
யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் பேரவலம் 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 400 சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் 1998-ம் ஆண்டு, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ சிப்பாயின் சாட்சியம் இன்னமும் நீதிமன்ற கோப்புகளில் இருக்கின்றது. தற்போது மேம்பாட்டுப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில், குழந்தையுடன் புதைக்கப்பட்டிருந்த தாய், பதின்ம வயது சிறுமி உட்பட 19 மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது.
சிங்கள இனவெறி அரசினால் 2009-ல் நடத்தப்பட்ட இனப்படுகொலைப் போருக்கு முன்பாக 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கொடூரப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் புதுப்பிப்புப் பணிக்காக நல்லூர் சபையால், பிப்ரவரி, 2025-ல் குழிகளைத் தோண்டிய போது, மனித எச்சங்கள் தென்பட்டிருக்கின்றன.
நீதிமன்ற உத்தரவின் பேரில் 2025 ஆண்டு மே 15ஆம் தேதி முறையான அகழ்வு முயற்சிகள் தொடங்கப்பட்டன. பெருமழை காரணத்தால் ஜூன் 2ந்தேதி தொடங்கிய இந்த அகழ்வுகள் ஜூன் 7 வரை நடந்தன. தடயவியல் ஆய்வின்படி இதுவரை 19 சடலங்களை கண்டறிந்துள்ளனர்.
ஏறக்குறைய கால் நூற்றாண்டைக் கடந்த செம்மணி மனிதப் புதைகுழி உலக அளவில் கவனத்தை ஈர்த்த பேரவலம் ஆகும். இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை 1995-96 களில் கைப்பற்றிய பின்னர் தமிழர்களை இனவழிப்பு செய்யும் நோக்கத்துடன் 1996லிருந்து தமிழ் இளைஞர்களை, இளம் பெண்களை பிடித்துச் சென்று காணாமலாக்கினர். சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியப் பின்னர், மக்கள் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் தஞ்சம் புகுந்தனர். அப்போதைய இலங்கையின் சந்திரிகா அரசு, பல பகுதிகளில் ராணுவ அரசு பாதுகாப்பு தருவதாகக் கூறி மீள் குடியேற்றத்திற்கு அழைத்தது. அனைத்துப் பகுதிகளிலும் ராணுவ முகாம்களை அமைத்தது.
இந்த காலகட்டத்தில், யாழ் சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி கிருசாந்தி, கல்லூரி செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு செப்டம்பர் 7, 1996-ல், சிங்கள ராணுவ சிப்பாய்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். கைதடி ராணுவ முகாமிற்கு கூட்டிச் செல்லப்பட்டதைக் கண்ட சிலர், அப்பெண்ணின் தாயாருடன் கூற, கிருசாந்தியைத் தேடி வந்த அப்பெண்ணின் 59 வயது அம்மா, 16 சகோதரன், ஒரு உறவினரையும் கடுமையான சித்திரவதை செய்து கொன்றிருக்கின்றனர்.

இப்படுகொலைகள் மக்களிடையே கடும் கோவத்தை எழுப்பின. இந்த எழுச்சி சர்வதேசம் வரை சென்றது. சந்திரிகா அரசு சர்வதேச அழுத்தத்திற்கு ஆளானார். தமிழ் மக்கள் போராடினர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மனித உரிமை அமைப்புகளின் நிர்ப்பந்தம் தந்தன. விடுதலைப் புலிகள் சர்வதேச விசாரணை வேண்டும் என்றே வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சந்திரிகா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் பலர் ராணுவப் பழிவாங்கலுக்கு பயந்து சாட்சி சொல்ல வர மறுத்தனர். மேலும், காவல்துறை விசாரணையும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே சென்றன.
நீதிமன்ற விசாரணையின் கீழ், ஐந்து ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கொழும்பில் 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, சோமரத்தின ராஜபக்சே, முதலியசேன ஜெயசிங்க, டி.எம். ஜெயதிலகே, எஸ்.ஏ. பெரேரா மற்றும் குணசேகர பிரியதர்ஷன ஆகிய இந்த ஐந்து ராணுவ சிப்பாய்களுக்கு மரண தண்டனை விதித்தது. இவர்கள் செம்மணி மற்றும் அரியாலையில் நூற்றுக்கணக்கான மக்களை புதைத்த பகுதிகளை அடையாளங் காட்டினர். இதில் ஒருவரான சோமரத்தின ராஜபக்சே அளித்த வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இலங்கை மேலதிகாரிகளின் கொலை வெறி, பாலியல் வெறிகளை அம்பலப்படுத்தியது.
அவர் அளித்த வாக்குமூலத்தின் சுருக்கம்:
“நான் கேப்டன் லலித் ஹேவுக்கு கீழ் பணிபுரிந்தேன். புலனாய்வு பிரிவிலும் கேப்டன் லலித், கேப்டன் ஸ்ரீ ஜெயவர்தன கீழ் நியமிக்கப்பட்டேன். அப்போது அரியாலைப் பகுதியில் இராணுவம் நடத்திய சுற்றி வளைப்பில் அரியாலையின் வீடுகளிலுள்ள அனைவரையும் நெடுங்குளம் என்னும் பகுதியில் விசாரித்தோம். அதில் மேஜர். வீரக்கொடி, மேஜர். குணசேரவும் வந்தனர். முகமூடி அணிந்த இருவர், அதிலுள்ள 50 பொதுமக்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என அடையாளங் காட்டினர். அவர்களின் முகவரி வாங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அந்த முகவரியில் சந்தேகப்பட்ட நபர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்பட்ட நபர்கள் எல்லாம் தபால் கட்டை, அரியாலை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செல்வரத்தினம் என்பவரை மேலதிகாரிகள் கைது செய்த போது, அவர் தான் விடுதலைப்புலி உறுப்பினரல்ல என எவ்வளவோ மன்றாடினார். நான் விட்டு விடலாம் என்று சொல்லியும் அடுத்த நாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரோடு 10 சடலங்கள் இருந்தன. பணி முடிந்து திரும்பிய யோகேஸ்வரன் என்பவரை கைது செய்து ’சி’ பிரிவு வதை முகாமுக்கு கொண்டு சென்றனர். அந்த நபரை விடுவிக்குமாறு மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவை கொண்டு சென்ற போது அங்குள்ள மூன்று உயர் அதிகாரிகள், அவரைத் தலைகீழாக தொங்க விட்டு பிளேடால் உடல் முழுவதும் கீறலை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அரியாலையில் வியாபாரம் செய்ய அனுமதி கடிதம் வாங்கிக் கொடுக்கக் கூறிய இரு இளைஞர்களை மேலதிகாரிகளிடம் அனுப்பி வைத்தேன். அவர்கள் அவர்களிருவரையும் தலைகீழாக தொங்க விட்டு தாக்கினர். மறுநாள் அவர்களும் இறந்து விட்டனர்.

ஒரு இளம் தம்பதியைக் கைது செய்தனர். நான் காணும் போது அப்பெண் ஆடையின்றி கேப்டன் லலித் முன் நிற்பதைக் கண்டேன். என்னை மண்வெட்டியை எடுத்து வரச் சொல்லி அந்த தம்பதியினரை தலையில் தாக்கினார். அவருடன் இருந்த அப்துல் நசார், அமித், சமரசிங்கே ஆகியோர் துப்பாக்கியால் தாக்கியும் கொன்றனர். பின்பு புதைக்கச் சொன்னார்கள். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களை புதைப்பது மட்டும்தான் கீழுள்ள பணியாளர்களான எங்களுக்கு விதிக்கப்பட்டதாக இருந்தது.
கிருசாந்தியின் உடலை புதைக்கச் சொன்னபோது அவர் யாரென்று எங்களுக்கு தெரியாது. என்னால் பத்து புதைகுழிகளை அடையாளம் காட்ட முடியும். என்னுடன் கைது செய்யப்பட்ட பெரேரா, 5 இடங்களை காட்டுவார். அதில் ஒன்றில் மட்டும் 25 சடலங்கள் புதைக்கப்பட்டன. ஜெயதிலகா 3 இடங்களை காட்டுவார். இந்த சம்பவம் நடந்த மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், நான் வாக்குமூலம் அளித்து ஒரு வருடம் ஆகி விட்டதாலும் அப்பகுதியில் உள்ள எலும்புகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்று அறிகிறேன். அதனால்தான் மண் மாதிரிகளை எடுக்கச் சொன்னேன். மேலதிகாரிகளின் குற்றங்களுக்கு நாங்கள் பழியை சுமந்தாலும் இங்கு நீதி கிடைக்காமல் போனாலும் சர்வதேச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.” – இவை சோமரத்தின ராஜபக்சே அளித்த வாக்குமூலத்தின் சுருக்க வடிவமாகும். இவை நீதிமன்றக் கோப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டவை.

இவரின் வாக்குமூலத்தின்படி, செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள், பின்னர் அடையாளங் காட்டச் சென்ற போது அதிலில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிகாரிகளின் பங்கிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் தான், இந்த விசாரணை இலங்கை அரசினாலும், நீதி மன்றத்தினாலும் மந்த நிலைக்குச் சென்றது. இந்நிலையில் செம்மணிப் புதைகுழி குறித்து விசாரிக்க சிறப்பு நீதிபதியான இளஞ்செழியன் நியமிக்கப்படுகிறார். அவரின் உத்தரவின் பேரில் 1999, செப்டம்பரில், தொடர்ச்சியாக 2 நாட்கள் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற பிரதிநிதிகள், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச அளவிலான மற்றும் இலங்கையின் தூதர்கள், சர்வதேச தொலைக்காட்சிகள் அங்கு குழுமியிருக்க இப்புதைகுழிகள் தோண்டப்பட்டன. சோமரத்தின ராஜபக்சே கூறிய படி புதைகுழிகளில் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. இப்படுகொலைகளில் தொடர்புடைய மேலதிகாரிகளைப் பற்றிப் பேசப்பட்டதும் புதைகுழிகளில் இருந்த சடலங்கள் காணாமலாக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அங்கு 25-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. அவை சித்திரவதை செய்து கொன்றே புதைக்கப்பட்டவை என பிணக்கூறாய்வு அறிக்கையில் வெளிப்பட்டது.
நீதிபதி இளஞ்செழியன் அவர்கள், இதில் சம்பந்தப்பட்ட ஏழு இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டார். ஆனால் போர் நடந்து கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லை என இராணுவத் தரப்பு கூறியது. ஆனால் அவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலிருந்து நீதிபதி இளஞ்செழியன் விலக்கப்பட்டார். அதன் பிறகு அதன் அடுத்தடுத்த விசாரணைகளின் தொடர்ச்சி யாழ் மாவட்டத்தில் நடைபெற்றது. குற்றம் சுமத்தப்பட்ட மேலதிகாரிகள் தப்பினர். உத்தரவுக்கு அடிபணிந்து கொலை செய்யப்பட்டவர்களை புதைக்கும் பணியை செய்த அடிமட்ட இராணுவ சிப்பாய்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். சமீபத்தில் இந்த ஜூன் மாதம், 2025-ல்தான், பல ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால், தங்களை வெளியில் விட வேண்டும் என்று கோரிய அவர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது ஜூன் – 2, 2025-ல் நடந்த அகழ்வாய்வில் வெளிப்பட்ட 19 சடலங்களும், அன்று தோண்டத் தவறிய இடங்களில் இருந்த சடலங்களாக இருக்கலாம் என்கிற ஐயம் எழுந்திருக்கிறது. இந்த புதைகுழிகளில் இருந்த இளம்பெண்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்களே கிடைத்துள்ளன. தற்போது 19 சடலங்கள் கிடைத்திருக்கும் இந்த சமயத்தில், ஏறக்குறைய 400 – 600 சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சோமரத்தின ராசபக்சே கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே, தானே புதைத்து அடையாளங் காட்டிய புதைகுழியிலிருந்த சடலங்கள் காணாமல் போனதைப் பார்த்ததும், அதிர்ச்சியடைந்ததாகக் கூறியதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சிங்கள இராணுவ முகாமின், ஒரு இராணுவ சிப்பாய் அளித்த வாக்குமூலமே, தமிழ் மக்கள் மீது செலுத்திய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது என்றால், நூற்றுக்கணக்கான ராணுவ முகாம்களில் 2009 இனப்படுகொலை போரில், போருக்கு முன்பான, பின்பான காலகட்டங்களில் தமிழர்கள் இனவெறி சிங்கள ராணுவத்தால் சந்தித்த துயரங்கள் சொற்களில் வடித்து விடக் கூடியவை இல்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் இன்னும் தோண்டப்படாத எத்தனைப் புதைகுழிகளில் இருப்பார்களோ என்னும் அச்சம் கூட, தங்களின் சொந்தங்களுக்கு நேர்ந்தவற்றை அறியாமல் வீதிகளிலே ஆண்டுக்கணக்கில் தாய்மார்கள் கண்ணீரோடு போராடும் காட்சிகள் மனதை உருக்குலைப்பவையாக இருக்கின்றன.

இன்னும் பல கிருசாந்திகளின் கதைகள் ஈழ மண்ணில் புதைந்து கிடக்கின்றன. அன்று சர்வதேச மட்டங்கள் அளித்த அழுத்தங்களும், நேரடியாக வந்து விசாரித்த அக்கறைகளும், இன்று இனப்படுகொலைக்கு பின்பான காலகட்டங்களில் இல்லாமல் போயின. உள்ளக விசாரணைக்கு அனுமதி கொடுத்து, அந்த விசாரணைகளும் தொய்வடைந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவை கண்டனங்களோடு கடந்து செல்கின்றது. இந்திய, மேற்குலக நாடுகள் வணிக, இராணுவத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ள அம்மக்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு பங்குதாரர்களாக மாறிப் போய் நிற்கின்றனர். இலங்கையின் இன்று ஆட்சியிலிக்கும் இடதுசாரி அரசு என்று சொல்லப்படும் அனுர திசநாயக்கா அரசு. இராணுவத்தை சர்வதேசத்தின் எந்த விசாரணைக்கும் உட்படுத்த மாட்டோம் என பகிரங்கமாகவே அறிவிக்கிறது. இந்நிலையில் செம்மணி அகழ்வாய்வின் தொடர்ச்சியாக நிலைகள் நீடிப்பது குறித்தான ஐயமே மேலிடுகிறது.
இந்தியா அதானிக்கு பெற்றுக் கொடுக்கும் திட்டங்கள் குறித்து கவலைப்படுகிறது ஒழிய தமிழர்களின் புதைகுழிகள் பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் இந்த மனித அவலத்தை எதிர்த்து பேச வேண்டும் போராட வேண்டும் சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற மிகப்பெரிய கடமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு போர் நகர்வையும் கூறாய்வு செய்யும் திராவிட போர்வையில் இயங்கும் குதர்க்கவாதிகள் சிங்கள இனவெறி அரசு நடத்திய இவ்வளவு கொடூரங்களையும் பற்றி மேம்போக்கு ஆய்வு கூட நடத்துவதில்லை. உலகத்தின் அனைத்துப் போராட்டங்களையும் பகுப்பாய்வு செய்யும் இடதுசாரிகள், சிறு ஆய்வும் இன்றி விடுதலைப் புலிகள் மீது கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சுமத்துகின்றனர். விடுதலைப் புலிகளை விதந்தோதுவதாகக் கூறிக் கொள்ளும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், அவர்களைப் பற்றியான மலிவான கதைகளைப் பேசும் தரக்குறைவான அரசியலை செய்கின்றனர்.
தமிழ்நாட்டின் ஈழ அரசியல் சார்பான நிலை இப்படியிருக்க, ஈழ மக்களின் விடியலைத் தேடும் நீண்ட நெடிய பயணத்தில் மே 17 இயக்கம் இதுவரையிலும், எந்த சமரசமுமற்று ஈழத்தில் இலங்கை இனவாத அரசும், இனவெறி ராணுவமும் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை கொடூரங்களைத் தொடர்ச்சியாக போராடுகிறது. தமிழர்களுக்கு அநீதிகளை பல தளங்களிலும் அம்பலப்படுத்துகிறது. அந்த வகையில் ஒன்றாக, மனிதப் புதைகுழி அவலங்கள் குறித்து மே 17 இயக்கம் வெளியிட்ட கட்டுரை :
செம்மணிப் படுகொலையில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச அழுத்தங்களினால் அடிமட்ட ஊழியர்களுக்கு தண்டனையும், புதைகுழிகளிலிருந்து சடலங்களை மறைத்து மேலதிகாரிகளைக் காப்பாற்றவும் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட இனவெறி சிங்கள ராணுவத்தின் கீழும், இனவாத அரசின் கீழும் தமிழர்கள் இருக்க முடியுமா? என்பதை சர்வதேசம் இப்போதாவது உணர்ந்து கொண்டு தனது கடமையை செய்ய முன்வர வேண்டும். இலங்கை மீது ஒரு சர்வதேச விசாரணை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
ஆர்மேனியாவில் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு அந்நாட்டு ராணுவ வீரர்கள் துணை நின்றார்கள் என்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதைப் போல ஈழத்திலும் செம்மணி முதற்கொண்ட பல பகுதிகளிலும் இலங்கை இனவெறி அரசு நடத்திய படுகொலைகளை முன்வைத்து இனப்படுகொலை செய்த ராணுவத்தினரையும், அவர்களுக்கு உத்தரவிட்ட இனப்படுகொலை இலங்கை அரசையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றம் இப்போதாவது முயற்சிக்க வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி என்பது 60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த இனப்படுகொலைகளுக்கு தனித் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.
“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”