
தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவி கைது செய்ததுடன், மக்கள் செயல்பாட்டாளர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த காவல் துறையின் செயல்பாடுகள், ஏற்கெனவே அம்பலப்படுத்திய ராம்கி நிறுவனத்தின் மோசடியை மட்டும் பேசி தனியார்மயத்தை கேள்வி எழுப்பாமலும், ராம்கி நிறுவனத்திற்கு இதனைக் கையளித்த திமுக அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சியை கேள்விக்குட்படுத்தாமலும் விவாதம் நடத்தும் திமுக ஆதரவு யுடியுப் சேனல்களின் நாடகங்கள், இந்த திட்டத்தில் நிதி குறைப்பு செய்த பாஜகவை அம்பலப்படுத்தாத தன்மை போன்றவைகள் குறித்து விரிவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் ஆகஸ்ட் 15, 2025 அன்று பதிவு செய்தவை.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட தோழர் முத்துசெல்வனை அரும்பாடுபட்டு மீட்டெடுத்திருக்கிறார்கள் தோழர்கள்.
தலைநகரில் அனைவரின் கண்முன், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அப்பட்டமாக சட்டவிரோத செயலை செய்துள்ளதெனில், இதே செயல் பிற நகரங்களில், கண்ணுக்கு எட்டாத கிராமங்களில் எவ்வகையில் நடந்துகொள்ளும் என்பதை நினைக்கவே கவலையாக உள்ளது.
திமுக ஆதரவில் நடக்கும் சேனல்கள் திடீரென கண்விழித்து, ‘ராம்கி’ நிறுவனத்தை அம்பலப்படுத்தப் போகிறோம் என கிளம்பி உள்ளார்கள். இந்த அடக்குமுறைகள் ‘ராம்கி’ நிறுவனத்திற்காக திமுக நடத்தியவை. அதைப் பேசாமல் கவனமாக தவிர்த்துவிட்டு, ‘ராம்கி’ மேல் கவனத்தை குவிக்கின்றன. மே17 இயக்கம் இந்த, ‘ராம்கி’ நிறுவனம் குறித்து அம்பலமாக்கும் வரை இந்நிறுவனம் குறித்து திமுகவினர் பேசவில்லை. காவல்துறை அடக்குமுறை, மக்களிடத்தில் அதிர்ச்சியையும், கடுமையான எதிர்ப்பையும் உருவாக்கியவுடன் ‘ராம்கி’ நிறுவன தகவல்களை அலசி ஆராய்கிறார்கள்.
காவல்துறை அத்துமீறலினால் அவப்பெயரையும், சிக்கலையும் எதிர்கொள்ளும் திமுகவை பாதுகாக்கும் நோக்கத்தைத் தவிர, இந்த சேனல்களுக்கு வேறு நோக்கமில்லை. நாம் எதை தற்போது பேசுபொருளாக்க வேண்டுமெனும் முயற்சியை செய்கிறார்கள். ஆளும்வர்க்கத்திற்கு சார்பான விவாதங்கள் அல்ல நாம் வேண்டுவது. அப்படியெனில், நாம் எதை விவாதிக்க வேண்டும்? இவர்கள் குவிக்கும் தகவல்கள் சிலவற்றை கவனிப்போம்.

உதாரணமாக, ஒரு சேனலில் ‘ராம்கி’ நிறுவனத்தை முதலில் கொண்டு வந்தது அதிமுக என சொல்கின்றனர். அது உண்மையல்ல. 2006-2011 திமுக ஆட்சிக்காலத்திலேயே இந்த நிறுவனத்திற்கு திமுக ஒப்பந்தம் கொடுத்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையின் கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றாமல் குற்றச்சாட்டுக்கு 2007-08ல் உள்ளானது இந்நிறுவனம். மேலும் 2009ல் திமுக ஆட்சியில் காய்கறி கழிவுகளின் வழியே மின்னுற்பத்தி செய்யும் ஒப்பந்தத்திலும் இதே போல முறையாக நடத்திட இயலாமல் தோல்வியடைந்த நிறுவனமே இந்த ‘ராம்கி’.
இதன் பின்னர் அதிமுக காலத்தில் 2012ல் ஒப்பந்தங்களை ஈட்டுகிறது.
திமுகவின் தனியார்மய கொள்கையை கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல், அதன் தொழிலாளர் விரோத நிலை குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திமுகவினை பாதுகாக்கும் விதமாக சிக்கலை மடைமாற்றுவது நிகழ்கிறது
அதிமுக காலத்தின் அர்பேசர், ப்ரீமியர் போன்ற நிறுவனம் ஏன் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை? என திமுக தன் ஆட்சிக்காலத்தில் கேள்வி கேட்கவில்லை.
மாறாக, திமுகவின் சென்னை மாநகராட்சியும் ரூ 15000 எனும் சுரண்டல் சம்பளத்தையே கொடுத்து வந்தது. இதை எதிர்த்தே, உழைப்போர் உரிமை இயக்கம் நடத்திய வழக்கின் மூலமாகவே 10 மாதங்களுக்கு முன்பாகவே 23,000 எனும் சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றார்கள். இதை திமுகவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ, அல்லது நகர்புறமேம்பாட்டு அமைச்சரோ, மேயரோ கொடுக்கவில்லை. இந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை திமுக 4 ஆண்டுகளாக அனுமதித்திருந்தது. அதாவது, தனியார் நிறுவனம் மட்டுமல்ல, திமுகவின் ஆட்சியில் உள்ள சென்னை மாநகராட்சியும் குறைந்த சம்பளத்தையே கொடுத்து வந்தது. அதிமுகவின் சுரண்டல் கொள்கையை திமுக தொடர்ந்தது. இவையெல்லாம் மறைக்கப்பட்டே இவர்களின் காணொளிகள் ‘ராம்கி’ போன்ற நிறுவனங்களை மட்டும் குற்றவாளிகளாக்கி சேனல் வீடியோக்கள் வெளியாகின்றன.
மேலும், நாம் கவனிக்க வேண்டியது, பாஜகவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு NULM திட்டத்திற்குள் தொழிலாளர்களை கொண்டுவந்த அதிமுகவின் நடைமுறைகள் திமுக காலத்திலும் தொடர்ந்திருக்கின்றன. இந்தத் திட்டத்திற்கான நிதியை குறைத்து பாஜகவின் திட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறது. இதை மே17 அம்பலப்படுத்தியது.
NULM திட்டத்திலிருந்து இந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு பாஜகவும் ஒரு காரணமென மே17 இயக்கம் சுட்டிக்காட்டியது. இதுவரை எந்த திமுகவின் சேனல்கள் இத்திட்டம் குறித்து பேசவில்லை. பாஜக ஒன்றிய அரசின் திட்டரத்து என்பவை விவாதமாகவில்லை.

இன்று வெளியான அமைச்சர் திரு தங்கம்தென்னரசு அவர்கள் வெளியிட்ட தூய்மைப்பணியாளர் நலத்திட்ட அறிக்கையில் கூட NULM திட்டப்படியாக சுய உதவிக்குழுக்கள் வழியாகவே இந்த தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அதை மாற்றியமைக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், பாஜக முன்மொழிந்த தனியார்மயத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.
13 நாட்களாக நடந்த போராட்டம், கோரிக்கைகள் குறித்த ஆழமான விவாதங்களை கவனமாக தவிர்த்த திமுக சார்பு சேனல்கள், ‘ராம்கி’ நிறுவனத்தை மட்டும் குற்றவாளியாக்கி, அந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் கொடுத்த திமுகவின் அமைச்சகத்தை, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புவதில்லை.
‘ராம்கி’ நிறுவனம் மோசமானது என்பதால் மட்டுமே மே17 இயக்கம் அந்நிறுவனத்தை அம்பலப்படுத்தவில்லை, மாறாக ராம்கியோடு சேர்த்து, தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும் என்றே கோரிக்கை வைக்கிறது. 20+ ஆண்டுகளுக்கு முன் திமுக தொடங்கி வைத்த தனியார்மயமாக்கலால் சென்னை தூய்மையடையவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தது. மேலும் ஒன்றிய அரசின் NULM தொழிலாளர் விரோத தனியார்மய PPP திட்டத்தின் தோல்வியையே மே17 இயக்கம் அம்பலப்படுத்தியது.
NULM திட்டத்தின் கீழ் ‘தொழில்முனைவோர்களாக’ மாற்றுகிறோம் என கூட்டுத்திட்டம் தீட்டிய ஒன்றிய-மாநில அரசுகள், இந்த தொழிலாளர்களை ஏன் தனியார் கையில் தாரைவார்க்கிறார்கள்? என்பதே நம் கேள்வி.
அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட தூய்மைப்பணியாளர் உதவித்திட்டங்களில், ‘தொழில் தொடங்க கொடுக்கப்படும் நிதியுதவி’ என்பது, தூய்மைப்பணியாளர்கள் எவ்விதமான சுயதொழில் செய்ய வாய்ப்புகளை உருவாக்கியது என இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த சுயதொழில்கள் தூய்மைப்பணி சார்ந்தவை எனும் போது, (தூய்மைப்பணிக்காகவே பயிற்சி அளிப்பதாக அரசின் திட்டவிவரம் தெரிவிக்கிறது) தனியார் நிறுவனத்திடம் இவர்கள் எவ்வித தொழில் உறவுகளை வைத்துவிட முடியும்?

ஆகவே கண்துடைப்பு அறிவிப்புகள் ஒருபுறம், காவல்துறை அடக்குமுறை மறுபுறம், தனியார்மயம் என நடப்பவை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவை.
தலைநகர் சென்னையில், அனைவரின் கவனத்திற்கு இடையில் காவல்துறை கடுமையாக தாக்கி மனித உரிமை மீறலை செய்துள்ளது. காவல்துறை முதலமைச்சரின் கீழ் இயங்குகிறது. இந்த அடக்குமுறைகள் குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பிய நிலையில் காவல்துறை மீது நடவடிக்கைகள் இல்லை, தனியார்மய கொள்கையில் மாற்றம் இல்லை, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் இல்லை. இதில் ராம்கி மட்டுமே குற்றவாளியா? ராம்கி நிறுவனத்தின் பின்னனி தெரிந்து ஒப்பந்தம் போட்ட அமைச்சர், மேயர், அதிகாரிகள் குற்றவாளிகள் இல்லையா? இவர்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? மாற்றம் செய்யப்படுவார்களா? ராம்கி-அர்பேசர்-ப்ரீமியர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யபடுமா? அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டா? தொழிலாளர் பணி நிரந்தரம் உண்டா? இவை எதுவும் நடக்காதெனில், நடப்பவை நாடகமே.
இந்த நாடகத்தை பரப்பிடும் இந்த ஆளும்வர்க்க யூட்யூபர்களிடமிருந்து தள்ளி நிற்பது மட்டுமே தொழிலாளர் நலன்களை பாதுகாத்திடும். ஆளும்வர்க்கத்தின் ஆதரவாளர்களிடமிருந்து திராவிட, பெரியாரிய அரசியலை பாதுகாப்பதும் நம் கடமையே.
புகைப்படம் : மீட்கப்பட்ட தோழர் முத்துசெல்வம்.