
இன்று சியோனிச இசுரேல் அரசு காசா மீது நடந்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை போல், 2009-ல் தமிழீழப் பகுதிகளில் (கிளிநொச்சி) இனப்படுகொலை நடந்தது குறித்தும், நம் ஈழ உறவுகளின் நீதிக்காக வருகின்ற ஞாயிறு மாலை (18.05.2025) நினைவேந்தல் நிகழவு நடக்கவிருப்பதையொட்டி யும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் மே 16, 2025 அன்று பதிவு செய்தது.
காசா முழுமையாக வாசித்தால் இன்று நிகழும் போர்களின் யுக்திகள் புலப்படும். கிளிநொச்சியை 2009 ஜனவரியில் சிங்களப்படை கைப்பற்றிய பின்னர், தமிழர் பகுதிகளுக்கு ஐ.நாவினால் அனுப்பப்பட்டுக்கொண்டிருந்த உணவு மருந்து பொருட்கள் நிறுத்தப்பட்டன. 2009 ஜனவரி 15ம் தேதி ஐ.நாவின் கடைசி நிவாரண பொருள் வாகனங்கள் அனுப்பப்பட்டது. இலங்கை ராணுவம் கொடுத்த வழியில்(coordinates) சென்ற நிவாரண வாகனங்கள் மீது ஆர்ட்டிலெரி(பீரங்கிப்படை) தாக்குதலை இலங்கை தொடுத்தது. ஐ.நாவின் யுனிசெப் & UNDP அதிகாரி ராணுவ தலைமையகத்திற்கு தொடர்புகொண்டு தாம் இருக்குமிடத்தின் விவரங்களை அனுப்பி தாக்குதலை நிறுத்த கோரிய பின்னரும், துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. நிவாரண பொருட்களை விநியோகிக்க இயலாமல் முடக்கப்பட்டது. சர்வதேச அழுத்தத்தினால் ஐ.நாவின் சர்வதேச பொறுப்பாளர்கள் போர் பகுதியிலிருந்து சில நாட்கள் கழித்து மீட்கப்படுகிறார்கள். ஜனவரி இறுதியில் இக்குழு கொழும்புவில் அறிக்கையை சமர்பித்தது.
இதன்படி இலங்கை ராணுவம் மேற்கொண்ட போர்குற்றங்கள், பொதுமக்களின் எண்ணிக்கை, காயமடைந்தோர் என விவரங்களை ஐ.நா தலைமையகத்திற்கு அனுப்பி போர் நிறுத்தம் வேண்டி அறிக்கை அனுப்பகோரினர். இதே சமயத்தில் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த பிரனாப்முகர்ஜி இலங்கை சென்று சென்னைக்கு திரும்பி ஊடக சந்திப்பை நடத்தி 70,000 தமிழர்கள் போரில் சிக்குண்டிருப்பதாக தெரிவித்தார். இதே சமயத்தில் அம்னெஸ்டி-ஐ.நா-செஞ்சிலுவை ஆகியன தமிழரின் எண்ணிக்கை 2,00,000 முதல் 4,40,000 என தெரிவித்தது. 70,000 மக்களுக்கான உணவை மட்டுமே அனுப்பி பசி-நோய் ஆகியவற்றை போர் யுக்திகளாக இலங்கை மாற்றியது. காசாவில் நாம் இன்று காணும் பட்டினிச் சாவை போர் யுக்தியாக இசுரேல் கடைபிடிப்பதை 2009ல் இலங்கை தொடங்கி வைத்தது.
2009 ஜனவரிக்கு பின் உணவு, மருந்து பொருட்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதன்பின் 130 நாட்கள் உணவின்றி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐ.நாவின் களசெயற்பாட்டாளர் கொடுத்த விவரங்களை ஐ.நாவின் இலங்கைக்கான செயலர் கார்டன்வைஸ் தலைமையகத்திற்கு அனுப்பாமல் தாமதித்தார். (இவரே புலிகளுக்கு எதிரான பொய் தகவல் புத்தகமான ‘The Cage’ நூலை எழுதியவர்)
பின்னர் 2009 மார்ச் 6,7ம் தேதிகளில் ஐ.நாவின் மீதான அழுத்தம் அதிகரித்தது. கிட்டதட்ட 8600 தமிழர்கள் 30 நாட்களுக்குள்ளாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இது ஆப்கானிஸ்தான்-ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம் என்பதால் ஐ.நாவின் மீது அழுத்தம் அதிகரித்தது.

ஐ.நா மனித உரிமை அவை போரை நிறுத்த எடுத்த முயற்சியை இந்தியா-விஜய்நம்பியார் முறியடித்தார். அதே 2009 மார்ச் மாத காலத்தில் ஐ.நாவின் பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்பட்ட விவாதத்தை புலிகளுக்கு எதிராக மாற்றப்பட்டு, போர் நிறுத்த முயற்சி நிறுத்தப்பட்டது. இவ்வாறு சர்வதேச அரங்கில் தமிழர் மீதான இனப்படுகொலை போரை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தடுக்கப்பட்டன. ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை தொகுக்கும் பணியை கார்டன்வைஸால் தடுக்கப்பட்டது. இறந்தவரை எண்ணுவது எங்கள் வேலையில்லை என ஐ.நா அறிவித்தது.
மார்ச் 8ம் தேதி ஐ.நாவின் மனித உரிமை தலைவர் நவிபிள்ளை ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்கிறார். இலங்கையின் போர்க்குற்றத்தை பட்டியலிட்டு வெளியிடப்பட இருந்த ஊடக சந்திப்பை நிறுத்த வேண்டுமென ஐ.நா தலைமையகத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை நவிபிள்ளை மறுக்கவே, ஊடக அறிக்கையை திருத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன்படி இலங்கை மீதான குற்றச்சாட்டை புலிகள் மீதும் சமப்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை செய்தவர் ஐ.நாவின் துணை செயலர் விஜய் நம்பியார். இந்தியாவின் முன்னாள் அதிகாரி, இந்த ஊடக சந்திப்பை தடுக்க முயன்று, பின்னர் புலிகளுக்கு எதிரானதாக மாற்றினார் என ஐ.நாவினால் 2010ல் நியமனம் செய்யப்பட்ட உள்ளக விசாரணையினை நடத்திய ’சார்லஸ்பெட்ரி’ தனது அறிக்கையில் விஜய்நம்பியாரை குற்றம் சாட்டினார். இந்த அறிக்கையையும் வெளியிடவிடாமல் தடுத்தார். பின் 2012 நவம்பரில் இந்த அறிக்கையை சார்லஸ் பெட்ரி கசியவிட்ட பின்னரே அறிக்கை வெளியானது.
பலவேறு ஐ.நா நிபுணர்களின் அழுத்ததிற்கு பின்னர் மே மாதம் 15ம் தேதி போர்முனைக்கு சென்று சாவுகளை தடுக்க விஜய் நம்பியார் அனுப்பப்படுகிறார். இச்சமயத்தில் மே6-10ம் தேதியில் இந்தியாவில் தேர்தல் பரப்புரை உச்சத்தில் இருந்த போது கொத்துகுண்டுகள், ஆர்ட்டிலெரி தாக்குதல்களை நடத்தி பெருமளவில் மக்களை அழித்தார்கள். மே முதல் வாரத்தில் இந்தியாவிலிருந்து படையுதவிகள் செல்வதை கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கோவையில் தடுத்தார்கள். இராணுவ வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
மே14ம் தேதி போர் நிறுத்த முயற்சியில் புலிகள், கோத்தபய ராஜபக்சே, சர்வதேச ஊடகவியலாளர் மேரிகோல்வின் (சிரியா போரில் 2011ல் படுகொலையானார்) நார்வே தூதுகுழு, விஜய் நம்பியார் ஆகியோர் வழியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. புலிகளை போர் கைதிகளாக்குவது, போர் நிறுத்தத்தை கண்காணிப்பது, பொதுமக்கள் மீதான இலங்கையின் தாக்குதலை தடுப்பது, வெள்ளை கொடியுடன் சரணடைபவர்களை பாதுகாப்பது எனும் பணிகளுக்காக விஜய் நம்பியார் அனுப்பப்பட்டார்.
மே15,16ம் தேதி முள்ளிவாய்க்காலுக்கு செல்ல வேண்டியவர், தனது பயணத்தை ரத்து செய்தார். காலநிலை சரியில்லை என்றார். மே17ம் தேதி இரவில் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்திடும் வாக்குறுதி அளிக்கப்படுமெனில் புலிகள் ஆயுதங்களை மெளனித்து கைதாவதாக தெரிவித்தார். வெள்ளைக்கொடியுடன் வரும் போராளிகள், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய்நம்பியார் வரவேண்டுமென நடேசன்-புலித்தேவன் அரசியல்குழு பேச்சுவார்த்தையில் உறுதி செய்கிறது. இவ்வாக்குறுதியை பசில் ராஜபக்சே-கோத்தபய ஆகியோரும், 58வது ராணுவ டிவிசனின் சவேந்திரசில்வாவும் ஐ.நாவின் வழியே மேரிகோல்வின் ஊடாக உறுதியளிக்கின்றனர்.
மே18ம் தேதி காலை வெள்ளைகொடியுடன் புலிகளின் அரசியல் தலைவர்கள் முன்னுக்கு வர மக்கள் அவர்கள் உடன் அணிவகுப்பதென இலங்கையால் ஏற்கப்பட்டு மேரிகால்வின்-நார்வே-US-UK-விஜய்நம்பியார் வழியாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாக்குறுதி அடிப்படையில் அரசியல் ஆளுமைகள் நடேசன், புலித்தேவன் வெள்ளைக் கொடியுடன் வெளியே வரும்பொழுது கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். நடேசனின் சிங்கள மனைவியும் படுகொலை செய்யப்படுகிறார்.

மே17ம் தேதியில் தொடங்கப்பட்டு மே19ம் தேதிவரையிலான மூன்று நாட்களுக்குள் 40,000-70,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மே19ம் தேதி காலையில் பாலச்சந்திரன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்.
வெள்ளைக்கொடி சம்பவம் எனும் இந்த போர்க்குற்றமானது, தமிழர்களை இனப்படுகொலை செய்யவேண்டுமெனும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டது. விஜய்நம்பியார் போர்முனைக்கு செல்லாமல் தவிர்த்ததால் இப்படுகொலைகள் சாட்சியங்களற்று நிறைவேற்றப்பட்டன. போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பின் ராஜபக்சே நாடுதிரும்பினான். பான்-கீ-மூன் இலங்கை சென்று முள்வேலி முகாம்களை பார்வையிட்டார். ஐ.நாவின் மனிதநேய பொறுப்பாளர் ஜான் ஹோல்ம்ஸ் முகாம்களில் அதிகளவில் நோயால் மக்கள் கொல்லப்படுகிறார் எனும் அறிக்கை வெளியிட்டார். இலங்கை அரசு உணவை போர்க்கருவியாக பயன்படுத்துகிறதென குற்றம்சாட்டினார்
போர் முடிந்த முதலிரண்டு வாரங்களுக்குள்ளாக ஐ.நாவின் பணியாளர்களை கோத்தபயா உத்தரவின் பெயரில் கடத்தினார்கள். தமிழர்களுக்கு போர்முனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு மிரட்டி புலிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டார்கள். குறிப்பாக மருத்துவர் வரதராஜன் கிட்டதட்ட 20,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை போர் சூழலிலும், மருத்துவமனை மீதான குண்டு வீச்சிற்கு இடையேயும் நடத்தியவர். இவர் 2013ல் ப்ரேமன் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக சாட்சி சொன்னார். கடற்கரையில் சிக்குண்ட மக்களை மீட்கும் செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல்களை இலங்கையரசு தடுத்தது.

இன்று காசாவில் நாம் காணும் மருத்துவமனை அழிப்பு, மக்களை இலக்கு வைத்து குண்டு வீசுவது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துவது, உணவு-மருந்தை ஆயுதமாக பயன்படுத்துவது, மருத்துவமனைகளை அழிப்பது, மருத்துவர்களை குறிவைத்து கைது செய்வது. No Fire Zone என குறியிடப்பட்ட பகுதியை அறிவித்து அங்கே மக்கள் திரண்டதும் குண்டு வீசிக்கொல்வது, உணவு விநியோகத்தின் மீது குண்டு வீசுவது, ஐ.நா பணியாளர்களை தாக்கி கொல்வது. ஐ.நா கண்காணிப்பாளர்களை வெளியேற்றுவது. ஊடகத்தை தடுப்பது. ஊடகவியலாளர்களை கொலை செய்வது என அனைத்தும் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்ற்ப்பட்ட நிகழ்ச்சிகளே.
மக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டும் இலங்கையின் யோக்கியதைகளே மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள். இதில் தமிழர்களின் நீதிக்கான சாட்சியமாக இருந்த நார்வே கைவிரித்தது, கார்டன்வைஸ் மேற்குலகின் கைக்கூலியானார், விஜய்நம்பியார் இந்திய பார்ப்பனர்களின் கைக்கூலியாக செயல்பட்டார். ஒரே சாட்சியமாக இருந்த மேரிகொல்வின் சிரியாவில் ஊடகப்பணி செய்தபோது படுகொலை செய்யப்பட்டார். இவர் அமைதிகாலத்தில் புலிகளின் பகுதியில் தங்கியிருந்து ஆவணப்படுத்தியவர். இலங்கை பகுதிக்கு திரும்பும் பொழுதில் நயவஞ்சகமாக சுற்றிவளைக்கப்பட்டு இலங்கையால் சுடப்பட்டதில் ஒரு கண்ணை இழந்தார்.
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டே புலிகளை குற்றவாளிகளாக சித்தரிக்கும் பரப்புரைகளை சர்வதேசமும், பார்ப்பனியமும் நடத்துகிறது. இவற்றை சில இடதுசாரி பார்ப்பன உதிரிகள் பரப்புரை செய்தும் வருகின்றனர்.
இந்த உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லவே நினைவேந்தலை மே17 இயக்கம் 16 ஆண்டுகளாக நடத்துகிறது. இந்த நிகழ்வுகளை நினைவுகூறவே எமது இயக்கத்திற்கு மே தின நாளினை பெயராக வைத்தோம்.

நினைவேந்தலென்பது நம் இழப்பின் காயத்தினை உணரும் நாள் மட்டுமல்ல, காயப்படுத்தும் அரசியலை எதிர்கொள்ள உறுதியேற்கும் நிகழ்வே.
மேலே குறிப்பிட்ட தகவல்களை 2009முதல் மே17 இயக்கம் பலவேறு மேடைகளில் பகிர்ந்து, பரப்பி வருகிறது. இவை உங்களுக்கு புதிய தகவல் எனில் அடுத்தவர்களுக்கு பகிர்ந்திடுங்கள். உண்மையை உலகம் அறியட்டும்.
மே18ல் தமிழர் குருதி கலந்த நம் (பெசன்ட் நகர்) கடற்கரையில் சந்திப்போம்.
படங்கள் : மே6ம் தேதி , 2009ல் முதல் & மூன்றாம் புகைப்படம் குண்டு வீச்சுக்கு முன்பான குடியிருப்பு, 2,4ம் படங்கள் மே10ம் தேதி குண்டு வீச்சினால் அழிக்கப்பட்டபின் எடுத்தவை.
