பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், வியாபாரிகள் என இன்று அனைவருமே அதிகமாக பேசுகின்ற, கவனிக்கின்ற செய்தி- கேரள சினிமாத்துறையில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் சீண்டல் குறித்த செய்தியே.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றிய பேசுபொருள் தற்போதைய காலகட்டத்தில் மட்டும் தொடங்கியதில்லை. கடந்த 2017ம் வருடம் ஒரு மலையாள முன்னணி நடிகையை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் நடிகையே புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு அந்த செய்தி மெல்ல மெல்ல நீர்த்து போக செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ‘ஹேமா கமிட்டி’ மலையாள சினிமாத்துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் சென்று விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் பெண்கள் எவ்வாறெல்லாம் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்படக் கருவியாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதற்கொண்டு அனைத்து மட்டத்திலும் உள்ள ஆண்களாலும் சினிமா நடிகைகள் எவ்வாறு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானார்கள் என்று விசாரித்ததன் அடிப்படையில் அறிக்கை தயாரித்துள்ளது.
”சினிமாத்துறையில் ஆண்-பெண் சமமான பார்வை இல்லாததும், ஆணாதிக்க திமிருடன் நடக்கும் ஆண்களிடம் சுயமரியாதை இழந்து, உடலளவிலும், மனரீதியிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஒரு அறிக்கையை தயாரித்து கொடுத்து அம்பலப்படுத்தி இருக்கிறது ஹேமா கமிட்டி”. இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஹேமா, முன்னாள் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி கேபி வல்சலா குமாரி அடங்கிய குழு 2019 ஆண்டு இறுதியில் கேரள அரசிடம் இந்த அறிக்கையை சமர்ப்பித்தித்திருக்கிறது. அதே சமயம், அதை வெளியிட வேண்டும் எனத் திரைத்துறை பெண்கள் கூட்டமைப்பான WCC உள்ளிட்டவை வலியுறுத்தின. இருப்பினும், இதனை நான்கரை ஆண்டுகளாக இதைக் கேரள அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது ஏன் என்ற கேள்வி தற்போது எழுகிறது.
சில சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை ஆகஸ்டு 19, 2024 அன்று தான் வெளியானது. ’பாலியல் தொடுகைக்கு இணங்கினால் மட்டுமே சினிமாத்துறையில் தொடர்ந்து இயங்கமுடியும் என்பதை எழுதப்படாத விதியாகவே கொண்டு, ஒட்டுமொத்த துறையையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த குழு செயல்பட்டு வந்திருக்கிறது’ என்பதை கமிட்டி அறிக்கை சொல்கிறது.
இத்துறையில் புதுமுக நடிகைகள் முதல் அனுபவமிக்க நடிகைகள் வரை பல பெண்கள் பாதிப்புக்குள்ளாக்கியிருப்பது இந்த அறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளது. துணை நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பனை மற்றும் நடன கலைஞர்கள் என்று அனைத்து மட்டங்களிலும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. மேலும் நடிகர் சங்க உறுப்பினர் ஆவதற்கு கூட இது போன்ற இழிசெயலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று செய்திகள் மூலம் அறியமுடிகிறது. எல்லா மட்டத்திலும் இதற்கு இணங்காதவர்களுக்கு வேலை நேரம் அதிகமாகவும், சம்பளம் குறைவாகவும் தாமதப்படுத்தியும் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கழிவறை வசதியோ, ஆடை மாற்று வதற்கான வசதிகளோ ஏற்படுத்துவது இல்லை என அறிக்கை கூறுகிறது.
எந்த ஒரு துறையிலும் பதவி உயர்வோ அல்லது வேலை வாய்ப்போ ‘அட்ஜஸ்ட்’ (Adjust) செய்தால்தான் கிடைக்கும் என்று பகிரங்கமாக சொல்லும் அளவிற்கு பாலியல் கொடூரர்களுக்குத் துணிவு வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. சினிமாத்துறை என்றால் இன்னும் மோசமான பாலியல் சீண்டல்கள் அரங்கேறுகின்றன. காலம் காலமாக பெண்களை போதை பொருளாகவும், ஆணுக்கு அடிபணியும் ஒரு அடிமையாகவும் சித்தரிக்கும் மனநிலையை ஊக்குவித்தது சினிமாத்துறையே.
இத்தகைய பாலியல் அத்துமீறல்களை முன்னரே தெரிவிக்காமல், இப்போது ஏன் கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய ஏளனப்பேச்சுகளை பேசுபவர்கள் அவர்கள் அறியாமையை தான் காட்டுகிறது. அப்பெண் எப்படிப்பட்ட குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலையில் உள்ளார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். “இனிவரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று அடியெடுத்து வைத்திருக்கும் அந்தப் பெண்களை பாராட்ட வேண்டும்“. பெண் என்பதாலேயே பல அவதூறுகள் வாரி இறைக்கப்படும் என்று தெரிந்தும் குரல் கொடுக்கும் பெண்களின் நிலையை அவதூறு செய்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
எந்தப் பெண்ணும் அறிந்தோ / வேண்டும் என்றோ வாய்ப்பிற்காகத் தன்னை இழக்க முன்வரமாட்டாள். அறியாத வயதில் எந்த நிலைக்குத் தான் தள்ளப்படுகிறோம் என்பதை அறிவதற்குள் அவளை பாலியல் வல்லூறுகள் உபயோகப்படுத்துகின்றன. என்ன விபரீதம் நடக்கப்போகிறது என்று தெரியாமலே அப்பெண்கள் சிதைக்கப்படுகிறார்கள். இதற்கும் மேலாக தனது குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை இவற்றை எல்லாம் மனதில் நிறுத்தி எப்படியாவது இந்த சமூகத்தில் அல்லது இந்தத்துறையில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் பிறகு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வரும் எளிய பின்னணி கொண்ட பெண்களை இந்த வல்லுறவுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறு கட்டாயப்படுத்தி இணங்க செய்வது என்பது அந்த நிலையை கடந்த அல்லது பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியவரும்.
பெண்கள் பேருந்தில் செல்லும் போது பின்புறம் வந்து நின்று உரசுவதும் தினமும் நடக்கும் ஒருவித பாலியல் சீண்டல்தான். இரயிலில் செல்லும் போது பொது கம்பார்ட்மெண்டில் ஏறினால் விலகி வழிவிடும் அதே ஆண்கள், இறங்குமிடம் வரும்போது பெண்களுக்கு அருகில் நெருக்கமாக வந்துநின்று இடித்துவிட்டு தான் இறங்கி செல்கிறார்கள். இந்தக் கொடுமையை அனுபவிக்கும் பெண்களால் ஒன்றும் பேசவே முடியாது. கூட்ட நெரிசலில் யார் இடித்தார்கள் என்று அறியாததால் யாரைத் திட்டுவது/ அடிப்பது என்று குழப்பம் ஏற்படும். இவ்வாறு காத்திருந்து பெண்களை இடித்து விட்டு செல்லும் ஆண்களை ஒன்றுமே செய்ய இயலாதா? என்ற ஏக்கம் மட்டுமே பெண்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் சந்தர்ப்பம் என்று கேடுகெட்ட ஒருசிலர் மோசமாக நடந்து கொள்வார்கள். இதையும் கடந்து வரவேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர்.
சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் ‘அனுசரித்து’ செல்ல வேண்டும் என பெரிய பெரிய நடிகர்கள் அதுவும் முன்னணி கதாநாயகர்கள் சொல்லி இருப்பதைக் கேட்கும் போது நிஜத்தில் இவர்கள் சினிமாவில் வண்ணம் பூசிய நல்லவனாக நடித்துவிட்டு, நிஜ வாழ்க்கையில் வில்லனாக இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. ‘ஹீரோக்களின்’ இந்த இரட்டைவேடம் புரியாமல் ரசிகர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவர்கள் பேனர் மீது பாலைக் கொட்டி கற்பூரம் காட்டுவதும் நடக்கிறது. இந்த ரசிகர்களுக்கு அவர்கள் கொண்டாடியது ஒரு பாலியல் குற்றவாளியை என்று இப்போது புரிந்து இருக்கும்.
ஒரு குற்றம் நடந்து பெண் புகார் கொடுத்தால் அதை கவனிக்காமல் புறந்தள்ளுவதும், அது பெரிய சர்ச்சையான பிறகு பதில் சொல்ல வேண்டிய நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு செல்வதும், பிறகு வெளிவந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என சொல்வது எந்த வகையான நடைமுறை? பதவியில் இருக்கும் போது உதவாத எண்ணம் வெளியில் வந்து பேசுவது நிஜ வாழ்கையிலும் நடிப்பாகதான் இருக்கும் என புரிந்து கொள்ளாலாமா?
மலையாள சினிமாவை நடுங்க வைத்துள்ள ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் என்பது ஆரோக்கியமான செய்திதான். இது ஒரு தொடக்கமே! மேலும், இந்த ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் அந்த புகார்கள் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கேரள அரசின் முதன்மை பொறுப்பாகிறது. அப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எந்த எந்த நடிகர்களுக்கு மேக்கப் கலைந்து வியர்த்து கொட்டுமோ தெரியாது.
உண்மை வெளிவர நாட்கள் எடுக்கலாம். ஆனால் உண்மை ஒருபோதும் மடியாது, என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். இது போன்று பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளித்தால் நியாயமான விசாரணை வரும் என்ற நிலை வந்தால்தான் இனி எந்த பெண்ணிடமும் அந்துமீற நினைக்கும் சில ஆண்களின் கொட்டம் அடங்கும். பெண்களும் தைரியமாக எந்தத்துறையிலும் இயங்க முடியும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து POSH சட்டம் (Prevention of Sexual Harassment) கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டம் சினிமாத்துறை முதற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் கொண்டுவரப்படுவதே மாநில அரசின் முக்கிய கடமையாகும்.
ஹேமா கமிட்டி அறிக்கையை முன்வைத்து நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்ற அதே நேரத்தில் 2019ல் தயாரான இந்த அறிக்கையை ஏன் நான்கரை வருடங்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்தீர்கள் என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் நிறைந்த துறையில் பெண்களை இரண்டாம் தர கண்ணோட்டத்தில் பார்க்கும் கேடுகெட்ட பார்வை நிலவிவருவது என்பதை மிகவும் ஆபத்தானதாகவே பார்க்க வேண்டும். அதே நேரத்தில் இப்போது தைரியமாக முன்வந்து புகார்கள் பதியும் பெண் நடிகைகளை வரவேற்போம். பாதிக்கப்பட்ட பெண்களின் சிலர் வெளியே வந்து பேசும் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டுவோம். இப்போதும் தயங்கி நின்றால் தவறுசெய்தவர்கள் தப்பிக்க வழி செய்தது போல் ஆகும். ஆகவே எந்த பிற்போக்கு எண்ணங்களையும் மனதில் கொண்டு தவறை தாங்கி கடந்து செல்வது என்பது இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம் என்றே சொல்லலாம். காலம் கடந்துவிட்டதே என்று மற்றவர்கள் பேசாமல் கடந்து செல்லவேண்டாம். இந்தளவுக்கு மோசமாக நிலைமை செல்லும் போது பின்விளைவுகள் பற்றியோ, படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதோ என்ற பயம், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகப் பலரும் புகாரளிக்கத் தயங்க வேண்டாம். தவறுகளை மறைக்க மறைக்க குற்றங்கள் அதிகமாகும். எனவே இன்று பெண்களாகிய நீங்கள் எடுக்கும் இத்தகைய நல்ல முடிவு என்பது எதிர்காலத்தில் இனி எந்த பெண்ணிற்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு.
ஆணும் பெண்ணும் சமம்தான் என்று வாயளவில் சொல்வது மட்டும் போதாது. அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலை வரவேண்டும். அதுதான் கம்யூனிசம். அத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இது போன்ற இழி நிலையில் பெண்களை விடலாமா? பாதிக்கப்பட்ட பெண்களை குறை சொல்லியே பழக்கப்பட்ட சமூகம் இது. ஆனால் நீங்கள் சொல்லும் நீதிதான் என்ன? சம்பந்தப்பட்ட ஆண்கள் நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ, தொழில்நுட்ப கலைஞர்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏன் இன்னும் தாமதம் காட்டுகிறது கேரள அரசு?
இவ்வாறு பெண்கள் பாதுகாப்பு விடயத்தில் பல கேள்விகள் இன்று எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்காகவும் நாம் இணைந்து குரல் எழுப்பினால் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும். மே 17 இயக்கமும் அண்மையில் ஒரத்தநாடு பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை, கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை என பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பி அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சினிமா துறை மட்டுமல்ல, எந்த துறையைச் சார்ந்த பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க பெண்கள் அமைப்பாய்த் திரண்டு நிற்பதே நமக்கு பலமாக அமையும். நாம் ஒற்றுமையாய் குரல் கொடுத்தால் இனி குற்றவாளிகள் ஒளிந்து கொள்ள இயலாது.