பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யும் வகையில் யூஜிசி விதிகளை திருத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சி! கல்வி மீதான மாநில அரசின் உரிமையை பறிக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
யூஜிசி (University Grants Commission – UGC) எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினரை நியமிக்கும் மாநில அரசின் உரிமையை நீக்கி, அதனை ஆளுநரே நியமிக்கும் வகையில் யூஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் வரைவை வெளியிட்டுள்ளது. மேலும், இந்துத்துவாதிகளை திணிக்கும் வகையில் கல்வியியலாளர் அல்லாதவர்களையும், இடஓதுக்கீட்டைஒழிக்கும் வகையில் தனியாருக்கு அவுட்சோர்ஸ் (outsource) செய்யும் முறையையும் இத்திருத்தம் முன்மொழிக்கிறது. மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் வகையிலும், உயர்கல்வியை இந்துத்துவமயமாக்கும் வகையிலும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்த வரைவை மே பதினேழு இயக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள, 2018-ஆம் ஆண்டின் “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்” என்ற விதிமுறைகளை திருத்தம் செய்து, “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் (2025) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற வரைவில் தான் இந்த சனநாயக விரோத திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதி இடம்பெறும் உரிமை நீக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒருவரையும், யூஜிசி தலைவர் ஒருவரையும், பல்கலைக்கழகம் ஒருவரையும் நியமனம் செய்து துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்கும் உரிமையை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல், ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் மாநில ஆளுநரிடம் வழங்கப்படும் என்கிறது. இதன் மூலம், யூஜிசி என்ற தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலத்தின் உரிமையை பறிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
மேலும், கல்வியியலாளர் அல்லாதவர்களையும் துணைவேந்தராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்திற்கு 1949 ராதாகிருஷ்ணன் குழு, 1964 கோத்தாரி குழு உள்ளிட்டவை பரிந்துரைத்த கல்வித் தகுதி, ஆளுமை திறன் போன்றவை நீக்கப்படுகின்றன. இதன்மூலம், கல்விப் பின்புலம் இல்லாத இந்துத்துவவாதிகளை துணைவேந்தர்களாக நியமித்து மாநிலங்களின் பல்கலைக்கழக்கங்களை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது.
அதேபோல், நுழைவுநிலை உதவிப் பேராசிரியருக்கான பணிக்கு யூஜிசி நெட் தேர்வு, இணை பேராசிரியர், பேராசிரியர் பணிகளுக்கு பிஎச்டி கட்டாயம், பேராசிரியர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் கல்விப் பணி அனுபவம் போன்றவை நீக்கப்படுகின்றன. இதன் மூலம், உயர்சாதியினரையும், பணக்காரர்களையும், இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களையும் பல்கலைக்கழகங்களில் திணிக்கவும், இடஒதுக்கீட்டினால் பலனடைந்தவர்களையும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் மட்டுப்படுத்தவும் உதவும். மேலும், பணி நியமணங்களில் ஊழல் திளைக்க வழிவகுக்கும்.
பல்கலைக்கழகங்களில் 10% பேரை மட்டுமே ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை நீக்கியதும், அவுட்சோர்ஸ் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கலாம் என்பதும், இடஒதுக்கீட்டு முறையை முற்றிலும் ஒழிக்க மேற்கொள்ளும் முயற்சியாகும். இதனால், பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியல்-பழங்குடி சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு, தற்போது ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களை உயர்சாதியினர் ஆக்கிரமித்திருப்பது போன்ற ஒரு நிலை பல்கலைக்கழகங்களில் ஏற்படும்.
யூஜிசி விதிகளை திருத்துவதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் பல்கலைக்கழக்கங்களின் யூஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள் என்பது செல்லாததாகிவிடும் என்ற சூழல் உருவாக்கப்படுகிறது. மேலும் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் கல்வி வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், பெருந்தொற்று காலத்தில் பயின்று பட்டம் பெற்றது போன்ற வாய்ப்புகளும், நேரடியாக கல்லூரி சென்று பயில இயலாதவர்கள் பட்டம் பெறுவது, பணிக்கு சென்று கொண்டே பட்டம் பெறுவது போன்றவை தடைபடும். இது சாமானியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ள போது, மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு இப்படியான ஒரு வரைவினை வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒன்றிய பாஜக அரசின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கு கூட்டாட்சி தத்துவத்தின் தாக்குதலாகும். மாநிலங்களின் உரிமையை நசுக்கும் செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநருக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது அரசியலைமப்புக்கு எதிரானதாகும். பல்கலைக்கழகங்களுக்கான கட்டமைப்புகள், கல்விப்புலங்களுக்கான இருக்கைகள், நிதி, நிலம், கட்டடங்கள் என வசதி வாய்ப்புகளை மாநில அரசு அளிக்கும் நிலையின், அதன் மீதான அதிகாரத்தை ஒன்றிய அரசு ஆளுநருக்கு அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் இந்த அரசியலமைப்பு விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கூட்டாட்சிக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, மாநில அரசின் அரசின் உரிமையை பறிக்கும், உயர்கல்வியை சீரழிக்கும் யூஜிசி விதிகள் திருத்த வரைவை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தன் குடிமக்கள் என்ன கல்வி பெற வேண்டும், எப்படியாக பெற வேண்டும் என்பதை மாநில அரசே முடிவு செய்ய முடியும். அதற்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது ஒன்றே நிரந்த தீர்வாக அமையும். அதன்படி, கல்வியை மாநிலப் பட்டியக்கு மாற்றும் முயற்சியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
08/01/2025