கடந்த அக்டோபர் 13, 2022 அன்று சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையத்தில், ஒடும் இரயிலின் முன்பு தள்ளப்பட்டு, 20 வயதான கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். அச்செய்தியை கேட்டு அதிர்ச்சியான மாணவியின் தந்தை, தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இவ்வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியான சதீசுக்கு டிசம்பர் 30, 2024 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (ஒய்வு பெற்ற காவலரின் மகன்). இவர் அதே பகுதியில் வசித்து வரும் சத்தியா என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன் காதலை ஏற்க மறுத்ததால் சத்தியாவை கொலை செய்தார் என்றும், இருவரும் காதலித்துக் கொண்டிருந்த நிலையில், இடையில் பிரிந்துவிடலாம் என்ற சத்தியாவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியும் தன்காதலை ஏற்க மறுத்ததால் சத்தியாவை கொலை செய்ததார் என்றும் பத்திரிக்கைகளில் இரு வேறு செய்திகள் வெளியாகின.
இந்த மாதிரி சம்பவங்கள் அறியப்படும் நேரத்தில் ”இந்த குற்றவாளிகளையெல்லாம் பொறுமையாக விசாரித்து, 10 வருடம் கழித்து தண்டனை அளிக்காமல், உடனே தூக்கில் போட வேண்டும், துபாயில் எல்லாம் இப்படி செய்தால் என்ன தண்டனை தெரியுமா!” இதுபோன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்தோ, சமூகம் சார்ந்து நிகழும் குற்றங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் ஒரு சாராரின் கருத்து மட்டுமே இல்லை, பெரும்பான்மையான பொதுமக்களின் மனநிலையும் இதுவாகவே வெளிப்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு (நவம்பர் 27, 2021) தெலுங்கானா மாநிலம், மெஹபூப் மாவட்டத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நடந்தது. இதனால் நெருக்கடி அதிகரிக்க, குற்றம் நடந்து ஓரிரு நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர், மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து அவர்களையும் எண்கவுண்டர் செய்தனர்.
இந்த எண்கவுண்டரை மக்கள் அனைவரும் கொண்டாடினர். குற்றம் செய்பவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் பெரிய பாடமாக அமையும் என்று எண்கவுண்டர் செய்த போலிசார் மீது மலர்களை தூவி வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் இது போலி எண்கவுண்டர் என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியதை அடுத்து இதை விசாரிக்க உச்சநீதிமன்றம் தனி குழு ஒன்றை அமைத்தது, நடந்த விசாரணையில் இது போலி எண்கவுண்டர் எனவும், இதில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இப்படியான நிலையில் குற்றம் செய்தவர்கள் ஒருவராகவும் தண்டனைகளை அனுபவிப்பவர்கள் வேரொருவராகவும் (பெரும்பான்மையாக இது போன்ற செயல்களில் வசதி படைத்தவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப் படுபவர்கள் வசதி இல்லாதவர்களும், கேட்பதற்கு ஆள் இல்லாதவர்களுமாகவே இருக்கிறார்கள்) இருக்கின்றனர். மக்கள் தங்கள் மீதுள்ள குற்றத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள மறுத்து குற்றவாளிகள் மீது மட்டுமே கோபத்தை வெளிப்படுத்துவதுதே இது போன்ற எண்கவுண்டர்களை வரவேற்க காரணமாக உள்ளது.
ஒரு பெண் தன்னுடைய காதலையோ, திருமண விருப்பத்தையோ ஏற்க மறுப்பதையும், அல்லது காதலை ஏற்றுக்கொண்டு சில நாட்கள் கழித்து அந்த ஒர் உறவின் மீது ஏற்படும் அவநம்பிக்கையாலோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ அந்த காதலை நிராகரிப்பதையும் ஏன் ஆண்களால் தாங்கிகொள்ள முடியவில்லை?
தன்னை நிராகரித்த பெண்ணின் மீது அமிலம்(ஆசிட்) வீசுவதும், காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டுவதும், அவளை ஒருமையிலோ அல்லது கொச்சையாக பேசுவதும், அவளின் நடத்தையை முற்றுலும் மாறுபடுத்தி கற்பிப்பதும், கொலை செய்வதும் எனப் பல கொடுமையான சம்பவங்களை நாம் தினம் தினம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு கொடூர செயல்களை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செய்ய அவர்களை தூண்டுவது எது? ஒரு சில விடயத்தில் பெண்ணை கொலை செய்து பின் தன்னையே மாய்த்துக்கொள்வதும், ஒரு சிலர் கொலை செய்த பின் தெரியாமல் நடந்துவிட்டது என்று கதறி அழுவதும் எனப் பல விடயங்கள் நடந்து கொண்டு தானிருக்கின்றதன. இதனை எதிர்த்து பல போராட்டங்களும் நடந்துக்கொண்டு இருக்கின்றன.
பெண்களை தெய்வமாக மதித்து வணங்கியும், நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டியும் பெருமை கொள்ளும் இங்கே தான் சீதையை தொட்டால் தலை வெடித்துவிடும் எனும் சாபம் இருப்பது தெரிந்தும் கூட அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை காட்டுக்கு அனுப்பிய ராமரையும், பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது அவர்களின் உடையை திருடிச் செல்லும் கிருஷ்ணரையும் கடவுளாக கொண்டாடும் வழக்கமும் இருக்கிறது. இந்நிலையில், எப்படி பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்?. பெண்களை தெய்வமாகவும், பொக்கிசமாகவும் பார்க்காமல் அவர்களை சகமனிதராக மதிக்கும் தன்மையை இக்கதைகள் வளர்க்குமா?
தாய்வழிச் சமூகமாக பெண்களின் தலைமையில் சமூக அமைப்புகள் இருந்துள்ளது. வேட்டையாடும் பெண்களாகவும் ஆண்களை விட வலிமையும் ஆளுமையும் நிறைந்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். வயதான பின்னர் கூட தன் சமூகத்தை அவர்கள் தான் வழி நடத்தி வந்திருக்கிறார்கள். ஆரிய சூழ்ச்சியால் அவர்கள் மாற்றி எழுதிய வரலாற்றையும், விதிமுறைகளையும் பின்பற்றி, ‘பெண்களுக்கு அடுப்பறை மட்டுமே தகுதியான இடம்’ என்றும், ‘பெண்கள் நிலையில்லா மனம் கொண்டவர்கள்’, ‘அவர்கள் தவறான வழியில் தான் செல்வார்கள்’ எனவே “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும், திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) எனும் ஆரிய இழிவை ஏற்று வாழும் சமூகத்தில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு குழந்தை பிறந்த நொடி முதல் இருந்தே அதை வளர்க்கும் பொறுப்பும், முறைகளும் ஆண் குழந்தைக்கு ஒரு விதமாகவும், பெண்குழந்தைக்கு வேறு விதமாகவும் எழுதி வைக்கப்படாத சட்டமாக உள்ளது. பெண்குழந்தைகள் விளையாட சமையல் பாத்திரமும், அழகிய பொம்மைகளும், ஆண் குழந்தைகள் விளையாட கார், பஸ் என தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுப் பொருட்களும் வாங்கி கொடுப்பதிலிருந்தே இந்த பிரிவினை வந்து விடுகிறது.
“அண்ணன் எப்படி இந்த வேலை செய்வான் நீ போய் செய்…அவன் பையன், பசங்களுடன் சுத்திட்டு லேட்டா கூட வருவான், பொம்பள புள்ள நீ சீக்கிரம் வீடு வந்து சேரு, என் புள்ள தான் கடைசி வரைக்கும் என் கூட வரப் போவது, நீ என்னைக்கு இருந்தாலும் வேற வீட்டுக்கு போக போறவன்னு” பெண் குழந்தைகளிடமும், “ஆம்பள பையன் நல்லா நிறைய சாப்பிடனும்! நீ ஏன்டா பொண்ணு மாதிரி அழற, நீ ஏன் பொண்ணு மாதிரி கூச்சப்படுற, ஆம்பள புள்ளையா தைரியமா இருடான்னு” ஆண் குழந்தைகளிடமும், ஒவ்வொரு விடயத்துக்கும் ஒரு இலக்கணத்தை வகுத்து வைத்து கொண்டு குழந்தைகளை பாகுபாடுடன் வளர்க்கின்றனர்.
கல்வி அறிவு மட்டுமில்லாமல் அவர்களுக்கு பொது அறிவையும், சமூக அறிவையும் கற்பிக்க வேண்டியவர்களும் ஆணாதிக்க சமூகத்தை உள்வாங்கிய மனநிலையிலே வாழ்ந்து வந்ததால் அவர்களும் இந்த அறியாமையிலிருந்து வெளிவராமலே இருக்கின்றனர். ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும் பெரும்பான்மையானவர்களின் மனநிலை இதுவேதான். அங்கேயும் சமநிலையை கற்பிக்க தவறுகின்றனர்.
பள்ளியில் விளையாட்டு வேலை வந்தால் கூட பெண்களுக்கு ஒன்றாகவும் ஆண்களுக்கு ஒன்றாகவும் தான் இருக்கின்றது. வீட்டில், படிக்குமிடத்தில், வேலைக்கு செல்லும் இடத்தில், திருமணமானதற்குப் பின்னும் என எல்லா இடங்களிலும் இதே அனுகுமுறையும் மனநிலையும் தான் இருக்கின்றது.
இப்படியான சமூகத்தில் வளர்ந்த ஒருவனால் ஒரு பெண்ணை எப்படி சகமனிதியாக பார்க்க முடியும். அவனை பொறுத்தவரையில் பெண் என்றால் தனக்கு கீழானவள், அவளுக்கென்று தனிபட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்று கிடையாது, பெண்ணானவள் தனக்கு கட்டுப்பட்டவள், அவர்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது என்பதை விட அவர்களுக்கு அவ்வாறு சிந்திக்க உரிமையில்லை என்று எண்ணுகிறான். இந்நிலையில்தான் ஒரு பெண் தன்னுடைய காதலை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை கொலை செய்யவும் துணிகிறான்.
காதலித்தவனை கைப்பிடித்தால் தகப்பன் அவளை கொலை செய்வார். பெற்றோருக்காக காதலை வேண்டாம் என்று கூறி வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை மணந்து கொண்டால் காதலன் அவளை கொலை செய்வான். ஆக மொத்தம் அவளுக்கென ஒரு தனி விருப்பம் இருக்ககூடாது என்பதே இக்குற்றசம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இச்சம்பவத்தின் போது திரைத்துறையினர் பலரும் சதீசுக்கு கொலை தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைப் பின்தொடர்வதும், காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், அவளின் சுயமரியாதையை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நடந்து கொள்வதையும், அக்கறை என்றும் உண்மையான காதல் என்றும் கூறி காதலின் மீது ஒரு புனித பிம்பத்தை திரைப்படங்களே கட்டமைக்கின்றன.
அது மட்டுமில்லாது பெண்களை ஹாசினிகளாக காட்சிப்படுத்தி பெண்கள் குழந்தைத்தனமானவர்கள், ஒரு ரோஜா பூவும், சாக்லேட்டும் வாங்கிக் கொடுத்தால் காதலித்து விடுவார்கள், ஒரு வேளை காதலிக்க மறுத்தால் உன்னுடைய காதல் புரியும் வரை அவர்களை தொந்தரவு செய்யலாம் என்கிற கருத்தை பதிவு செய்கின்றனர். காதலிக்க மறுத்த பெண்ணை “அடிடா அவள, உதைடா அவள” “இந்த பொணுங்களே இப்படித் தான்” என்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மனதில் வன்மத்தை விதைத்ததில் திரைப்படங்களுக்கு பங்கு உள்ளது.
இது போன்ற சமூக சீர்கேடுகளை எந்தவித குற்ற உணர்சியும் இல்லாமல் செய்வதற்கு பாதை அமைத்து கொடுத்ததில் திரைத்துறையினருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை உணர்ந்து, இனிவரும் திரைப்படங்களையாவது இயக்குனர்கள் சமூக அக்கறையுடன் எடுக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியதுவம் கொண்ட சில படங்களே உள்ளன என்பதே உண்மை.
மது, போதை போன்ற கெட்ட பழக்கங்கள் மூலம் சுயநினைவற்ற போக்கினால், இது போன்ற தவறான பாதைக்கு வழி வகுக்கும். இதையெல்லாம் தெரிந்தும் குற்றம் நிகழாமல் இருக்கதான் அரசும் காவல்துறையும் இருக்க வேண்டும். ஆனால் வெறும் அறிவிப்போடும், குற்றம் நிகழ்ந்தபின் விசாரணை கைது வழக்கு என்பதை பார்க்கிறோம்.
ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதும், காதலிக்க மறுத்ததால் கொலை செய்வதும் எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாத கொடூர குற்றமாகும். ஆனால் தூக்கிலிடுவதாலும், தண்டனைகளை கடுமைப்படுத்துவதாலும் மட்டுமே இது போன்ற குற்றச் செயல்கள் சரியாகிவிடும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே பாலின சமத்துவத்தை சொல்லி வளர்க்க வேண்டும். காதலிக்க மறுத்ததால் கொலை நடக்கவில்லை, காதலித்துப் பின் வேண்டாம் என்று விலகியதால் தான் கொலை நடந்தது எனக்கூறி அக்கொலைக்கு ஒரு நியாத்தைக் கொடுக்க நினைப்பது பிற்போக்குத்தனமானது என்று சொல்லித்தரவேண்டும்.
கத்துவாவில் கோவில் உள்ளே வைத்து வன்புனர்வு செய்து கொலைசெய்யப்பட்ட சிறுமி வழக்கில் குற்றவாளிகளை பாஜக அரசு விடுதலை செய்ய சொன்னதும், தெலுங்கானா கொலை வழக்கில் தவறாக எண்கவுண்டர் செய்யப்பட்டதும், சுவாதி கொலை வழக்கில் இவர்தான் உண்மையான குற்றவாளியா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பிணையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் இறந்தது போன்றதுமான பல்வேறு அரசு, அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளை கேள்விகேட்க வேண்டிய நாம், சமூகத்தின் பிற்போக்குத்தனத்தில் மாட்டிக்கொள்ளாமல் ஒருவரை ஏற்பதும், ஏற்கமறுப்பதும் அப்பெண்ணின் உரிமை என்பதை உணர்ந்து இச்சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.