
மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனகாபுத்தூர் மக்களை முறையான அரசு ஆவணங்கள் எதுவுமின்றி, ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கின்றது ஆளும் (தி.மு.க) அரசு. ஒரு சில அமைப்புகள், கட்சிகளை தவிர்த்து மற்ற அனைவரும் இது குறித்து பேசுவதற்கு கூட தயாராக இல்லை. அரசு எந்திரமும், அதிகார வர்க்கமும் ஒன்று சேர்ந்து அம்மக்களுக்கு அநீதிகளை இழைத்துக் கொண்டிருக்கின்றன.
அனகாபுத்தூர் பிரச்சனையை அறிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு செப் 2023ல் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களை சந்தித்து கள நிலவரத்தைக் கேட்டறிந்தார். தற்போது இடிக்கப்பட்டு கொண்டிருக்கும் அனகாபுத்தூர் மக்களின் வீடுகள், CMDA-வினால் அங்கீகரிக்கப்பட்டு, 2008-ல் மாவட்ட ஆட்சியரால் பட்டாவுக்கான ரசீது வழங்கப்பட்டவை. அம்மக்கள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இருப்பினும் ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ளதாக அவர்களை அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு நீர் மேலாண்மை வாரியத்தால் ஆற்றங்கரையின் எல்லையாக நடப்பட்ட கல்லில் இருந்து அம்மக்களின் வீடுகள் தள்ளியே இருக்கின்றன. ஆனால் இதே பகுதியில் (குறிப்பாக) ஆற்றிற்குள்ளாக இருக்கும் காசாக்ராண்ட் (Casagrand), G square, மாதா பொறியியல் கல்லூரி போன்ற நிறுவனங்களை நோக்கி எந்தவித கேள்விகளும் எழவில்லை. இந்த தகவல்களைக் கொண்டே அனகாபுத்தூர் மக்களின் நியாயத்தை எடுத்துரைத்து அவர்களின் வீடுகளைக் காப்பாற்ற மக்களின் பக்கம் நின்றது மே 17 இயக்கம்.
தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு, சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் நகர் என 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசிக்கின்றனர். பலநூறு குழந்தைகள் முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு துணையாக நின்று போராட்டக் களங்களைக் கட்டியமைத்து, துண்டறிக்கை, சுவரொட்டிகள் என்று தொடர் பிரச்சாரத்தின் மூலம் இந்த முறைகேடான வெளியேற்றத்தை குறித்து அனகாபுத்தூர் மக்களுக்கு தெரியப்படுத்தி அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டிருந்தது மே17 இயக்கம்.

அக்டோபர்12, 2023ல் ‘ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றாதே’ என்ற கோரிக்கை முழக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தியது மே17 இயக்கம். இதில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், இந்திய குடியரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அன்பு வேந்தன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுபாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் பல்வேறு தோழமை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாற்றினர். மேலும் மாற்று இடமென்று வழங்கப்பட்ட அடையாறு ஆற்றுக்கு அருகில் இருக்கும் அஞ்சுகம் நகர் பகுதிக்கு தோழர். திருமுருகன் காந்தி மற்றும் தோழர். குடந்தை அரசனும் நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் மோசமான தரத்தை அம்பலப்படுத்தினர். அதற்கான காணொளியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 4, 2023 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரோடு வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அம்மக்களை வெளியேற்றியது அரசு. இதை தட்டிக்கேட்ட மக்களையும், CPI கட்சியின் தோழர் பாலன் அவர்களையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். எந்த ஊடகமும் இதை பதிவு செய்யாத நிலையில் களத்தில் இருந்த மே 17 இயக்கத் தோழர்கள் அம்மக்களுக்கு துணையாக நின்றதோடு அங்கே நடக்கும் அக்கிரமங்களை பதிவு செய்து வெளியுலகிற்கு கொண்டு சென்றனர். சட்டவிரோதமான இச்செயலை பல்வேறு தலைவர்களிடம் கொண்டு சென்று வீடுகள் இடிப்பை தடுக்க முயற்சி செய்தது மே17 இயக்கம்.
மக்கள் போராட்டத்தினாலும், மே17 இயக்கத் தோழர்களின் களப்போராட்டத்தினாலும், தோழர் முத்தரசன், தோழர் ஜவாஹிருல்லா, வழக்கறிஞர் சுபாஷ் ஆகியோரின் முயற்சியாலும் நவம்பர் 5, 2023 அன்று வீடுகள் இடிப்பது தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் டோபிகானா தெரு மட்டும் இடிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது நிரந்தரமான தீர்வு இல்லை என்பதால் பட்டா கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 13, 2023-ல் அனகாபுத்தூர் பகுதியில், பள்ளி பயின்று வரும் மாணவர்களைக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது மே17 இயக்கம்.
குடியிருப்புகளை இடிப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் இந்த மே மாதத் துவக்கத்தில் திடீரென்று மீண்டும் வீடுகளை இடிக்கப்போவதாகவும், கொடுக்கப்படவிருக்கும் மாற்று இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டும் என்றும் வாகனத்தில் ஒலிபரப்பி மூலம் அறிவித்தனர்.
இதனையறிந்து, மே 5, 2025 அன்று தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அம்மக்களை நேரில் சென்று சந்தித்து நிலையைக் கேட்டறிந்தார். அதிகாரிகள் தனியார் நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்ட வரைபடங்களை காட்டி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என கூறுகிறார்கள். இது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூலில் போட்ட பதிவு :
https://www.facebook.com/share/1BkoF96Qhc
இப்பிரச்சனைக்காக பல கட்சிகள் இணைந்து அப்பகுதியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதுடன், அம்மக்களை மீண்டும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார் தோழர். திருமுருகன் காந்தி. இது குறித்து விவரித்த தோழர். திருமுருகன் காந்தி பதிவு :
https://www.facebook.com/share/1GC73aG2RW
மே 12, 2025, அன்று வீடுகள் இடிக்கப்படுவதாக காவல் துறையைக் குவித்த செய்தியறிந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன் குமார் அவர்கள் மே 17 இயக்கத் தோழர்களுடன் அம்மக்களுக்கு ஆதரவாக நின்றார்கள். இது குறித்தான பதிவு :
https://www.facebook.com/share/p/1C2WuZBzGQ
ஆனால் மே 13, 2025 அன்று அனகாபுத்தூருக்கு அருகே இருக்கும் கரைமா நகர் பகுதியை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறையினர் இடித்துத் தள்ளினர். மாற்று இடம் கூட கொடுக்காமல் இன்று வரை அம்மக்கள் வீதியில் உள்ளனர்.
மே 18, 2025 அன்று மே17 இயக்கத்தின் நினைவேந்தலுக்கு வந்திருந்த மக்கள் ஐயா. வைகோவை சந்தித்து இது குறித்து முறையிட்டனர். பின்னர் தோழர். திருமுருகன் காந்தியிடம் நடந்தவற்றை கேட்டறிந்த ஐயா. வைகோ அவர்கள், சட்டவிரோதமான வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பினார். இனி வீடுகளை இடிக்க மாட்டார்கள், எனவே பட்டா வாங்கும் வழிமுறையை தொடருவோம் என்றிருந்த நிலையில் மே 19, 2025 அன்று இரவு காவல்துறைக் குவிப்புடன், புல்டோசர்களுடன் வீடுகளை இடிக்க தயாராயினர் அதிகாரிகள். உடனடியாக அங்கு மே 17 இயக்கத் தோழர்கள் திரண்டனர். மே 20, 2025 அன்று தாய் மூகாம்பிகை நகரில் உள்ள வீடுகளை இடிக்க ஆரம்பித்து விட்டனர்.
தோழர் திருமுருகன் காந்தி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் பேசிய பின்னரும் மாற்றுக் குடியிருப்பு வாங்கியவர்களின் வீடுகளை மட்டுமே இன்று இடிக்கிறோம் என்று வீடுகளை இடிக்க ஆரம்பித்தனர். அங்கிருந்து செல்ல மாட்டோம் என்ற மக்களை மிரட்டி மாற்று இடத்திற்கு அனுப்புவதற்கான ஒப்புதலை வாங்கிக் கொண்டிருந்தனர். அதற்கு அடுத்தடுத்த நாளிலிருந்து இன்று வரை மொத்தமாகவே இடிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மே பதினேழு இயக்கத் தோழர்களும் இன்று வரை அம்மக்களுடனேயே நிற்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தோழர்கள் உடனுக்குடன் வெளியே தெரிய வைத்தனர். காணொளிகளால் அம்மக்கள் படும் வேதனைகளைப் பகிர்ந்தனர். இதனால் காவல் துறையின் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாயினர். இதற்காக மே 17 இயக்க தோழர். சுந்தரமூர்த்தியை கைது செய்தது மட்டுமில்லாமல் மற்ற தோழர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.

பட்டா வழங்கப்பட்ட தன்னுடைய வீடும் இடிக்கப்பட உள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறும் தோழர். திருமுருகன் காந்தியிடம் ஒரு குடும்பத்தினர் முறையிட்டனர். இவர்கள் மட்டுமல்லாது இன்னும் 5 குடும்பங்கள் வைத்திருக்கும் பட்டா உள்ளிட்ட முறையான அரசு ஆவணங்களின் அடிப்படையில் தோழர். திருமுருகன் காந்தியும், வழக்கறிஞர் சுபாஷ் அவர்களும் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் வாதிட்டனர்.
அரசால் முறையான சர்வே எடுக்கப்பட்டு, ஆற்றின் எல்லை இதுதான் என்று வரையறுக்கப்பட்ட வரைபடத்தை கேட்டதற்கு, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டுக் கொள்ளுமாறும், இன்று வீடுகள் இடிப்பது உறுதி என்றும் ஆணையர் கூறினார்.
வீடுகளை இடிக்க முறையான நோட்டீஸ் வழங்காமல், எவ்வித ஆவணங்களும் இல்லாமல், முறையான நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு கொண்டிருக்கிறன. இந்த அநீதிகளை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், அம்மக்களுக்கு துணை நிற்க வேண்டும் எனக் கோரினார் தோழர். திருமுருகன் காந்தி. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கான சில கட்சிகளும், இயக்கப் பிரதிநிதிகளின் ஆதரவையும் தவிர பலரும் மௌனமே காக்கின்றனர். விளம்பரத்துக்காக வந்த கட்சியும் (நா.த.க) ஒரிரு இடங்களைப் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்த பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இந்த முறைகேடான வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த மே 17 இயக்கம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் மே 21, 2025 அன்று இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் மூலம் அரசு சொல்லும் பொய்களை அம்பலப்படுத்தினார் தோழர். திருமுருகன் காந்தி. பின்னர் மே 22, 2025 அன்று, மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன், வழக்கறிஞர் சுபாஷ், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தோழர். வெற்றிச்செல்வன் ஆகியோரைக் கொண்டு ஊடக சந்திப்பை நடத்தியது மே 17 இயக்கம். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் காசா கிராண்ட் என்னும் பெரு நிறுவனத்திற்காக அரசு வளைந்து கொடுக்கும் தன்மையையும், CRTCL என்ற தனியார் நிறுவனத்தை கொண்டு சர்வே எடுக்கப்பட்ட முறையற்ற தன்மையையும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடைமுறைகளையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்கள். மேலும் அரசு அதிகாரிகளை வைத்து, வெளிப்படைத் தன்மையோடு முறையான சர்வே எடுக்கப்படும் வரை வீடுகள் இடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஊடக சந்திப்பை முடித்தவுடன் தோழர் திருமுருகன் காந்தியும், மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் சுபாஷ், தோழர் வெற்றிச்செல்வன் அவர்களும் மே17 இயக்க தோழர்களுடன் சென்று அய்யா. நல்லகண்ணு அவர்களை சந்தித்து அனகாபுத்தூரில் நடக்கும் அநீதிகளை விளக்கி இதை தடுத்து நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரினர். 98ம் வயதிலும் சென்னை-ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகரில் வீடுகளை அநியாயமாக இடிப்பதைக் கேள்விப்பட்டவுடன் நேரில் சென்றவர் அம்மக்களுக்கு துணையாக நின்றவர், இன்று அனகாபுத்தூர் மக்களுக்காக அதேநாள் மாலை செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்யச் சொன்னார்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர், மூத்த தலைவர்கள் தோழர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து அனகாபுத்தூர் மக்களின் நிலைமைகளை விளக்கினார்கள். தலைவர்களும் அரசு அதிகாரிகளிடத்திலும், ஆட்சியாளர்களிடத்திலும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு, அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பதை நிறுத்தவேண்டுமென கோரிக்கை வைத்தனர். மக்களை சந்திக்க மாவட்ட பொறுப்பாளர்களையும் அனுப்பி வைத்தனர்.
எனினும் ஐயா. நல்லகண்ணு அவர்கள் முன்வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடுகளை இடித்தனர். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட அதிகாரவர்க்கத்தின் எதேச்சதிகாரம் இப்போதும் தொடர்கிறது
தங்கள் நிலத்தை காக்க ஒன்றுதிரண்டு போராடிய மக்களிடையே உங்கள் வீடுகளை (காயிதேமில்லத் நகர்) இடிக்கமாட்டோம், அனகாபுத்தூர் போராட்டத்தில் இணையாமல் இருந்தால் வீடுகளை பாதுகாத்து தருகிறோம் என்று கூறி மக்களை பிரித்தனர். ஆனால் மற்ற பகுதிகளை இடித்தமுடித்த பின்னர் தற்போது காயிதேமில்லத் நகரை இடிக்கபோவதாக கூறி உள்ளனர். இதனை தடுக்கும் விதமாகவும், மக்களை சந்திப்பதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். முனைவர் திருமாவளவன் அவர்களும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் மே 26, 2025 அன்று ஆணையரை சந்தித்து வீடு இடிப்பினை உடனே நிறுத்த கோரிக்கை வைத்தனர்.

மேலும் மே 26, 2025 அன்று காலை அனகாபுத்தூர் காயிதேமில்லத் நகர் இடிப்பினை தடுக்கும் விதமாகவும், மக்களை சந்திப்பதற்கும் வி.சி.க கட்சி தலைவருமான தோழர். முனைவர் திருமாவளவன் அவர்கள் ஆணையரை சந்தித்து வீடு இடிப்பினை உடனே நிறுத்த கோரிக்கை வைத்தார்.
எந்த அதிகாரியும், அமைச்சர்களும் ஊடகங்களையோ, மக்களையோ நேரில் சந்திக்க துணிச்சலில்லாமல் வீடுகளை இடிக்கின்றனர். சட்டம் தன் கடமையை நேர்மையாக செய்யுமெனில் இடிக்கும் பணியில் இருக்கும் அதிகாரிகள் தான் கைது செய்யப்பட வேண்டும். பொய்யான வரைபடத்தை வைத்தும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டா வீடுகளையும் இடித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச யோகி அரசின் ‘புல்டோசர் மாடல்’ ஆட்சி போலவே தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது.
தங்கள் நிலத்தை காக்க ஒன்று திரண்டு போராடிய மக்களிடையே காயிதேமில்லத் நகரை இடிக்கமாட்டோம், ஆகவே அனகாபுத்தூர் போராட்டத்தில் இணையாமல் இருந்தால் வீடுகளை பாதுகாத்து தருகிறோம் என்று கூறி மக்களைப் பிரித்தனர். மற்ற இடங்களை இடித்த பின்னர், நாளை காயிதேமில்லத் நகரை இடிக்க வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 250 மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகள் அங்கிருக்கின்றன.
அனைவரும் ஒன்றுபட்டு போராடத் திரள்வது மட்டுமே அரசு எந்திரம் அப்பாவி மக்கள் மீது நடத்தும் இதுபோன்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் ஒரே வழி.