சங்கரலிங்கபுரம் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை அதிரவைத்த சாதிய வன்கொடுமையை, அரச பயங்கரவாதத்தை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்து கிராமம். அந்த கிராமத்தில் நீண்டு எழுந்திருக்கும் சாதிய தீண்டாமை சுவரை நேரில் சென்று பார்த்தோம். ஒரு குடும்பம் ஒட்டுமொத்த மக்களையும் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்குமளவிற்கு சுவரை கட்டி எழுப்பி இருக்கிறது.
பட்டியல் சமூக மக்களின் கோவிலை வேண்டுமென்றே மறைத்தும், கிராமத்தின் பிற பகுதியிலிருந்து துண்டித்தும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்திற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வேலி எழுப்பியுள்ளது. இந்த நிலத்தினை சொந்தம் கொண்டாடுகிறது. இந்த நிலத்தினை பட்டியல் சமூக மக்கள் நீண்டகாலமாக புழங்கி வந்துள்ள பொதுநிலமாக இருக்கிறது. 20 ஆண்டுக்கு முந்தைய வன்முறையின் போது சமாதானத்தை அடையாளப்படுத்தும் விதமாக அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் திரு.பழனியாண்டி மரங்களை நட்டுவைத்துள்ளார். இந்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களையும் வளைத்து சொந்தம் கொண்டாடுகிறது அந்த பெரும்பணக்கார ஆதிக்க சாதியவாதி குடும்பம். தமக்கு சாதகமான ஆவணங்களை தன் சாதி நபர்கள் அதிகாரிகளாக வந்த சமயத்தில் உருவாக்கிக்கொண்டுள்ளது அக்குடும்பம். இந்த தீண்டாமைச் சுவரை கோட்டைச்சுவர் போல எழுப்பியுள்ளார்கள். பொதுபயன்பாட்டிற்கும், கூடுவதற்கும் இடமில்லாத வகையில் வன்முறையாக ஆக்கிரமித்துள்ளது இக்குடும்பம்.
நூற்றுக்கணக்கான பட்டியல் குடும்பங்களை எதிர்த்து ஒற்றைக்குடும்பம் ஆக்கிரமிப்பது அதிகாரிகளின் ஆதரவில்லாமல் சாத்தியமாகி இருக்காது. பட்டியல் மக்களின் பொது சாலையையும் மறைத்து சுவரெழுப்பி வைத்துள்ளனர். இறுதியாக பல செண்ட் பொது நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இவற்றை பொறுக்க இயலாமல் கடந்த 23 நாட்களாக அம்மக்கள் அமையான முறையில் ஒன்றுதிரண்டு மாலைவேளையில் தர்ணா போராட்டத்தை நடத்துகின்றனர். முழக்கம் எழுப்பி பெண்களும், குழந்தைகளும் இரவு வரை அமர்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும், தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும். இதை திமுக அரசு முன்னெடுக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் பெரும் வன்முறையை ஆதிக்க சமூகமும், காவல்துறையும் கட்டவிழ்த்ததை’ தோழர் திருமா’ சட்டசபையில் அம்பலப்படுத்தினார். கிராமத்திற்குள் நுழைந்த ஆதிக்க-காவல்துறை வீடுகளை சேதப்படுத்தி, பொருட்களை கொள்ளையடித்து, பெண்கள் மீது வன்முறையை ஏவி, வழக்கு போட்டு, கல்வி-சொத்து ஆவணங்களை அழித்து நடந்த வன்முறையை அரசு மறுத்த போது திருமா நேரில் சென்று, காவல் முற்றுகைக்கு அப்பால் சென்று வீடுகளை திறந்து பார்த்து உண்மையறிந்து சட்டசபையில் பேசினார். இதை மறுத்த ஜெயலலிதா அம்மையார், பின்னர் நேரில் இக்கிராமத்திற்கு வந்து உண்மையறிந்தார். பின் சமாதானம் உண்டானது ஆனால் சாதிய ஆக்கிரமிப்புகளை பெரும்பணக்கார குடும்பம் ஒன்று இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில் இம்மக்கள் 20 ஆண்டுகள் கழித்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நீண்ட நெடிய சாதிய தீண்டாமை, ஒடுக்குமுறை இருந்து வந்ததை நேரில் சென்று அறிந்தோம். என்னுடன் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் வந்திருந்தார். எங்களை விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர் தோழர் முரசு தமிழப்பன் அழைத்து சென்றார். இம்மக்களை ஒன்றுதிரட்டி அமைதியான முறையில் போராட்டத்திற்கு அணிதிரட்டியுள்ளார். சுதந்திர தினத்தன்று சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர்.
சாதியமாக திரண்டுள்ள அரசு அதிகாரிகள் இச்சிக்கலை, இக்காலத்திலும் நிலவும் காட்டுமிராண்டித்தனத்தை ஒழிக்கப்போவதில்லை. அதிகாரவர்க்கம் சாதியமாக அழுகி சிதைந்து கொண்டிருக்கிறது. வெகுசில அதிகாரிகளின் சாதி-சமுகபுரிதல் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்கும் வலிமை கொண்டதல்ல. ஆட்சியாளர்களின் உறுதியான கொள்கை முடிவும், திராவிடர் இயக்க நிலைப்பாடு மட்டுமே இச்சிக்கல்களை தீர்க்கும். ஆகவே தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் இச்சிக்கலை அங்கீகரித்து தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை முன்வைக்கிறோம். இச்சிக்கலும், மக்களின் போராட்டமும் தொடரும் சூழல் இருக்குமெனில் மே 17 இயக்கமும் இம்மக்களின் போராட்டத்தில் பங்கெடுக்குமென்பதை உறுதிபட தெரிவிக்கிறோம்.
சாதி ஒழியட்டும்,
தீண்டாமை புதையட்டும், சமூகநீதி எழட்டும்,
தந்தைப் பெரியார் வெல்லட்டும்.
மே 17 இயக்கம்
15-08-2024