தலையங்கம் – ஆகஸ்ட் 4, 2022
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த தீரன்சின்னமலையின் நினைவுநாளான நேற்று (03-08-2022) ஈரோட்டில் அவரது சிலைக்கு மாலையிட்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரை வன்மையான கண்டனத்திற்குரியது. அவரது உரையில், “தீரன் சின்னமலை பாரதத்தின் ஆன்மாவாக விளங்கும் பண்பாடு, ஆன்மீகம், அறிஞர்களை பாதுகாத்தவர். இதுவே சனாதனத்தின், சன்ஸ்கிருதி எனும் பண்பாடாகும். சனாதனம் வாசுதேவ குடும்பகம் எனும் சர்வதேச சகோதரத்துவம் ஆகியவற்றின் காப்பாளர். சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வரிசையில் தர்மத்தைக் காக்கும் புரவலராக இருந்தவர்.” என்று பேசியிருக்கிறார். தீரன் சின்னமலையை போற்றுகின்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவரை சமஸ்கிருத-வேத மதமாகிய இந்து மதத்தைச் சார்ந்தவராக சித்தரித்திருப்பது, தீரன் சின்னமலையின் உண்மையான வரலாறை சிதைப்பதாகும்.
வெள்ளையரை எதித்து களம் கண்ட தீரன் சின்னமலை சாமானிய குடும்பத்தில் தோன்றி, சுரண்டலுக்கு எதிராக படை திரட்டியவர். வெள்ளையரை விரட்ட வேண்டுமென்கிற இலட்சியத்தில் திப்பு சுல்தானோடு கரம் கோர்த்தவர். அவரோடு இணைந்து மூன்று சிறிரங்கப்பட்டிணப் போரில் வெள்ளையரை எதிர்கொண்டு தோற்கடித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர். தீரன் சின்னமலை உடன் கரம் கோர்த்த மருது பாண்டியர், விருப்பாச்சி கோபாலர், புத்தே முகம்மது, முகம்மது ஹாசம், அப்பாஜிராவ், கனிஜாகான் மற்றும் இவருடன் இணைந்த தூந்தாஜிவாக் எனும் பெரும் போராளிகளின் கூட்டணிக்கு உதவி செய்ய மறுத்தவர்கள் மராத்திய பேஷ்வா கூட்டமைப்பினர். இந்த பேஷ்வாக்கள் இன்றய ஆர்.எஸ்.எஸ்.-இன் மூத்தவர்கள். மராத்திய தேசாஸ்த-சித்பவன் பார்ப்பனர்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் சனாதன தர்மத்தை கடைபிடித்த வேதவெறி பிடித்த இந்துக்கள்.
இப்படியாக ஆங்கிலேயரிடத்தில் மராத்திய தேசத்தை ஒப்படைத்து வீழ்ந்த சனாதன இந்து அரசர்களும், தஞ்சையில் ஆண்டு வந்த மராத்திய அரசர் சிவாஜியின் வம்சாவளி இந்து அரசர்களும் ஆங்கிலேயருடன் இணைந்து தமிழ்நாட்டில் தீரன் சின்னமலை, மருதுபாண்டியர்கள், விருப்பாச்சி கோபாலர், அப்பாஜிராவ், கட்டபொம்மன், ஊமத்துரை, செவத்தையா என்று உருவான பெரும் புரட்சியாளர்களை காட்டிக் கொடுத்த வரலாறு கொண்டவர்கள். இவ்வாறு துரோகமிழைத்த கூட்டத்தினரே சனாதன, சன்ஸ்கிருதி பண்பாடு கொண்டவர்கள். இதற்கு நேர் எதிராக நெஞ்சுரத்துடன் வெள்ளையரை எதிர்கொண்ட தமிழினத் தளபதிகள் சனாதனத்தை எதிர்த்து நின்றவர்கள். திருச்சி திருவரங்க கோவிலுக்குள் சென்று பூசை செய்தவர்களல்ல. மாறாக அதன் சுவற்றில் சனதானத்திற்கு எதிராக அனைவரும் சாதி, மதம் கடந்து வெள்ளையரை எதிர்க்க வேண்டுமென்று முரசு கொட்டியவர்களே இப்புரட்சியாளர்கள்.
முஸ்லீம் அரசர்களாகிய ஹைதர் அலி, திப்பு சுல்தானோடு இணைந்துப் போரிட்டவர்கள். மேலும் முஸ்லீம் படைத்தளபதிகளான புத்தேமுகம்மது. கனிஜாகான், முகம்மதுஹாசம் ஆகியரோடு இணைந்து கோவை கோட்டை தாக்குதலை வழிநடத்தியவர் தீரன் சின்னமலை. இதில் முஸ்லீம் தளபதிகளோடு 36 இஸ்லாமிய போராளிகள் தூக்குக்கயிறை முத்தமிட்டார்கள். மேலும் தீரன்சின்னமலைக்கு பாதுகாப்பாக இருந்த பொல்லான் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர், கருப்பையா சேர்வை, குணாளன் நாடார் போன்றோர் தளபதியாக, நிர்வாகிகளாக நின்றவர். இவ்வாறு சாதி, மதம் கடந்து போராடியவர் தீரன்சின்னமலை.
இந்த வரலாறை திரித்தது மட்டுமல்லாமல், நேர்மையற்ற நோக்கோடு தமிழர்களின் பண்பாடாகிய குலதெய்வ வழிபாட்டை சனாதனத்துடன் இணைத்து இந்த வழிபாடுகளை போற்றியவர் என்று உரையாற்றி இருக்கிறார் ஆளுநர். சனாதனக் கோட்பாடும், தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டு முறையும் நேர் எதிரானவை. வட இந்திய புலத்தில் ஆரியர்கள் இப்படியான பண்பாடு கொண்டவர்களுமல்ல. தமிழர்களின் தத்துவ இயலுக்கு நேர் எதிர் பண்பாடும், கொள்கையும் கொண்ட இந்துமதம் எனும் வேதக் கோள்கையே சனாதனக் கொள்கை. தமிழர்களின் குலதெய்வக்கோவில்களில் பார்ப்பனர்களின் பூசைகளோ, சமஸ்கிருத மந்திரங்களோ ஒலிப்பதில்லை. சனாதனம் எனும் மனிதகுல விரோத கொள்கை சம்ஸ்கிருதத்தையும், சாதியையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் முதுகெலும்பாக கொண்டது. இது குலதெய்வ வழிபாட்டில் கிடையாது.
அனைவரும் சமமாக பாவிக்கும், சமத்துவம் நிலவும் குலதெய்வ வழிபாட்டு முறையை சதிகார வேதமதத்திற்கு ஒப்பீட்டு பேசுவது நேர்மையான நோக்கமன்று. இது தமிழர்களின் வழிபாட்டு முறைகளை வேத-பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவும், தமிழ்ப் போராளிகளின் வரலாறுகளை இந்துமத அரசர்களின் வரலாறுகளாக மாற்றவும் நடக்கும் சதிச் செயலாகும். இந்து அரசர்கள் வெள்ளையரிடத்தில் இந்திய துணைக்கண்டத்தை காட்டிகொடுத்த வரலாறு கொண்டவர்கள் என்பதை மறைத்து தமிழர்களின் வீர வரலாறை தமதாக்கிக் கொள்ளும் சதிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். தமிழின விரோதமாக செயல்படும் தமிழ்நாட்டு ஆளுநரின் தீய நோக்கங்களை அடையாளம் கண்டு உடனுக்குடன் அம்பலப்படுத்துவது நமது தலையாய பணி.