ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இசுரேல் அரசு அக்டோபர் 17, 2024 அன்று அறிவித்தது. ஹமாசும் அதை உறுதி செய்திருக்கிறது. நிலத்திற்கு கீழே ஆறு அடுக்குகள் கொண்ட பதுங்கு குழியில், பணயக் கைதிகள் மத்தியில் அவர் பதுங்கி இருக்கிறார் என்று இத்தனை நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தது இசுரேல். ஆனால் காசாவின் ரஃபா பகுதியில் இசுரேலியப் படையுடன் நேரடி யுத்தம் புரிந்து மாண்டுள்ளார் சின்வார். அவருடன் ஹமாசைச் சேர்ந்த மேலும் இருவர் கொள்ளப்பட்டுள்ளனர்.
சின்வாரின் வாழ்க்கை கடந்த 75 ஆண்டுகால பாலஸ்தீன இனவிடுதலைப் போராட்டத்துடன் பிண்ணிப் பினைந்தவை. சின்வாரின் பெற்றோர் பாலஸ்தீன நகரமான அல்மஜ்தலைச் (Al- Majdal) சேர்ந்தவர்கள். இன்று அது இசுரேலிய நகரமான இஸ்கெலான் (Ashkelon). இவர்கள் 1948 -49 நக்பாவின்போது பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 7,00,000 பேருடன் அகதிகளானவர்கள். அகதிகளானோர் சிதறடிக்கப்பட்டு பல்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
கான் யூனிஸில் (Khan Younis) உள்ள அத்தகைய ஓர் அகதிகள் முகாமில் 1962 ஆம் ஆண்டு பிறந்தார் சின்வர். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபி பாடத்தை கற்றுக் கொண்டிருந்த போது, இசுரேலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டார். 1984-ல் முதன்முதலில் அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு 3 ஆண்டுகள் முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலையாகி பின்னர் 1985-ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது ’ஷேக் அஹமத் யாசினுடன்’ (Sheikh Ahmed Ismail Hassan Yassin) தொடர்பு ஏற்படுகிறது. 1987ஆம் ஆண்டு ஷேக் அஹமத் யாசின் ஹமாஸ் இயக்கத்தை தோற்றுவித்ததும், சின்வார் அதில் தன்னை இணைத்து கொண்டார். அடுத்த வருடமே இரண்டு இசுரேல் ராணுவத்தினரையும், இசுரேலின் உளவாளிகள் என்று சந்தேகப்பட்ட நான்கு பாலஸ்தீனியர்களையும் கொலை செய்த வழக்கில் சின்வார் கைது செய்யப்பட்டு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. ஹமாசும், இசுரேலும் 2011-ல் பணயக் கைதிகளை பரிமாற்றிக் கொண்டனர். அதில் சின்வாரும் விடுதலையானார். அடுத்த வருடமே ஹமாஸின் அரசியல் குழுவில் தேர்தெடுக்கப்பட்டார். பிறகு ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.
சியோனிச கொள்கை உருவாக்க வரலாறு ஒரு நூற்றாண்டிற்கும் பழையது. பாலஸ்தீன மக்களுக்கெதிரான அதன் இனப்படுகொலைகளுக்கும் அதே கால அளவு இருக்கிறது. முதல் நக்பா காலத்தில் இருந்து கணக்கிட்டாலும் இன்றோடு 76 ஆண்டுகாலம் பாலஸ்தீன மக்கள் இதை எதிர் கொள்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டே ’அக்டோபர் 7, 2023ல் இசுரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல்’ என்பதை ஒரு எதிர்த்தாக்குதலாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்குலக நாடுகளின் கங்காணியாக மத்திய கிழக்கில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த, அதீத தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஆயுதங்களையும், உளவு தொழில்நுட்பங்களையும் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட இசுரேலுக்கு, அத்தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதை முன்னின்று நடத்தியவர் சின்வார்.
இதனால், இசுரேல் தன் தேசத்தின் எதிரி பட்டியலில் முதல் இடத்தில் இவரை வைத்தது. சின்வாரின் மரணத்தை பற்றி அறிவிப்பு உரையில், ‘சின்வார் இறப்புடன் இப்போர் முடியப் போவதில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தார் இசுரேலின் பிரதமர் நெதன்யாகு. சியோனிச இனவெறியர்களை சின்வாரின் படுகொலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இசுரேல் சமாதான நடவடிக்கையில் ஈடுபடும் என்றோ, இனப்படுகொலைப் போரை நிறுத்திக் கொள்ளும் என்றோ ஹமாசும் உலக மக்களும் நம்பவில்லை. ஆனால் சின்வாரின் வார்த்தைகளிலேயே “இசுரேல் தனது இனப்படுகொலையை நிறுத்தும் வரையில் ஹமாசும் அவர்களிடம் வெள்ளைக் கொடியேந்தி சமாதானத்திற்கு நிற்காது”. அதற்கு ஹமாசின் கடந்தகாலமே சாட்சி.
ஹமாஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஷேக் அகமது யாசின் அவர்களை 2002 மார்ச் மாதம் ஏவுகணை மூலம் தாக்கிக் கொலை செய்தது இசுரேல். அதற்கு அடுத்த மாதமே யாசின் உடன் ஹமாஸை தோற்றுவித்த அப்தெல் அஜீஸ் அல்-ரான்டிசி (Abdel Aziz al-Rantisi) அவர்களையும் ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஹமாசின் பலகட்ட தலைவர்களை இசுரேல் அரசு படுகொலை செய்திருக்கிறது. ஈரானின் அதிபர் பதவி ஏற்பு விழாவிற்குச் சென்ற முன்னாள் ஹமாஸ் தலைவர் இசுமாயில் ஹனியேவை இசுரேல் அரசு கொன்றது. அது போர் நிறுத்த பேச்சுவார்த்தை காலம். அவருக்குப் பிறகு ஹமாசின் தலைவரானார் சின்வார். ’ஹனியேவைக் கொன்றதும் ஹமாஸ் நிலை குலைந்து விடும் என்று இசுரேல் எண்ணியது. ஆனால் ஹமாஸ் சின்வாரை அதன் தலைவராக நியமித்ததின் மூலம் போரில் தாங்கள் பின்வாங்கப் போவதில்லை’ எனும் உறுதிப்பாட்டை இசுரேலுக்கும் சர்வதேசத்துக்கு தெளிவாக உணர்த்தியது.
ஹிசபுல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவை கொன்றதன் மூலம் ஹிசபுல்லாவை வீழ்த்தி விடலாம் என்று இசுரேல் எண்ணியது. ஆனால் தெற்கு லெபனான் பகுதியில் புதிய புதிய ஆயுதங்களுடன் ஹிசபுல்லா அமைப்பு இசுரேலுடன் போரிட்டு வருகிறது. ஹமாசும் போர்க்களத்தில் இருந்து பின்வாங்கவில்லை. சின்வார் இருந்த இடத்தில் ஹமாஸ் மற்றொரு தலைவரை தேர்ந்தெடுக்கும், அவர் இதே வீரியத்துடன் இப்போரை வழி நடத்துவார். ஏனென்றால் பாலஸ்தீனியர்களுக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் அடைவதற்கு அவர்கள் தேசமே உள்ளது. பாலஸ்தீனத்தின் பல்வேறு தலைவர்களை இசுரேல்படை கொலை செய்யலாம். அனால் இதுவரை ஹமாஸை இசுரேலால் அழிக்க முடிந்ததில்லை. இதுவே ஹமாஸின் எதிர்ப்பியக்க வரலாறு நமக்கு காட்டுபவை.
இன்றும் இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக ஹமாஸ் போராடிக் கொண்டிருக்கிறது; அடுத்த தலைவர்களை ஹமாஸ் உருவாகிக்கொண்டே இருக்கிறது. முந்தைய தலைவர்களைவிடவும் அடுத்துவரும் தலைவர்கள் போர்குணம் மிக்கவர்களாக, மக்களின் பேராதரவு மிக்கவர்களாக இருந்து வருகிறார்கள். கடந்த ஓராண்டு, உலக மக்கள் அனைவரும் மதிக்கத்தக்க அரசியல் அமைப்பாக ஹமாஸ் மாறியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு வைஸ் பத்திரிகைக்கு (Vice News) சின்வார் கொடுத்த கடைசி பேட்டியில், “பல காலங்களாக நாங்கள் அமைதியான, சனநாயகமான போராட்டங்களை நடத்தி வருகின்றோம். உலக மக்களும், சர்வதேசமும் எங்களுடன் நின்று ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் மீது நடத்தும் வன்முறைகளிலிருந்து, படுகொலைகளிருந்தும் எங்களை காக்கும் என நம்பினோம். துரதிஷ்டவசமாக உலகம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
இசுரேலுக்கு எதிரான, அதன் இனப்படுகொலைக் கூட்டாளிகளான மேற்குலகிற்கு எதிரான ஹமாஸின் கடந்த ஓராண்டு போர் உலக மக்களின் இந்த அமைதியை கலைத்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்கான குரல்கள் உலகம் முழுவதும் ஒலிக்க துவங்கியுள்ளது.
மிடில் ஈஸ்ட் (Middle East) பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் டேவிட் ஹார்ஸ்ட் (David Hearst) இப்போரை பற்றி கூறும் பொழுது சின்வார் அவர்களுக்கு இந்த போரில் இரண்டு முக்கிய இலக்குகள் இருந்ததாக கூறுகிறார். ”ஒன்று இசுரேலின் ஆக்கிரமிப்புகளை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுவது. மற்றொன்று இசுரேலை பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தனிமைப்படுத்துவது”. இவ்விரண்டு இலக்கையும் இன்று ஹமாஸ் அடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.
இசுரேலுக்கான தங்கள் முழு ஆதரவையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசு வழங்கி வருகிறது. ஆனால் அதன் மக்கள் பாலஸ்தீன விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு வழியின்றி தங்கள் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கும் இவ்வரசுகள் வந்துசேரும். இத்தாலிய அரசு இசுரேலுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பிரான்சு நாட்டில் நடக்க உள்ள ராணுவ கண்காட்சியில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. இவையனைத்தும் மக்கள் போராட்டத்தால் விளைந்தவை.
மறுபுறம் மூன்றாம் உலக நாட்டின் அரசுகளும் அதன் மக்களும் பாலஸ்தீனுடன் நிற்கிறார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேலை குற்றவாளி கூண்டில் நிறுத்தியது தென் ஆப்பிரிக்கா. வெனிசுலா அதிபர் இசுரேலின் இனப்படுகொலையை பகிரங்கமாக கண்டித்தார். கியூப அதிபர் பாலஸ்தீனுக்கு ஆதரவான பேரணியில் முன்னணியில் நிற்கிறார்.
கூடவே சின்வாரின் படுகொலை இசுரேலின் மேலும் ஒரு பொய்ப்பரப்புரையை அம்பலப்படுத்தியுள்ளது. இதுநாள்வரையில் ஹமாஸ் பாலஸ்தீன பொதுமக்களையும் பணயக் கைதிகளையும் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறிவந்ததை இப்பொழுது பொய்யென வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ’சின்வார் கொலை செய்யப்படும் பொழுது அவருடன் இரண்டு போராளிகள் மட்டுமே இருந்துள்ளனர். அவர் நேருக்கு நேர் நின்று இசுரேலுடன் போர் புரிந்தாரே தவிர மக்களை கேடயமாக பயன்படுத்தவில்லை’. சின்வாரைத் தான் தாக்குகிறோமெனத் தெரியாமலே அவரைத் தாக்கியிருக்கிறது இசுரேல். சின்வாருக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதலாக இது நடைபெறவில்லை. அவர் இறந்த பிறகே அவரை அடையாளம் கண்டுள்ளது. ஹமாஸ் போராளிகளை தாக்குகின்றோம் என்ற பேரில் பள்ளிகள், மருத்துவமனைகள், முகாம்கள் என்று பொதுமக்கள் மீது இசுரேல் நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலின் உண்மை நோக்கம் மேலும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.
சின்வாரின் கடைசி நிமிடங்களை ட்ரோன் மூலம் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது இசுரேல். படுகாயம் அடைந்து மரணத்தின் தருவாயில் இருக்கிறார் சின்வார். ட்ரோன் அவரருகே செல்கிறது. அந்த நேரத்திலும் தன் கையில் இருக்கும் ஒரு தடியை வைத்து ட்ரோனை அவர் தாக்குகிறார்.
தன் வாழ்நாளில் இறுதி நொடி வரை இசுரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே போராடி மறைந்திருக்கிறார் சின்வார். பாலஸ்தீன எதிர்ப்பியக்கத்தின் காலநிரல் அவர். பாலஸ்தீன மக்களில் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாபெரும் போராளியாக பாலஸ்தீனர்கள் மத்தியில் வாழ்வார்.
சிலி நாட்டு கவிஞர் பாவ்லோ நெருதாவின் கவிதை இங்கு பொருத்தமாக இருக்கும்.
“நீங்கள் எல்லா பூக்களையும் வெட்ட முடியும்,
ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது”