விடுதலை 2 – திரைப்படப் பார்வை – தோழர். திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் அவையம் வாசிப்பு வட்டம் சார்பாக விடுதலை-II திரைப்படம் குறித்த உரையாடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் டிசம்பர் 21, 2024 அன்று நடைபெற்றது. இதில் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, இயக்குனர் தமிழ், தோழர் திருமுருகன் காந்தி, நடிகர் கென் கருணாஸ், எழுத்தாளர் ராஜசங்கீதன் பங்கேற்றனர்.

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

அனைவருக்கும் வணக்கம்! இந்த திரைப்படம் குறித்து உரையாடல் நடத்துவதற்கு பல இடங்களில் தேடி பல அரங்குகளை பார்த்து இறுதியாக ஒரு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அது பாலுமகேந்திராவினுடைய ஸ்டுடியோ. வெற்றிமாறன் அவர்களுடைய இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் நடத்துவதை விட வேறு எங்கேயும்  சிறப்பாக நடத்தி விட முடியாது. பாலுமகேந்திராவினுடைய மாணவனான அவருடைய திரைப்படத்தை இந்த அரங்கத்தில் ஒரு உரையாடலாக நடத்துவதே ஒரு பெரிய மகிழ்ச்சி. விடுதலை படம் ஆரம்பிக்கும் பொழுது ‘இந்த படத்தில் வரக்கூடிய சம்பவங்களோ, நபர்களோ, இவை எதுவும் உண்மையல்ல, கற்பனையே, இதை நீங்கள் ஏதேனும் ஒரு சம்பவத்தோடு பொருத்தி பார்த்துக் கொண்டால், அது தற்செயலே!’ என்று போடப்பட்ட வாசகம் இருக்கும். அது முழுக்க பொய்யாகும். படத்தில் இருக்கின்ற ஒரே பொய் அது ஒன்று தான்.  

நம் தமிழ்நாட்டுடைய கடந்த 60 – 80 ஆண்டுகால வரலாற்றை 2.30 மணி நேரத்துக்குள் ஒரு திரைப்படமாக சுருக்கிக் கொடுத்திருக்கிறார். இந்த 80 ஆண்டுகாலமாக நமக்கு இருக்கக்கூடிய அனுபவங்கள் மற்றும் பல சம்பவங்கள், இந்த படத்தில் பல்வேறு காட்சிகளோடு பொருந்திப் போவதை நம்மால் தவிர்க்க முடியாது. தமிழர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, நாம் எப்படி ஒரு விவசாயக் கூலியாக மற்றும் தொழிலாளியாக இருந்தோம், என்பதை இந்த படத்துல உணர முடியும். நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள், அதிகாரிகள் என்னவெல்லாம் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள், நம்மோடு இருக்கக்கூடிய தோழர்கள் எப்படி இருக்கிறார்கள், சக மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள், அன்பு, காதல் எப்படி இருந்திருக்கிறது என்பதையெல்லாம் இந்த படத்தில் பார்க்க முடியும்.

இந்த படத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த சம்பவங்களை, அதாவது 1960- 1970 ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கக்கூடிய காட்சியோடு பார்த்தோமேயானால், அது எல்லாமே பொருத்தி பார்க்கக்கூடிய காட்சியாகவே இருக்கிறது. எதுவுமே அந்நியமாக இல்லை. தமிழ் திரையுலகில் மெரும்பாலும் அரசியல்வாதியை வில்லனாக காட்டுவார்கள். இதனை சரி செய்யும் ஆளாக இரண்டு நபரை காட்டுவார்கள். ஒன்று நீதிபதி, மற்றொருவர் கலெக்டர். உண்மையாக சொல்லப்போனால் இந்த பிரச்சனைக்கு எல்லாம் யார் காரணம், இந்த அதிகாரிகள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை சரியாக இப்படத்தில் காட்டியுள்ளார் இயக்குநர்.

பொதுவாக பள்ளிக்கூட மாணவர்களை பார்த்து, நீ என்னவாக வேண்டுமென நினைக்கிறாய் என கேட்டால், நான் கலெக்டர் ஆக வேண்டும் அல்லது நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று சொல்வதைப் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் ஐஏஎஸ்க்கு படிக்கிறேன், ஐபிஎஸ்-க்கு படிக்கிறேன் என்பதை பெருமையான ஒரு விடயமாக சொல்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஐஏஎஸ் என்ன வேலை செய்யும், ஐபிஎஸ் எப்படி இயங்கும் என்பதை இந்த திரைப்படத்தில் ஒரு பாடமாவே எடுத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலமாக இங்கு இருக்கக்கூடிய இயக்கங்கள் எவ்வளவோ பிரச்சாரம் செய்து கொண்டு போக வேண்டும் என நினைத்த விடயத்தை மிக எளிமையாக,  மிக துல்லியமாக காட்டியுள்ளார். 

நம் கண் முன்னால் பார்க்கக்கூடிய இத்தனை பிரச்சனைகளுக்கும் யார் காரணம்? கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறார்களே, அவர்கள் எப்படி இயங்குகிறார்கள்? எப்படி யோசிக்கிறார்கள்? எதை பார்க்கிறார்கள்? எப்படி முடிவெடுக்கிறார்கள்? என்பதை இப்படத்தில் பார்க்கிறோம். ஒரு குடிசைகள் அகற்றுவது, வீடுகளை இடிக்கிறது, அதை யார் முடிவெடுக்கிறார், அது எப்படி நடைமுறைக்கு வருகிறது, இதெல்லாம் நமக்கு தெரிவதே கிடையாது. அரசியலில் வேலை செய்பவர்களுக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு தெரியாது. பொதுமக்கள் பார்வையில் ஐஏஎஸ் அதிகாரிகள். ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் மிக நேர்மையானவர்கள், நல்லவர்கள் என்கிற ஒரு தன்மை இருக்கும். அப்படித்தான் நாம் எல்லாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியோ ஒரு முதலமைச்சரானால் என்ன நிலைமையாகும் என்பதையும் நீங்கள் இந்த படத்தில் யோசித்து பார்க்கலாம். இந்த இடத்தில் இதை அண்ணாமலையுடன் பொருத்திக் கொள்ளலாம் என்பதை சொல்ல தேவையில்லை.

இவர்கள் எல்லாம் யார், இவர்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், எப்படி பயிற்சி ஆகியிருக்கிறார்கள், மனிதர்களை எப்படி பார்க்கிறார்கள், குடிமக்களை எப்படி பார்க்கிறார்கள், என்பதையெல்லாம் இந்த படத்தில் வகுப்பாக எடுத்திருக்கிறார். இன்று இருக்கின்ற தலைமுறைக்கு நமக்கான உரிமை இப்படி போராடி வாங்கியதே என்று, நாம் யாரும் சொல்வது இல்லை. பொதுவாகவே எல்லோர் வீட்டிலும், எங்க அப்பா எவ்வளவு கடினப்பட்டு பள்ளிக்கு போனார் தெரியுமா, எங்க தாத்தா பள்ளிக்கு போக முடியாமல் எவ்வளவு கடினப்பட்டு வேலை செய்தார் தெரியுமா என எல்லோர் வீட்டிலும் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் எவ்வளவு கடினப்பட்டோம் தெரியுமா, எப்படிப்பட்ட வீட்டில் நாங்கள் இருந்தோம் தெரியுமா, எங்கள் ஊருக்கு பேருந்தே இருக்காது, எங்கள் ஊருக்கு சாலையே இருக்காது, எங்களுக்கு வேலையே இருக்காது, சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு இருக்காது, போடுவதற்கு நல்ல சட்டை இருக்காது, தீபாவளிக்கு மட்டும் தான் சட்டை எடுப்போம், இப்படி எல்லோர் குடும்பத்துக்குள்ளும் ஒரு கதை இருக்கும். ஆனால் இதெல்லாம் ஏன் அப்போது இருந்தது? என தெரியவேண்டும் எனில், இந்த படம் அதற்கான ஒரு காரணத்தை உங்களுக்கு சொல்லும்.

ஏன் இன்றைக்கு சமகாலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக நாம்  போராடுறோம்? அங்கே ஏன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்? ஏன் மதுரை போன்ற நம்முடைய ஊர்களை காப்பாற்றுவதற்காக போராட்டம் நடந்து  வருகிறது? ஏன் எண்ணூரில் அனல்மின் நிலையம் வேண்டாம் என சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? இது எல்லாமே நீங்கள் இதனுடன் சேர்த்து பார்க்க முடியும். இது ஒரு 60- 70 ஆண்டுகாலம் தமிழ்நாட்டினுடைய, தமிழர்களினுடைய நினைவிலே இருந்த சம்பவங்களினுடைய தொகுப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த தமிழ் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க வேண்டும் என நினைத்தவர்கள் இருந்தார்களே, அவர்கள் யார்? அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள்? எப்படி எல்லாம் போராடினார்கள்? அதையெல்லாம் இந்த படத்தில் நீங்கள் பார்க்க முடியும். இந்த வரலாறு இதுவரைக்கும் சொல்லப்படவே இல்லை.

மோடி ஆட்சிக்கு வந்தபின்பு ’கம்யூனிஸ்ட்’ அல்லது ’முற்போக்கு சிந்தனையுடன்’ பேசினாலே ’அர்பன் நக்சல்ஸ்’ (urban naxals) என ஒரு பெயர் வைக்கிறார்கள். இந்த நக்சலைட் என்பது யார் என நமக்கு சொல்லப்பட்டதே கிடையாது. தினமும் பத்திரிகையில் படிப்போம், இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை, இரண்டு நக்சலைட்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள், என்று செய்திகளைப் பார்க்கிறோம். இவர்கள் யார்? இவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? என யாரும் சொன்னதே கிடையாது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் யார், எதை மாற்ற வேண்டும் என நினைத்தார்கள், எதை கொண்டு வர வேண்டும் என நினைத்தார்கள், என்ற ஒரு வரலாறை இதுவரைக்கும், இந்தியாவிலே சொல்ல யாருக்கும் பெரிய அளவுக்கு துணிச்சல் இருந்ததில்லை. அதை தொட்டும் தொடாமல், பட்டும் படாமல், சொல்லி விட்டு போவார்கள். படத்தில் ஒரு கேரக்டராக வந்து விட்டு போய் விடும். அதற்குப் பிறகு கடைசியில் என்ன செய்வார்களென்றால் இவர்களும் தவறுதான், இவர்கள் முறையும் தவறுதான், அந்த முறையும் தவறுதான், என சொல்லி எல்லாவற்றையும் பூசி மெழுகிவிட்டு போவது இங்கே நடந்து கொண்டே இருக்கும். தோல் உரித்து காட்டுவது என்று சொல்வார்களே, அது  இந்த படத்தில் இருக்கிறது.

இதுவரைக்கும் நமக்கு சொல்லாத பல விடயங்கள் நாம் கேட்காத பல விடயங்கள் இந்த படத்தில் வெளிப்படையாக துணிச்சலாக சொல்லியிருக்கிறார். உண்மையாக சொல்ல வேண்டுமெனில் தமிழ் மக்களுடைய வரலாறுகளை தொகுத்து; தமிழ்நாட்டில் நடந்த மக்கள் போராட்டங்களை தொகுத்து இருப்பதால் இந்த படம் உண்மையில் ஒரு சர்வதேச படம். இந்த படத்தினுடைய சிறப்பம்சமே அதுதான். இந்த படத்தை உலகத்தில் எந்த நாட்டிலும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் சென்று அந்த மொழியில் போட்டாலும், அந்த மக்களுக்கும் இது புரியும். அந்த மக்களுக்கும் இந்த அரசியல் தெரியும். அப்படிப்பட்ட வகையில் ஒரு சர்வதேச படமாக விடுதலை படம் வந்திருக்கிறது,

இந்த படத்தில் நடிகர் கென், தமிழ்நாட்டில் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக ’கருப்பன்’ ஆக நடித்திருக்கிறார். இவர் அதிகமான படம் நடித்ததில்லை என்றாலும் கூட சிறிய அனுபவத்திலும் தனது உடல் மொழியை வெளிப்படுத்திய விதம், ஒரு விவசாய கூலியாக போராளியாகும் உடல் மொழியை விடுதலை உணர்ச்சியுடன் படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். கருப்பன் கேரக்டர் நம்மால் மறக்க முடியாத ஒரு கேரக்டர். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து இயக்குனர் தமிழ் அவர்கள், ஒரு காவல்துறையில் எப்படி இருப்பார்கள், எப்படி நடப்பார்கள், எப்படி நிற்பார்கள், எப்படி பேசுவார்கள், எப்படி யோசிப்பார்கள் என்பதை காவல்துறை அதிகாரியாக வந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பொதுமக்கள் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்துக்குள்ளாக வேட்டையாட போகக்கூடியவர்களாகவும், அவர்கள் சுதந்திரமான முடிவுகள் பயங்கரமானதாக எப்படி இருக்கும் என்பதையும், எப்படி எல்லாம் பழி வாங்குகின்ற உணர்ச்சியாக அது இருக்கிறது என்பதையெல்லாம் இந்த படத்தோடு நேர்த்தியுடன் நம்மிடம் நிறுத்தி இருப்பார். காவலர்களிடத்தில் ஆளுமையை வெளிப்படுத்துவதும், ஈவிரக்கம் இல்லாமல் போராளிகளை கையாளுவதும், உயர் அதிகாரிகளிடத்திலே எப்படி அந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதான மூன்று செயல்திறன்களையும் (performance) மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் இயக்குநர் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோட்பாட்டு ரீதியான வரலாறை சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோட்பாட்டு ரீதியான ஒரு அமைப்பில் ஏற்பட்ட விவாதம், அதன் அடிப்படையில் அந்த கட்சி எப்படி உடைந்து பிரிந்தது, அதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்கள் அது எப்படி பிரிந்து வந்தது என்பதை காட்சிப்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியுடைய வரலாறு தெரிந்தால் மட்டும் போதாது, கோட்பாட்டை பற்றியான ஒரு புரிதல் இருக்க வேண்டும். அதை இந்த படத்தில் மிகத் துல்லியமாக எந்த இடத்திலும் தவறு சொல்ல முடியாத அளவுக்கு எடுத்துள்ளார். ஏனெனில் மார்க்சிய இயக்க கோட்பாட்டில் ஏதாவது தவறாக சொல்லி விட்டால் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். வெற்றிமாறனுக்கு அந்த கோட்பாடு ரீதியான ஒரு வாசிப்பும், புரிதலும், ஈடுபாடும் உள்ள தன்மையை இப்படத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு காலத்தில் இங்கு விவசாய சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் தீர்த்தால் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியும் என நம்பினார்கள். அதனால் பெரிய தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் எல்லோரையும் ஒரு அமைப்பாக மாற்றுவதற்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கக்கூடிய பெரும் முயற்சி நடந்தது. இந்த படத்தில் முதலாளிகளாக இருக்கக்கூடிய, விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்த பண்ணையார்கள் மீது நடத்தப்படக்கூடிய அழித்தொழிப்பு என்பது இரண்டு வகையிலானது. ”ஒரு பண்ணையார் என்னுடைய குடும்பத்தை நாசம் பண்ணிட்டார் அதனால் நான்(கென் கதாபாத்திரம்) பழி வாங்குறேன்” என்பது ஒன்று. ”பண்ணையார்கள் மற்றும் முதலாளிகள் சேர்ந்து நம்முடைய வாழ்க்கையை சமூகத்தை அழிக்கிறார்கள், ஆகவே பண்ணையார்களையும் முதலாளிகளையும் அழிக்க வேண்டும் என எடுக்கக்கூடிய ஒரு கொள்கை திட்டம்” மற்றொன்று. இந்த இரண்டையுமே படத்தில் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அதாவது கென் பாத்திரம் சென்று சண்டை போடுவது என்பது கென்னினுடைய தனிப்பட்ட சொந்த பிரச்சனை, அது சம்பந்தமாக சண்டை போடுறார். ஆனால் விஜய் சேதுபதி சென்று சண்டை போடுகிறார் என்பது தனிப்பட்ட சொந்த பிரச்சனைக்காக சண்டை போடவில்லை, சமுதாயத்தில் தீர்வு வர வேண்டும், நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சண்டை போடுகிறார். மக்களுக்கு துணையாக நிற்போம் என்பது விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம்.

அழித்தொழிப்பு என்கிற வார்த்தை பொதுமக்களும் அரசியல் வட்டத்திலும் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். என்னவெனில் ”அன்ஹிலேஷன்” என்ற ஒரு தியரியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளிவந்த ”சாரு மஜூம்தார்”, ஒரு கொள்கையை முன் வைக்கிறார். அப்போது விவசாய போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இனி எத்தனை காலம்தான் இதை பார்த்துக்கொண்டே இருப்போம் என இந்த பண்ணையார்களிடம் போய் பேரம் பேசுவது, இவர்களை மொத்தமாக அழித்து ஒழிப்பது என்பதான போராட்டம் நடக்கிறது.

அந்த போராட்டம் துவங்கும் ஊர் பெயர் ”நக்சல்பாரி” அது மேற்கு வங்கத்தில் உள்ளது. அந்த கிராமத்தில் பண்ணையார்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் செய்தார்கள். அந்த போராட்டம் இந்தியா முழுக்க விரிவடைந்து, அந்த போராட்ட முறையை எடுத்துச் சென்றவர்களை நக்சல்பாரிகள் என்று அழைத்தார்கள். (இப்போதும் அர்பன் நக்சல் என்று பிஜேபிகாரன் போராடுபவர்களை திட்டுவதை எல்லாம் பார்த்திருப்பீர்கள்). அந்த அடிப்படையில் இந்த ”நக்சல் என்பதை ஒரு கெட்ட வார்த்தையைப் போல பாஜககாரர்கள்  பேசுகிறார்கள்”. ஆனால் நக்சல்பாரி என்பது மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்திலுடைய பெயர் நக்சல்பாரி.

இந்தியா முழுவதுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பெரிய பிளவுகள் நடந்தது, அதை இந்த படத்தில் நுணுக்கமாகக் காட்டியுள்ளார். அங்கிருந்த சாரு மஜூம்தார் நேரடியாக தமிழ்நாட்டிற்கு இங்கு வந்து அரசியல்படுத்துவது எல்லாம் இந்த படத்தில் காட்சிகளாக வைத்ததை பார்த்தோம். இவையெல்லாம் மிக குறைவான நபர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் தெரியும். பல பண்ணையார்களை அழித்தொழிப்பது, உற்பத்தி பயிர்களை அறுவடை செய்து விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள் எடுத்துக் கொள்வது என்று இவையெல்லாம் நடந்திருக்கிறது. புலவர் கலியபெருமாள் அவர்கள் அது போன்ற பல அறுவடைகளை செய்திருக்கிறார்.

நம் சமூகத்தில் ஒரு 30-40 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் இந்த படத்தில் மிக நுணுக்கமாக கொடுத்திருக்கார்கள். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் ஆயுதங்கள் வைத்து போராட்டம் நடத்துவது அல்லது ஆயுதங்கள் இல்லாமல் போராட்டம் நடத்துவது என இரண்டு பிரிவாக இருந்தது. பின்பு இது இந்திய அளவில் எல்லா மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும், போராட்டத்தை நடத்த வேண்டும் என பேசியபோது கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளாக விவாதம் நடக்கிறது. இந்தியாவில் பல இனங்கள் எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகிறது, அந்த இனங்கள் எல்லாம் விடுதலை அடைந்தாலே இந்தியாவில் பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு சூழல் உருவாகும் என்று கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு விவாதம் வருகிறது. அதுதான் ”தேசிய சுயநிர்ணய உரிமை அல்லது தேசிய இன விடுதலை”. இப்படத்தில் நீங்கள் அந்த வார்த்தையை பார்க்க முடியும். தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகக்கூடிய வார்த்தைகளில் ஒன்று அழித்தொழிப்பு,

இரண்டாவது தேசிய இனத்தினுடைய சுயநிர்ணய உரிமை. தேசிய இனம் என்றால் என்ன? தமிழர்கள் ஒரு தேசிய இனம், தெலுங்கர்கள் ஒரு தேசிய இனம், மராத்தியர்கள் ஒரு தேசிய இனம், பஞ்சாபிகள் ஒரு தேசிய இனம், காஷ்மீரிகள் ஒரு தேசிய இனம், நாகாலாந்து மக்கள் ஒரு தேசிய இனம், வங்காளிகள் ஒரு தேசிய இனம், இந்த தேசிய இனங்கள் எல்லாம் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வது மற்றும் அவர்களுக்கு தேவைப்பட்டால் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்வது என்ற கொள்கையை அன்றைக்கு கம்யூனிஸ்டுகள் முன்வைத்தார்கள்.

அந்தக் கொள்கையை முன்வைத்தவர் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் போன்றவர்கள் . இதில் என்ன நினைக்கிறார்கள் என்றால் விவசாயிகளுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும், பண்ணையார்களை ஒழித்து கட்ட வேண்டும், தொழிலாளர்களை சங்கமாக மாற்ற வேண்டும், முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டும், இதையெல்லாம் செய்து இந்த மக்களை ஒன்றுபடுத்தி தமிழ்நாட்டிற்கான விடுதலையை வாங்கித் தர வேண்டும் என ஒரு பெரிய இயக்கத்தை, பெரிய படையை கட்டிப் போராடி அந்த களத்திலேயே உயிர் விட்டவர் தோழர் தமிழரசன். இது நமக்கு சொல்லப்பட்டது கிடையாது. இதுதான் தமிழ் தேசியம். இந்த கருத்துதான் தமிழ் தேசியம். இந்த தமிழ் தேசிய கருத்தியலை உருவாக்கி, கோட்பாட்டை கொடுத்து, ஒரு அமைப்பை கட்டி, அதற்கென்று ஒரு படையை உருவாக்கியது. அது ”தமிழ்நாடு விடுதலைப் படை”. அதை உருவாக்கியவர் தோழர் தமிழரசன். அந்த தமிழ்நாடு விடுதலைப்படை பல மாற்றங்களை கொண்டு வந்தது.

விடுதலை முதல் பாகம் படத்தில் ஒரு காவல் நிலையத்தின் உள்ளே போய் அடித்து நொறுக்கி, காவலரை வெட்டி, அங்கே சீர்குலைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணை தூக்கி காப்பாற்றி கொண்டு வருவதை பார்த்திருப்போம்.

இது கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம். ஒரு கைதியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரை அடித்து கொலை செய்கிறார்கள். கணவனைக் காண அவருடைய மனைவி செல்கிறார். அவர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் காவலர்கள். இது பெரிய கொந்தளிப்பாக மக்களிடையே உருவாகிறது. அந்த சமயம் தமிழ்நாடு விடுதலைப்படை அந்த காவல் நிலையத்தை தாக்குகிறார்கள். காவல் நிலையத்திற்குள் சென்று காவலர்களை தண்டனைக்கு உள்ளாக்குகிறார்கள். இப்படி காவல் நிலையத்தின் மேல் தொடர்ச்சியான தாக்குதல் என்பது நடத்தப்பட்டதில் ஒன்று தான் ”குள்ளஞ்சாவடி தாக்குதல்”. இப்படி பல இடங்களில்  தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு விடுதலைப்படை. இதற்கு பின்பு தான் இந்தியாவில் ஒரு சட்டம் வருகிறது, அது என்ன சட்டம் எனில், மாலை 6:00 மணிக்கு மேல், எந்த பெண் கைதியும் காவல் நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது என்கின்ற சட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவந்து பெண்களினுடைய கண்ணியத்தை பாதுகாத்தவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படையினுடைய போராளிகள்.

இப்படி மக்கள் பிரச்சனையை உண்மையிலே தீர்த்தது தமிழ்நாடு விடுதலைப்படை தான். அதற்குப் பிறகு சிறைக்குப் போன தோழர்கள் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். தமிழரசன் 1987-ல் கொல்லப்பட்டார். பின்பு தோழர். லெனின், தோழர். மாறன், தோழர் நாகராஜன் கொல்லப்பட்டார். இப்படி பலர் காவல்துறையினரால் கொலை செய்யப்படுகிறார்கள். அதில் 20/30 பேருக்கு மேல் சொல்லப்படாத எண்ணிக்கையில் கொலை செய்யப்பட்டவர்கள். இப்படி மக்களுக்காக உயிர் கொடுத்தவர்களுடைய வரலாறு யாரும் சொல்வதற்க்கு தயாராக இல்லாத பொழுது, இதையெல்லாம் ஒரு புனைவுகளாக, கதைகளாக, சம்பவங்களாக வைத்து ஒரு கதையை பின்னி, அதை இன்றைக்கு நம்மிடம் இயக்குநர் கொடுத்திருக்கிறார். இதைவிட ஒரு பெரிய துணிச்சலை ஒரு படைப்பாளியிடம் இக்கால கட்டத்தில் பார்த்திருக்க முடியாது.

”ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை கதை இருக்கிறது; பெரிய வரலாறும் இருக்கிறது; பெரிய துயரமும் இருக்கிறது; அந்த துயரத்தை கலைந்து அந்த மக்களை மீட்டெடுத்த போராளிகளைப் பற்றியானது அந்த திரைப்படம்”.

அந்த படத்தில் ஒரு தொழிற்சங்கத்திற்குள் சங்கம் உருவாக்குவதும் எவ்வளவு துன்பப்பட்டார்கள், விவசாயிகளை சங்கமாக மாற்றுவதற்கு என்ன துன்பப்பட்டார்கள் என இரண்டு பாடம் இருக்கும். தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் உருவான வரலாறு என்பது ஒரு நூறு ஆண்டுகால வரலாறு. இந்த படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் சொல்லப்பட்டிருக்கிறது, திராவிட இயக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காலத்தில் நடந்த கொடுமைகளுக்கு எதிராகவும், சுயமரியாதைக்காகவும் பெரியாரிய தோழர்களான திராவிட இயக்கம் போராடியது. அவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள். அதேபோல கூலி உயர்வுக்கும், கண்ணியத்திற்கும், தொழிற்சங்கம் அமைப்பதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடியது, அவர்கள் சிவப்பு சட்டைக்காரர்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிவப்பு கொடியும் இருக்கும், பெரியார் சிலையும் இருக்கும்.

நீடாமங்கலம்’ என்ற ஒரு புத்தகம் வந்துள்ளது, அதில் பண்ணையார்கள் எப்படி மக்களை நடத்தினார்கள் என்பது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு நிகழ்வு, ஒரு இடத்தில் ’சமபந்தி போஜனம்’ வைக்கிறார்கள், எல்லாரும் சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், அதில் சரிசமமாக அமர்ந்து சாப்பிட்டதற்காக அந்த தொழிலாளர்களை அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவம் 1960-ல் நடந்தது. இதெல்லாம் நம்  காலகட்டத்தில் நடந்த வரலாறுகள். அதேபோல் திருவண்ணாமலையில் குத்தகை பணத்தை கொடுக்கவில்லை என்று இரண்டு விவசாயிகளை இழுத்துக்கொண்டு போய் அக்ரகாரத்தில் அந்த நிலத்துக்கு சொந்தக்காரராக இருக்கக்கூடிய பார்ப்பனர் வீட்டு வாசலில் உள்ள தூணில் கட்டி போட்டனர். இரண்டு நாளாக சாப்பாடு இல்லாமல் இருந்தார்கள். ஏனெனில் அந்த அக்கிரகாரத்தில் நுழைவதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது. அப்போது பெரியாரிய மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் இன்னும் சில ஆட்களோடு சென்று, அந்த இரண்டு பேரையும் மீட்டது மட்டுமல்லாமல் அந்த விளைபொருட்கள், நெல் எல்லாவற்றையும் எடுத்து மக்களுக்கு பிரித்துக் கொடுத்தனர். இதெல்லாம் ஒரு 40/50 வருடத்திற்கு முன்பு நடந்த வரலாறு. இது புத்தகமாகவும் வந்துள்ளது.

இந்த படத்தில் மிக முக்கியமான காட்சி மகாலட்சுமி கதாபாத்திரம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தான ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடக்கூடியவராக மகாலட்சுமி காட்டியிருப்பார்கள்.

இப்படத்துடைய தத்துவமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைதான். இந்த படத்தை பொறுத்தவரைக்கும் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட புரட்சியாளர்கள் என்ன செய்தார்கள், எப்படி இயங்கினார்கள் என்று சொல்லக்கூடிய வரலாறு இருக்கிறது. அரசாங்கம் எவ்வளவு பெரிய வன்முறையாக இருக்கிறது என காண்பித்துள்ளனர். இப்படத்தில் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது என சொல்பவர்களுக்கு, படத்தை விட ”உண்மை இன்னும் வன்முறையாக இருக்கும்” என்பதை சொல்லிக் கொள்கிறேன். வன்முறைப் படம் என்று கே.ஜி.எஃப் மற்றும் அமரன் படத்தை ஏன் இவர்கள் சொல்வதில்லை?

மேலும் ஸ்டெர்லைட்டில் ”ஸ்னோலின்” என்கிற தங்கையை போலிஸ் வாயில் சுட்டுக் கொன்றதே அது எப்படிப்பட்ட காட்சி? இதேபோல் பரமக்குடியில் 2011-ல் துப்பாக்கி சூடு நடந்தபோது ஒரு பையனை சுட்டுக் கொன்று தூக்கிக் கொண்டு வரும் காட்சியே பெரிய வன்முறை. இவையெல்லாம் இன்றைய நடைமுறையில் சினிமாவில் காட்டியதை விட மிக மிக மோசமான வன்முறையானது. இந்த மிக மோசமான ஒரு வன்முறைக்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வெள்ளைக்காரன் காலத்தை விட மோசமான ஒரு அடக்குமுறையோடும் வன்முறையோடும் இந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் துணையோடு நடத்தப்படும் ஒரு வன்முறை அரசாங்கத்துக்கு கீழ் வாழ்ந்து கொண்டு இருக்கோம்.

அந்த படத்தில் வரும் அதிகாரி மேலே உட்கார்ந்து கொண்டு, இந்த போலீஸ் ஆபீசர் வேண்டாம், அந்த மக்கள் எந்த சாதியாக இருக்கிறார்களோ, அந்த சாதியில் ஒரு ஆளை பிடித்து போடு என்றெல்லாம் சொல்வார். இன்றைக்கும் நடைமுறையிலும் அது நடக்கிறதா இல்லையா? எல்லா ஊரிலும் இதுதான் நடக்கிறது. எந்த சமூகத்தில் போராட்டம் நடக்கிறதா, அந்த சாதிக்காரர் ஆபீசரை போடு, அந்த சாதிக்காரரான போலீஸ்காரரை அனுப்பு, அந்த சாதி அதிகமாக இருக்குமெனில் ரெஜிமெண்ட் அனுப்பு என சொல்வது நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த படத்தில் ஒரு காட்சியில் அழகாக காண்பித்துள்ளார். இது எதுவுமே பொதுத்தளத்தில் விவாதிக்கப்படாத விசியங்கள்.

குறிப்பாக தலைமை செயலாளரை (ராஜிவ் மேனன்) காண்பிக்கிறார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டினுடைய திரைப்படத்தில், இந்திய திரைப்படத்தில், அந்த மாதிரி ஒரு தலைமை செயலாளரை காண்பித்து இருக்க மாட்டார்கள். ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து ஒரு போனை வைத்துக்கொண்டு ”ஒருத்தனை சுட வேண்டுமா, வேண்டாமா, ஒருத்தனை கொல்ல வேண்டுமா வேண்டாமா, ஒருத்தனுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டுமா வேண்டாமா, ஒருத்தனுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா, ஒரு முதலமைச்சருக்கு எதை சொல்ல வேண்டும், பத்திரிகையில் எது செய்தியாக வர வேண்டும், ஒரு பத்திரிகைக்காரனை கைது பண்ண வேண்டுமா வேண்டாமா என எல்லாவற்றையும் ஒரு மனிதன் முடிவு பண்றார். அவர் முதலமைச்சர் கிடையாது, அவர் அமைச்சர் கிடையாது, எந்த கட்சிக்காரனும் கிடையாது, இந்த நபரைப் பற்றி இதுவரைக்கும் எந்த திரைப்படத்திலாவது வந்திருக்கிறதா எனில், இதுவரைக்கும் வரவில்லை.

அந்த நபர்(தலைமை செயலாளாராக நடித்தவர்) சொல்கிறார், பத்திரிகையில் செய்தி வரவில்லை. அவர் சொல்கிறார், பத்திரிகைக்காரனை கைது செய்கிறார்கள். அவர் சொல்கிறார், இவரை கொண்டு போய் வேறு கேம்ப்பில் மாற்றுகிறார்கள். அவர் சொல்கிறார், வாத்தியாரை சுட்டுக் கொல்கிறார்கள். அவர் சொல்கிறார், கடைசியாக பெருமாள் என்ன ஆனார் என சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார், தலைவர் வருவார் வருவார் என சொல்லி அந்த மக்கள், கடைசி வரைக்கும் உண்மையான தலைவரே கிடைக்காமல், அந்த மக்கள் போராட்டத்துக்கே வராமல் போய் விடுவார்கள் என்று சொல்கிறார். அதுதான் ஈழப் போராட்டத்தில் தேசிய தலைவர் வருவார், வருவார், வருவார் எனச் சொல்லி இன்றைக்கு வரைக்கும் ஏமாற்றப்பட்டோம்.

இதெல்லாம் இன்றும் நம் முடைய நிகழ்காலத்தில் நாம் சந்திக்கக்கூடிய வன்முறைகள். இது நாம் சந்திக்கக்கூடிய வன்முறைகள். இந்திய அரசாங்கம்  பிரபாகரன் அவர்களுடைய இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை. இலங்கையும் இறப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இப்படித்தான் நம்மவர்களை வைத்து, அடுத்து ஒரு இயக்கமே வராமல், மக்கள் போராடாமல் தடுத்து நிறுத்தி வைத்து விட்டார்கள். இதை நாம் இன்றைக்கு எதிர்கொண்டு இருக்கிறோம். அந்த விசியத்தை இந்த படத்தில் காண்பித்துள்ளார்கள். முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியோடு வந்தவர்களை முட்டி போட வைத்து சுட்டுக் கொல்வதை நாம் வீடியோவாக பார்த்தோம். அதையும் படத்தில் காண்பித்துள்ளார்கள். அரசாங்கத்துக்கு எந்த சட்டமும் கிடையாது, எந்த விசாரணையும் கிடையாது, ஆனால் நேர்மையாக நடந்து கொண்ட வாத்தியார் கொலை செய்யப்படுவார் என்பதை இயக்குநர் காண்பித்துள்ளார்.

நான் பொது இடங்களுக்கு போகும்போது நிறைய இளைஞர்கள் வந்து செல்பி எடுப்பார்கள். அப்போது “எனக்கும் உங்கள மாதிரி ஆசைதான் போராட வேண்டும், போராட்டத்துக்கு வர வேண்டும் என்று, ஆனால் என்ன சார் பண்றது? எனக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைங்கள் இருக்கிறது, பொறுப்புகள் இருக்கிறது என்று” சொல்வார்கள்.  நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனக்கும் குழந்தை இருக்கிறது, எனக்கும் பொறுப்புகள் இருக்கிறது, மாதமானால் நானும் வாடகை தர வேண்டும். நானும் மளிகை சாமான் வாங்கி போட்டால்தான் வீட்டில் சாப்பாடு இருக்கும், இது எல்லோருக்கும் இருப்பதுதான்.

மக்கள் சமூகத்துக்காக போராட வருகிற எல்லாருக்கும் பொறுப்புகள் இருக்கிறது, குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் குடும்பங்களை அதிகமாக நேசிக்கின்ற காரணத்தினால் சமுதாயத்தை நேசிக்கின்றோம், அவ்வளவுதான்.

இந்த படத்தில் வந்தவை எல்லாம் மிகவும் அற்புதமான காதல் காட்சிகள். விடுதலை முதல் பாகத்தில் ஒரு ரயில் விபத்து காட்டப்பட்டு இருக்கும். அதனுடைய விளக்கத்தை இரண்டாவது பாகத்தில் கொடுத்திருப்பார்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் அந்த ரயில் தண்டவாள தகர்ப்பு வழக்கு மிக முக்கியமான ஒரு வழக்காக இருந்தது. மருதையாற்று பாலம் தகர்க்கப்பட்டு அந்த ரயிலில் இருந்த பலர் விழுந்து இறந்து போயிருப்பார்கள். இந்த ரயில் தண்டவாள தகர்ப்புக்கு பிறகுதான் போராட்ட இயக்கங்கள் மீது ஒரு மிகப்பெரிய அளவிற்கான ஒரு மோசமான ஒரு பார்வை பரப்பப்பட்டது. போராட்ட இயக்கம் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், மக்களை கொலை செய்யவர்கள் என்ற ஒரு பரப்புரை நடந்தது. பால தகர்ப்பிலே அரசாங்கம்தான் அந்த குண்டை வெடிக்க விட்டது. அதன் மூலமாக பொதுமக்கள் இறந்து போகும் பொழுது அந்த கெட்ட பெயர் யாருக்கு போகும் எனில், அந்த போராட்ட இயக்கத்தின் மீது போகும் என்கின்ற காரணத்தினால் அந்த மருதையாற்றுப் பால குண்டுவெடிப்பு என்பது நடத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அதை வைத்துக்கொண்டு தமிழரசனின் மீது ஒரு அவப்பெயரை பரப்பினார்கள்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லக்கூடிய விமானத்தில் வைக்கப்பட்ட குண்டு இதைப் போலவே தான். இலங்கை விமான நிலையத்தில் வெடிப்பதாக இருந்த ஒரு குண்டு, விமானம் கிளம்பாமல் இருக்கக்கூடிய சூழலை இங்கு போன் பண்ணி சொல்கிறார்கள். ஆனால் அந்த குண்டு எடுக்கப்படவில்லை. அந்த குண்டு இங்கே வெடிக்கிறது. இங்கே பொதுமக்கள் சாகும் பொழுது அந்த போராட்டத்தின் மீது ஒரு களங்கம் பிறப்பிக்கப்படுகிறது. அரசாங்கம் திட்டமிட்டு இந்த வேலையை செய்யும். அப்போது போராடுகின்றவர்கள் மீது ஒரு அவப்பெயரை கொண்டு வருவதற்கான வேலைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். அப்படி தமிழரசன் மீதும் விழுந்தது. வெகு நாள் தமிழரசனைப் பற்றி பேசாமல் இருந்ததற்கான உண்மை காரணம் இதுதான். போராட்ட இயக்கங்கள் மீது அரசாங்க அதிகாரிகள் வேண்டுமென்றே, அதை அனுமதித்து, அதற்கான அவப்பெயரை அந்த போராட்ட இயக்கங்கள் மீது கொண்டு வந்தார்கள். இந்த விசயங்களை பொதுவாக சொல்வதற்கு வாய்ப்பு இருக்காது.

2009 இனப்படுகொலை போர் நடந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடந்திருந்த சமயத்தில் விழுப்புரத்தில் ஒரு தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்தது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாள தகர்ப்புக்கு பக்கத்தில் நின்றிருந்த ரயில் தண்டவாள தகர்ப்பிலிருந்து அந்த ரயிலை காப்பாற்றி விட்டோம் என்று ஒரு பெரிய வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. அதற்காக ஒரு  தமிழ்தேசியத் தோழரை கைது செய்தார்கள், ஆனால் எந்த இடத்திலேயும் அவர்தான் அந்த குண்டு வைத்தாரா என்பது நிரூபிக்கப்படவே இல்லை. இங்கே திரும்பவும் தமிழ்நாட்டில் போராடக்கூடியவர்களை தவறான மாணவர்களாக வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்கான வேலை நடந்து கொண்டே இருக்கிறது.

இதுதான் நம்முடைய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்தது? குடிசையை கொளுத்தியது யார்? ஆட்டோ எரித்தது யார்? எல்லா வீடியோவும் வெளிய வந்தது இல்லையா, இதெல்லாம் போலீஸ்காரர்கள் செய்தார்கள். இதுவரைக்கும் எந்த போலீஸ்காரர்களாவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. ஸ்டெர்லைட்டில் என்ன நடந்தது என எல்லோருக்குமே தெரியும், இதுவரைக்கும் எந்த அதிகாரிகளாவது தண்டிக்கப்பட்டார்களா? அதிகாரிகள் தவறு செய்தார்கள் என்று முன்னாள் நீதிபதியான அருணா ஜகதீசன் அறிக்கை கொடுத்து விட்டார்கள். இதுவரைக்கும் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் என்ன சொல்கிறது? போராடக்கூடிய மக்களை தவறானவர்கள் என்று சித்தரிப்பது தொடர்ச்சியாக காலம் காலமாக சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டினுடைய வரலாற்றில் மருதையாற்றுப் பாலம் தகர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய ஒரு பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு, போராட்ட அமைப்புகள் நசுக்கப்பட்டது. அதேபோல தான் ராஜீவ் காந்தி கொலையும். அதைக் காரணமாக வைத்து அனைத்து அமைப்புகளும் நசுக்கப்பட்டது. இன்றைக்கு பலபேர் திராவிடத்தை திட்டுறார்கள். ஆனால் பெரியாரிய இயக்கங்கள் முழுமையாக நசுக்கப்பட்டதற்கு காரணம் ராஜீவ் காந்தி கொலை வழக்குதான்.

இவை எல்லாமே சம்பவங்களாக நாங்கள் அன்றாடம் பார்த்து கொண்டே இருந்தோம். இதைப் பற்றி யாராவது சொல்ல மாட்டார்களா? என்ற ஒரு ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருந்தது. இன்றைக்கு வந்து வெற்றிமாறன் அவர்கள் இந்த சம்பவங்களுடைய பின்னணியில் யார் எப்படி இயங்கினார்கள் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பொதுவாக நம்ம சொல்லும் விசயம் என்னவெனில் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றவாளிகளை காட்டுவதால் எந்த பயனும் கிடையாது. இந்த கட்சி தவறென்று சொல்லி அந்த கட்சியை கொண்டு வரலாம், அந்த கட்சி தவறென்று சொல்லி இந்த கட்சியை கொண்டு வரலாம். கட்சிகள் ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை ஆட்சியை மாற்றம் பண்ணலாம். அதிகாரிகளை நீங்கள் மாற்றவே முடியாது. அதிகாரிகளை தண்டிக்கவே முடியாது.

அதிகாரிகளை கேள்வி கேட்கவே முடியாது. அதிகாரிகளின் முடிவை நீங்கள் மாற்றவே முடியாது. அதிகாரிகள் தனி உலகம், அவர்கள் எடுப்பதுதான் முடிவு. அதன் கீழ் தான் மக்கள் நாம் தண்டிக்கப்படுகிறோம். அவர்கள் எடுக்கக்கூடிய முடிவை அரசியல்வாதிகள் கேட்டே ஆக வேண்டும். இந்த நாட்டை நடத்துவது அரசியல்வாதிகள் அல்ல.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் யார் என்பதை உங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியக்கூடிய வகையில் இந்த படம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதி, ஒரு எம்எல்ஏ, ஒரு அமைச்சர், ஒரு கட்சிக்காரன் தவறு செய்தார்கள் என்று நாம் எல்லாரும் பேசுவோம். ஆனால் அது மேலோட்டமான ஒரு தவறான நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் கொள்கை சார்ந்த தவறுகள் செய்பவர்கள் அதிகாரிகளே, அதை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்கள். முதல் முறையாக இந்த படத்தில் இது வெளிப்படையாக வந்திருக்கிறது.

உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் எல்லோரிடமும் சொல்லி இந்த படத்தை குறைந்தபட்சம் இரண்டு முறை பார்க்கச் சொல்லுங்கள். இப்படி ஒரு திரைப்படம் சுமார் 70 வருடம் கழித்து வந்துள்ளது. நீங்கள் எல்லாரும் ஆதரித்தால்தான் இதே மாதிரியான திரைப்படங்கள் பல்வேறு வரலாற்று சம்பவங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய வகையிலே வரும். இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இங்கே இருக்கிறது. அந்த நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வெளியில் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். ஆகவே நீங்கள் இந்த படத்தை கொண்டாட வேண்டும். தமிழ் சமூகம் கொண்டாட வேண்டும். இந்தியாவில் இப்படி ஒரு படத்தை செய்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. அதை வெற்றிமாறன் செய்திருக்கிறார்.

ஒரு தமிழன், தமிழ் திரையுலகில் இன்றைக்கு மோடியின் ஆட்சியிலே துணிச்சலாக இதை செய்திருக்கிறார். தமிழ் சமூகம் இதைக் கொண்டாடத் தவறியது என்றால் தமிழ் சமூகத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டு வரலாறு நெடுக இருக்கும். இதுபோன்ற படங்களை ஆதரிக்க முன்வந்தால் தான், பல இயக்குனர்கள் இதனைப் போன்று எடுக்க முன்வருவார்கள். வெற்றிமாறன் இன்னும் அதிகமாக இந்த மக்களை சார்ந்து பேசுவதற்குரிய துணிச்சலை கொடுக்க முடியும். ஆகவே தமிழ் சமூகம் மிகப்பெரும் கடமையை பெற்றிருக்கிறது. தோழர் வெற்றிமாறன் அவர்களுக்கும் அவரது குழுவைச் சார்ந்த அனைவருக்கும் எங்களது புரட்சிகர வாழ்த்துக்களை இச்சமயத்திலே தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »