மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
“மாவீரச் செல்வங்கள்
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்”
– தமிழினத்தின் இறையாண்மை வேர்களாக தமிழீழ மண்ணைப் பற்றியிருக்கும் மாவீரர்களைப் பற்றி கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் உயிர்ப்பான வரிகள்.
விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய லெப்.சத்தியநாதன் என்கிற சங்கர் வீரச்சாவைத் தழுவிய நாளே மாவீரர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. சிங்கள அரசப் பயங்கரவாதத்தின் அடியாட்களாக செயல்பட்ட காவல் துறையினர் மீது, விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலால் காவலர்கள் சிலர் இறந்தனர். அதனால் பழி வாங்கத் துடித்த இராணுவத்தினரின் தேடுதல் வேட்டையால் சங்கர் தங்கியிருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தப்பித்து செல்லும் போது தான் சங்கர் சுடப்பட்டார். அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி 1982-ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் முதலாவது மாவீரர் என்ற பெருமையுடன் சங்கர் மறைந்தார். அப்பொழுது மதுரையிலிருந்த பிரபாகரன் அவர்கள் செய்தி கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். மடியினில் ஏந்திக் கொண்டவரிடம், மரணத் தருவாயிலும் தம்பி, தம்பி என்று முணுமுணுத்துக் கொண்டே உயிர் துறந்தார் போராளி சங்கர். முதலாவது விடுதலைப் புலிப் போராளியான அவர் வீரச்சாவு எய்திய நாளையே பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளாக 1989-ம் ஆண்டு பிரகடனப்படுத்தினார். வீரச்சாவடைந்த அனைவரையும் வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்வதற்காக உருவாக்கப்பட்ட நாளே மாவீரர் நாள்.
மாவீரர்களின் ஈகத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை (நவம்பர்) மாதம் 27ம் நாளில் மாவீரர் நாள் உரையாக நிகழ்த்துவார் தேசியத் தலைவர் .
“எமது வீரசுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கெளரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.” – என்று மாவீரர்களைப் போற்றிப் புகழ்வதாகவும், விடுதலைப் போராட்ட நிலைமைகளை மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறுவதாகவும் அந்த உரைகள் அமைந்திருக்கும். ஈழத்தின் களச் சூழலை மக்களிடம் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசும் படியான உரைகளால் கட்டுண்ட ஈழ மக்கள், உண்மைகள் உறையும் பேச்சினில் இலட்சிய உறுதியை வளர்த்துக் கொண்டார்கள்.
நிராயுதபாணியான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் சிங்கள அரச பயங்கார அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று உணர்ந்த தேசியத் தலைவர் விடுதலைப் புலிகள் அமைப்பைத் துவங்கினார். “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி” என்ற குறிக்கோளுடன் பயணித்தார். தாயகம் மீட்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் இந்த எண்ணம் கொண்டவர்கள் அவர் பின் அணிவகுத்தார்கள். உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை விடக் கெளரவமாக சாவதையே பெருமையாகக் கருதிய விடுதலைப் புலிகள், கழுத்தினில் சயனைடு என்னும் நஞ்சுக் குப்பியினை அணிந்து கொண்டார்கள். எதிரிகளை அழிப்பதை விட, அங்கிருந்து தப்பிப்பதை விட ராணுவத்திடமிருந்து ஆயுதங்களைப் பறித்து இயக்கத்திடம் ஒப்படைப்பதில் பெரும் முனைப்பு காட்டியப் படையாக செயல்பட்டனர் விடுதலைப் புலிகள். தன்னிகரில்லா வீரத்தினால் தங்கள் பகுதிகளை மீட்கும் சண்டையை சோர்வடையாது நடத்தினார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நான்கு கட்ட ஈழப்போர்கள் 1983-லிருந்து 2009-வரை நடைபெற்றிருக்கிறது. நவீன ஆயுதங்கள் எதுவும் கிடைக்காத சூழலிலும், உள்ள உறுதியைத் துணைக் கொண்டு முதல் கட்டப் போர் துவங்கியது. போர்களின் ஒவ்வொரு நகர்விலும் வெற்றி பெறுவதற்கு பெண் புலிகள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். இராணுவ முகாம்கள் தகர்க்கும் உத்திகளில் அவர்களைக் கண்டு சிங்கள ராணுவம் அரண்டது. முகாம்கள் தகர்க்கும் முன்பு எண்ணற்ற ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களில் பெருமளவு சிங்கள ராணுவம் தப்பித்து ஓடியதிலிருந்து கிடைத்தவையாகவே இருந்தன. சிங்கள ராணுவத்தினால் கொரில்லாத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாதவாறு புலித் தளபதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
அடர் காடுகளும், முட்புதர்களும், உவர் நிலங்களும் அவர்களை வருத்தவில்லை. வானூர்திகளும், நவீன ஆயுதங்களும், பீரங்கிகளும் கொண்ட சிங்களப் படையாலும் துளி அச்சமும் அவர்கள் பெறவில்லை. கரும்புலிகள் உடலை ஆயுதமாக்கி ஆயுதக் கிடங்குகளைத் தகர்த்து படைகளுக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியினில் உயிரைத் துச்சமாகக் கருதி விடுதலை நோக்கத்துடன் போரிட்டவர்கள் சிங்கள மூர்க்கர்களை வென்று கொண்டே சென்றார்கள்.
சிங்கள அரசு வதை முகாமாக பயன்படுத்திய யாழ் கோட்டையைப் புலிகள் கைப்பற்றிய போர் என்பது தமிழர்களின் வரலாற்றில் முத்திரை பதித்த ஒன்று. 30 அடி உயர மதிலும், 30 அடி ஆழ அகழியும் கொண்ட கோட்டையை, சிங்களப் பெரும் படை தாக்குதலுக்கு இடையில், வீசிய குண்டு மழைகளுக்கு நடுவில் பெண் புலிகளின் துணிச்சலாலும், ஆண் புலிகளின் திறமையாலும் கைப்பற்றினர் புலிகள். “யாழ் கோட்டையில் புலிக்கொடி பறக்கும் நாளே தமிழர்கள் விடுதலைப் பெற்ற நாளாகும்” என்று கூறிய திலீபனின் நினைவு நாளில் யாழ் கோட்டையில் புலிகளின் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை புலிகள் ஈட்டினார்கள். முப்படைகளையும் எதிர்த்து வெற்றி கொண்ட வல்லமையுடைய சிலாவத்துறைப் போர், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியான மணலாற்றை மீட்டெடுத்த மணலாற்றுப் போர், போரியல் வரலாற்றில் மகுடம் சூட்டப்படும் வகையில் வீரம் செறிந்த தாக்குதல்களால், மதி நுட்பங்களால் வெற்றி ஈட்டி இருபதினாயிரம் இராணுவத்தினரை விரட்டியடித்து, எண்பது சதுர மைல் நிலப்பரப்பைப் கைப்பற்றிய ஆனையிறவுப் போர், வன்னிப் பெரு நிலத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாகாணங்களை மீட்ட ஓயாத அலைகள், உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட கட்டுநாயக்கா விமானத் தளத்தின் மீது தாக்குதல், கண்காணிப்பு கருவிகளைத் தாண்டி வான்புலிகள் தாக்கிய பலாலி விமானத்தளம் தாக்குதல் என சிங்கள ராணுவ முகாம்களைத் தாக்கியழித்த ஒவ்வொரு போரும் பெரும் இழப்பை சிங்கள அரசுக்கு தந்தன; விடுதலைப் புலிகளின் வீரத்தினை உலகிற்கு பறைசாற்றின.
புலிகளின் போர் நுட்பத்தையும், வெற்றிகள் ஈட்டிய திறனையும் , பின்பற்றிய போர் நெறிகளையும் கொண்டு, தமிழர்களின் சங்ககாலப் போர் நெறிகளைப் பாடிய புறநானூற்றைப் போல இன்னொரு புறநானூற்றையே வடிக்கலாம். ஆனால் ஆளும் அரசுகளுக்கு துதிபாடும் திறன் படைத்தவர்களாய் இலக்கியவாதிகள் மாறிப் போனதால் அறநெறிக்கு பஞ்சம் உருவாகும் நிலை ஏற்பட்டு விட்டது. அறம் தவறிய ஜனநாயகத் தூண்களாலும் இலங்கைப் பேரினவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் சூழலே நிலவுகிறது.
தாயக விடுதலைக்காக பெண்களின் பங்களிப்பை முக்கியமானதாகக் கருதினார் தேசியத் தலைவர். கடுமையானப் பயிற்சிகளை மேற்கொண்டு சவாலான இடங்களிலும் தங்கள் போர்த் திறனைக் காட்டி வெற்றி வாகை சூடக் காரணமாக இருந்தனர் பெண் புலிகள். கனரக இயந்திரங்களையும் மிகவும் சாதுர்யமாக இயக்கும் ஆற்றலுடன் விளங்கினர். விடுதலைப் புலிகள் பெண் புலிகளின் பங்களிப்பைப் பெருமிதமாகப் போற்றினார்கள். மகத்தான புரட்சிக்கு பெண்களுக்கு பயிற்சியளித்து ஊக்கப்படுத்தினார்கள். வீரமும், துணிவும், அரசியல் தெளிவும், முற்போக்குச் சிந்தனையும் கொண்டவர்களாக பெண் புலிகள் இருந்தார்கள். கரும்புலியாகி சிங்களப் படைகளைத் தகர்த்தார்கள். போர்க்களத்தில் உளமுவந்து மாவீரர்களானார்கள். மகனைப் போருக்கனுப்பிய தாய்மார்களைத் தான் சங்க இலக்கியங்களும் பதிவு செய்தது. தாய்மார்களையே முன் நின்று களம் காண வைத்த விடுதலைப் புலிகளின் சமத்துவ சிந்தனை தேசிய இன விடுதலைப் போராட்டங்களிலேயே முதன்மையானது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் கொரில்லா யுத்த முறையைப் பின்பற்றியே நடைபெற்றது. சிங்கள இராணுவத்தைத் தாக்கவும், அமைதி காப்புப் படையாக வந்திறங்கி சூழ்ச்சிப் படையாக மாறிய இந்திய இராணுவத்தை எதிர்க்கவும் இந்த போராட்டத்தையே கைக்கொண்ட புலிகள், பின்பு மரபு வழிப் படைகளாக மாறி, பெரும் வீரர்களைக் கொண்ட படைகளாக மாறினர். தரைப்படை, கடற்புலிகள் படை, வான் படை, கரும்புலிகள் என படைக் கட்டமைப்புகளைக் கொண்டு ஒவ்வொரு படைக் கட்டமைப்பிலும் பல படையணிகளை உருவாக்கி போரிட்டனர்.
போர்க்களத்தில் ஈடுபட்டால் உயிர் என்பது பகடைக்காய் போன்றது. வாழ்வதும், இறப்பதும் தெரியாமலிருப்பது. ஆனால் நிச்சயமாக அழிவோம் என்று தெரிந்தும் கரும்புலிகள் உருவானார்கள். கடும் மன சோதனைகளுக்குப் பின்னரே கரும்புலிகள் அனுமதிக்கப்பட்டார்கள். தாங்களே முன் வந்து உயிர் தியாகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கரும்புலிகள். “பலவீனமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இதயத்தின் தற்காப்புக் கவசங்கள். எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள். எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.” என்று கரும்புலிகளை உருவாக்கினார் தேசியத் தலைவர்.
“மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும் பொழுது, அந்த எரியும் சுடரில், அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன். அக்கினியாகப் பிரகாசித்தபடி, ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதி போல, ஒளிகாட்டி, வழிகாட்டிச் செல்லும் ஒரு அதிசய காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும்.” – மாவீரர்களின் நினைவாக தேசியத் தலைவர் ஆற்றிய உரைகளில் சில துளி. இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான சாதனைகளால் இலட்சியத்திற்கு உரமூட்டியவர்களே மாவீரர்கள்.
துண்டாகி விழுந்த தனது காலினை தன்னை நோக்கி சீறி வரும் போர் யானை மீது எறிந்த வீரனைப் புகழ்ந்து பாடிய கலிங்கத்துப் பரணி காவியத்தின் வீரனுக்கு இணையானவர்கள், தலைவன் இட்ட ஆணைக்கிணங்கி களம் புகுந்து, எதிரியின் துவக்கினால் சுடப்பட்டு வீழ்ந்தும் துவளாது, ஆயுதங்களை சக வீரனிடம் கையளித்து விட்டு வீரச்சாவடைந்த மாவீரர்கள்.
இது உயிருக்கு வந்த சாவு அல்ல. சாவுக்கு வந்த உயிர் என்றார் கவிஞர் காசி ஆனந்தன். மாவீரர்களின் வீரச் சாவுகளை தங்கள் உணர்ச்சிகளில் அடைகாத்து, தமிழீழத்தின் உயிரை ஏந்திக் கொண்டிருக்கும் தமிழர்களின் மனங்கள், இந்த வரிகளை காலங்கள் பலவாயினும் மெய்ப்பித்துக் கொண்டே தானிருக்கும். மாவீரர்களின் நினைவைப் போற்றுவோம். அவர்களின் இலட்சியங்களை ஏந்துவோம்.