்கள் பெரும் பணக்காரராகவும் சென்னை மாகாணத்தில் முக்கிய அரசியல் தலைவராகவும் இருந்து இப்பகுதியில் பார்ப்பனர்கள் சூழ்ச்சியை முறியடித்து வந்தார். டி.எம்.நாயர் அவர்களோ ஆங்கிலேய அரசுடன் மிக நெருக்கமாக உறவு வைத்திருந்தார். திராவிட சமூகத்தின் சார்பாக ஆங்கிலேய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுதெல்லாம் டி.எம்.நாயர் அவர்களே முன் நின்று நடத்துவது வழக்கம். இதன் காரணமாகவே அன்றைய ஹோம் ரூல் இயக்கத்தின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டன. காங்கிரஸ் இயக்கம் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரசுக்கு உள்ளேயே உருவாக்கிய பார்ப்பனர் அல்லாதார் பிரிவு செய்த சதிகளை டி.எம்.நாயர் அவர்கள் தமது பேச்சுத் திறமையால் ஆங்கிலேயர்களிடையே அம்பலப்படுத்தி வென்று காட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது. டி.எம்.நாயர் அவர்கள் மாண்டேகு-ஜெம்ஸ்போர்டு சீர்திருத்தம் குறித்தான நாடாளுமன்ற பொதுக்குழு முன்பு திராவிட சமூகத்தின் வாதங்களை எடுத்து வைப்பதற்காக லண்டன் சென்ற பொழுது உடல் நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார் என்பது திராவிட சமூகத்திற்கான அவரது ஈகத்திற்கு பெரும் சான்றாக விளங்குகிறது. 

மருத்துவர் சி.நடேசனார் அவர்களோ போர்குணம் மிக்க முற்போக்கு சிந்தனையாளராக விளங்கினார். சென்னை மாமன்றங்களில் அவர் முன்மொழிந்த பல்வேறு தீர்மானங்கள் இன்று நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத கூர்மையைக் கொண்டிருந்தது.  

எடுத்துக்காட்டாக 1921 ஆம் ஆண்டு “பார்ப்பனர் அல்லாதவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விகிதாச்சார அளவு உத்தியோகங்கள் கிடைக்கும் வரை இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதவருக்கு மட்டுமே தரப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். 1922 ஆம் ஆண்டு “சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் யாருக்கும் அரசு அலுவலர் பதவி நியமனம் செய்யக்கூடாது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானங்கள் நிறைவேறாமல் போனாலும் அதிகாரம் மட்டத்திலிருந்து பார்ப்பனர்களை நிரந்தரமாக நீக்குவதற்கு சி.நடேசனார் அவர்களின் சிந்தனை எந்த அளவிற்கு முன்னோக்கி சிந்தித்து இருந்தது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகளாக இருந்தன.

இது தவிர்த்து திரு.பனகல் அரசர், திரு. சுப்பராயன் உள்ளிட்ட பல்வேறு நீதிக்கட்சித் தலைவர்களின் தொடர்ச்சியான செயல் திட்டங்களால் பார்ப்பனரல்லாத திராவிட இனத்திற்கென்று அரசியல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இறுதியாக பெரியாரின் போர்க்குணமும், சமரசம் இல்லா போராட்டங்களும், பகுத்தறிவு சிந்தனையும் சனாதன இந்தியாவிற்கு சவாலாக தமிழ்நாட்டை முன் களத்தில் நிறுத்தியுள்ளது.

ஒடுக்கப்படும் சமூகத்திற்கு என்று ஒற்றை இயக்க அடையாளங்களை ஒடுக்குகின்ற சமூகங்கள் எப்பொழுதுமே அனுமதித்ததில்லை. இருந்தபோதும் இச்சதியை வென்று காட்டிய வரலாறு திராவிட சமூகத்திற்கு  கிடைத்திருக்கிறது. இம்மாபெரும் பெருமைக்கு வித்திட்ட தென்னிந்திய மக்கள் சங்கம் தொடங்கப்பட்ட நன்னாளான இன்று திராவிட தலைவர்களை நினைவில் ஏந்துவோம் ஆரிய பார்ப்பனிய சூழ்ச்சியை வெல்லுவோம் சமூக நீதிப் பேணும் சமூகத்தை படைப்போம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »