
அமெரிக்க ஆதிக்கத்தின் அங்கமாக விளங்கும் இனப்படுகொலை அரசான இஸ்ரேல், தான் ஒப்புக்கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையை உடைத்து மீண்டும் பாலஸ்தீன மக்கள் மீது தனது இனப்படுகொலையை துவங்கியிருக்கிறது. இதன் விளைவாக 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த சிலநாட்களில் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கத்திய ஊடகங்களால் ‘ஹூத்தி’ என்று அழைக்கபடும், புராதான சனா நகரை மையமாக கொண்ட ஏமன் அரசான அன்சரல்லா கூட்டணி, மனிதநேய அடிப்படையில் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் அரசுக்கு எதிராக துவங்குவதாக அறிவித்தது. கடல் வழியாக இஸ்ரேல் இனப்படுகொலை அரசுக்கு செல்லும் ஆயுத உதவிகள் துவங்கி, அனைத்து வணிக உதவிகளையும் தடுப்பதாக அறிவித்தது ஏமன்.
இடைக்கால போர்நிறுத்த காலத்திற்கு முன்பான 12 மாத கால இனப்படுகொலை போரின் போதும் இதே தடையை அறிவித்து நடைமுறைப்படுத்தியது ஏமன். இதனால் அமெரிக்க- பிரித்தானிய ஏகாதிபத்திய கூட்டணியின் கடுமையான வான் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் ஏமனின் ஏவுகணை படை மற்றும் தானியங்கி வானூர்தி படையை எதிர்கொள்ள முடியாமல் ஏகாதிபத்திய கூட்டணி தோல்வியடைந்தது. தனது 3 விமானந்தாங்கி கப்பல்களைகூட பாதுகாக்க முடியாத இழிநிலையை அடைந்தது அமெரிக்க கடற்படை. இதனை வெளிப்படையாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளே உறுதி செய்தனர். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானிய படை மற்றும் ஜப்பானிய படைக்கு எதிரான யுத்ததிற்கு பிறகு, அமெரிக்க கடற்படை சந்தித்த மிகப்பெரிய சவாலாக ஏமனுக்கு எதிரான இந்த போர் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க-இங்கிலாந்து வான் தாக்குதலுக்கு பதிலடியாக அவ்விருநாட்டு கப்பல்களையும் பபேல் மண்டாப் நீரிணை (Bab el-Mandeb strait) துவங்கி, இந்திய பெருங்கடல் பரப்பு வரை தடை செய்து விரட்டியடித்தது ஏமன் படை. இதனால் 75% அமெரிக்க கப்பல்கள் தென்னாபிரிக்காவின் ‘கேப் ஆப் குட் கோப்’ (Cape of Good Hope) வழியாக ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி சென்றதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
இந்நிலையில், அன்சரல்லா இஸ்ரேல் கப்பல்களுக்கு எதிரான தடையை அறிவித்த உடன் அமெரிக்க வான்படை ஏமனுக்கு எதிராக தனது தாக்குதலை துவங்கியது. அமெரிக்க- பிரித்தானிய கூட்டு வான்படையின் கொடூர தாக்குதல் மக்கள் குடியிருப்பு பகுதியை மையமாக வைத்து நடந்தது. இதில் முதல்நாள் நடந்த தாக்குதலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க விமானந்தாங்கி போர் கப்பல் ‘USS ஹாரி டுருமேன்’ ஏமன் அன்சரல்லா அமைப்பினால் தாக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரிலுள்ள ‘பென்கூரியன்’ விமானநிலையம் தாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ஏமன் மக்கள் மீதான தாக்குதலும், ஏமனின் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீதான தாக்குதலும், இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலும் அன்றாடம் தொடர்ந்து வருகிறது.
ஏமன் படையின் தாக்குதலுக்கு அஞ்சி அமெரிக்கா தனது போர்கப்பல்களை 1300 கடல்மைல்கள் வடக்கே நகர்த்தி பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை செங்கடலை நோக்கி அனுப்பியுள்ளது அமெரிக்க பாதுகாப்புத் துறை.
தனது ஏகபோக உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஏமன் மக்களை படுகொலை செய்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனால், அதனை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள் ஏமன் மக்கள். 10 ஆண்டுகாலம் அமெரிக்காவின் தூண்டுதலில் சவுதி, UAE கூட்டுப் படையின் இனப்படுகொலை தாக்குதலை நேரடியாக கொண்டவர்கள் ஏமன் மக்கள். வறுமையில் தள்ளபட்டிருக்கும் ஏமன் மக்களின் வீரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ வலிமையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் ஏமன் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஈரான் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். மேலும் ஏமனுக்கு எதிரான தாக்குதல் ஈரானுக்கான எச்சரிக்கை என்றும், ஈரான் தான் சொல்லும் அணுசக்தி உடன்பாட்டுக்கு அடிபணியவில்லை என்றால் இந்த தாக்குதல் விரிவடைந்து ஈரான் மீதான தாக்குதலாக மாறும் என்று நேரடியாக எச்சரிக்கிறார். ஈரானும் தனது இராணுவ வலிமையை பறைசாற்றும் நிகழ்வுகளை தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறது.
இவ்வாறாக மேற்காசிய பகுதியின் அமைதி நிலைகுலைந்து நிற்கும் சூழலில் இந்தியாவிற்கு தெற்கில் இருக்கும் தீவான ‘டியாகோ கார்சியா’வில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 வகை குண்டுவீச்சு விமானங்களை கொண்டுவந்து நிறுத்துகிறது அமெரிக்க படை. டியாகோ கார்சியா தீவு அமெரிக்க படைதளமாக பயன்படும் காலனியப் படுத்தப்பட்ட தீவு என்பது குறிப்பிடத்தக்கது. ஏமனுக்கு எதிரான கப்பற்படை தோல்வியை தவிர்க்க பெரும் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது அமெரிக்க இராணுவம்.

எனவே, கடந்த சில நாட்களில் மட்டும் மூன்று பி-2 வகை விமானங்கள் டியாகோ கார்சியா வந்தடைந்துள்ளன. மேலும் 7 விமானங்கள் பசிபிக் பிராந்தியத்தில் இருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பூகோள கேந்திர முக்கியத்துவ இராணுவ மையங்களே மாறிவரும் போர் முறைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவசியமாகிறது. இது நம் தமிழர்களின் வரலாற்று நினைவுகள், எதிர்கால கடினங்களை புரிந்துகொள்ள முக்கிய சந்தர்ப்பமாக பார்க்க வேண்டும்.
புகழ்பெற்ற பூகோள அரசியல் ஆய்வாளர் மறைந்த மாமனிதர் தராகி சிவராம் ஈராக் போர் முடிந்தவுடன் கூறும்போது, “ஈராக் வீழ்ச்சிக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான போருக்கு திருகோணமலை துறைமுகம் அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய தளமாக அவசியப்படுவதால், தமிழர்கள் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்வார்கள் என்று உணர்ந்து புலிகள் அமைப்பு தங்களை விரைவாக மாறிவரும் சூழலுக்கு இணங்க தகவமைத்து கொள்ள முயற்சித்தது” என்றும், ஆனால் “ஈராக் போர் யாரும் எதிர்பாராத விதமாக மிகவிரைவாக முடிந்து விட்டது” என்றும் கூறினார்.

ஈரான், ஏமன் போன்ற நாடுகளின் ஏவுகணை தொழிற்நுட்ப வளர்ச்சி புலிகளின் தொலைதூர பார்வையை மெய்ப்படுத்துகின்றது. அமெரிக்க இராணுவ வல்லமை இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதன் விளைவுகள் தமிழர்கள் வாழும் பகுதியின் இராணுவ பெறுமதியை (மதிப்பை) கூட்டுகின்றன. ஒரு நிலப்பரப்பின் இராணுவ பெறுமதி கூடினால், அது மிகப்பெரிய பாதிப்பை அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்படுத்தும். அதன் விளைவே ஈழத்தமிழர் இனப்படுகொலை. அதன் சமகால உதாரணமாக உக்ரைன் திகழ்கிறது. தைவான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் அதே திசைவழியை நோக்கி செலுத்தப்படுகின்றன.
இப்பகுதிகளை விட, பலமடங்கு பெறுமதி கொண்ட நிலப்பகுதியாக தமிழ்நாடும் தமிழீழமும் மிகவிரைவாக மாற்றமடைகின்றன என்பதையும், அதேவேளையில் நம் இறையாண்மையை பாதுகாக்க போதுமான பலம் அற்ற மக்கள் கூட்டமாக நாம் வாழ்கிறோம் என்பதையும் கருத்தில் கொண்டு நடந்து வரும் மாற்றங்களை நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.