செம்மணி புதைகுழியும் ஐ.நாவின் துரோகமும்

செம்மணியில் இதுவரை 63 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுடன் கிடைத்துள்ள புத்தகப்பை, பொம்மை, சிறுமிகள் அணியும் செருப்பு என யாவும் குழந்தைகள், சிறு பிள்ளைகள் என பாராது அனைவரையும் சாட்சிகளற்று கொன்று புதைத்த அவலத்தையே எடுத்துரைக்கின்றன. செம்மணி மக்களுக்கு நேர்ந்த இக்கொடுமை இன்று வெளிப்பட்டு உலக அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துர்க்-கின் வருகையும் தமிழர் கோரிக்கைகளும்:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் [Volker Türk], கடந்த ஜூன் 23 முதல் 26, 2025 வரை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களிடையே ஐ.நா பற்றிய கடந்தகால அனுபவத்தைப் போன்றே, மற்றுமொரு கசப்பான அனுபவமாகவே மாறியிருக்கிறது.

வோல்கர் துர்க் இலங்கைக்கு வரும் செய்தி பரவியதும், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தால், அவர் செம்மணி புதைகுழிப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அடங்கிய தமிழ்ப் பிரதிநிதிகள் குழு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, செம்மணி மற்றும் மன்னார் புதைகுழிகளில் சர்வதேச தடயவியல் நிபுணர்களை அனுமதித்தல், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் உள்ளிட்ட 11 முக்கிய கோரிக்கைகளை துர்க்-கிடம் நேரடியாகச் சமர்ப்பித்தது. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் ஈழப் பிரச்சினை குறித்துப் பேசப்படும் என்று துர்க் உறுதியளித்தார். மேலும், இலங்கை அரசு செய்த வன்முறைகளை விசாரிக்கும் உள்நாட்டு விசாரணையில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதிகளும் வஞ்சகமும்:

ஆனால், அதன்பிறகான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும், கடந்தகால செயல்பாடுகளைப் போலவே முன்னுக்குப் பின் முரணாக அமைந்தன. தமிழர்களைச் சந்தித்த பிறகு இலங்கை தலைநகருக்குச் சென்ற துர்க், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. 2009 இனப்படுகொலையின் மையப்புள்ளியாகக் கருதப்படும் முள்ளிவாய்க்காலுக்கு வருமாறு தமிழர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் துர்க் நிராகரித்துவிட்டார்.

மேலும், துர்க் உடன் இந்தப் பயணத்தில் இணைந்திருந்த மற்றொரு ஐ.நா அதிகாரி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சே [Mark-André .Franche], இலங்கை அரசுடன் ஐ.நா அதிகாரிகளின் சந்திப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த 40 நிமிட பேட்டியில், ஒருமுறை கூட “தமிழர்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. நெறியாளர் இலங்கை அரசின் பொறுப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பலமுறை கேள்விகள் எழுப்பியும், அவர் திட்டமிட்டு “தமிழர்” என்ற வார்த்தையைப் புறக்கணித்தார். ஈழத் தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் மத்தியில் நடந்தது ஒரு “உள்நாட்டுப் பிரச்சனை” என்றும், அதற்கான தீர்வு இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சர்வதேச நாடுகளின் தலையீடு தேவையில்லை என்றும், வரலாற்றில் சர்வதேச நாடுகளின் தலையீட்டில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதில்லை என்றும், அவர் அப்பட்டமான பொய்களை அடுக்கிக் கொண்டே சென்றார். ருவாண்டா இனப்படுகொலை விசாரணை மற்றும் இரண்டாம் உலகப் போரில் நடந்த நாஜி இனப்படுகொலைக்கான “நூரன்பர்க் தீர்ப்பாயம்” போன்ற நிகழ்வுகளில் சர்வதேச நாடுகளின் பங்கு இதற்கு நேரெதிர் சான்றுகளாகும்.

உலக அளவில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், இதில் சர்வதேச நாடுகள் தலையிடத் தேவையில்லை என்பதும், இதை இலங்கையே விசாரித்து தீர்த்துக்கொள்ளும் என ஐ.நா அதிகாரிகள் சொல்வதும் கேலிக்கூத்தாகிறது. மேலும், ஒரே பயணத்தில் இரு வேறு எதிர் கருத்துக்களை இரு அதிகாரிகள் பேசியது அவர்களின் இரட்டை நிலையை வெளிப்படுத்துகிறது. இது போன்ற சம்பவங்கள் புதியவை அல்ல.

ஐ.நாவின் இரட்டை வேடம்:

ஐ.நா அதிகாரிகளின் இந்தச் செயல்பாடு, இலங்கை அரசின் சார்பு நிலையையே தெளிவாகக் காட்டுகிறது. 2009 ஈழ இனப்படுகொலையில் ஐ.நா மன்றத்தின் தவறுகளை பெட்ரி அறிக்கை [Petrie Report] 2012-ம் ஆண்டு சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ஐநாவின் அப்போதைய தலைமைச் செயலாளர் பான் கி மூன் [Ban Ki-moon], ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா “பெரிய தவறு” செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்தத் தவறின் விளைவாகப் பல உயிர்கள் காப்பாற்ற முடியாமல் போனது என்றும் அவர் கூறினார். அதே ஆண்டும், அப்போதைய ஐ.நா மனித உரிமை ஆணையர் சயீத் அல் உசைன் [Zeid Al Hussein] இலங்கை வந்தபோது தற்போது அளிக்கப்பட்டதைப் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2009-ல் நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தர முடியாத ஐ.நா மன்றம், தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் நடத்தும் போராட்டம் பத்து ஆண்டுகளை எட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அவையில் 2015-ல் இலங்கை அளித்த வாக்குறுதியான, காணாமல் ஆக்கப்பட்டோரை குறித்த ஆய்வறிக்கை இன்றுவரை என்ன ஆனது என்று ஐ.நா இதுவரை கேள்வி எழுப்பவில்லை.

சர்வதேச அளவில் செம்மணி விவகாரம்:

செம்மணி புதைகுழி பற்றி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் போராட்டங்களை நடத்தினர். அமெரிக்க சனநாயகக் கட்சியைச் சேர்ந்த டான் டேவிஸ் [Don Davis], செம்மணி புதைகுழி பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று X வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பல நாடுகளில் செம்மணி புதைகுழி பற்றி விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் இது பற்றி எந்த வலுவான எதிர்வினையும் இல்லாதது கவலைக்குரியது.

இலங்கை அரசு, 2015-ல் ஐநாவில் அளித்த பொய் வாக்குறுதியை அன்றே மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தியது. ஐ.நா தொடர்ச்சியாக ஈழத்துக்கு எதிராகவும், இனப்படுகொலை இலங்கை அரசிற்கு  துணையாக இருந்ததையும் அம்பலப்படுத்தி தான் மாவீரன் முருகதாசன் ஐ.நா முற்றத்தில் தீக்குளித்தார். அந்த நாளை நினைவு கூர்ந்து ஐ.நாவின் தொடர்ச்சியான ஈழத்திற்கு எதிரான செயல்பாட்டை கண்டித்து மே 17 இயக்கம் உலகெங்கும் இருக்கிற ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிட்டது. அதனுடன் இடதுசாரி அரசென தன்னை முன்னிறுத்தி தனது பொறுப்புக்களை ஐ.நா அவையில் துறந்திருக்கிற அனுர திசநாயக அரசையும் தொடர்ச்சியாக இலங்கை இனப்படுகொலை விசாரணையில் முதலில், சர்வதேச விசாரணை’ என்பதை ‘பன்னாட்டு விசாரணை’ என மாற்றினர். பின்னர் காமன்வெல்த் நாடுகளின் விசாரணை என இங்கிலாந்து-இந்தியா சுருக்கியது. அதன் பின்னர் இலங்கையின் அழுத்தத்தால், அமெரிக்காவின் தலையீட்டாலும் உள்நாட்டு விசாரணை என மாற்றப்பட்டது. இதை எதிர்த்து கடுமையான விமர்சனத்தை ஐ.நா மனித உரிமை ஆணையரின் செயலர் குழுவிடத்தில் மே17 இயக்கத்தின் சார்பாக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது.  

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறி 10 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர், இலங்கை அரசு செய்த வன்முறைகளை ஆய்வு செய்யும் உள்நாட்டு விசாரணை மீது தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை அவரே வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு விசாரணை என்பது சர்வதேசத்தையும், தமிழர்களையும் ஏமாற்றும் செயலென்றே 10 வருடம் கழித்தும் நிரூபணமாகி இருக்கிறது. இலங்கையை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் சர்வதேச விசாரணையைக் கோரியே தமிழர்களின் போராட்டம் கூர்மையடைய வேண்டும்.  தமிழர்கள் சாதி, மதம், கட்சி போன்ற வேறுபாடுகளைக் களைந்து, தமிழர்களாய் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். ஈழப் பிரச்சினையைத் தேர்தல் அரசியலுக்குள் சுருக்காமல், தேர்தலுக்கு அப்பால் இதற்கான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

செம்மணி அவலம் குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த விரிவான கட்டுரை :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »