அபகரிக்கப்படும் ‘அறிவு’

சென்னையில் சர்வதேச செஸ் போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை. இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி பிரம்மாண்டமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “என்ஜாயி எஞ்சாமி” எனும் பாடல், பாடகி தீ (Dhee), மற்றும் நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோரால் மேடையில் பாடப்பட்டது. சென்ற ஆண்டு வெளியான இந்த பாடல், பாடலாசிரியர் மற்றும் பாடகரான ‘தெருக்குரல்’ அறிவு, பாடகி தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் பங்களிப்பில் மஜா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில்  “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பாடப்பட்ட பொழுது, ஏன் ‘தெருக்குரல்’ அறிவு அதில் இடம்பெறவில்லை என பலரும் சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பினர். இது பெரும் சர்ச்சையாக உருமாறி பல விவாதங்களை தொடங்கிய நிலையில் இப்பாடலில் சம்பந்தபட்ட தெருக்குரல் அறிவு, பாடகி தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டனர்.

இம்மூன்று அறிக்கைகளில், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரின் அறிக்கைகள் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பலரது கூட்டு உழைப்பினால் உருவான பாடல் என்றும் இதில் தெருக்குரல் அறிவு மட்டுமல்லாமல் பலர் சம்மந்தப்பட்டிருக்கின்றனர் என்றும் எந்த இடத்திலும் தெருக்குரல் அறிவுக்கு தக்க அங்கீகாரம் தராமல் செல்லவில்லை என்றனர். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், தீ மற்றும் அறிவு ஆகிய இருவரும் இப்பாடலை மேடையில் பாடவேண்டும் என்றே அவர்களை அணுகியதாகவும், அறிவு அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்ததால் தான் அவருக்கு பதில் கிடக்குழி மாரியம்மாள் அவர்களை பாட வைத்ததாகவும் கூறினார்கள். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் இடம்பெற்ற “நீயே ஒளி” எனும் பாடலின் தமிழ் வரிகள் தெருக்குரல் அறிவு அவர்களாலும், ஆங்கில வரிகள் ஷான் வின்சென்ட் டே பால்  (Shan Vincent De Paul)  என்ற புலம்பெயர் இசைக்கலைஞராலும் எழுதப்பட்டது. இப்பாடலும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ரோலிங் ஸ்டோன் (Rolling Stone) எனும் ஆங்கில இதழில், “நீயே ஒளி”, பாடல் வெளியாகி சில தினங்களில் தீ மற்றும் ஷான் வின்சென்ட் டே பால் அவர்கள் இருவரின் புகைப்படங்களை வைத்து, சர்வதேச இசைக்களத்தில் கால் பதித்து, மாற்றத்தைக்கொண்டு வரும் தமிழ் இசைக்கலைஞர்கள் என்ற தலைப்பில் அட்டைப்படமாக வெளிவந்தது. இதில் ஏன் அறிவு அவர்களின் படம் இடம்பெறவில்லை என்ற கேள்வியை இயக்குனர் பா. இரஞ்சித் எழுப்ப, அன்றும் அறிவு ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்று ஒரு கேள்வி எழுந்து, மக்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியது.

அன்று தீ அவர்கள் தானும், ஷான் வின்சென்ட் டே பால் அவர்களும் சேர்ந்து உருவாக்கவிருக்கும் புதிய பாடலுக்கான புகைப்படம் தான் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் அட்டைப்படமாக இடம்பெற்றது என்றார். ஆனால் என்ஜாயி எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடலின் அமோக வெற்றிக்குப் பிறகுதான் அப்படம் அந்த குறிப்பிட்ட வாக்கியத்துடன் அப்பத்திரிக்கையில் வெளியானது என்பது ஊரறிந்தது. மேலும் தீ குறிப்பட்ட “அந்த” ஒரு பாடல் இன்று வரை வெளிவரவில்லை. இந்நிலையில் தெருக்குரல் அறிவு அவர்கள் அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இந்நிகழ்வில் பங்குபெற முடியவில்லை என்றாலும், தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகிய இருவரும் பாடலை பாடி முடித்த பின்னர், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் ஒருவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு மட்டும் நன்றி கூறினார். இந்நிகழ்வுகளிலிருந்து தொடர்ச்சியாக அறிவு அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார் என்று தெளிவாக புரிகிறது. இந்த சர்ச்சை கிளம்பிய பின்னர் தெருக்குரல் அறிவு அவர்கள் கொடுத்த அறிக்கை மற்ற இருவரின் அறிக்கையைவிட உணர்வுபூர்வமாகவும், ஆழமான வலிகள் மற்றும் அரசியல் புரிதல் மிகுந்ததாகவும் இருந்தது.

தமிழ் கலையுலகில் எந்த வடிவத்தை நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டாலும், அது நாடகம், இசை, சினிமா என அனைத்து துறைகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பின்னரே தமிழர்களுக்கு மேடையேற வாய்ப்பும், தங்கள் திறமைக்கான அங்கீகாரமும் பெற்றனர், திராவிட இயக்கத்தின் உழைப்பு தமிழர் மரபு சார்ந்த பல்வேறு படைப்புகளை, பல வடிவங்களில் வெளிக்கொண்டு வந்தது. திராவிடர் கழகத்திலிருந்து, தி.மு.க பிரிந்து சென்று கலையை தங்களின் பிரச்சார கருவியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் தி.மு.க. கைவிட்டது. இதன் விளைவாக திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பின்னர் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தத்தொடங்கியது மட்டுமல்லாமல் கலையுலகின் அனைத்து வடிவங்களிலும் ஆளுமைகள் தாங்கள் தான் எனும் பிம்பத்தை தமிழ் சமூகத்தில் உருவாக்கினார்.

உதாரணத்திற்கு புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன், கலைவாணர் N.S.கிருஷ்ணன், M.R. ராதா போன்று தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட பெரும் உழைப்பை செலுத்திய எண்ணற்ற கலைஞர்களை பார்ப்பனீயம் மறக்கடித்து, அவர்களின் படைப்புகள் எதுவும் இன்றைய தலைமுறைக்கு நினைவில்லாமல் செய்து, பார்ப்பனர்களான தங்களுக்குள்ளிருந்து சோ. ராமசாமி, கிரேசி மோகன், எஸ்.வீ. சேகர் போன்ற பல நபர்களை வைத்து பார்ப்பனர்களின் வீடுகளில் நடக்கும் சம்பவங்களை மைய்யப்படுத்தி, தமிழர் விரோத அரசியலை தரமற்ற படைப்புகளாக வெளிகொண்டுவந்து. அதை மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கினர். இது நடந்து கொண்டிருக்கையில் இதற்கு பதிலடி கொடுக்க அணைத்து சக்திகள் இருந்தும், எதுவும் செய்யமல் இருந்த திராவிட கட்சிகளின் மெத்தனப்போக்கும் இதற்கு காரணம். ஆனால், தமிழ் சினிமாவில் 70-களின் தொடக்கத்தில் பார்ப்பனர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இளையராஜா எனும் இசையமைப்பாளர் தமிழ் திரை உலகில் தடம் பதித்து தனது அசுர உழைப்பால் உச்சம் சென்றார். பார்ப்பனரல்லாத ஒருவரின் ஆதிக்கத்தையே தாங்க முடியாத ஆரியக்கூட்டம், தொட்டால் தீட்டு என்று ஒதுக்கிவைத்த கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து அனைவரையும் தனது இருப்பில்லாமல் இங்கு சினிமா இல்லை என்ற நிலையை உருவாக்கியதை பார்ப்பனியத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. தவிர்க்க முடியாத சக்தியாக 20 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இளையராஜாவை கீழே கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் அதில் வெற்றியும் கொண்டனர்.

சிறந்த இயக்குனர்கள் என்று பார்ப்பனியக் கூட்டத்தால் பிரச்சாரம் செய்து நம்ப வைக்கப்பட்ட மணிரத்னம் மற்றும் கே. பாலச்சந்தர் எனும்  இரு பார்ப்பனர்களின் கூட்டு உழைப்பால் தங்களின் அடுத்த படமான ரோஜா எனும் திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினர். ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் ரகுமானை, இளையராஜாவிற்கு எதிராக நிறுத்துவதற்கு பெரிய பிரச்சாரம் மேற்கொண்டு, மூட நம்பிக்கைகள் நிறைந்த இந்திய திரையுலகில் ரகுமானை அதிஷ்டமாக அடையாளப்படுத்தி, தனது இசையால் ரகுமான் அடையாளப்பட வேண்டியதை விட 100 மடங்கு அதிகமாக அவர் இளையராஜாவிற்கு மாற்றாக அடையாளப்படுத்தப்பட்டார்.

கிட்டத்தட்ட இளையராஜாவிற்கு நடந்தது தான் தெருக்குரல் அறிவுக்கு நடந்து வருகிறது. தெருக்குரல் அறிவு அவர்கள் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளத்திற்காக 2020-ஆம் ஆண்டே ஒரு விளம்பரப்படம் நடித்திருந்தார். தற்பொழுது முகநூல் வலைத்தளத்திற்கான ஒரு விளம்பரப்படம் நடிக்கவே அமெரிக்கா சென்றிருக்கிறார் தெருக்குரல் அறிவு. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்திற்காக தேர்வு செய்யும் ஆளுமைகள் பொதுவாக சாதாரணமான ஆட்களாக இருக்க மாட்டார்கள் மற்றும் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள், அங்கீகரிக்கப்படுவார்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் தான் தெருக்குரல் அறிவு அவர்கள் முதல் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதி, பாடினார். தான் அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் தன்னையும் மீறி உலக அளவில் அங்கீகரிக்கப்படும் ஒருவராக மாறி வருகிறார் என்ற ஒரு விடயத்தை தாங்க முடியாத பார்ப்பனியம் தொடர்ச்சியாக அறிவு அவர்களுக்கு இது போன்ற செயல்களை செய்து அவருக்கு மன ரீதியான தொய்வை ஏற்படுத்த முயல்கின்றனர்.

இளையராஜா விடயத்தில் பார்ப்பனர்களுக்கு கிடைத்த வெற்றியோ நிரந்தரமாக இருந்துவிடவில்லை. 80-களில் தனிப்பெரும் ஆளுமையாக இருந்த இளையராஜா, பல இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் பயணித்தார். நாளடைவில் சமூக வலைத்தளங்களின் எழுச்சியால் தனது முந்தைய படைப்புக்களையும், இன்று வரை அவர் நமக்கு கொடுக்கும் இசையாலும் இந்த தலைமுறையாலும் அடையாளம் காணப்பட்டார் இசைஞானி. 80-களில் தான் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கையைவிட இப்பொழுது அவர் பணியாற்றும் படங்கள் குறைவு என்றாலும் காலத்தால் அழியாத இசையை வழங்கிய இசையமைப்பாளர் என்று தமிழ் சமூகம் மட்டுமல்லாமல், உலக அளவில் பெயர் பெற்றதால், முன்பு அவருடன் பயணித்தும் அவரின் இசை ஞானம் குறித்து வாய் திறக்காத பல பார்ப்பனர்கள், இன்று அவருடன் வேலை செய்ததை பெருமையாக பேசித்திரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

மறுபுறம் அரசியல் பொறுப்புள்ள கலைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்திய பார்ப்பனிய அரசாங்கத்தின் பாசிச போக்கால் மிகவும் நெருக்கடியான சூழலிலேயே அரசியல் பொறுப்புள்ள கலைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று பேசும் கலைஞர்களை இங்குள்ள இயக்கங்கள் பாதுகாத்து, மக்கள் அவர்களுடன் பக்கபலமாக நின்றால்தான் சனாதன கட்டமைப்பை உடைத்தெறிய முடியும். இத்தனை நடந்த பின்பும் அறிவு அவர்கள் தன் அறிக்கையில் கூறியது,”இந்த மண் 10,000 க்கும் மேற்பட்ட கதைகளை கொண்டது. நம் முன்னோர்களின் உயிர் மூச்சு அக்கதைகளில் அடங்கியிருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, வலி, அன்பு, கிளர்ச்சி என இவை அனைத்தையும் இக்கதைகள் கூட்டுகின்றன. மக்களை விடுவிக்கும் கலையை நாம் நம் வியர்வையும், இரத்தமும் கொண்டு பாடல்களாக உருவாக்கியிருக்கிறோம். நீங்கள் தூங்கும் பொழுது யார் வேண்டுமானாலும் உங்கள் உழைப்பை திருடிவிடலாம், ஆனால் நீங்கள் விழித்திருந்தால் அது நடக்காது. ஜெய் பீம் ! உண்மையே இறுதியில் வெல்லும்” நம் மண்ணையும், அதன் முன்னோர்களையும், அதன் மக்களையும் நம்பி அவர்களுக்காக பயணிக்கும் ஒரு போராளியை தமிழ் சமூகம் ஒன்றிணைந்து தாங்கிப் பிடிக்கவேண்டும்.

One thought on “அபகரிக்கப்படும் ‘அறிவு’

  1. அறிவு அவர்களின் அரசியல் முதிர்ச்சி வியக்க வைக்கிறது. சிறிய வயதில் எவ்வளவு பெரிய ஞானத்தோடும் சாதிய கட்டமைப்புகளின் அடக்குமுறைகளை துல்லியமாக கணிக்க கூடிய திறமையும் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »