
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று.
– புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு மிகப்பெரும் துயரத்தை தருகிறது. எதிர்பாராத பேரிழப்பு. இந்த இழப்பை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. அன்றாடம் பேசிக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டும், செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு போராளியின் இழப்பு இது. அவரை இறுதியாய் ஒருமுறை சந்திப்பதற்கோ, அவருக்கு நேரில் வீரவணக்கம் செலுத்துவதற்கோ வாய்ப்பில்லாமல் சிறைக்குள் அடைபட்ட பெரும் துயரம் ஆட்டுகிறது. சிறைக்குள் அடைபட்டது குறித்து இதுவரை வராத வருத்தம் ஐயா.வீரசந்தானம் அவர்களின் முகத்தை இறுதியாய் பார்க்க இயலாமல் போனதால் இன்று வந்து நெஞ்சை அழுத்துகிறது.
2009க்குப் பிறகு இயக்கமாய் இயங்கியத் தொடங்கிய தருணத்தில் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வலிமைப்படுத்தும் களப்போராளி அவர். போர்க்குரலாக முழக்கங்களில் அவரிடத்திலிருந்து வெளிப்படும். 2011ல் மீனவர் படுகொலையைக் கண்டித்து காங்கிரஸ் அலுவலக முற்றுகை முதல் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பது, ஏழு தமிழர் விடுதலைக் களத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என இளைஞர்கள் முதல் இயக்கங்கள், கட்சிகள், என அனைவரையும் போராட்டக் களத்தில் உற்சாகப்படுத்துவது, ஆதரிப்பது, உரிமையோடு விமர்சிப்பது, அனைவரும் ஒன்றாக நின்று போராட வேண்டுமென்று வலியுறுத்துவது என்று அனைவருக்குமானவராகவும், தோழமை உணர்வுடனும், எங்களைப் போன்றோர்க்கு தந்தையைப் போன்றும், உறவாடி நின்ற குரல் நின்று போயிருக்கிறது.
இறுதியாய் 2017 தமிழீழ நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறை நெருக்கடி அறிவிக்கப்பட்ட போதிலும், முதல் நபராக களத்திற்கு வந்து நின்றார். அனைவரோடும் சேர்ந்து போராடி கைதாகினார். நாங்களும் அவரும் வேறு வேறு அரங்கில் அடைபட்ட பொழுதில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அரங்கத்திலிருந்த அனைவருக்கும் அரசியல் உணர்வு ஊட்டினார். அந்த உற்சாகக் குரல் நினைவிலிருந்து துன்புறுத்துகிறது.
2015ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்காக காணொளி பதிவு எடுக்க என் குழந்தையுடன் சென்று அவரை சந்தித்த பொழுதில் அவரது ஓவியங்களை ஆர்வமுடன் விளக்கிப் பேசி, குழந்தையுடன் விளையாடிய அந்தக் கணங்கள் நினைவுக்கு வருகிறது. 2011இல் மூவர் தூக்கு அறிவிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள் அற்புதம் அம்மாள் அவர்கள் ஊடகச் சந்திப்பினை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். மிகுந்த நெருக்கடி மிக்க அந்நாளில் அற்புதம் அம்மாவுக்கு ஆறுதல் மற்றும் தைரியத்தை அளித்ததோடு ஊடகச் சந்திப்பில் மிகத் தைரியமான மனத்திடத்தை வெளிப்படுத்தினார். ஊடகங்களிடம் இருந்து வெளிப்படும் எதிர் மனநிலையை அன்றைய தினத்தில் எதிர்கொண்டு மரணதண்டனைக்கு எதிரான முழக்கத்தைப் பதிவு செய்தார்.
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர். அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு போராட்டம், ஈழவிடுதலைப் போராட்டம் என அனைத்து தமிழின போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர். தமிழீழ விடுதலை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் விடுதலைக்கும் சமரசமற்ற ஆதரவை எதற்கும் அஞ்சாது பொதுவெளியில் பதிவு செய்தவர். அனைத்து போராட்டம்-பொதுக்கூட்டங்களில் இக்கருத்தை பதிவு செய்தவாறே இருந்தார். சாதி ஒழிப்பு தமிழ்தேசியத்தையும், திராவிட இயக்க-பெரியாரிய பங்களிப்பையும் சமரசமில்லாமல் அங்கீகரித்து முன்மொழிந்தவர்.
அனைத்து இயக்கங்களுக்கும் இணைப்பாளராகவும், கலைஞராகவும், போராளியாகவும், தோழராகவும் களத்தில் நின்ற ஐயா.வீரசந்தானம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவர் விட்டுச் சென்ற பணிகளையும், கோரிக்கைகளையும், பணிகளையும் முன்னகர்த்துவோம்.
சிறைச்சாலையில் முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் ஒன்றிணைந்து ஐயாவிற்கான மரியாதையும், வீரவணக்கத்தையும் செலுத்தினோம். அவருக்கு நேரில மரியாதை செலுத்த இயலாது போன துயரம் வாழ்நாள் முழுதும் நிற்கும்.